திங்கள், 1 பிப்ரவரி, 2016

மிடாஸ் முன்னாள் இயக்குனர் சோ ராமசாமி வேறு எப்படிப் பேசுவார்?

திமுக தலைவர் கலைஞர் 01.02.2016 திங்கள்கிழமை கேள்வி பதில் வடிவிலான
அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
கேள்வி :- தி.மு.க. மீண்டும் ஆட்சிக்கு வரக் கூடாது என்று “துக்ளக்” “சோ” பேசியது பற்றி?கலைஞர் :- மதுவகைகள் தயாரிக்கும் “மிடாஸ்” நிறுவனத்தின் முன்னாள் இயக்குனர் வேறு எப்படிப் பேசுவார்?
கேள்வி :- திருமலை நாயக்கர் பிறந்த  தினத்தையொட்டி ஜனவரி 24ஆம் தேதியன்று மதுரையில் அரசு விழா நடத்தப்படும் என்று முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்திருக்கிறாரே?
கலைஞர் :- கடந்த ஐந்தாண்டு காலமாக அ.தி.மு.க. ஆட்சிதானே நடந்து கொண்டிருக்கிறது.  இத்தனை ஆண்டுகளாக ஏன் இந்த அறிவிப்பு வரவில்லை? இந்த ஆண்டு தேர்தல் வருகிறது என்றதும் இந்த அறிவிப்பைச் செய்கிறாரோ?

கேள்வி :- எம்.ஜி.ஆர். அவர்களின் 99வது பிறந்த நாள் விழாவினை கட்சி அலுவலகத்தோடு முடித்து விட்டாரே?
கலைஞர் :-  எம்.ஜி.ஆர். அவர்களைப் பற்றி ஜெயலலிதா சேலம் கண்ணன் மூலம் ராஜீவ் காந்தி அவர்களுக்கு கைப்பட எழுதிய கடிதத்தில் என்னென்ன குறிப்பிட்டார், எம்.ஜி.ஆர். மறைவதற்கு முன் ஜெயலலிதா பற்றி என்ன கருத்துகளை வெளியிட்டார் என்பதையெல்லாம் நன்கு அறிந்து வைத்திருக்கும் தமிழ்நாட்டு மக்களுக்கு, எம்.ஜி.ஆர். அவர்களின் பிறந்த நாள் விழாவினை கட்சி அலுவலகத்தோடு முடித்ததில் ஆச்சரியம் இருக்காது.
கேள்வி :- முதல்வருடன் பேசி கோரிக்கைகளை நிறைவேற்றித் தருவதாக உறுதி அளித்த அமைச்சர் அதன்பின் அதுபற்றி கண்டுகொள்ளவே இல்லை என்று சத்துணவு ஊழியர்கள் சங்கம் குற்றஞ்சாட்டியிருக்கிறதே?
கலைஞர் :- முதல் அமைச்சரைச் சந்திக்க இன்னும் நேரம் கிடைக்கவில்லையாம்! நேரம் கிடைத்தால், அதற்குப் பின்  சத்துணவு ஊழியர்களின் கோரிக்கைகள் பற்றிப் பேசி ஆவன செய்வாராம்! தயவுசெய்து அமைச்சர், முதல் அமைச்சரைச் சந்திக்க நீங்களாவது ஒரு ஏற்பாடு செய்து கொடுங்களேன்!
கேள்வி :- முக்கிய சம்பவங்களைப் பற்றி விசாரிக்க, விசாரணைக் கமிஷன்களை அமைக்க மறுக்கும், அ.தி.மு.க. அரசு,  அமைத்த விசாரணைக் கமிஷன்களிடமிருந்து அறிக்கை பெறுவதிலும் சுணக்கம் காட்டுகிறதே?
கலைஞர் :- உண்மைதான்; விரைவில் தேர்தல் வரவிருக்கிறது. ஆனால் அ.தி.மு.க. ஆட்சி  ஐந்தாண்டுகளுக்கு முன் நியமித்த புதிய தலைமைச் செயலகம் குறித்த விசாரணைக் கமிஷனின் அறிக்கை இன்னமும் தாக்கல் செய்யப்படவில்லை. கால நீடிப்பு வழங்கிக் கொண்டே இருக்கிறார்கள்.  அண்மையில்கூட அந்தக் கமிஷனுக்கு மூன்று மாத கால நீடிப்பு வழங்கப்பட்டுள்ளது.  அது போலவே, தர்மபுரி மாவட்டத்தில் மறைந்த தலித் இளைஞன்  இளவரசனின் மரணம் குறித்து 2013ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட விசாரணைக் கமிஷனின் முடிவும் வெளிவரவில்லை. அந்தக் கமிஷனுக்கும் அ.தி.மு.க. அரசு ஆறு மாதங்கள் நீடிப்பு வழங்கியிருக்கின்றது.  இவ்வாறு விசாரணைக் கமிஷனுக்கு கால நீடிப்பு கொடுப்பதால், மக்களின் வரிப் பணம்தான் வீணாவதாகச் செய்திகள் வந்துள்ளன.
கேள்வி :- திருவள்ளூர் மாவட்டம், அத்திப்பட்டில் 6,376 கோடி ரூபாய் மதிப்பீட்டில்  அனல் மின் திட்டத்திற்கு முதலமைச்சர் ஜெயலலிதா அடிக்கல் நாட்டியதாகச் செய்தி வந்திருக்கிறதே?
;கலைஞர் :- 110வது விதியின் கீழ்  முதலமைச்சர் ஜெயலலிதா பேரவையில் பல்வேறு மின்சாரத் திட்டங்களை அறிவித்தபோது, 2015ஆம் ஆண்டு இத்திட்டம் உற்பத்தியைத் தொடங்கும் என்று கூறினார். ஆனால் 2016ஆம் ஆண்டு தொடங்கிய பிறகும், அந்தத் திட்டம் உற்பத்தி தொடங்கவில்லை. குறிப்பாக 29-3-2012 அன்று முதலமைச்சர் ஜெயலலிதா 110வது விதியின்கீழ் படித்த நீண்ட அறிக்கையில், “660 மெகாவாட் திறன் கொண்ட எண்ணூர் அனல் மின் விரிவாக்கத் திட்டம் என்னும் ஒரு புதிய திட்டத்தைச் செயல்படுத்த எனது தலைமையிலான அரசு தற்போது முடிவு செய்துள்ளது என்பதை இந்தப் பேரவைக்குத் தெரிவிப்பதில் நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.   சுமார் 3,960 கோடி ரூபாய் மதிப்பீட்டில் துவக்கப்படும்  இந்த அனல் மின் திட்டம்  2015ஆம் ஆண்டு இறுதிக்குள் தனது உற்பத்தியைத் தொடங்கும்”  என்றார். -  இந்தத் திட்டத்தின் 15-12-2014 நிலை என்ன தெரியுமா?   “இத்திட்டத்திற்கான ஆரம்ப கட்ட கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.  இத்திட்டம் 2017-2018ஆம் ஆண்டில் செயல்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது” என்பதுதான்!  எப்படி அறிவிப்பு?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக