வியாழன், 18 பிப்ரவரி, 2016

கேமராவோடு போராட்டத்திற்கான களத்தையும் தேர்ந்தெடுங்கள்.Arun Mo (அருண் தமிழ்ஸ்டுடியோ)

சினிமாவை வெறுமனே சினிமாவாக பார்க்கக் கூடிய சூழல் தற்போது இல்லை. சினிமாவை சமூகத்தின் களையெடுக்கும் ஊடகமாக மாற்ற வேண்டிய அவசியம் இருக்கிறது. குறிப்பாக கல்வி அமைப்புகள், மாணவர்கள் தொடர்ச்சியாக தாக்கப்படுகிறார்கள். நாட்டில் சிறுபான்மையினர் பாதுகாப்பாக வாழ்வது கேள்விக்குறியாக மாறியிருக்கிறது. ஆளும் வர்க்கம் கோட்சேவை கடவுள் என்றால், அதனை ஏற்றுக்கொள்ள வேண்டிய நிர்பந்தம் மக்களுக்கு கொடுக்கப்படுகிறது. இல்லை என்று மறுத்துப் பேசினால் மறுப்பவர் தேச துரோகி என்றாகிப் போகிறார். தமிழ்நாட்டில் இத்தகைய மதவாத சக்திகளுக்கு ஒருபோதும் இடமில்லை என்றாலும், கொஞ்சம் சுதாரித்துக் கொள்வது நல்லது. திரைப்படங்கள் இன்னமும் டூயட் பாடுவது எப்படி என்று இளைஞர்களுக்கு கற்றுக்கொடுக்காமல், களத்தில் துணிவுடன் போராதுவது எப்படி கற்றுக்கொடுக்க வேண்டிய சூழல் வந்துவிட்டது. கேமராவோடு போராட்டத்திற்கான வாசகத்தையும் படைப்பாளிகள் எடுத்தாக வேண்டியது காலத்தின் கட்டாயம்.

ஆனால் இப்போதும் நாம் விசாரணை திரைப்படம் முன்வைத்த சமூக அமைப்புகளை கேள்விக்குட்படுத்தாமல், விசாரணை உலகத் திரைப்படமா இல்லை உள்ளூர் பப்படமா என்று பட்டிமன்றம் நடத்திக் கொண்டிருக்கிறோம். மிக நன்றாக விளம்பரப்படுத்தப்பட்டு, ஆரோக்கியம் என்றாலே ஹார்லிக்ஸ்தான் என்கிற அளவிற்கு ஒரு பொருளை நாம் மாற்றிவிட முடியும். சினிமா என்பது கலையாக பாவிக்கப்படாமல், வியாபார சந்தையாக மட்டுமே பாவிக்கப்படுமேயானால், எத்தகைய போலியான ஒன்றையும் தரமானது என்று மக்களை ஏமாற்றிவிட முடியும். அதே நேரத்தில் தரமான ஒன்றும் தேவையான விளம்பரம் இல்லாமல் குப்பையாக மாறும் அவலமும் நேரும். எந்த ஒன்று எத்தகைய முன் விளம்பரங்களையும் கோராமல், கதாநாயக பிம்பத்தின் நிழலாய் வெளிவராமல், தன்னுடைய உள்ளடக்கத்தை நம்பி வெளிவருகிறதோ அப்போதுதான் அது தரமான ஒன்றாக மாறுகிறது. தான் வெளிவரும் அதே காலத்தில் அதே போன்று வேறு சில படைப்புகளும் வெளிவருவதற்கான வாசலை திறந்து விட வேண்டும். மாறாக இதே அளவிலான பணபலமும், விளம்பர யுக்தியும் கோரும் சந்தைப் பொருளாய் மட்டுமே ஒரு படைப்பு தேங்கி நிற்குமாயின் அது தன்னுடைய தளத்தில் எவ்வித சலனத்தையும் ஏற்படுத்தாத வெற்று படைப்பாய் மட்டுமே ஒடுங்கிப் போகும்  facebook.com/ArunThamizhstudio?fref=nf

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக