திங்கள், 8 பிப்ரவரி, 2016

வீட்டை நகர்த்த 25 லட்சம் செலவு செய்த டீ வியாபாரி...நீர்பிடிப்பு பகுதியில்....

நீர்ப்பிடிப்பு பகுதியில் இருந்த 1,078 சதுரடி வீட்டை இடிக்க நீதிமன்றம் உத்தரவிட்டதால் அதற்கு மனமின்றி ரூ.25 லட்சம் செலவில் 59 அடி தொலைவுக்கு வீட்டை நகர்த்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. திருவண்ணாமலை மாவட்டம் வேட்டவலம் அருகே இசுக்கழிக்காட்டேரி கிராமத்தில் வசிப்பவர் டீ வியாபாரி வெற்றிச்செல்வன் (57). இவருக்கு, அதே கிராமத்தில் உள்ள வெள்ளங்குட்டை குளம் அருகே விவசாய நிலம் உள்ளது. குளக்கரை அருகே நீண்ட காலமாக வசித்த வந்த இடத்தில் ரூ.35 லட்சம் மதிப்பில் கடந்த 2013-ம் ஆண்டு புதிய வீடு கட்டி குடியேறினார்.
அதே கிராமத்தில் வசிக்கும் ஒருவர் தொடர்ந்த வழக்கில், குளத்துக்கு தண்ணீர் செல்லும் ஓடையில் வீடு கட்டப்பட்டு உள்ளது என்று கூறி, அந்த வீட்டை இடிக்குமாறு உயர் நீதிமன்றம் கடந்த ஆண்டு மே மாதம் உத்தரவு பிறப்பித்தது. அதை எதிர்த்து நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவின் தீர்ப்பிலும் வெற்றிச்செல்வனுக்கு பின்னடைவு ஏற்பட்டது.
கஷ்டப்பட்டு கட்டிய வீட்டை இடிக்க மனம் இல்லாததால், வீட்டை நகர்த்த முடிவு செய்துள்ளார். ஓடையில் இருந்து வீட்டை அகற்றுவதற்கான கால அவகாசத்தையும் மாவட்ட நிர்வாகத்திடம் இருந்து பெற்றார். பின்னர், ‘எல் அண்ட் டி’ நிறுவனம் உதவியுடன் வீட்டை நகர்த்தும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.
இதுகுறித்து வெற்றிச்செல்வன் கூறும்போது, “நான், சந்தைகளுக்கு சென்று டீ விற்பனை செய்து, சிறுக சிறுக சேமித்த தொகையில் 1,078 சதுர அடி பரப்பளவில் வீட்டை கட்டினேன். என்னுடைய முதல் பிள்ளையாக வீட்டை கருதுகிறேன். அதனால், ஒரு செங்கல்லைக் கூட எடுக்க மனம் இல்லை.
இதையடுத்து, எங்களது விவசாய நிலத்துக்கு வீட்டை நகர்த்துவது என்று முடிவு செய்தேன். வீடு அமைந்துள்ள இடம் மற்றும் புதிதாக கொண்டு செல்லவுள்ள இடத்தின் மொத்த தொலைவு 59 அடியாகும். ‘எல் அண்ட் டி’ நிறுவனம் மூலம் வீட்டை நகர்த்தும் பணி தொடங்கியது. 50-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
வீட்டின் தரைக்கு அடியில் கற்களை பெயர்த்து 400 ‘ஹைட்ராலிக் ஜாக்கிகள்’ பொறுத்தப்பட்டுள்ளன. ஓரிரு நாட்களில் வீட்டை நகர்த்தும் பணி தொடங்கிவிடும். 47 நாட்கள் பணிகள் நடைபெற்று வருகிறது. இன்னும் 20 முதல் 25 நாட்களில் பணிகள் முழுமை பெற்றுவிடும் என்று நம்புகிறேன்.
புதிதாக அமைக்கவுள்ள இடத்தில் 10 அடிக்கு ஆழம் தோண்டி, சிமென்ட், கருங்கற்கள், மணல் கொண்டு தளம் அமைக்கப்பட்டுள்ளது. அதன் மீது நகர்த்தப்படும் வீடு வைக்கப்பட்டு இணைக்கப்படும். இதற்காக ரூ.25 லட்சம் செலவு ஏற்பட்டுள்ளது. இப்போது நான் ரூ.40 லட்சம் கடனாளியாக உள்ளேன்” என்றார்//tamil.thehindu.com/

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக