திங்கள், 1 பிப்ரவரி, 2016

கடன்...1,000 கட்டுமான திட்டங்கள் முடங்கும் ஆபத்து...விற்பனை வீழ்ச்சி.

விற்பனை வீழ்ச்சி, விலை உயர்வு போன்ற காரணங்களால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், 1,000 கட்டுமான திட்டங்கள் முடங்கும் நிலை ஏற்பட்டு உள்ளது. கடன் சுமை நெருக்கடியால் 'பில்டர்'கள் தலைமறைவாகும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர்.சென்னையிலும், புறநகர் பகுதிகளிலும், புதிய குடியிருப்புகளுக்கான தேவை அதிகரித்து உள்ளது. இதனால் அந்தப் பகுதிகளில் வீடு வாங்குவதில் மக்கள் அதிக ஆர்வம் காட்டினர்.தகவல் தொழில்நுட்பம் மற்றும் அது சார்ந்த பிற தொழில்கள், நிதி சேவை நிறுவனங்கள் மற்றும் இதர சேவை துறைகளில் பணி புரிய வருவோர், சென்னையில் சொந்த வீடு வாங்குவதில் ஆர்வம் காட்டியதால், புதிய கட்டுமான திட்டங்களுக்கு வரவேற்பு அதிகரித்தது.தற்போதைய நிலவரப்படி சென்னை மாநகராட்சி சார்பில் ஆண்டுக்கு, 8,000 கட்டுமான திட்டங்களுக்கும், சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமம் சார்பில் 900 திட்டங்களுக்கும் அனுமதி வழங்கப்படுகிறது.
வழிகாட்டி மதிப்பு உயர்வு, வீட்டுக்கடன் வட்டி குறைப்பில் தாமதம், திட்ட அனுமதி தாமதம் போன்ற காரணங்களால் வீடுகள் விற்பனையில், 2015 துவக்கத்தில் இருந்தே தொய்வு ஏற்பட்டது.நவம்பர் மற்றும் டிசம்பரில் பெய்த கன மழை மற்றும் வெள்ளத்தால், கட்டுமான திட்டங்கள் அதிகமாக நடக்கும் புறநகர் பகுதிகளான மேடவாக்கம், பெரும்பாக்கம், சோழிங்கநல்லுார், பழைய மாமல்லபுரம் சாலை, நாவலுார், முடிச்சூர், ஊரப்பாக்கம், கூடுவாஞ்சேரி போன்ற இடங்கள் கடுமையாகபாதிக்கப்பட்டன.
இந்தப் பிரச்னை சென்னையில் மட்டுமின்றி தமிழகம் முழுவதும் காணப்படுகிறது. சென்னையில் கட்டுமான பணிகளை மேற்கொள்ளும் நிறுவனங்களில் பல, தமிழகம் முழுவதும் முக்கிய நகரங்களில் கட்டுமானங்களை நடத்தி வருகின்றன. இதனால் இந்தப் பிரச்னை மாநிலம் முழுவதும் பொதுவாக உள்ளது.

விற்பனை வீழ்ச்சி:
இதுகுறித்து சொத்துகள் மற்றும் கட்டுமான திட்டங்களுக்கான மதிப்பீட்டாளர் பாலமுருகன் கூறியதாவது:சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் 1,000 கட்டுமான திட்டங்கள் முடங்கி உள்ளதாக தெரிய வந்துள்ளது. இந்த நிறுவனங்களில் வீடு வாங்க யாரும் வராததால் பணிகள் நிறுத்தப்பட்டு உள்ளன. இதனால் அந்த பில்டர்கள் கடனை செலுத்த முடியாமல் தவிக்கின்றனர். மக்களிடம் பணப்புழக்கம் குறைந்ததே வீடு விற்பனை வீழ்ச்சிக்கு முக்கிய காரணம். தனியாரிடம் கடன் வாங்கிய சில கட்டுமான நிறுவன அதிபர்கள் தலைமறைவாக
Advertisement
இருக்கும்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். பல திட்டங்களில் சொத்துகளை கையகப்படுத்தும் நடவடிக்கையில் வங்கிகள் இறங்கி உள்ளன. சில இடங்களில் சொத்துகளின் இப்போதைய மதிப்பு அடிப்படையில், கடனை மாற்றி அமைப்பதும் நடக்கிறது. இந்நிலை தொடர்ந்தால் தமிழகத்தில் பெரிய அளவில் பொருளாதார சிக்கல் ஏற்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

விலை குறைத்து கேட்பவர்களுக்கு லாபம்:
தமிழக அடுக்குமாடி வீடு கட்டுவோர் சங்க தலைவர் மணிசங்கர் கூறியதாவது:
* மழை - வெள்ள பாதிப்புக்கு பின், கட்டுமான பணிகள் முற்றிலுமாக குறைந்துள்ளன. தற்போதைய நிலவரப்படி நான்கில் ஒரு பங்கு அளவுக்கு தான் பணிகள் நடக்கின்றன.
* வீடு வாங்க யாரும் முன் வருவதில்லை. அப்படியே சிலர் விசாரிக்க வந்தாலும் 1 சதுர அடிக்கு, 4,000 ரூபாய் என்று நிர்ணயித்த விலையை 2,500 ரூபாயாக குறைத்து கேட்கின்றனர்.
* வங்கிக்கடன் நெருக்கடியில் இருக்கும் பில்டர்கள், முதலீட்டில் இழப்பு ஏற்படுவதை தவிர்க்க குறைந்த விலைக்கு விற்று விடுகின்றனர்.
* பெரிய கட்டுமான நிறுவனங்கள் மிக மோசமான வகையில் பாதிக்கப்பட்டு உள்ளன. அடுத்த சில மாதங்களில், இவர்களின் சொத்துகள் வங்கிகளால் முடக்கப்பட வாய்ப்பு அதிகரித்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

- நமது நிருபர் -  dinamalar.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக