சனி, 30 ஜனவரி, 2016

பழ. கருப்பையாவின் வீடு மீது நள்ளிரவில் தாக்குதல்

தாக்குதல் நடத்தப்படலாம் என்று பழ. கருப்பையா பேட்டி அளித்தும் முன்னெச்சரிக்கை எடுக்காதது ஏன்?: ஸ்டாலின் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் முகனூல் பதிவு: ’
’ பழ. கருப்பையா அவர்களின் வீடு மீது நள்ளிரவில் நடத்தப்பட்ட தாக்குதல் குறித்த செய்தி அறிந்து அவரை இன்று காலை தொலை பேசியில் தொடர்பு கொண்டு விசாரித்தேன்.கருத்துச் சுதந்திரத்திற்கு எதிரான இந்த காட்டுமிராண்டித் தனமான தாக்குதலுக்கு என் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த கொலை வெறித் தாக்குதல் அதிமுக அரசின் சகிப்புத்தன்மையன்ற போக்கையும், மாற்றுக் கருத்துக்களை நசுக்கும் எதேச்சாதிகார மனப்போக்கையும் காட்டுகிறது.


தலைவர் கலைஞர் அவர்களும் மாற்றுக் கட்சி தலைவர்களும் இந்த தாக்குதலைக் கண்டித்துள்ளது குறிப்பிடத்தக்கது. "வன்முறை கலாச்சாரத்தை" ஆட்சியிலிருக்கும் போதெல்லாம் குத்தகைக்கு எடுத்துக் கொள்ளும் அதிமுக ஆட்சியில் கருத்து சுதந்திரமும், ஆரோக்கியமான விமர்சனங்களும் குரங்கு கையில் கிடைத்த பூமாலை போல் சிதைக்கப்படுகிறது. மாற்றுக் கட்சி தலைவர்கள், தனக்கு எதிராக கருத்து கூறுவோர், ஏன் தன் மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதி ஆகியோருக்கு எதிராக நடைபெற்ற அத்துமீறிய வன்முறைகளையும், ஆபாச போஸ்டர் கலாச்சாரத்தையும், அமைதியாக முதலமைச்சர் ஜெயலலிதா வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார். அதனால், இன்றைக்கு ஜனநாயகம் அதிமுகவினரின் தயவில் தமிழகத்தில் குடியிருக்க வேண்டிய அவல நிலைமை ஏற்பட்டிருக்கிறது. முதலமைச்சர் ஜெயலலிதாவை விமர்சிப்பவர்கள் தாக்கப் படுவார்கள் என்ற பீதியுணர்வை ஏற்படுத்தி, தன் ஆட்சிக்கு எதிரான கருத்துக்கள் வராமல் தடுத்து விட முடியும் என்று ஜெயலலிதா நினைக்கிறார். "என் மீது தாக்குதல் நடத்தப்படலாம்" என்று பழ. கருப்பையா வெளிப்படையாக தொலைக்காட்சிப் பேட்டிகளில் தெரிவித்த பிறகும், சென்னை மாநகரக் காவல்துறை அவருக்கு பாதுகாப்பு வழங்குவதற்கு எந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்காதது கவலைக்குரியது.

காவல்துறையின் சுதந்திரம் அதிமுக ஆட்சியில் எப்படி காலில் போட்டு மிதிக்கப்படுகிறது என்பதற்கு எடுத்துக்காட்டாக இந்த தாக்குதல் சம்பவம் அரங்கேறியுள்ளது. ஆகவே திரு பழ கருப்பையா அவர்களின் வீடு மீது தாக்குதல் நடத்தி, அவரது உயிரைப் பறிக்க கற்கல் வீசி, காரை உடைத்து நொறுக்கியுள்ள அதிமுகவினர் மீது சென்னை மாநகர காவல்துறை ஆணையர் உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். திரு பழ கருப்பையா அவர்களுக்கு போதிய பாதுகாப்பு கொடுத்து அவரது உடமைக்கோ, உயிருக்கோ எந்த வித அச்சுறுத்தலும் இல்லாமல் பாதுகாக்க வேண்டும் என்றும் சென்னை மாநகரக் காவல்துறைக்கு வேண்டுகோள் விடுக்கிறேன்.’’nakkheeran,in

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக