சனி, 9 ஜனவரி, 2016

கூவம் நதி ..ஒரு காலத்தில் குடிநீராக இருந்தது...இன்று குரங்கு கையில் பூமாலையாக...

luckylookonline.com :குரங்கு கையில் பூமாலை... கூவம் நம் கைகளில்!! வெளிநாடுகளுக்கு சென்றுவிட்டு சென்னை திரும்புபவர்கள் ஏதேனும் பாலங்களை கடக்கும்போதே மூக்கைப் பொத்திக்கொண்டு முணுமுணுப்பார்கள். “அங்கெல்லாம் ஆறு என்னம்மா ஓடுது தெரியுமா? நம்மூர்லேயும் கெடக்குதே கூவம் கழுதை...” அவர் வாயிலிருந்து அடுத்த அரை மணி நேரத்துக்கு கூவத்துக்கு அர்ச்சனை நடக்கும். பாவம். ஆறு என்ன செய்யும். ஆற்றை அசிங்கப்படுத்திய நம்மை அல்லவா நாமே காறித்துப்பிக் கொள்ள வேண்டும்?கூவத்தை குடித்தார்கள்; நம்புங்கள்.
எல்லா நதிகளையுமே போலவே கூவமும் புனிதமான நதிதான். நதியென்றாலே புனிதம்தான். கூவம் ஆற்றின் நீரை நம் முன்னோர் குடித்திருக்கிறார்கள். குளித்திருக்கிறார்கள். வேளாண்மை செய்திருக்கிறார்கள். இந்நதியின் காரணமாக நாகரிகம் வளர்ந்திருக்கிறது. நகரங்கள் பிறந்திருக்கின்றன.

வள்ளல் பச்சையப்பா முதலியாரை தெரியும் இல்லையா? புகழ்பெற்ற சென்னை பச்சையப்பா கல்லூரி இவர் பேரில்தான் அமைந்திருக்கிறது. அந்த பச்சையப்பா முதலியார், கூவம் கரையோரம் அமைந்திருந்த கோமளீஸ்வரம்பேட்டையில்தான் (இன்றைய சிந்தாதிரிப்பேட்டை பகுதி) வசித்தார். அவர் காலத்தில் செல்வந்தர்கள் கூவம் கரையில்தான் பங்களா கட்டி வசித்தார்கள். கூவம் நதி கொடையாக தந்த குளிர்ந்த காற்றையும், அதன் கரைகளில் வளர்ந்த காட்டுச்செடி மலர்களின் சுகந்தத்தையும் அனுபவித்து வாழ்ந்தார்கள். பச்சையப்பா முதலியார் தினமும் காலையில் கூவத்தில் குளித்து சுத்தபத்தமாக கோமளீஸ்வரன் கோயிலுக்கு போய் இறைவனை வணங்கிவிட்டுதான் தன் அலுவல்களை தொடங்குவாராம். இதெல்லாம் ஏதோ கி.மு.வில் நடந்த நிகழ்ச்சிகள் அல்ல. வெறும் இருநூறு ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்தவைதான்.

வெள்ளையர்களை கவர்ந்த ஆறு

கூவம் நதி கடலில் சேரும் பகுதி ஓர் இயற்கை ஆச்சரியம். அதில் கவரப்பட்டதால்தான் கிழக்கிந்திய கம்பெனியின் பிரான்சிஸ் டே, சரக்குக் கப்பல்களை நிறுத்த இதைவிட வாகான இடம் கிடைக்காது என்று கருதி, அப்பகுதியின் வடக்கில் இருந்த பகுதிகளை விலைக்கு வாங்கி வணிக மையம் அமைத்தார். அப்பகுதியில் செயற்கை துறைமுகம் உருவாக்கப்பட்டு, அதைச்சுற்றி குடியிருப்புகள் உருவானது. கோட்டை எழுப்பப்பட்டது. நகரம் உருவானது. அவ்வகையில் மதறாஸ் (சென்னை) உருவானதற்கு கூவமும் ஒருவகையில் காரணம்.

இந்தியா, வெள்ளையர்களின் ஆளுகைக்கு உட்படவும் மறைமுகமான காரணமாக இந்நதியே இருந்திருக்கிறது எனும்போது, வரலாற்றில் எத்தகைய மகத்தான இடத்தை நாம் கூவத்துக்கு கொடுத்திருக்க வேண்டும்.

கூவம் ரூட் மேப்

கூவம் என்கிற பெயர் ‘கூபம்’ என்கிற பழந்தமிழ் சொல்லில் இருந்து மருவியிருக்கலாம் என்று கருதப்படுகிறது. கூபம் என்றால் ஆழமான குளம் என்று பொருள். அக்காலத்தில் நீரியல் அறிவு கொண்ட வல்லுநர்களை ‘கூவாளன்’ என்றே அழைத்திருக்கிறார்கள்.

சென்னையிலிருந்து சுமார் 70 கி.மீ தூரத்தில் திருவள்ளூர் மாவட்டத்தின் கூவம் கிராமம்தான் இந்த ஆறு உருவாகும் இடம். அங்கிருந்து சிறு ஓடையாக ஓடி, ஐந்து கி.மீ தூரத்தில் இருக்கும் சட்டறை என்கிற கிராமத்தில் நதியாக உருவெடுக்கிறது. திருவள்ளூர், பூந்தமல்லி நகரங்களை ஒட்டி சுமார் 60 கி.மீ பாய்ந்து, சென்னைக்குள் கோயம்பேடு அருகில் நுழைகிறது. அரும்பாக்கம், சூளைமேடு, சேத்துப்பட்டு, எழும்பூர், சிந்தாதிரிப்பேட்டையை எட்டுகிறது. அங்கே இரண்டாக பிரிந்து சென்னைக்குள் ஒரு தீவினை உருவாக்குகிறது. பிரிந்த நதி மீண்டும் நேப்பியர் பாலம் அருகே இணைந்து, முகத்துவாரம் வாயிலாக வங்கக்கடலில் கலக்கிறது.

ஆவடிக்கு அருகில் பருத்திப்பட்டு அணைக்கட்டு வரை சராசரி ஆறாகவே இருக்கிறது கூவம். ஆக்கிரமிப்புகள், மணல் சுரண்டல் என்று எல்லா ஆறுகளுக்கும் நேரும் அவலம் கூவத்துக்கும் நேர்கிறது. இன்னமும் நிலத்தடி நீர் ஆதாரத்துக்கும், விவசாயத்துக்கும் திருவள்ளூர் மாவட்டத்தில் கூவத்தை நம்பி பல கிராமங்கள் இருக்கின்றன.
சென்னை மாநகருக்குள் நுழைவதற்கு முன்பாகவே தொழிற்சாலைகள் மற்றும் குடியிருப்புகளின் கழிவுநீர் அப்படியே விடப்பட்டு நம் பாவங்களை சிலுவையாக சுமந்து சாக்கடையாக கடனே என்றுதான் கடலுக்கு போய் சேர்கிறது. நகருக்குள் நரம்பாக செல்லக்கூடிய சுமார் 20 கி.மீ. தூரம்தான் கூவத்துக்கு நரகம். ஆற்றுநீர் கருப்பாக, துர்வாசனையோடு வேண்டாத விருந்தாளியாகதான் நகருக்குள் நகர்கிறது.

எப்போது மாசுபட்டது?

வெள்ளையரிடமிருந்து நாடு சுதந்திரம் பெற்ற பிறகு ஓன்றிரண்டு ஆண்டுகளில் நடந்த ஆய்வில், சென்னை மாநகருக்குள் கூவம் நதியில் சுமார் ஐம்பது வகை மீன் இனங்கள் வாழ்ந்ததாக தெரியவருகிறது. பழைய புகைப்படங்களை காணும்போது மீனவர்கள் மீன்பிடித்தொழிலை கூவம் ஆற்றில் செய்து வந்தது உறுதியாகிறது.

ஆனால் -

அடுத்த பத்தாண்டு காலத்துக்குள்ளேயே கூவத்தில் உயிர்வாழும் மீன் இனங்களின் எண்ணிக்கை வெறும் இருபதாகி இருக்கிறது. இன்று நீர்வாழ் உயிரினங்கள் வசிக்க லாயக்கற்ற ஆறு அது.

வெள்ளையர் நம்மை சுரண்டியிருந்தாலும், நம்மூர் ஆற்றின் மீது அவர்கள் அக்கறையாகதான் இருந்திருக்கிறார்கள். இந்நதியின் கரைகளில்தான் பெரும் மாளிகைகளை எழுப்பி, முக்கிய அதிகாரிகளையும், ஆளுநர்களையும் தங்க வைத்தனர். கூவத்தை கொன்ற பெருமை நம்மையே சாரும். 1960களின் தொடக்கத்திலேயே கூவம், முழுமையான சாக்கடையாக மாறிவிட்டது.

அண்ணாவின் கனவு

1967ல் அண்ணா ஆட்சி பொறுப்பேற்றபோது, ஒரு கோடியே பதினெட்டு லட்ச ரூபாய் மதிப்பீட்டில் கூவம் நதியை சீரமைக்க ஒரு திட்டம் தீட்டினார். அப்போது, “லண்டன் மாநகருக்கு தேம்ஸ் நதியை போல சென்னைக்கு கூவம் பெருமை சேர்ப்பதாய் அமைய வேண்டும்” என்று தன்னுடைய கனவினை வெளிப்படுத்தினார்.
அண்ணாவுக்கு பிறகு முதல்வராக பொறுப்பேற்ற கருணாநிதி கூவத்தில் படகுகளை விட்டு சுற்றுலாவை ஈர்க்க முயற்சித்தார். கடையேழு வள்ளல்கள் பெயரில் படகுத் துறைகளையும் கட்டினார். இன்றும் பாழடைந்த நிலையில் இருக்கும் அந்த படகுத்துறைகளை கூவம் கரைகளில் காணலாம்.

அதன் பின்னரும் பல்வேறு சந்தர்ப்பங்களில் இந்நதியை சீர்படுத்தி மீண்டும் பழைய நிலைக்கு கொண்டுவர ஏராளமான முயற்சிகள் எடுக்கப்பட்டு பல கோடி ரூபாய்க்கு திட்டங்களாக திட்டங்கள் தீட்டப்பட்டன. குறிப்பாக சென்னை மாநகர மேயராக மு.க.ஸ்டாலின் இருந்தபோது, திமுக அரசு 2000ஆம் ஆண்டு ரூ.720 கோடி மதிப்பீட்டில் ஒரு திட்டத்தை அறிவித்தபோது கூவம் மணக்கும் என்றே உறுதியாக எண்ணப்பட்டது.

ஆனால், சாபக்கேடு கூவத்துக்கா அல்லது சென்னை மக்களுக்கா என்று தெரியவில்லை. ஆட்சி மாற்றத்தால் அந்த திட்டம் அம்பேல் ஆனது. அதன் பிறகும் அவ்வப்போது அறிவிப்புகள் வெளிவந்தாலும் மக்களும், கூவமும் அதை சீரியஸாக எடுத்துக் கொள்வதில்லை. இன்றுவரை அண்ணாவின் கனவு நிறைவேறவில்லை.

பொறுத்த கூவம் பொங்கியது

இயற்கையை மனிதன் என்னதான் நாசப்படுத்தினாலும், அது ஒரு கட்டம் வரைதான் பொறுக்கும். பின்னர் தன்னையே ஒரு உலுக்கு உலுக்கி மனித நாசங்களை உதிர்க்கும். தன்னுடைய நாற்றத்தை தானே சகிக்க முடியாமலோ என்னவோ, சமீபத்திய பெருமழையில் கூவம் நம் பாவங்களை மொத்தமாக கழுவிக் கொண்டது. கால்வாய்கள் வழியாக வந்த வெள்ளநீர் நிரம்பி, சாக்கடைகளை ஒட்டுமொத்தமாக கடலுக்குள் கொண்டுச் சென்று கொட்டி தன்னைதானே அந்த ஆறு புதுப்பித்துக் கொண்டது. தெளிவான நீரோட்டம் இயல்பாக அமைந்தது.

ஆனால் அந்த சுத்தத்தின் ஆயுள் ஒரு மாதம் கூட முழுமையாக நீடிக்கவில்லை. மீண்டும் பழைய நிலைக்கே நீரின் நிறம் கருப்பாக மாறிக் கொண்டிருக்கிறது. துர்நாற்றம் வீச ஆரம்பித்திருக்கிறது.

என்ன செய்யப் போகிறோம்?
நம் பயன்பாட்டுக்கு இயற்கை அளித்த கொடையான நீர்நிலைகளை கூவம் மாதிரி விஷமாக்கிவிட்டு குடிப்பதற்கு, குளிப்பதற்கு, விவசாயத்துக்கு, இதர பயன்பாடுகளுக்கு எல்லாம் லாயக்கற்றதாக செய்துவிட்டு இமயமலை பனியை உருக்கி பயன்படுத்தப் போகிறோமா?
நதி ஓடுவது மனித சமூகம் உருவாக்கும் கழிவுகளை சுமப்பதற்கல்ல. நதியோரங்கள் தொழிற்பேட்டைகளோ அல்லது வேறு பயன்பாட்டுகளுக்கோ ஒதுக்கப்பட வேண்டிய இடங்கள் அல்ல. இதை நாம் மறந்ததால்தான் இன்று குடிநீருக்கு அவதிப்படுகிறோம். எதிர்காலத்தில் மூச்சுவிடவும் சிரமப்படுவோம்.

நதிகள் இணைப்பைவிட, நதிநீர் சீரமைப்புதான் இப்போது அவசிய அவசரபணி. நாம் இப்போது தொடங்காவிட்டால் வேறு எப்போதுதான் செய்யப் போகிறோம்?



சிங்கப்பூர் வழிகாட்டுகிறது!

சென்னையில் கூவம் மாதிரிதான் சிங்கப்பூரிலும் ஓர் ஆறு ஓடிக்கொண்டிருந்தது.

1819ல் சிங்கப்பூர் ஒரு நகரமாக உருவானதிலிருந்தே, அந்நகரின் வணிக நடவடிக்கைகளின் முதுகெலும்பாக சிங்கப்பூர் ஆறு இருந்து வந்தது. வேகமான நகரமயமாக்கல் அந்நதியையும் சாக்கடை ஆக்கியது. நம்மூர் கூவத்துக்கு என்ன நடந்ததோ, அதுவே அங்கும் நடந்தது.

1970களில் உலகமெங்கும் இருந்து சுற்றுலாப் பயணிகளை வசீகரிக்கத் தொடங்கிய சிங்கப்பூருக்கு நடுவே மாபெரும் சாக்கடை ஓடிக்கொண்டிருந்தது அரசுக்கு தர்மசங்கடத்தை கொடுத்தது. தவளைகள் கூட வாழ லாயக்கற்ற கருப்பான நீர் துர்நாற்றத்தோடு சீறிக்கொண்டிருக்க, சிங்கப்பூரில் கலை அழகை காண உலகின் கடைக்கோடியில் இருந்து வந்தவர்கள் எல்லாம் மூக்கைப் பிடித்துக் கொண்டார்கள்.

சகித்துக்கொள்ள முடியாத இந்த காட்சிக்கு ஒரு முடிவுகாண சிங்கப்பூர் அரசு முடிவெடுத்தது. செத்துப்போன நதிக்கு உயிர் கொடுக்க திட்டம் தீட்டியது.

1977ல் ‘ஆக்‌ஷன் ப்ளான்’ அமலுக்கு வந்தது.

· ஆற்றை ஒட்டி அமைந்திருந்த பதினாறாயிரம் குடும்பங்கள், அங்கிருந்து அகற்றப்பட்டு வேறு இடங்களில் குடியமர்த்தப்பட்டார்கள்.

· போலவே ஆற்றின் கரைகளில் அமைந்து, நதிநீரை மாசுபடுத்திக் கொண்டிருந்த சுமார் மூன்றாயிரம் தொழில் நிலையங்கள், நகரின் வேறு இடத்தில் அமைக்கப்பட்ட இண்டஸ்ட்ரியில் எஸ்டேட்டுகளுக்கு இடம்பெயர்ந்தன.

· ஆற்றோரத்தில் இறைச்சி தேவைக்காக அமைக்கப்பட்டிருந்த நூற்றுக்கணக்கான பன்றி மற்றும் வாத்து பண்ணைகளை வேறு இடங்களுக்கு கொண்டுச் சென்றார்கள்.

· மாசு கட்டுப்பாட்டு அமைப்புகள் ‘ஓவர்டைம்’ வேலை பார்த்து நதியில் யாரெல்லாம் அசுத்தங்களை கலக்குகிறார்களோ, அவர்களது வயிறு கலங்கும் வண்ணம் எச்சரிக்கை நோட்டீஸ்களை கத்தை கத்தையாக வழங்கினார்கள். கழிவுநீரை மறுசுழற்சி செய்யும் கட்டமைப்புகளை கட்டாயமாக நிறுவ வகை செய்தார்கள்.

· இவையெல்லாம் முடிந்ததும் நதியை தூர்வாறத் தொடங்கினார்கள். பல்லாண்டுக் கணக்கில் சேர்ந்த மாசுகளை அகற்றினார்கள். நதியோரங்களில் பூங்காக்களை அமைத்தார்கள். மரக்கன்றுகள் நட்டார்கள். வாக்கிங் போக வசதியாக பாதைகள் உருவாக்கப்பட்டன. கரையோரத்தில் இருந்து ஆற்றை ரசிக்க வசதியாக மேற்கூரைகள் அமைக்கப்பட்ட பார்வையிடங்கள் உருவாகின.

· சிங்கப்பூரின் சுற்றுச்சூழல் அமைச்சகம்தான் இந்த பணியை முன்னெடுத்தது. இதன் தலைமையில் அரசின் எல்லா பிரிவுகளுமே அவை அவை செய்யமுடிந்த பணிகளை செய்தது. அரசு நிறுவனங்கள் மட்டுமின்றி அரசு சாரா தொண்டு நிறுவனங்கள், பெரிய தொழில் நிறுவனங்கள், சிவில் அமைப்புகளும் பங்கெடுத்துக் கொண்டன.
அவ்வளவுதான். 1987ல் சிங்கப்பூர் நதி மீண்டும் உயிர்பெற்றது. வெறும் பத்தாண்டுகளில் சிங்கப்பூர் அரசு, தன் மக்களோடு இணைந்து செய்திருக்கும் இந்த சாதனை ஒரு மகத்தான வரலாறு. நதிகளை சாகடித்துக் கொண்டிருக்கும் மற்ற வளரும் நாடுகளுக்கு முன்னுதாரணமான பாடம்.

திட்டமிட்டோம். முடித்துவிட்டோம். என்றெல்லாம் சிங்கப்பூர் அரசு கழண்டுக்கொள்ளவில்லை. மீண்டும் உயிர்ப்பித்த ஆற்றை, அதே உயிரோட்டத்தோடு ஓடவைக்க என்னென்ன கண்காணிப்பு அமைப்புகளை உருவாக்க வேண்டுமோ, அத்தனையையும் செய்து அவை முறையாக இயங்கக்கூடிய ஏற்பாடுகளையும் செய்திருக்கிறது.

நதியில் கழிவை கலப்பது என்பது நகரமயமாக்கல் கலாச்சாரத்தில் தவிர்க்க முடியாத செயல்பாடுதான். ஆனால் கலக்கப்படும் கழிவு அதிகபட்சம் எவ்வளவு மாசு கொண்டதாக இருக்கலாம் என்று தரக்கட்டுப்பாடு விதித்திருக்கிறது அந்த அரசு. கழிவுநீர் கலக்கப்படும் முகத்துவாரங்களில் இவற்றை கண்காணிக்க அமைப்புகள் செய்யப்பட்டிருக்கின்றன. கண்காணிப்பையும் மீறி ஆற்றில் சேரும் குப்பைக் கூளங்கள் அப்போதே அகற்றப்படவும் ஆட்கள் எந்நேரமும் தயாராக இருக்கிறார்கள். ஆற்றை அழகாக வைத்துக் கொள்வது தொடர்பான விழிப்புணர்வுப் பிரச்சாரங்களை நிரந்தரமாக அரசு மக்களிடையே நிகழ்த்தி வருகிறது.

ஆற்றை மாசுபடுத்துவது சட்டரீதியான குற்றம் என்கிற நிலையை கண்டிப்போடு அமல்படுத்துகிறது சிங்கப்பூர். தொழில் நிலையங்களில் அடிக்கடி சோதனை நிகழ்த்தப்பட்டு அவர்களது கழிவுகள் முறையாக மறுசுழற்சி செய்யப்படுகிறதா, ஆற்றில் கலந்துவிடும் நீர் அரசு விதித்திருக்கும் தரக்கட்டுப்பாட்டு அளவுக்குள் இருக்கிறதா என்றெல்லாம் ‘நேர்மையாக’ சோதனை செய்கிறார்கள் அதிகாரிகள்.

கூவத்தை தேம்ஸ் ஆக்க நாம் என்னவெல்லாம் செய்யவேண்டுமோ, அதையெல்லாம் சிங்கப்பூர் செய்துக் காட்டியிருக்கிறது. அட்சரசுத்தமாக அதை நாம் பின்தொடர்ந்தால் மட்டுமே போதும்.

சில ஆயிரம் கோடிகள் செலவழிக்க வேண்டும். செலவழிப்போம். மனித நாகரிகத்தை தோற்றுவித்த நதிகளுக்கு அதைகூட செய்யாவிட்டால் எப்படி?

(நன்றி : தினகரன் 09-01-2016)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக