சனி, 23 ஜனவரி, 2016

இந்து பத்திரிக்கை : சாதிய நிழல் படிந்த தமிழக கல்வி நிறுவனங்கள்!..தலித் ஒடுக்குமுறை பள்ளிகளிலேயே ஆரம்பித்துவிடுகிறது'

சென்னை ஐஐடியில் நடந்த மாணவர் போராட்டம் | கோப்புப் படம்.சென்னை ஐஐடியில் நடந்த மாணவர் போராட்டம் | கோப்புப் படம். தமிழகத்தில் தலித் ஒடுக்குமுறை பள்ளிக்கூடங்களிலேயே ஆரம்பித்துவிடுகிறது' ஹைதராபாத் மத்திய பல்கலைக்கழக மாணவர் ரோஹித் வெமுலா தற்கொலை இந்திய கல்வி நிறுவனங்கள் பலவற்றிலும் சாதியத்துக்கு எதிரான போராட்டங்களை வலுக்கச் செய்திருக்கிறது.
இந்தச் சூழலில், சாதி பாகுபாடு உயர் கல்வி நிறுவனங்களில் எந்த அளவுக்கு வேரூன்றியிருக்கிறது. அரசாங்கத்தின் அதிரடி பட்ஜெட் குறைப்புகளும், அவசரகதி முடிவுகளும் ஒரு தலைமுறையையே எவ்வாறு துயரத்தில் ஆழ்த்தியிருக்கிறது என்பதை 'தி இந்து' ஆங்கில நாளிதழ் பகுப்பாய்வு செய்துள்ளது.
கடந்த நவம்பர் மாதம் தேசிய மனித உரிமைகள் ஆணையம் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியருக்கு ஒரு நோட்டீஸ் அனுப்பியது. அந்த நோட்டீஸில், நெல்லையில் பள்ளி மாணவர்கள் தாங்கள் என்ன சாதியைச் சேர்ந்தவர்கள் என்பதை அடையாளப்படுத்தும் விதமாக வெவ்வேறு நிறத்திலான கைப்பட்டைகளை அணியும் பழக்கம் தொடர்பாக விளக்கம் கேட்கப்பட்டிருந்தது.
இருப்பினும் இந்த நோட்டீஸ் நடவடிக்கை காலம் தாழ்த்தி எடுக்கப்பட்ட ஒன்று என்றுதான் கூற வேண்டும். ஏனெனில், சாதி பகட்டு மிகுந்த தென் மாவட்டங்களில் இது போன்ற சாதியை பறைசாற்றும் சாய பட்டைகள் அணிவது காலங்காலமாகவே இருந்து வருகிறது.
தமிழக பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் சாதி ரீதியிலான பிரிவினைவாதம் எப்படி இழையாடியுள்ளது என்பதை உணர்த்துவதற்கு இதைவிட தெளிவான சான்று இருக்க வாய்ப்பில்லை.
ஆண்டாண்டு காலமாக நீளும் தலித்துகளுக்கு எதிரான அடக்குமுறைக்கு 2012-ல் இளவரசன் படுகொலை மற்றுமொரு சாட்சியம். தலித் சமூகத்தைச் சேர்ந்த இளவரசனுக்கும், வன்னியர் சமூகத்தைச் (இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பு) சேர்ந்த திவ்யாவுக்கும் இடையேயான காதல் சாதி மோதலாக மாற்றப்பட்டது. தருமபுரி சாதித் தீயால் பற்றி எரிந்தது.
தமிழகத்தில், இன்னமும் கலப்புத் திருமணங்களுக்கு எதிரான சகிப்பின்மை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டுதான் இருக்கிறது.
இளவரசன் - திவ்யா காதல் விவகாரத்துக்கு பின்னர், வட தமிழகத்தில் ஆதிக்கம் செலுத்தும் வன்னியர் சமூகத்தின் பிரதிநிதியாக திகழும் பாட்டாளி மக்கள் கட்சி, கலப்புத் திருமணங்களுக்கு எதிராக பல்வேறு அரசியல் அமைப்புகளை ஓரணியில் திரட்டும் முயற்சியில் ஈடுபட்டது.
கலப்பு திருமணங்களை 'நாடகத் திருமணங்கள்' என்று விழித்த பாமக, இதிலிருந்து தங்கள் சமூக பெண்களை பாதுகாக்க வேண்டும் என அறைகூவல் விடுத்தது.
பாமகவின் இந்த அறைகூவல் கல்லூரிகளில் இதர பிற்படுத்தப்பட்ட சாதியைச் சேர்ந்த மாணவச் சமூகத்தினர் மத்தியில் வேகமாக பரவியது. அவர்களும், கலப்புத் திருமணங்களுக்கு எதிராக தங்கள் பிரச்சாரத்தை தொடங்கினர். 'கலப்புத் திருமணங்களுக்கு எதிரான பிரச்சார குழு' என்ற பெயரில் ஒரு இயக்கமும் உருவானது. நாமக்கல் மாவட்ட கல்லூரிகளிலும் இது காட்டுத் தீ போல் பரவியது. அவர்கள் விநியோகித்த துண்டு பிரசுரங்களில் தாழ்த்தப்பட்ட சமூகத்தினரை எள்ளி நகையாடும் வாசகங்களின் நெடி இருந்தது.
இத்தைகைய சாதிக் கொடுமைகளுக்கு இன்னும் பல சான்றுகள் இருக்கின்றன.
மதுரை-விருதுநகர் எல்லையில் உள்ள குறையூர் எனும் கிராமத்தில் இருக்கும் அரசுப் பள்ளியில் கடந்த 40 ஆண்டுகளாகவே தலித் மாணவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறது மேலுமொரு சான்று.
குறையூரில் அரசுப் பள்ளியிலேயே சாதி அடக்குமுறை இருப்பதால் அப்பகுதி தலித் மக்கள் தங்கள் பிள்ளைகளை மிஷனரி பள்ளியில்தான் படிக்க வைக்கின்றனர் என்ற உண்மை தகவலறியும் உரிமைச் சட்டம் மூலம் பெற்றிருக்கிறார் சாதி அடக்குமுறைக்கு எதிராக போராடும் எவிடன்ஸ் தொண்டு நிறுவனத் தலைவர் கதிர்.
கல்வி நிறுவனங்களில் சாதிய ஆதிக்கம் குறித்து தலித் எழுத்தாளர் ஸ்டாலின் ராஜாங்கம் கூறும்போது, "மாணவர்கள் முன்பைவிட இப்போதுதான் சாதிய அடையாளங்களை அணிந்து கொள்வதில் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.
தங்கள் சாதி தலைவர்கள் புகைப்படம் அடங்கிய லாக்கெட், பிரேஸ்லெட்டுகள் அணிந்து கொள்வதில் பெருமிதம் கொள்கின்றனர்.
கல்வி நிலையங்களில் தீண்டாமை அப்பட்டமாக புழக்கத்தில் இல்லை. ஆனால், சில சலுகைகளை பெறுவதில் குறிப்பிட்ட சமுதாய மாணவர்களுக்கு மட்டும் வழங்கப்படும் முன்னுரிமை, சக மாணவர்கள் மத்தியில் கிடைக்கும் மரியாதை போன்ற விஷயங்களில் சாதி பாகுபாடு வெளிப்படுகிறது" என்றார்.
தலித் இலக்கியம்:
கல்வி நிறுவங்களில் நிலவும் சாதிய பாகுபாடுக்கு இன்னுமொரு சான்று தலித் இலக்கியங்களின் புறக்கணிப்பு. தென் மாவட்ட கல்லூரிகள் சில மிகக் கவனமாக, லாவகமாக தலித் இலக்கியங்களை பாடத்திட்டத்திலிருந்து நீக்கியுள்ளன. இதற்குக் காரணம் இதர பிற்படுத்தப்பட வகுப்பினரின் ஆதிக்கமே எனக் கூறுகிறார் தலித் எழுத்தாளர் ஸ்டாலின் ராஜாங்கம்.
தமிழக கல்வி நிறுவனங்களில் எப்போது புகைந்து கொண்டிருக்கும் சாதி சில சமயங்களில் நெருப்பாக கொளுந்துவிட்டு எரிவதும் உண்டு.
அப்படித்தான், கடந்த 2008 நவம்பர் 12-ல், சென்னை டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக்கல்லூரி வளாகம் போர்க்களமானது. கல்லூரி விழா தொடர்பான போஸ்டரில் ஓபிசி வகுப்பு மாணவர்கள் அம்பேத்கர் என்ற பெயரை புறக்கணித்ததே பிரச்சினைக்கு காரணமானது. இதனையடுத்து தலித் சமூக மாணவர்களுக்கும், முக்குலத்தோர் சமூகத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கும் இடையே வன்முறை வெடித்தது. பயங்கர ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டன.
இந்த சம்பவம் குறித்து விசாரணை அறிக்கை சமர்ப்பித்த நீதிபதி சன்முகம் கமிஷன், சட்டக் கல்லூரி மாணவர்கள் மோதல் பின்னணில் சாதி அமைப்புகள் இருந்ததாக குறிப்பிட்டது என்பது இவ்விடத்தில் சுட்டிக்காட்டத்தக்கது.
சாதி ஆதிக்கம் குறித்து, எழுத்தாளரும், சமூக ஆர்வலருமான மார்க்ஸ் கூறும்போது, "தமிழகத்தில் உள்ள பெரும்பாலான கல்லூரிகளில் பேரசிரியர்களும் சாதி அடிப்படையில் குழுக்களாக பிரிந்து கிடக்கின்றனர்" என்றார். பல்கலைக்கழகங்களில் எஸ்.சி இடஒதுக்கீடு கீழ் இருக்கும் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படுவதேயில்லை என்று மேலும் ஒரு குற்றச்சாட்டை மார்க்ஸ் முன்வைத்தார்.
இது குறித்து சற்று விரிவாக விவரித்த அவர், தலித்துகளுக்கும் கல்வி நிறுவனங்களில் பணி வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும் என்ற கொள்கையை அமல்படுத்துவதில் இருந்து தப்பிக்க ஆதிக்க சாதியினர் கடைபிடிக்கும் பல்வேறு வழிவகைகளும் கூறினார். அவ்வாறாக பரவலாக கூறப்படும் சாக்கு, 'திறமையானவர் கிடைக்கவில்லை அதனால் தலித்துக்கு வாய்ப்பளிக்கப்படவில்லை'. இவ்வாறு மார்க்ஸ் கூறினார்.
சென்னை ஐஐடி வளாகத்தில் பிரமர் மோடிக்கு எதிராக அம்பேத்கர் பெரியார் வாசகர் வட்ட மாணவர் அமைப்பு செயல்படுவதாக அனுப்பப்பட்ட ஒரு மொட்டைக் கடிதம் தலித் மாணவர்கள் எத்தகைய பெரும் பாதிப்புக்குள்ளாக்கியது என்பதை மறக்க முடியாது எனக் கூறும் மார்க்ஸ், "மாநில அரசுக்கு சட்டம் ஒழுங்கை கட்டுக்கோப்புடன் வைத்திருக்கும் மிகப் பெரிய பொறுப்பு இருக்கிறது. 49 ஆண்டுகளாக திராவிடக் கட்சிகள் தமிழகத்தை மாறி மாறி ஆண்டிருந்தாலும், சாதி ஒழிப்புக்காக அவர்கள் எடுத்த நடவடிக்கை என்னவோ மிகச் சொற்பமானதே" என்றார்.
தமிழில்: பாரதி ஆனந்த்   /tamil.thehindu.com/

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக