வெள்ளி, 29 ஜனவரி, 2016

பழ.கருப்பையா: ஆடு மாடுகளை போல கட்சியில் இருப்பவர்களை மேய்த்துக்கொண்டு....அம்மா அம்மா அம்மா...வேறென்ன..

vikatan.com : மேசையைத் தட்டலாம்...கமிஷன் வாங்கலாம்... ஊரை அடித்து உலையில் போடலாம்!”அ.தி.மு.க எம்.எல்.ஏ-வின் ஒப்புதல் வாக்குமூலம்நா.சிபிச்சக்கரவர்த்தி, படம்: கே.ராஜசேகரன் ‘துக்ளக்' பத்திரிகையின் ஆண்டு விழா மேடையில், சோ முன்னிலையில் பல கட்சிப் பிரமுகர்கள் அமர்ந்திருக்க, ‘தமிழகத்தில் இன்று மந்திரியும் தலைமைச் செயலாளரும் கூட்டுச்சேர்ந்து கொள்ளை அடிக்கும் நிலை வந்துவிட்டது. அமைச்சர்கள் என்றால், அடாவடித்தனம் வந்துவிடுகிறது; ஐந்தாறு பி.ஏ-க்கள் வைத்துக்கொள்கிறார்கள். சால்வை எடுக்கக்கூட ஒரு பி.ஏ தேவைப்படுகிறது’ எனப் பேசி அதிரவைத்தார் துறைமுகம் தொகுதி அ.தி.மு.க எம்.எல்.ஏ பழ.கருப்பையா.ஓர் ஆளும் கட்சி எம்.எல்.ஏ., இவ்வளவு வெளிப்படையாகப் பேசுவது ஆச்சர்யம்.  பழ.கருப்பையாவைச் சந்திக்கப்போனால், அதைவிடப் பல மடங்கு ஆச்சர்யங்களையும் அதிர்ச்சிகளையும் தருகிறார்...

``திடீரென உங்கள் கட்சியையே விமர்சனம்செய்ய ஆரம்பித்துவிட்டீர்கள். அதுவும் இவ்வளவு கடுமையான விமர்சனம். கட்சித் தலைமையில் இருந்து ஏதேனும் விளக்கம் கேட்டார்களா?''
``அவர்கள் எதற்கு விளக்கம் கேட்க வேண்டும்? இதை நான், இன்று நேற்று பேசவில்லை. சட்டமன்றத்திலேயே எது உண்மையோ அதைப் பேசியிருக்கிறேன்; தொடர்ந்து பல கூட்டங் களிலும் பேசிவருகிறேன். `துக்ளக்' பத்திரிகையின் ஆண்டு விழாவின் தலைப்பு `இன்றைய அரசியல்'. எனவே, இன்றைய அரசியல் எப்படி இருக்கிறது என்பதைப் பேசினேன். மேடையில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனும் இருந்தார். `காந்தி வளர்த்த காங்கிரஸை, நக்மாதான் வளர்க்க முடியும் எனக் கருதுவதுதான் இன்றைய அரசியல்' எனப் பேசினேன். இளங்கோவன் சிரித்துக்கொண்டார். `வேட்டி கிழிந்திருக்கிறது' எனச் சுட்டிக்காட்டுவது, `உடனே தைத்துக்கொள்ளுங்கள். இல்லாவிடில், கிழிசல் பெரிதாகி குப்பையில் எறியவேண்டிய நிலை வரும்' என அறிவுறுத்துவதற்காகத்தான்.''
``அப்படியானால், அ.தி.மு.க-வைப் பற்றி உங்களது மதிப்பீடு என்ன?''

``ஒவ்வொரு தொண்டனின் திருமண வீட்டுக்கும் போய் மொய் எழுத வேண்டும். யாராவது இறந்துவிட்டால் அங்கே சென்று அவர்களுக்குத் தேவையானதைச் செய்ய வேண்டும். பிறகு, இலவசப் பொருட்கள் கொடுக்கும் நிகழ்ச்சிகளில் முண்டியடித்துக் கொண்டு பங்குபெற வேண்டும். முக்கியமாக, புகைப்படத்தில் நம் முகமும் தெரிய வேண்டும். அந்தப் படத்தை, கட்சிப் பத்திரிகையிலும் தொலைக்காட்சியிலும் வரவழைக்க வேண்டும்.

இதுதான் அரசியல். பொழுது விடிந்தால், எந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, செய்திகளில் எப்படி இடம்பிடிப்பது என்றுதான் எல்லோரும் சிந்திக்கிறார்கள். கட்சிக் கொடி போட்ட கரைவேட்டி கட்டுவது, வளைந்து நெளிந்து கும்பிடுவது, சட்டைப்பையில் தலைவரின் புகைப்படத்தை வெளியில் தெரியும்விதமாக வைத்துக்கொள்வது... இவைதான் அரசியல் வாதியின் அடையாளங்கள்.
கொள்ளையடிப்பது ஒன்றே அரசியலின் இலக்கு. ஒவ்வொரு கவுன்சிலருக்கும் நான்கு வீடுகள்; மூன்று `கீப்'கள்; இரண்டு கார்கள். நீங்கள் வீடு கட்டினால், உங்கள் வீட்டுக் கழிவுநீர்க் கால்வாயை, பொது வாய்க்காலோடு இணைப்பதாக இருந்தாலும் சரி, குடிநீர்க் குழாய் இணைப்பு பெறுவதாக இருந்தாலும் சரி, அதிகாரியைப் போய்ப் பார்த்தால், அவர் கவுன்சிலரைப் பார்க்கச் சொல்வார். கவுன்சிலரை நீங்கள் `பார்க்கவேண்டிய விதத்தில் பார்க்காவிட்டால்', ஓர் ஆண்டு ஆனாலும் நீங்கள் கிரகப்பிரவேசம் நடத்த முடியாது. கவுன்சிலரே இப்படி என்றால், எம்.எல்.ஏ-க்கள் எப்படி, மந்திரிகள் எப்படி என நீங்களே கணக்குப்போட்டுக்கொள்ளுங்கள். அதிகாரிகள் ஒன்றும் விதிவிலக்கு அல்ல. அவர்களும் கிடைத்தவரை ஆதாயம் எனக் கொள்ளை யடிக்கிறார்கள். பி.ஆர்.பி-யின் பையிலும், வைகுண்டராஜன் பையிலும் இல்லாத அரசியல்வாதி யார், அதிகாரி யார் என்பதைத் தேடவேண்டிய நிலையில் இன்று இருக்கிறோம்.''

``எனில், நான்கரை ஆண்டுகாலம் எம்.எல்.ஏ-வாக இருந்து நீங்கள் செய்தது என்ன?''

``எம்.எல்.ஏ-வாக இருந்துகொண்டு, மேசையைத் தட்டலாம்; கமிஷன் வாங்கலாம்; ஊரை அடித்து உலையில் போடலாம். வேறு எதுவும் செய்ய முடியாது. எனக்கு மேசையைத் தட்டும் பழக்கம் கிடையாது. ஆனால், எங்கள் கட்சியில் கம்ப்யூட்டர் புரோகிராம்போல ஒரு நிமிடத்துக்கு ஒருமுறை தானாகவே அனைத்து உறுப்பினர்களும் மேசையைத் தட்டப் பழகியுள்ளனர்.
ஒருமுறை, எனக்கு அருகில் இருந்த நண்பர் தூங்கிவிட்டார். கைதட்டும் ஓசையைக் கேட்டு திடீரென விழித்து, தடதடவென மேசையைத் தட்ட ஆரம்பித்தார். ஆனால், அப்போது எல்லோரும் தட்டுவதை நிறுத்திவிட்டார்கள். இவர் மட்டும் தட்டியவுடன் அனைவரும் ஒன்றும் புரியாமல் திரும்பிப் பார்க்க, மந்திரிகளும் திரும்பிப் பார்த்தார்கள். அவருக்கு வெட்கமாகப் போய்விட்டது. அவர் என்னிடம், ` `தட்டி முடிச்சிட்டாங்க'னு சொல்லி இருக்கலாம்ல. என்னை மானக்கேடு பண்ணிட்டியே' என்றார். `முழிச்சதும் உன் பாட்டுக்குத் தட்டுற... நானா உன்னைத் தட்டச் சொன்னேன்?' எனக் கேட்டேன். இதுதான் இன்று எம்.எல்.ஏ-க்களின் தலையாயப் பணி.''

``ஆனால், நீங்கள் சட்டமன்றத்தில் பேசியதே இல்லையே?''

``ஆட்சியின் தொடக்கத்தில் உள்துறை மானிய விவாதத்தில், `நில அபகரிப்பு மோசடியில் நம் அரசு பல தி.மு.க-க்காரர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்துவருவது பாராட்டுக்கு உரியது. ஆனால், அரசு நிலங்களை அதிகாரிகளின் துணை இல்லாமல் அபகரிக்க முடியாது. ஆயினும், எந்த அதிகாரியின் மீதும் இதுவரை நடவடிக்கை இல்லை' எனப் பேசினேன். குறுக்கிட்ட முதலமைச்சர் எழுந்து, என் இருபது நிமிடப் பேச்சுக்கு, முப்பது நிமிடங்கள் பதில் சொன்னார். அப்போது என் பக்கத்தில் இருந்த, இன்றைய அமைச்சரான எஸ்.பி.வேலுமணி, `நீங்க, இன்னும் பழைய காங்கிரஸ்காரராகவே இருக்கீங்க;
அ.தி.மு.க-வில் தேற மாட்டீங்க!’ எனச் சொன்னார். அதுதான் சட்டமன்றத்தில் நான் கடைசியாகப் பேசியது. அதற்குப் பிறகு, கொறடா என்னைப் பேச அழைத்ததும் இல்லை; பேச விரும்புவதாக நான் சொன்னதும் இல்லை. அடுத்த ஆண்டில் பேச்சாளர் பட்டியல் தயாரிக்கும் பொறுப்பில் இருந்த தம்பிதுரையின் உதவியாளரிடம் சொல்லி, சிறப்புப் பேச்சாளர்கள் பட்டியலில் இருந்து என் பெயரை நீக்கச் சொல்லிவிட்டேன். என் நெஞ்சுக்கு உவப்பு இல்லாத எதையும் நான் கட்டாயத்துக்காகப் பேசுவது இல்லை.''

``இதுபோன்ற விமர்சனங்களை, நீங்கள் கட்சிக் கூட்டங்களில் பேசியிருக்கிறீர்களா... அல்லது ஏதோ ஒருவிதத்தில் தலைமைக்குத் தெரியப்படுத்தி இருக்கிறீர்களா?''

``இதற்கெல்லாம் அரசியலில் வாய்ப்பு இருப்பதாகக் கருதுகிறீர்களா? பொதுக்குழுவில் கைதட்டுவதற்கு, எதற்கு நான் உறுப்பினராக இருக்க வேண்டும்... கன்னியாகுமரியில் இருந்து எதற்கு ஒருவன் இங்கு வரவேண்டும்? கணவனும் மனைவியுமே ஏகமனதுடன் மனம் ஒப்பிப்போக முடியாத உலகத்தில், எப்படி இத்தனை பேரும் ஒரே கருத்தை ஆதரித்து ஏக மனதாக நிறைவேற்ற முடியும்?

அறிவுடையவர்களை முடக்கிவைத்து ஒரு ஜனநாயகம் வெல்ல முடியாது. ஒரே போக்கான, ஒரே வார்ப்பான மனிதர்களை உருவாக்கிவைத்துக்கொள்வது, நாட்டுக்கும் நல்லது அல்ல; கட்சிக்கும் நல்லது அல்ல.

ஏதோ ஆடு-மாடுகளை மேய்ப்பதுபோல், கட்சியில் இருப்பவர்களை எல்லாம் மேய்த்துக்கொண்டிருக்கிறார்கள். கடைசியில் அந்தக் கட்சியின் தலைவர் விழும்போது, கட்சியும் வீழ்ந்துவிடும். பல நல்ல காரியங்களைச் செய்ய அதிகாரம் வேண்டும். அதற்காகத்தான் எம்.எல்.ஏ ஆனேன். ஆனால், எல்லா முனைகளிலும் நான் தோற்றுப்போனேன்.’’

``எந்த வகையில் நீங்கள் தோற்றதாகச் சொல்கிறீர்கள்?''

நிமிர்ந்து அமர்கிறார்... ``காசு இல்லாமல் எதுவும் செய்ய முடியாது எனப் பழக்கப்பட்ட ஓர் அரசாங்கத்தில் ஒரு எம்.எல்.ஏ பரிந்துரைப் பதற்கு எதுவுமே இல்லை. பணம் பரிந்துரைக்கும் ஓர் அமைப்பில் எம்.எல்.ஏ -வாக நான் செய்வதற்கு ஒன்றுமே இல்லை.’’

``கொஞ்சம் விரிவாகச் சொல்லுங்களேன்?''

``நான் சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் துறைமுகம் தொகுதியில், முஸ்லிம்கள்தான் அதிக வாக்காளர்கள். இந்தத் தொகுதி, 40 ஆண்டுகளாக  தி.மு.க-வின் கோட்டை. அதில் நான் நின்று வென்றேன். என்னால்தான் வெற்றி வந்தது என்பது அல்ல; கட்சி அமைப்பாலும் தலைமையாலும்தான் வென்றேன். அதில் மாற்றம் இல்லை. ஆனால், தொகுதி மக்களுக்குச் செய்ய நினைத்த எதையும் என்னால் செய்ய முடியவில்லை.

துறைமுகம் தொகுதி அங்கப்பநாயக்கன் தெருவில் உள்ள, உருது முஸ்லிம் பள்ளிக்குச் சொந்தமான விளையாட்டுத் திடலை, பெரிய நபர் ஒருவர் ஆக்கிரமித்துவைத்திருக்கிறார். `அந்த இடத்தை மீட்பேன்' என வாக்குறுதி  கொடுத்தேன். நானும் எம்.எல்.ஏ ஆனதில் இருந்து போராடுகிறேன். ஒன்றும் செய்ய முடியவில்லை. எல்லோரிடமும் மோதி, மோதி எனக்கு ரத்தம் வந்ததுதான் மிச்சமே தவிர, இன்று வரை அந்த இடத்தை மீட்க முடியவில்லை. இத்தகைய சட்டவிரோத நபர்களுக்கு மாவட்டச் செயலாளர்கள், எம்.பி-க்கள், அமைச்சர்கள், அதிகாரிகள் என எல்லோரும் துணை நிற்கிறார்கள். மனப்பூர்வமாகப் பணியாற்ற நினைத்தேன். அதற்கு இடம் இல்லை. ஒரு எம்.எல்.ஏ-வாக முஸ்லிம்களுக்குக் கொடுத்த வாக்குறுதியை என்னால் நிறைவேற்ற முடியவில்லை.''

``இந்த நிலம் தவிர மற்ற விஷயங்களில் உங்களால் செயல்பட முடிந்ததா?''

`` `வெலிங்டன் ரீடிங் ரூம்' என்பது, வெள்ளைக் காரர்கள் கட்டிய பாரம்பர்யமான கட்டடம். துறைமுகம் தொகுதியின் மையப் பகுதியில் இருக்கும் அதை, ஒரு பாத்திர வியாபாரி ஆக்கிரமித்துவருகிறார். அவர், அந்தக் கட்டடத்தை இடித்துவிட்டு, லாட்ஜ் கட்ட ஏற்பாடுசெய்கிறார். என் கவனத்துக்கு வந்து அதைத் தடுக்கப் போராடியபோதுதான், அதில் ஒரு மந்திரி உள்பட பலர் சம்பந்தப்பட்டிருப்பது தெரிந்தது. ஒரு பிரிட்டிஷ் கட்டடத்தில் பாத்திரக் கடைக்கு என்ன வேலை? கலெக்டரிடம் சொன்னால், `வரைபடத்திலேயே அந்தக் கட்டடம் இல்லை' என்கிறார்கள்.

பர்மா பஜாரில் 300 கடைகள் இருக்கின்றன. எல்லாமே 15 லட்ச ரூபாய்க்கும் மேல் விற்கப்பட்ட கடைகள். அதில் இரண்டு இடங்கள் காலியாக இருந்தன. அதை அறிந்து ஒருவர் என்னிடம் வந்து, `நீங்கள் அந்த இரண்டு இடங்களையும் எனக்கு வாங்கித் தாருங்கள். உங்களுக்கு வேண்டியதைச் செய்துகொடுக்கிறேன்' என்றார். `தவறான இடத்துக்கு வந்துவிட்டீர்கள். எழுந்து போங்கள்' எனச் சொல்லிவிட்டு, அங்கே  பர்மா பஜார் வியாபாரிகளின் பயன்பாட்டுக்காக கழிவறை கட்டத் திட்டமிட்டேன். அந்த இடத்தை நேரில் சென்று பார்த்தபோது, `இது மாநகராட்சியின் இடம்' என எழுதப்பட்டிருந்தது. நிதி ஒதுக்கி அரசிடம் அனுமதி கேட்டேன். ஆறு மாதங்கள் கழித்து `இது பொது இடம் அல்ல' என பதில் கடிதம் வந்தது. 300 கடைகள் இயங்கும் பகுதியில், ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்லும் இடத்தில், ஒரு கழிவறைகூட என்னால் கட்ட முடியவில்லை. ஒரு எம்.எல்.ஏ-வாக இதை நான் எங்கே போய்ச் சொல்வது?

முக்கியமாக, என்னுடைய துறைமுகம் தொகுதியில் இருந்துதான் தமிழ்நாடு முழுவதும் பான்பராக், கஞ்சா விநியோகிக்கப்படுகின்றன. எத்தனையோ முறை பலரிடம் முறையிட்டேன். சென்னை கலெக்டரிடம் போனேன். `எங்கே நடக்கிறது?' எனக் கேட்டார். `உங்கள் ஆபீஸுக்குக் கீழேயே நடக்கிறது' என்றேன். அப்படியே நிலைகுலைந்துபோனார். ஆனால், எந்த நடவடிக்கையும் இல்லை.
ஓர் ஆளும் கட்சி எம்.எல்.ஏ-வாக மக்களுக்குச் செய்ய நினைத்துத் தோல்வி அடைந்த கதைகள் இன்னும் ஆயிரம் ஆயிரம் இருக்கின்றன. சொன்னால் பக்கங்கள் போதாது. நான் மன உளைச்சலில் ராஜினாமா செய்வதைப் பற்றிப் பல தடவை யோசித்திருக்கிறேன். அழுத்தம் தாங்காமல் இப்போது வெடித்துவிட்டேன். என் எம்.எல்.ஏ வாழ்க்கை தோல்வி அடைந்துவிட்டது. நான் துறைமுகம் தொகுதி மக்களிடம் மனப்பூர்வமாக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். என்னை மன்னித்துவிடுங்கள்'' - அமைதியாக கண்கலங்கி அமர்ந்திருக்கிறார் பழ.கருப்பையா!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக