புதன், 20 ஜனவரி, 2016

உச்ச நீதிமன்றம் :தமிழகத்தில் மட்டும் 69% இடஒதுக்கீடு எப்படி சாத்தியம்? நாடு முழுவதும் 50%தான்

டெல்லி: நாடு முழுவதும் 50% மட்டுமே இடஒதுக்கீடு அமலாகும்போது தமிழகத்தில் மட்டும் 69% இடஒதுக்கீடு கொள்கை எப்படி அமலாக்கப்படுகிறது என்பதை விளக்கும்படி தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மண்டல் குழு தாக்கல் செய்த அறிக்கையின்படி மத்திய அரசு பணிகளில் பிற்படுத்தப்பட்டோருக்கு 27% இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று பிரதமராக வி.பி.சிங் ஆட்சியில் இருந்த போது உத்தரவிடப்பட்டது. இது தொடர்பாக உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் மாநிலங்களில் இடஒதுக்கீடு 50%க்கு மேல் இருக்கக்கூடாது என்று உத்தரவிட்டது. supreme court ஆனால் தமிழகத்தில் 69% இடஒதுக்கீடு என்பது பின்பற்றப்பட்டு வந்தது. 
இருப்பினும் உச்சநீதிமன்ற தீர்ப்பைத் தொடர்ந்து தமிழகத்தில் பின்பற்றப்படும் இடஒதுக்கீட்டு முறை தொடர வேண்டும் என தமிழக சட்டசபையில் சட்டம் இயற்றப்பட்டு, ஜனாதிபதி ஒப்புதலும் பெறப்பட்டது. 
அதே நேரத்தில் தமிழகத்தில் 69% இடஒதுக்கீட்டு முறையால், பொதுப்பிரிவில் உள்ள மாணவர்கள் பாதிக்கப்படுவதாகவும், இந்த இடஒதுக்கீட்டை ரத்து செய்யக்கோரியும் தமிழகத்தை சேர்ந்த ஹர்ஷினி என்பவர் சார்பில் வழக்கறிஞர் விஜயன் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். 
இந்த வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, என்.வி.ரமணா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பாக செவ்வாய்க்கிழமையன்று விசாரணைக்கு வந்தது. இந்த விசாரணையின் போது, 69% இடஒதுக்கீட்டை எதிர்க்கும் மனுக்களை நிராகரிக்க தமிழக அரசுத் தரப்பில் வலியுறுத்தப்பட்டது. 
ஆனால் இதை உச்சநீதிமன்ற நீதிபதிகள் நிராகரித்தனர். அப்போது நடைபெற்ற விசாரணையில், நாடு முழுவதும் 50% இடஒதுக்கீடுதான் அமலில் உள்ளது. ஆனால், தமிழ்நாட்டில் 69% இடஒதுக்கீடு அமல்படுத்தப்படுகிறது. இதை மாநில அரசு எவ்வாறு நியாயப்படுத்துகிறது? எந்த ஆதாரங்கள் அடிப்படையில் இந்த சலுகையை குறிப்பிட்ட வகுப்பினருக்கு மட்டும் தொடர்ச்சியாக மாநில அரசு வழங்கி வருகிறது? என்று கேள்வி எழுப்பினர். 
 
தமிழக அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் நாகேஸ்வர ராவ், இடஒதுக்கீடு சலுகை தொடருவதற்கு நியாயமான காரணங்கள் உள்ளன. அவற்றை விரிவாக கூறுகிறேன். மனுதாரர்கள் தரப்பும் ஆஜராகும் போது அதை விளக்குகிறேன் என்றார். இதை நீதிபதிகள் ஏற்றுக் கொண்டு வழக்கு விசாரணையை மார்ச் 29-ந் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
://tamil.oneindia.com/

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக