செவ்வாய், 12 ஜனவரி, 2016

தூத்துக்குடி அமெரிக்க ஆயுத கப்பல் வழக்கில் 35 பேருக்கு 5 ஆண்டு சிறை தூத்துக்குடி நீதிமன்றம் தீர்ப்பு

அமெரிக்க ஆயுத கப்பல் வழக்கில் சிறைதண்டனை விதிக்கப்பட்ட வெளிநாட்டினர், பாளையங்கோட்டை மத்திய சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். | படம்: என்.ராஜேஷ்.
அமெரிக்க ஆயுத கப்பல் வழக்கில் சிறைதண்டனை விதிக்கப்பட்ட வெளிநாட்டினர், பாளையங்கோட்டை மத்திய சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். | படம்: என்.ராஜேஷ்.
அமெரிக்க ஆயுத கப்பல் வழக்கில் வெளிநாட்டினர் 23 பேர் உட்பட 35 பேருக்கு தலா 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தூத்துக்குடி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது.
தூத்துக்குடி அருகே இந்திய கடல் எல்லைக்குள் நுழைந்ததாக அமெரிக்க தனியார் பாதுகாப்பு நிறுவனத்துக்கு சொந்தமான ‘சீமேன் கார்டு ஓகியோ’ என்ற ஆயுத கப்பலை, கடந்த 2013 அக்டோபர் 12-ம் தேதி இந்திய கடலோர காவல் படையினர் சிறைபிடித்தனர்.

கப்பலில் இருந்த 10 மாலுமிகள், 25 பயிற்சி பெற்ற பாதுகாவலர்களை கியூ பிரிவு போலீஸார் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களில் இந்தியர்கள் 12 பேர், எஸ்தானியா நாட்டினர் 14 பேர், இங்கிலாந்து நாட்டினர் 6 பேர், உக்ரைன் நாட்டினர் 3 பேர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களைத் தவிர கப்பலுக்கு சட்டவிரோதமாக டீசல் வழங்கியதாக 8 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும், கப்பலில் இருந்து 35 அதிநவீன துப்பாக்கிகள், 5,682 தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
உச்ச நீதிமன்ற உத்தரவின் பேரில் இந்த வழக்கு விசாரணை தூத்துக்குடி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. கடந்த 24.8.2015-ல் 43 பேர் மீதும் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன. சாட்சிகள் விசாரணை கடந்த நவம்பர் 20-ம் தேதி நிறைவடைந்தது. வழக்கறிஞர்கள் வாதம் டிசம்பர் 14-ம் தேதி தொடங்கி 17-ம் தேதி வரை நடைபெற்றது.
இதையடுத்து இந்த வழக்கில் ஜனவரி 11-ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதற்காக இவ்வழக்கில் கைதாகி ஜாமீனில் இருந்த 43 பேரும் நேற்று நீதிமன்றத்தில் ஆஜராகினர்.
நீதிபதி என்.ராஜசேகர், காலை 11 மணியளவில் தீர்ப்பை படிக்கத் தொடங்கினார். கப்பல் ஊழியர்கள் 35 பேரும், டீசல் வழக்கில் தொடர்புடைய 8 பேரும் தனித்தனியாக நிற்க வைக்கப்பட்டனர்.
முதலில் இந்திய படைக்கலன் சட்டம் 25 (1-A), 25 (1-B) (a), 25 (1-B) (f) ஆகிய 3 பிரிவுகளின் கீழ் கப்பல் ஊழியர்கள் 35 பேர் மீதும் குற்றங்கள் நிரூபிக்கப்பட்டுள்ளதாக நீதிபதி தெரிவித்தார். ‘இந்த குற்றச்சாட்டுகளின் கீழ் உங்களுக்கு தண்டனை வழங்கப்படவுள்ளது, அதுகுறித்து நீங்கள் என்ன சொல்ல விரும்புகிறீர்கள்’ என, 35 பேரிடமும் தனித்தனியாக நீதிபதி கேட்டார். அதற்கு அவர்கள் நாங்கள் எந்த குற்றமும் செய்யவில்லை. ஏற்கெனவே 9 மாதங்கள் சிறையில் இருந்துவிட்டோம். எனவே குறைந்தபட்ச தண்டனை வழங்குமாறு நீதிபதியிடம் கேட்டனர்.
5 ஆண்டுகள் தண்டனை
தொடர்ந்து நீதிபதி ராஜசேகர் தண்டனை விவரங்களை அறிவித்தார். இந்திய படைக்கலன் சட்டம் 25 (1-A)-ன் கீழ் (தடை செய்யப்பட்ட, தடை செய்யப்படாத ஆயுதங்களை அனுமதியின்றி இந்திய கடல் பகுதிக்குள் எடுத்து வருதல்) 35 பேருக்கும் தலா 5 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை மற்றும் தலா ரூ.1,000 அபராதம் விதிக்கப்பட்டது.
மேலும், இந்திய படைக்கலன் சட்டம் 25 (1-B) (a)-ன் கீழ் (உரிமம் இல்லாமல் ஆயுதங்களை வைத்திருத்தல்) 35 பேருக்கும் தலா ஓராண்டு சிறை மற்றும் தலா ரூ. 1,000 அபாரதம் விதிக்கப்பட்டது.
இந்திய படைக்கலன் சட்டம் 25 (1-B) (f)-ன் கீழ் (அனுமதி இல்லாமல் இந்திய எல்லைக்குள் ஆயுதங்கள் இறக்குமதி செய்தல்) 35 பேருக்கும் தலா ஓராண்டு சிறை மற்றும் தலா ரூ. 1,000 அபராதம் விதிக்கப்பட்டது.
இந்த 3 தண்டனைகளையும் அவர்கள் ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும். ஏற்கெனவே அவர்கள் சிறையில் இருந்த காலத்தை கழிக்க வேண்டும் என நீதிபதி தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளார்.
இந்த வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட கப்பலை தூத்துக்குடி துறைமுகத்தின் கட்டுப்பாட்டில் வைத்திருக்கவும், துப்பாக்கி மற்றும் தோட்டாக்களை மத்திய தொழிலக பாதுகாப்பு படை கிடங்கில் வைத்திருக்கவும் நீதிபதி உத்தரவிட்டார்.
8 பேர் விடுதலை
மேலும், டீசல் வழக்கில் கைது செய்யப்பட்ட 8 பேர் மீதான குற்றச்சாட்டுகள் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்படாததால் அவர்கள் 8 பேரையும் விடுதலை செய்ய நீதிபதி உத்தரவிட்டார்.
5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதை தொடர்ந்து கப்பல் ஊழியர்கள் 35 பேரும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்த வழக்கில் கியூ பிரிவு சார்பில் மதுரையை சேர்ந்த சிறப்பு வழக்கறிஞர் சாமிசந்திரசேகர், தூத்துக்குடி கூடுதல் அரசு வழக்கறிஞர் கே.சிவக்குமார் ஆகியோர் ஆஜராயினர். கப்பல் நிறுவனம் சார்பில் சுப்பிரமணிய ஆதித்தன் தலைமையிலான வழக்கறிஞர்கள் ஆஜராயினர்.
கியூ பிரிவு வழக்கறிஞர் சாமி சந்திரசேகர் கூறும்போது, ‘அமெரிக்க ஆயுத கப்பல், இந்திய கடல் எல்லைக்குள் 3.8 கடல் மைல் தொலைவில் பிடிபட்டதை ஆதாரங்களுடன் நிரூபித்துள்ளோம். இந்திய கடல் எல்லைக்குள் ஆயுதங்களுடன் அத்துமீறிய வெளிநாட்டினருக்கு தமிழகத்தில் தண்டனை வழங்கப் படுவது இதுவே முதல்முறை’ என்றார் அவர்.
மேல் முறையீடு
கப்பல் நிறுவன வழக்கறிஞர் சுப்பிரமணிய ஆதித்தன் கூறும்போது, ‘இந்த தண்டனையை எதிர்த்து கப்பல் நிறுவனம் சார்பில் விரைவில் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மேல் முறையீடு செய்யப்படும்’ என்றார்.
அமெரிக்க ஆயுத கப்பல் வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டதை தொடர்ந்து, தூத்துக்குடி நீதிமன்ற வளாகத்தில் நேற்று பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. ஏஎஸ்பி அருண்சக்திகுமார் தலைமையில் ஏராளமான போலீஸார் குவிக்கப் பட்டிருந்தனர்     //tamil.thehindu.com/tamilnadu/

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக