புதன், 23 டிசம்பர், 2015

சகாயமோ ட்ராபிக் ராமசாமியோ வரமாட்டாங்களா...?who இஸ் next பெஸ்ட்?

இப்படி எந்த அலையும் இல்லாத சமயங்களில் யாராவது புது ஆள் வந்துவிட மாட்டாரா என்று ஒரு கூட்டம் யோசிக்கத் தொடங்குகிறது. ட்ராபிக் ராமசாமி வந்தாலும் பரவாயில்லை; சகாயம் வந்தாலும் பரவாயில்லை என்று பேச்சை ஆரம்பிக்கிறார்கள். அரவிந்த் கெஜ்ரிவால் மாதிரி சகாயத்தை முதலமைச்சர் ஆக்கிவிடலாம் என்று அந்தக் கூட்டம் நம்புகிறது. டெல்லி போன்ற சிறிய, படித்தவர்கள் அதிகமாக வாழ்கிற, நகர்ப்புற மாநிலத்தில் நிகழ்ந்த அரசியல் மாற்றங்கள் தமிழ்நாட்டிலும் அதே ஃபார்முலாவில் சாத்தியமாகும் என்று நம்ப வேண்டியதில்லை. சென்னையிலும் கோவையிலும் திருச்சியிலும் வாக்களிப்பவர்கள் மட்டும் வாக்காளர்கள் இல்லை. ஒவ்வொரு தொகுதியிலும் பதிவாகிற அறுபத்தைந்து சதவீத வாக்குகளில் பெரும்பான்மையான வாக்குகள் கிராமப்புறத்தில் வாழ்கிற எளிய மக்களின் வாக்குகள். இவர்களிடம் சகாயம் மாதிரியானவர்களைக் கொண்டு சேர்ப்பது அவ்வளவு சுலபமான காரியம் இல்லை. 
தமிழகத்தின் ஒவ்வொரு மூலையிலும் வார்டுகள் வரைக்கும் ஆழமாக வேரூன்றியிருக்கும் திமுக அதிமுக என்ற பெரும் டைனோசர்களை மீறி சகாயத்தின் பேனரைத் தூக்கிக் கொண்டு உள்ளே நுழைவது லேசுப்பட்ட காரியமில்லை. சகாயம் மாதிரியானவர்கள் அரசியலுக்கு வருவது நல்லதுதான். இல்லையென்றெல்லாம் சொல்லவில்லை. ஆனால் நடைமுறைச் சாத்தியங்கள் என்று பல விஷயங்கள் இருக்கின்றன. 
சமீபகாலமாக தமிழகத் தேர்தலில் காசு மிக முக்கியமான காரணியாக மாறியிருக்கிறது. காசு வாங்கிக் கொண்டு சத்தியம் வாங்குவதற்கு லட்சக்கணக்கில் கரைவேட்டிகள் இருக்கிறார்கள். ஒவ்வொரு தொகுதியிலும் பல கோடி ரூபாய்களை புழங்கவிடுகிறார்கள். பெரும் கட்சிகளுக்கு எதிராக யார் தலையெடுத்தாலும் அவர்களது அந்தரங்கம் வரை அலசி நாறடிக்கும் கூட்டத்தை உருவாக்கி வைத்திருக்கிறார்கள். களத்திலும் சரி; இணையத்திலும் சரி- இவர்களையெல்லாம் சமாளிப்பதற்கு சகாயம் போன்ற மனிதர்களிடம் என்ன ஆயுதம் இருக்கிறது?
மூன்றே மாதங்களில் மக்கள் திரள்வதும், அரசியல் மாற்றங்கள் ஏற்படுவதும் தமிழ் சினிமாக்களில் மட்டும்தான் சாத்தியமான ஓன்று. ஆனால் உண்மையான நிலவரம் கொடூரமானது. கருணையற்றது. எத்தகைய மனிதரையும் தனது குதிங்காலில் நசுக்கி விட்டுச் சென்றுவிடும். அரசியல் மாற்றங்கள் உண்டாக வேண்டிய காலத்தில்தான் வாழ்கிறோம். ஆனால் அதை இவ்வளவு அதிரடியாகச் செய்ய முடியாது.
ஊடகங்களின் அசுரபலம், உளவுத்துறையின் தலையீடுகள் போன்ற பெரும் சவால்களைச் சந்திக்க வேண்டியிருக்கும். ‘நான் அடுத்த முதல்வர்’ என்று பேசுவது காசு படைத்த கனவுப்பிரியர்களுக்கு வேண்டுமானால் சுலபமாக இருக்கலாம். ஆனால் சகாயம் மாதிரியான நேர்மையான அதிகாரிகளுக்கு சுலபமில்லை.  அவர் ஒன்றும் சம்பாதித்துக் குவித்து வைத்திருக்கும் அதிகாரி இல்லை. அரசியல் கைவிட்டுவிட்டாலும் கூட குடும்பத்தை நடத்திவிடலாம் என்கிற வசதியான மனிதரும் இல்லை. வேலையை விட்டுவிட்டு வந்து களத்தில் நின்றால் தேரை இழுத்து தெருவில் விட்டமாதிரி விட்டுவிட்டு போய்விடுகிறவர்களின் எண்ணிக்கைதான் அதிகமாக இருக்கும். இந்தத் தேர்தலில் ஜெயிக்காவிட்டாலும் பரவாயில்லை. அடுத்த தேர்தலுக்கு அச்சாரம் போடலாம் என்று வெளியிலிருந்து பேசுவதற்கு நன்றாகத்தான் இருக்கும். அடுத்த ஐந்து வருடங்களுக்கு அவர்தான் சமாளிக்க வேண்டியிருக்கும். இதையெல்லாம் பயமூட்டுகிற அர்த்தத்தில் சொல்லவில்லை. ஆனால் அவரைப் போன்ற நல்ல மனிதருக்காக பயப்பட வேண்டியிருக்கிறது.
இந்தச் சமூகம் உணர்ச்சிவசப்படும் சமூகம். விதவிதமான உணர்ச்சிகளுக்குத் தன்னைத் தொடர்ந்து உட்படுத்திக் கொள்கிறது. அப்படியான ஒரு உணர்ச்சிவசப்படுதலின் இன்னொரு பரிமாணம்தான் சகாயத்தை முதல்வராக்குவோம் என்கிற கோஷம். இவர்களது உணர்ச்சி படுவேகமாக வடிந்துவிடக் கூடியது. மிகச் சுலபமாகத் திசை மாறக் கூடியது. இவர்களை நம்பி களமிறங்குமளவுக்கு சகாயம் விவரமில்லாதவர் அல்ல என்று நம்புகிறேன். 
சகாயம் மாதிரியானவர்கள் முன்னுதாரணமாக இருக்க வேண்டியவர்கள். நிதி ஆதாரம், திரைக்குப் பின்னாலிருந்து வேலை செய்யக் கூடிய வலுவான அணி, ஊடகங்களின் ஆதரவு போன்றவற்றை பக்காவான திட்டமிடலுடன் செய்ய வேண்டும். ஒவ்வொரு ஊரிலும் வேலை செய்யக் கூடிய இளைஞர் குழுக்களைத் தயார் செய்ய வேண்டும். தமிழகம் முழுவதும் பாஸிடிவ்வான எண்ணம் உருவாக்கப்பட வேண்டும். இவை அனைத்தும் அடுத்த மூன்று மாதங்களில் சாத்தியமில்லை என்பதுதான் நிதர்சனம். இவை குறித்து சகாயத்துக்கும் தெரிந்திருக்கும். ஒருவேளை களத்தில் இறங்கினால் வென்றுவிட வேண்டும். சொல்லி அடிக்கும் கில்லி மாதிரி. தோற்று திரும்பிச் சென்றால் ‘சகாயத்துக்கு நடந்த மாதிரிதான் நடக்கும்’ என்று தவறான முன்னுதாரணமாக்கிவிடுவார்கள். அதன் பிறகு இந்தத் தமிழகம் இன்னும் பல வருடங்களுக்குக் காத்திருக்க வேண்டியிருக்கும்.  nisaptham.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக