செவ்வாய், 1 டிசம்பர், 2015

விஜயகாந்த் :India Today ஆங்கில பத்திரிகைகளின் ஆய்வு குறித்து அரசு மௌனம் சாதிப்பது ஏன்?

தமிழக முதல்வர் ஜெயலலிதா, ஆங்கிலப் பத்திரிகை இதழ் ஒன்றின் ஆய்வு குறித்து மவுனம் சாதிப்பது ஏன்? கடந்த காலங்களில் தனக்கு சாதகமாக வந்த பத்திரிகைகளின் ஆய்வுகள் குறித்து, சட்டமன்றத்தில் பெருமை பேசியவர் தற்போது இதை ஏற்றுக்கொள்ள மறுப்பது ஏன்? என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கேள்வி எழுப்பியுள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழகத்தை முதன்மை மாநிலமாக மாற்றுவேன் என்று சட்ட மன்றத்திலும், தேர்தல் பிரச்சாரத்திலும் பேசிய தமிழக முதல்வர் ஜெயலலிதா, ஆங்கிலப் பத்திரிகை இதழ் ஒன்றின் ஆய்வு குறித்து மவுனம் சாதிப்பது ஏன்? கடந்த காலங்களில் தனக்கு சாதகமாக வந்த பத்திரிகைகளின் ஆய்வுகள் குறித்து, சட்டமன்றத்தில் பெருமை பேசியவர் தற்போது இதை ஏற்றுக்கொள்ள மறுப்பது ஏன்?அதிமுக அரசின் மோசமான செயல்பாடுகள் குறித்து வெளிவந்துள்ள செய்திகளின் மூலம், தமிழகம் அனைத்து துறைகளிலும் மிகவும் பின்தங்கியுள்ளது என்பது வெட்டவெளிச்சமாக தெரியவந்துள்ளது.

 

சுமார் 15 ஆண்டுகாலமாக தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களின் வளர்ச்சி குறித்து ஆய்வு செய்து வந்த அந்தப் பத்திரிகை, தற்போது தமிழகத்தின் வளர்ச்சி குறித்து வெளியிட்டுள்ள துறைவாரியான ஆய்வில், வேளாண்மைத்துறை 21-வது இடத்திற்கும், கல்வித்துறை 13-வது இடத்திற்கும், உள்கட்டமைப்பு வசதி 17-வது இடத்திற்கும் தள்ளப்பட்டு, ஒட்டுமொத்த மாநிலங்களின் வளர்ச்சியில், இந்திய அளவில் தமிழகம் 20-வது இடத்திற்கு பின்தங்கி சென்றுவிட்டதாகவும் கூறியுள்ளது.

 

இதுபோன்ற உண்மைகளை பத்திரிகைகள் வெளிக்கொணரும்போது, அதை ஏற்றுக்கொள்ள மனமில்லாமல், அதன்மீது அவதூறு வழக்குகளை தொடர்ந்து, பத்திரிகைகளை அடக்கி, ஒடுக்க நினைக்கிறது அதிமுக அரசு.

 

என்ன செய்தார் ஜெயலலிதா? என்ற தலைப்பில் தமிழ்ப் பத்திரிகையில் வெளிவந்த விமர்சன கட்டுரைக்காக அந்த நிறுவனமும், ஆசிரியரும் மிரட்டப்பட்டு, பல்வேறு அச்சுறுத்தலுக்கும் ஆளாக்கப்பட்டுள்ளனர்.

 

அப்பத்திரிகையை விற்பனை செய்யும் பிரதிநிதிகள், விற்பனையாளர்கள் மிரட்டப்பட்டதாகவும், இதற்கெல்லாம் அரசியல் காரணமாக இருக்கலாம் என்றும், அப்பத்திரிகை நிறுவனமே குற்றம் சாட்டியுள்ளது.

 

காவல்துறை பொதுமக்களை பற்றி சிந்திக்காமல், முழுக்க, முழுக்க ஆட்சியாளர்களுக்கு ஆதரவாக செயல்படுவதை நிறுத்திக் கொள்ளாவிடில், ஆட்சிமாறும்போது காட்சிகள் மாறும் என்பதை மறந்துவிடக்கூடாது.

 

ஜனநாயகத்தின் நான்கு தூண்களில் ஒன்றான பத்திரிகைகளின் மீது இதுபோன்ற அராஜகங்களை கட்டவிழ்த்து விடுவது நல்லதல்ல. இதுபோன்ற அராஜகங்களையும், வன்முறைகளையும் தேமுதிக ஒருபோதும் ஆதரிக்காது. பத்திரிகை சுதந்திரத்துக்கு சவால்விடும் வகையில் அதிமுக அரசு நடந்துகொள்வதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்.

 

அதிமுக ஆட்சியில் நடைபெறும் லஞ்சம், ஊழல், முறைகேடுகள், நிர்வாக சீர்கேடுகளை பெரும்பாலான பத்திரிகைகள் வெளியிடுவதில்லை. ஒரு சில பத்திரிகைகள் மட்டும் துணிச்சலோடு, நீங்கள் செய்யும் தவறுகளை சுட்டிக்காட்டினால், ஆட்சி, அதிகாரபலத்தின் மூலம் அந்த பத்திரிகையை முடக்க நினைப்பது நியாயமா?

 

பத்திரிகைகள் சுட்டிக்காட்டும் தவறுகளை திருத்திக்கொள்வதே ஒரு நல்ல அரசுக்கு அழகாகும். திருத்திக்கொள்ளாவிட்டால் மக்கள் உங்களை திருத்துவதற்கு நாட்களை எண்ணிக்கொண்டு இருக்கிறார்கள் என்பதை மறந்துவிட வேண்டாம். காலச்சக்கரம் சுழலும்போது “கீழது மேலாய், மேலது கீழாய்” மாறும் என்ற, இயற்கையின் கோட்பாட்டை யாராலும் மாற்றமுடியாது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

 
பத்திரிகைகளின் விமர்சனங்களை கண்டு கோபம் கொள்ளாமல், அதிலுள்ள உண்மைகளையும், நியாயங்களையும் புரிந்துகொள்ள வேண்டுகிறேன். ஐந்தாண்டு அதிமுக ஆட்சியில் தமிழகத்தின் வளர்ச்சியை இருபதாவது இடத்திற்கு பின்னோக்கி கொண்டு சென்றதுதான் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் ஐந்தாண்டு ஆட்சியின் வேதனையாகும்" என்று கூறியுள்ளார் webdunia.com 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக