வியாழன், 10 டிசம்பர், 2015

சன்டிவிக்கு பேட்டி கொடுத்தால் அங்கேயே நிவாரணத்தையும் வாங்கிக்கோ......என்கிறார்கள்

சென்னை நகரில் தூக்கி எறியப்படும் மக்களுக்காக காத்திருக்கிறது செம்மஞ்சேரியின் புதிய குடியிருப்புகள்!
IMG_2891மழை சாக்கடை பற்றி சன் டிவியில் பேட்டி கொடுத்தோம்.ஆனால் அப்படி சொன்னால் அரசிடமிருந்து சலுகைகள் எதையும் வாங்கிதரமாட்டோம் என்று அ.தி.மு.க-வினர் மிரட்டினார்கள் 

சென்னை நகரில் தூக்கி எறியப்படும் மக்களுக்காக காத்திருக்கிறது செம்மஞ்சேரியின் புதிய குடியிருப்புகள்!
சென்னை மாநகரத்தில் ஓ.எம்.ஆர் எனப்படும் பழைய மகாபலிபுரம் சாலையில் ஐ.டி நிறுவனங்களின் அணிவகுப்புகளுக்கு இடையே சோழிங்கநல்லூரை தாண்டி அமைந்திருக்கும் குடிசைமாற்றுவாரியப் பகுதி தான் செம்மஞ்சேரி. சிங்காரச் சென்னைக்கு பொருத்தமில்லாத குடிசை மக்களுக்கு வீடு கட்டி தருவதாக கூறி அவர்களை மாநகருக்கு வெளியே தூக்கி எறிந்து கட்டப்பட்டதுதன் இந்த குடியிருப்பு. சுமார் 7500-க்கு மேற்பட்ட தீப்பெட்டி போன்று தோற்றமளிக்கும் குடியிருப்புகளை உள்ளடக்கி அரசால் உருவாக்கப்பட்டுள்ளதுதான் இந்த நவீன சேரி.

இப்பகுதி பெண்கள் மேட்டுக்குடி குடியிருப்புகள், தனியார் நிறுவனங்களில் வீட்டு வேலைகள், துப்புறவு பணி முதலான வேலைகள் செய்கிறார்கள். வேலைகளுக்காக 20 முதல் 50 கி.மீ சுற்றளவுக்கு நடைபயணமாகவும், சைக்கிளலும், பேருந்துகளிலும் அலைகின்றனர். ஆண்கள் கட்டிடவேலை, ஆட்டோ ஓட்டுநர், பெயிண்டர், பிளம்பர் போன்ற உதிரி வேலைகளுக்கு தினக்கூலிகளாக அலைகிறார்கள்.
சென்னையின் பிற பகுதிகளைப் போல இப்பகுதியும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது. செம்மஞ்சேரி எனப்படும் மிகப்பெரும் ஏரியின் கரையில் கட்டப்பட்டுள்ள இப்பகுதியின் 50 கி.மீ சுற்றளவுக்குள் சுமார் 7 ஏரிகள் இருப்பதாக மக்கள் கூறுகிறார்கள். 98 ஏக்கரில் நன்மங்கலம் ஏரி, நாராயணபுரம் ஏரி, ஒக்கியம்பாக்கம் ஏரி, பெரும்பாக்கம் தாழ்ம்பூர் ஏரி போன்றவை அந்த ஏரிகள். உபரிநீர் கால்வாய்கள் செப்பனிடப்படாத்தால் இந்த பகுதியில் தண்ணீர் வந்து அவதிப்படுவதாக மக்கள் தெரிவிக்கிறார்கள்.
பல ஆண்டு போராட்டங்களுக்கு பிறகு வெள்ள வடிகாலுக்கு உருவாக்கப்பட்ட  கால்வாய்கள் கழிவுகளால் நிறைந்துள்ளன. மக்கள் வெள்ளப்பாதிப்பிலிருந்து தப்பித்து தற்போது வெள்ள நிவாரணத்திற்காக இழுத்தடிக்கப்படுகிறார்கள். அதன் அங்கமாக ஜெயலலிதா படம் போட்ட டோக்கன் இப்பகுதியில் விநியோகிக்கப்பட்டுள்ளது. வாழ்வு மட்டுமல்ல சாவிலும் அம்மா படம்தான் அனைத்தையும் தீர்மானிக்கிறது.
IMG_2863“டோக்கன் தந்திருக்கிறார்கள். பாய், பெட்ஷீட் தருகிறேன் என்றர்கள். இப்போது அம்மா படத்தை மட்டும் வேடிக்கை பார்த்துகொண்டிருக்கிறோம்.“ – என்கிறார்கள் மக்கள்.
வீட்டில் தங்கியுள்ள சாக்கடை நீரை அகற்றக் கோரியும், குழ்ந்தைகளை தாக்கியுள்ள நோய்களை தீர்க்க சுகாதார கூடங்களையும் நோக்கியும் ஓடிக் கொண்டிருக்கிறார்கள் மக்கள். மருந்து மருத்துவர் மட்டுமல்ல, கவுன்சிலரும் அவர்கள் கண்களுக்கு தென்படவேயில்லை.
“நாங்கள் வெள்ளத்திலிருக்கிறோம். அதிமுக கவுன்சிலர் நாராயானன் இந்த பக்கமே வரவில்லை. அவரையும் வெள்ளம் அடித்து சென்றுவிட்டதா, தெரியவில்லை.” என்கிறார்கள் இப்பகுதிவாசிகள். “இந்த பகுதி எம்.எல்.ஏ, எம்.பி எல்லோரும் கொள்ளைக்காரனுங்க. இங்கு இருக்கும் ஐ.டி கம்பெனிகளிடம் மாமூல் பணம் வாங்குவதுதான் இவர்கள் வேலை. பணம் தரவில்லை என்றால் கம்பெனியின் சாக்கடை, மின் இணைப்புகளை ராவோடு ராவாக ரவுடிகளை கொண்டு வெட்டிவிடுவார்கள். நிவாரணப் பொருடகளையும் கூட அபப்டிதான் சுருட்டிக்கொண்டார்கள்” – என்று மக்கள் பட்டியல் போடும் குற்றப் பத்திரிகைக்கு முடிவே இல்லை.
பொருட்கள் இல்லாத ரேசன்கடை ,மருந்து இல்லாத மருத்துவமனை, பணியாளர்கள் இல்லத நகராட்சி அலுவலகம் என்று விதவிதமான போர்டும் கட்டிடங்களும் செம்மஞ்சேரியில் அழகான  நிற்கின்றது. மருத்துவம் குடிநீர் மின்சாரம் போன்றவைகளுக்கு கட்டிடங்கள் தான் இருக்கின்றன. அங்கிருக்கும் மருத்துவமனைகளில் இரத்த வங்கி, எக்ஸ்-ரே, இன்ன பிற எளிய ஆய்வக வசதி கூட இல்லை. 8-க்கும் மேற்பட்ட ரேசன் கடைகளில் மாதத்திற்க்கு ஒரு நாள் தான் ரேசன் விநியோகிக்கப்படுகிறது.
“நவம்பர் மாதம் பெய்த மழையில் சாக்கடை தேங்கியது பற்றி சன் டிவியில் பேட்டி கொடுத்தோம்.ஆனால் அப்படி சொன்னால் அரசிடமிருந்து சலுகைகள்  எதையும் வாங்கிதரமாட்டோம் என்று  அ.தி.மு.க-வினர் மிரட்டினார்கள். ஊடகங்களை அவர்கள் மிரட்டியதால்தான் எங்கள் பகுதி பற்றி செய்தியை ஊடகங்களில் பார்க்கமுடிவதில்லையா” என்று நம்மிடம் அப்பாவியாய் கேள்வி எழுப்புகிறார்கள் அந்த மக்கள்.
இப்பகுதியில் சாக்கடையை அகற்றாமல் அதன் மீது பிளீச்சிங் பவுடர் கொண்டு கோலம் போட்டு மேக்கப் போட்டு மறைக்கச் செல்கிறார்கள், அரசு மற்றும் அ.தி.மு.க நிர்வாகிகள் என்று மக்கள் குற்றம் சாட்டுகிறார்கள். இம்மக்கள் குடியிருப்பைச் சுற்றி பல்வேறு தனியார் நிறுவனங்களில் அடுக்குமாடிக் குடியிருப்புகள் பல உள்ளன. மழை வெள்ளக் காலத்தில் இந்தியா ராணுவத்தில் ஹெலிகாப்டர்கள் அந்த பல மாடிக் கட்டிடத்தின் மொட்டை மாடியில் உணவுப் பொருட்களை போட்டிருக்கின்றன. ஆனால் செம்மஞ்சேரி குடிசை மாற்று வாரிய வீடுகளில் போடவில்லை. ஒரு வேளை மாடிகளின் உயரம் குறைவோ என்னவோ?
இப்பகுதி குழந்தைகளிடம் பேசினோம், “வீடெல்லாம் சாக்கடை நாற்றம். எங்க அம்மா வீட்டை கஷ்டப்பட்டு கழுவுது. மழை சமயத்தில் பாம்பு, எலி எல்லாம் வந்தது. ஸ்கூல் பேக், நோட்டு எல்லாம் தண்ணியில் போய்விட்டது. அம்மா எங்களை எல்லாம் ஆயா வீட்டுக்கு அனுப்பிட்டாங்க. வெள்ளத்தில் எங்கள் காலெல்லாம் புண்ணாகி விட்டது” என்றார்கள்.
150 சதுர அடி வீடுகளில் குடும்பமாக திணித்துக் கொண்டு வாழும் செம்மஞ்சேரியை வெளியில் இருந்து பார்க்கும் போது எல்லாம் நல்லாத்தானே போய்க் கொண்டிருக்கிறது என்று தோன்றும். அடுக்கு மாடிக் குடியிருப்புகளின் சமையல் அறை மற்றும் குளியல் அறையே 150 சதுர அடிகளுக்கு மேற்பட்டு இருக்கும் காலத்தில் இந்த தீப்பட்டி வீடு மக்களின் வாழ்க்கையை புரிந்து கொள்ள வேண்டுமென்றால் நீங்கள் ஒரிரு நாட்கள் அங்கே தங்கிப் பார்க்க வேண்டும்.
ஆயிரக்கணக்கான வாக்குகள் இங்கே உண்டு என்பதால் ஓட்டுக் கட்சிகள் இங்கே கொஞ்சம் கவனத்தை வைத்திருக்கின்றன. அதுவும் ஐந்தாண்டுகளில் ஒரு நாள் என்பதால் மீதி நாட்களில் வருடம் முழுவதும் போராட்டத்தில் தத்தளிக்கிறது செம்மஞ்சேரி. மழை வெள்ளம் அந்த தத்தளிப்பை கூடுதலாக்கியிருக்கிறது.
– வினவு செய்தியாளர்கள்
படங்களை பெரியதாக பார்க்க அழுத்தவும்:







கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக