புதன், 9 டிசம்பர், 2015

பேரழிவு கண்ட்ரோல் நிலையமே இன்னும் அமைக்கவில்லை....பேரழிவு ஒருங்கிணைப்பு...அதிகாரிகள் அம்மாவுக்கு பயந்து பயந்து.. .....

மிஸ்டர் கழுகு: முதல்வர் எங்கே?
க்கள்படும் வேதனை கழுகார்  முகத்தில் தெரிந்தது!
‘‘யாரும் எதிர்பார்க்காத பேரழிவு இது என்றும், அரசாங்கமே முழுமையாகச் செயல்பட்டால்கூட நிவாரணப் பணிகளை முழுமையாக முடிக்க முடியாதுதான் என்று நானே கடந்த முறை சொல்லி இருந்தேன். ஆனால், ஓர் அரசாங்கம் செய்ய வேண்டிய சாதாரண வேலைகள்கூட ஒழுங்காக நடக்கவில்லை என்று அதிகார வட்டாரத்தின் செயல்பாடுகளை முழுமையாக உணர்ந்தவர்​ளே சொல்ல ஆரம்பித்து உள்ளார்கள்.  ‘அரசாங்கத்தின் செயல்பாடு சுணங்கியே கிடக்கிறது’ என்று இவர்கள் சொல்கிறார்கள்!” என்ற கழுகாரை இடைமறிக்காமல் பேசவிட்டோம்.
‘‘வெளிமாநிலத்தில் பணியாற்றும் உயர் அதிகாரி ஒருவர் தமிழ்நாட்டில் நடப்பதை கொந்தளிப்புடன் கொட்டுகிறார். ‘இவ்வளவு பெரிய பேரழிவு நடந்தால் முதலில் தலைமைச் செயலகத்தில் கன்ட்ரோல் ரூம் போட வேண்டும். மாவட்ட கலெக்டராக இருந்தாலும், எஸ்.பி-யாக இருந்தாலும் அதில் தகவல் சொல்லி முடிவுகளை எடுக்க வேண்டும். இப்படி ஒரு கன்ட்ரோல் ரூம் போடவில்லை. ரூ.100 கோடியோ, ரூ.200 கோடியோ குறிப்பிட்ட துறைகளுக்குப் பிரித்துக் கொடுக்க வேண்டும்.
அவர்கள் அவசர உதவிகளைச் செய்துவிட்டு அடுத்து கணக்குகளைக் கொடுப்பார்கள். அப்படி தொகையை இதுவரை ஒதுக்கவில்லை. பேரழிவு ஏற்பட்டதும் அரசு சார்பில் அறிவிப்பு செய்து பொதுமக்கள் தங்களது உதவிப் பொருட்களை இந்த முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று சொல்ல வேண்டும். அப்படி ஒரு முகவரியை அறிவிக்கவே இல்லை. இப்படி உதவி செய்கிறோம் என்று கேட்பவர்களிடம் வாங்கலாமா, கூடாதா என்றே அவர்கள் முடிவெடுக்கவில்லையாம். இன்னொன்​றைக் கேள்விப்பட்டேன்... பேரிடர் பணிகளை மேற்கொள்ள ராணுவத்தை அழைக்கலாமா, கூடாதா என்று முடிவெடுக்கவே தமிழக அதிகாரிகளுக்கு மூன்று நாட்கள் ஆகி இருக்கிறது’ என்று அவர் அடுக்கிக்கொண்டே போகிறார்!”
‘‘ஏனாம்?”
‘‘ராணுவத்தை வரவழைத்தால் தமிழக அரசால் முடியவில்லை என்று சொல்லிவிடுவார்களாம்!”
‘‘இப்போது மட்டும் என்னவாம்? சென்னை உயர் நீதிமன்றத்தின் பாதுகாப்பு, மத்திய தொழில் பாதுகாப்புப் படைக்குப் போனதைவிடக் கேவலமா இது?”
‘‘ம்! நிவாரணப் பொருட்களை ஏற்றிக்கொண்டு வந்த மூன்று கப்பல்களில் இருந்து பொருட்களை இறக்கலாமா, வேண்டாமா என்பதில் முடிவு எடுக்கவே காலதாமதம் ஆகி இருக்கிறது.  பல்வேறு இடங்களில் ஆவின் பால் தட்டுப்பாடு இருக்​கிறது. ஆவினில் பால்பவுடர்கள் ஏராளமாகக் கிடக்கின்றன. அதைக் கொண்டுவந்து சப்ளை செய்திருக்கலாம், அனைத்து கல்யாண மண்டபங்களையும் திறந்துவிட்டிருக்​கலாம், ஹோட்டல்களோடு பேசி இருக்கலாம்... இவை எதையுமே செய்யவில்லை என்கிறார்கள் வெளிமாநில அதிகாரிகள்!”
‘‘நியாயம்தான்!”
‘‘சென்னை அண்ணா சாலை மசூதி, மண்ணடி மசூதி, வேளச்சேரி மசூதி, தாம்பரம் மசூதி ஆகியவற்றைத் திறந்துவிட்டு மக்களைத் தங்க வைத்துள்ளார்கள். இதைப்போல இந்துக் கோயில்களையும் திறந்துவிட்டிருக்கலாம்!”
‘‘ஏன் செய்யவில்லை?”
‘‘இந்து சமய அறநிலையத் துறைதான் முடிவெடுக்க வேண்டும். துணிமணிகளை கோ ஆப்டெக்ஸில் இருந்து எடுத்துத் தந்திருக்கலாம். இன்று தனியார் கொண்டு வந்து கொடுக்கிறார்கள். இதை எல்லாம் ஆர்வத்துடன் அரசு செய்திருக்​கலாமே!”
‘‘ஏன் செய்யவில்லை?”
‘‘இவ்வளவு பாதிப்புகள் நாட்டில் நடக்கிறது என்பதே முதல்வர் கவனத்துக்குப் போனதா என்றே தெரியவில்லை. தலைமைச் செயலாளர் ஞானதேசிகன், அரசு ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன், முதல்வரின் செயலாளர் வெங்கட்ரமணன் ஆகிய மூவரும் தலைமைச் செயலகத்தில் கூடிக் கூடிப் பேசுகிறார்கள். ஏதோ ரிப்போர்ட் தயாரிக்கிறார்கள். இந்த ரிப்போர்ட் போயஸ் கார்டனுக்கு போகிறது. அதில் ஏதோ எழுதி அனுப்புகிறாராம் முதல்வர். இவர்கள் செயல்படுகிறார்கள். செயல்படுத்துகிறார்கள்!”
‘‘என்ன செயல்படுத்துகிறார்கள்?”
‘‘அதுதான் மக்கள் பார்க்கிறார்களே! அவ்வளவு தான். இந்த மாதிரியான நேரத்தில் 24 மணிநேரமும் செயல்படுவது மாதிரியான நெட்வொர்க் இருக்கவேண்டும். அது இல்லாமல் போனதுதான் பொதுமக்களின் தேவைகளை அரசாங்கத்தால் திருப்திப்படுத்த முடியவில்லை. இரண்டு மூன்று தடவை தலைமைச் செயல​கத்துக்கு வந்து அதிகாரிகளிடம் ஆலோசனை செய்தார் முதல்வர். ஒரே ஒரு தடவை ஆர்.கே.நகர் போனார். அரைமணி நேரம் ஹெலிகாப்டரில் பறந்தார். பிரதமரைச் சந்தித்தார். எல்லா இடங்களிலும் அமைச்சர்களோ, அதிகாரிகளோ போனால், ‘முதல்வர் எங்கே?’ என்றுதான் மக்கள் கேட்கிறார்கள். ‘தினமும் ஒரு ஏரியாவுக்கு வந்து பார்க்க வேண்டாமா?’ என்று பொதுமக்கள் கேட்கிறார்கள்!”
‘‘ம்!”
‘‘நிவாரணப் பணிகளை மேற்கொள்வதில் நிபுணர்களான அதிகாரிகள், களத்தில் இல்லை என்பது பட்டவர்த்தனமாகத் தெரிகிறது. அதுவும், சென்னை மாநகராட்சியில் அதிகமாகவே தெரிகிறது. ஒவ்வொரு ஏரியாவுக்கும் ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரியை மேற்பார்வை பார்க்கப் போட்டுள்ளார்கள். ஆனால், அவர்களுக்கு யாரிடம் வேலைகளை ஒப்படைப்பது என்றே தெரியவில்லையாம். பேரிடரில் இருந்து மீட்பது என்றால், போலீஸ் உதவி தேவை. நிவாரண உதவி செய்வதாக இருந்தால் மாநகராட்சி அலுவலர்கள் தேவை. போலீஸையோ,  மாநகராட்சி அதிகாரிகளையோ இந்த ஐ.ஏ.எஸ்-களால் தொடர்புகொள்ள முடியவில்லையாம். மாவட்டமாக இருந்தால் கலெக்டர் கட்டுப்பாட்டில் அனைவரும் வந்து விடுவார்கள். சென்னையில் யார் கன்ட்ரோலில் அனைத்துப் பணிகளும் செய்வது என்பதே தெரியவில்லையாம். மேயர் துரைசாமியா, கமிஷனர் விக்ரம் கபூரா, உள்ளாட்சி அமைச்சர் வேலுமணியா, சென்னையைச் சேர்ந்த அமைச்சர்களான வளர்மதியா, கோகுல இந்திராவா, சென்னை கலெக்டர் சுந்தரவள்ளியா... யார் இந்தப் பணிகளைச் செய்வது, யார் உத்தரவிடுவது என்றே தெரியவில்லை. செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து உபரிதண்ணீர் திறந்துவிடப் போகிறார்கள் என்பதே நிர்வாகத்தின் பல்வேறு துறைகளுக்குத் தெரியவில்லையாம். அதனால்தான் தண்ணீர் திறந்துவிடுவதற்கு முன் செய்யப்பட வேண்டிய முன்னேற்பாடுகள் எதுவும் செய்ய முடியாமல் போனதாம்!”
‘‘நிவாரணப் பணத்தை அறிவித்துவிட்டார்களே?”
‘‘பணம் கொடுத்துவிட்டால் போதும்! அத்தனையும் மறந்துவிடுவார்கள் என்று நினைத்​திருப்பார்கள். வெள்ளத்தால் குடிசைகளை இழந்த குடும்பங்களுக்கு 10 ஆயிரம் ரூபாய் மற்றும் நிரந்தர வீடு, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இதர குடும்பங்களுக்கு 5 ஆயிரம் ரூபாய் என்று முதல்வர் அறிவித்துள்ளார். முன்பெல்லாம் வெள்ளம் வந்தால் கூவம், அடையாறு கரை ஓரத்தில் இருப்பவர்கள் பாதிக்கப்படுவார்கள். 2 ஆயிரம் கொடுத்து முடித்து விடுவார்கள். இப்போது அதிகமாகப் பாதிக்கப்பட்டது மத்தியதர வர்க்கத்தினர். ஆயிரக்கணக்கான பேர் லட்சக்கணக்கில் தங்கள் பொருட்களை இழந்துள்ளார்கள். முதல்மாடி வரைக்கும் தண்ணீர் வந்தவர்களது வீடுகளை மராமத்து செய்யவே பல லட்சம் வேண்டும். இதை எல்லாம் 5 ஆயிரம் கொடுத்து எப்படிச் சமாளிக்க முடியும்?”
‘‘உண்மைதான்!”
‘‘இவ்வளவு நடந்துகொண்டு இருக்கும்போது பிளீச்சிங் பவுடரை குறிப்பிட்ட கம்பெனியில்தான் வாங்க வேண்டும் என்று நெருக்கடி கொடுப்பதில் மட்டும் அதிகாரத்தில் இருக்கும் ஒருவர் மும்முரமாக இருக்கிறார் என்றால், இவர்களுக்கு இந்த விவகாரத்தின் சீரியஸ் புரிந்தமாதிரியே தெரியவில்லையே!”
‘‘அப்படியா?”
‘‘வெள்ளத்தால் எத்தனை பேர் பாதிக்கப்​பட்டார்கள்? வாகனங்கள், வீட்டுப்பொருட்கள் சேதம் எவ்வளவு?... என்றெல்லாம் இன்னும் பட்டியல் தயாரிக்கும் வேலையைத் தொடங்கவே இல்லை. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் கடலூர் மாவட்டங்களில் தற்காலிக முகாம்களில் கடந்த சில நாட்களாகத் தங்க வைக்கப்பட்டிருக்கும் மக்களின் எண்ணிக்கை சுமார் 13 லட்சம். சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் முழுமையாகச் சேதமடைந்த குடிசை மற்றும் வீடுகளின் எண்ணிக்கை சுமார் 10 லட்சம். ஆக, வீடு இழந்து அடுத்த வேளைக்கு உணவு, உடை இல்லாமல் அகதிகளாக நிற்பவர்களுக்கு ஒரு வாரம் உதவலாம். அதன்பிறகு அவர்கள் எங்கே போவார்கள்? தற்காலிக முகாம்களைக் காலி செய்ய சொல்லிவிடுவார்களே? இவர்கள் வீடுகளுக்குத் திரும்பப் போக வேண்டுமானால், இடைக்கால நிவாரணத் தொகையை முதலில் வழங்க வேண்டும். பிறகு, மறுவாழ்வு விவகாரங்களுக்கான இழப்பீடு தரவேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது!”
‘‘ம்!”
‘‘இந்தப் பேரழிவுகளைச் சரி செய்யவே தனி நிர்வாகம் ஏற்படுத்தப்பட வேண்டும். ‘கவுன்ட் டவுன்’ ஆரம்பம். 90 நாட்கள்தான் இருக்கின்றன. அதற்குள் வெள்ள நிவாரணப் பணிகளை முறையாக முடிக்க வேண்டும். இல்லையென்றால், தேர்தல் அறிவிப்பு வந்துவிடும். அதன்பிறகு எந்தப் பணியையும் தொடங்க முடியாது. வெள்ளம் வருவதற்கு முன்பு, வந்தவுடன், அதன் பின்விளைவுகளைச் சரிசெய்யும் நடவடிக்கைக்கு டிரிக்கர் மெக்கானிஸம் என்று அதிகாரிகள் சொல்வார்கள். போர்க்கால அடிப்​படையில் செயல்பட வேண்டியது நிர்வாகம். ஆனால், ஆமை வேகத்தில்தான் எல்லாம் நடக்கிறது.’’
‘‘இதற்கு என்னதான் தீர்வு?’’
‘‘ஏற்கெனவே சுனாமி, வெள்ளப் பாதிப்பு நேரத்தில் திறமையாக சமாளித்த பல அதிகாரிகள் தற்போது ஓய்வுபெற்று வெளியில் இருக்கிறார்கள். அவர்களை அழைத்து ஆலோசனை கேட்கலாம். அவர்களையும் சேர்த்து தற்போது உள்ளவர்களில் அனுபவம் வாய்ந்தவர்களை வெள்ள நிவாரண வேலைகளில் ஈடுபடுத்தலாம்.’’
‘‘செய்வார்களா?”
‘‘செய்யாவிட்டால் கெட்ட பெயர்தான் வரும்!” என்று சொல்லிவிட்டு எழுந்த கழுகார், ஒரு விஷயத்தைச் சொன்னார்.
‘‘சிங்கப்பூர், ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் கடலுக்கு அடியில், கடல்வாழ் உயிரினக் கண்​காட்சியகங்கள் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன. இந்தியாவில் அதுபோன்று கண்காட்சியகங்கள் எதுவும் இதுவரை அமைக்கப்படவில்லை. மகாபலிபுரம் அருகே, 250 கோடி ரூபாய் செலவில், கடலுக்கு அடியில் ‘கடல்வாழ் உயிரினக் கண்காட்சியகம்’ அமைக்கப்​படும் என்று தமிழக முதல்வர் சட்டமன்றத்தில் அறிவித்தார். இந்த டெண்டரை எடுக்க, உலகளவில் செயல்படும் ஒரு தனியார் நிறுவனம் களத்தில் இறங்கியது. பிரச்னை என்னவென்றால், அந்த நிறுவனம், இதுபோன்ற கட்டுமானத்தில் அனுபவம் இல்லாத நிறுவனமாம். அத்துடன், இந்தத் திட்டத்தை மேற்கொள்ள மத்திய அரசிடம் பெற வேண்டிய அனுமதிகள் எல்லாவற்றையும் மாநில அரசே பெற்றுத் தர வேண்டும் என்றும், திட்டத்தைச் செயல்படுத்த கூடுதல் அவகாசமும், தொகையும் தேவைப்பட்டால் மாநில அரசே கொடுக்க வேண்டும் என்றெல்லாம் நிபந்தனைகள் விதித்துள்ளனர். இதில் மிரண்டுபோன அதிகாரிகள், ‘டெண்டர் அறிவிப்போம். அப்போது வாருங்கள்’ என்று சொல்லி அனுப்பிவிட்டனர். ஆனால், அந்தத் தனியார் நிறுவனம் அதையடுத்து ‘சிலரை’ அணுகி, ஓகே வாங்கிவிட்டது. உலகளாவிய டெண்டர் என்ற பெயரில் எந்த அறிவிப்பும் இன்றி, மூன்று நிறுவனங்கள் மட்டும் கலந்துகொண்ட டெண்டர் ரகசியமாக நடைபெற்றுள்ளது. அதில் கலந்துகொண்ட மற்ற இரண்டு நிறுவனங்கள் இ.டி.ஐ தொகை எனும் தொகையைக் கட்டவில்லையாம். அதாவது அவை இரண்டும் சும்மா போட்டிக்குக் கணக்குக் காட்டப்பட்ட செட்டப் நிறுவனங்களாம். இந்த ஃபைலை சிக்கல் இல்லாமல் முடித்துக் கொடுப்பதில்தான் மாய்ந்து மாய்ந்து வேலை பார்க்கிறார்கள்!” என்றபடி பறந்தார்!
படம்: தி.குமரகுருபரன்  விகடன்.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக