ஞாயிறு, 20 டிசம்பர், 2015

நீர்வழித்தடங்களின் ஆக்கிரமிப்பு கணக்கெடுப்பு ஆரம்பம்: சென்னை முழுவதும் விரைவில் இடிப்பு?

10000.20000. மட்டும் சம்பளம் வாங்கும் நாங்கள் , சட்டத்திற்கு பயந்து, 20 , 30 கி மீ. தள்ளி , approve ஆன இடத்தில , கடன் வாங்கி , ஒரு வீடு கட்டுகிறோம் . தினமும் 4 மணிநேரம் போக வர பயணித்து, கஷ்டபடுகிறோம். இப்போதும் வெள்ளத்தில் கஷ்டபடுகிறோம். ஆனால், சென்னையில் நடுவில் ஆக்ரமிப்பு செய்தவர்கள் அரசியல்வாதிகளுக்கும் அதிகாரிகளுக்கும் லஞ்சம் கொடுத்து, அவர்களுக்கு நல்லபிள்ளைகளாகி , சலுகைகளையும் வாங்கி கொள்கிறார்கள். அவர்களுக்கு மட்டும் எல்லோரும் வக்காலத்து வாங்குகிறார்கள். சட்டத்தை மதிக்கிறவன் பைத்தியக்காரன், மிதிக்கிறவன் புத்திசாலி. ஆக்ரமிப்பு செய்தவர்களை தயவு தாச்சனியம் பார்க்காமல் வெளியேற்றவும். மேலும் மீண்டும் அவர்கள் அங்கு வந்தால், தண்டனை கொடுக்கவும். ஆக்ரமிப்பால் அவர்களுக்கு மட்டுமல்ல, எங்களுக்கும் ஏராளமான பாதிப்புகள். 
சென்னையில், கூவம், அடையாறு, பக்கிங்ஹாம் உள்ளிட்ட நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகள் குறித்து, ரகசிய கணக்கெடுப்பை, நீர்வளத் துறை துவங்கியுள்ளது.  இதிலும் லஞ்சம் இடம்பெறும் சாத்தியம் தாரளமாக உண்டு


சமீபத்தில் கொட்டிய மழையால், அடையாறு, கூவம், பக்கிங்ஹாம் கால்வாய் ஆகியவற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால், சென்னை நகரம் வெள்ளத்தில் மூழ்கி தத்தளித்தது. அதிகப்படியான மழைப்பொழிவு மட்டுமின்றி, நீர்வழித் தடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளே, இதற்கு காரணம் என தெரியவந்தது.


உத்தரவு:

எனவே, இந்த நீர்வழித்தட ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என, உயர் நீதிமன்றம், அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து, ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டிய நெருக்கடி, பொதுப்பணித் துறைக்கு ஏற்பட்டுள்ளது.

எனவே, சென்னையில் உள்ள நீர்வழித் தடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகள் பற்றிய ரகசிய கணக்கெடுப்பை, பொதுப்பணித் துறையின் கீழ் இயங்கும் நீர்வளத் துறையினர் மேற்கொண்டுள்ளனர். குடியிருப்பு கட்டடங்கள், குடிசைகள், கல்வி நிலையங்கள், தனியார் நிறுவனங்கள் என, ஏரிகளில் எவ்வளவு ஆக்கிரமிப்புகள் உள்ளன என்பது பற்றி, தனித்தனியாக கணக்கெடுப்பு நடந்து வருகிறது.

இதற்கிடையே, பொதுப்பணித் துறை அதிகாரிகள், தலைமைச் செயலகத்தில், இது குறித்து விரிவான ஆலோசனை நடத்தினர். ஆக்கிரமிப்பு கணக்கெடுப்பு முடிந்த கையோடு, அவற்றை அகற்றும் பணி, விரைவில் துவங்கப்பட உள்ளதாக, சென்னை மண்டல நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

மாற்று இடம்:

அடையாறு, கூவம் ஆற்றங்கரையில் வசிப்பவர்களுக்கு குடிசை மாற்றுவாரியத்தால் கட்டப்பட்டுள்ள வீடுகள் உடனடியாக வழங்கப்படும் என, முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். அவர்களுக்கு வீடுகளை ஒதுக்கீடு செய்வதற்காகவும் இந்த கணக்கெடுப்பு பணி நடப்பதாக வருவாய்த்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

எதிர்பார்ப்பு:

அடுத்த ஆண்டு பருவ மழை துவங்கும் முன், இந்த மூன்று நீர்வழித் தடங்களிலும் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என, சென்னை நகர மக்கள் விரும்புகின்றனர். ஆக்கிரமிப்புகளை அகற்றுவதோடு மட்டுமல்லாமல், மீண்டும் அங்கு ஆக்கிரமிப்புகள் ஏற்படாத வண்ணம், நீர்வழித்தடத்தின் இரு கரைகளிலும் சாலை அமைக்க வேண்டும்; வெள்ளம் ஏற்படும் போது, நகருக்குள் தண்ணீர் வராமல் தடுக்க, உயரமான தடுப்பு சுவர்கள் அமைக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

நீர்வழித்தடத்துக்கு பட்டா வழங்க அரசாணை நீர்வழித் தடங்களை அடைத்ததே, பெரும் வெள்ளத்துக்கான காரணம் என, புகார்கள் எழுந்து வரும் நிலையில், நீர்வழி புறம்போக்கு, மேய்ச்சல், மந்தைவெளி, மயானம் மற்றும் பாட்டை என, வகைப்படுத்தப்பட்ட நிலங்களுக்கு, பட்டா வழங்க, தி.மு.க., ஆட்சிக் காலத்தில், 2006 டிச., 30ம் தேதியிட்டு வெளியிடப்பட்ட அரசாணை எண் 854 விவரம்:

நிபந்தனைகள்:

மேற்கண்ட அரசு நிலங்களில், 10 ஆண்டுகளுக்கும் மேல் வீடு கட்டி வசிப்போருக்கு, பட்டா வழங்க ஆணைகள் அரசு வெளியிட்டது. அரசு நிலங்களில் வீடு கட்டி வசிப்போருக்கு, வீட்டுமனைப் பட்டா வழங்க வேண்டும் என, எம்.எல்.ஏ.,க்கள் மூலம், பொதுமக்களின் கோரிக்கை அதிகளவில் அரசுக்கு வந்துள்ளன.

இதைக் கருத்தில் கொண்டு, நீதிமன்ற உத்தரவை தளர்வு செய்து, அரசின் சிறப்பு திட்டமாக செயல்படுத்த வேண்டும். 2007 ஜனவரி முதல் ஆறு மாதங்களுக்குள் நிறைவேற்ற, கீழ்க்கண்ட நிபந்தனைகளுடன் விதிக்கப்படுகின்றன.

கோவில் புறம்போக்கு, திருச்சபை மற்றும் மசூதி உள்ளிட்ட வழிபாட்டு தலங்களை சுற்றியுள்ள புறம்போக்கு நிலங்களைத் தவிர, ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி மற்றும் மாநகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள, ஆட்சேபகரமான அரசு நிலங்கள், பொது நலனுக்கு தேவையில்லாத, சமுதாய தேவைக்கு ஒதுக்கப்பட்டு, தற்போது பயன்பாட்டில் இல்லாத, நத்தம் புறம்போக்கில், 10 ஆண்டுக்கு மேலாக வீடு கட்டி வசிப்போருக்கு, உரிய ஆதாரங்களைப் பெற்று பட்டா வழங்கலாம்.
நகராட்சிகள், சென்னை, கோவை, மதுரை, சேலம், திருச்சி, நெல்லை மாநகராட்சி எல்லைகளுக்குள், வீட்டுமனை ஒப்படைக்க விதிக்கப்பட்ட தடையாணை, இந்த திட்டத்துக்கு தளர்வு செய்யப்படுகிறது.

இலவச வீட்டுமனை பட்டா:

நீர்நிலை புறம்போக்கு நிலங்கள், அரசுக்கு தேவையில்லை என்பதை, கலெக்டர் தலைமையிலான குழு உறுதி செய்ய வேண்டும். தகுதி இல்லாதவர்களுக்கு இலவச வீட்டு மனைபட்டா வழங்கும்போது, நில மதிப்பு வசூலிக்கப்பட வேண்டும். இலவச பட்டா பெற தகுதி உள்ளவர்கள், கூடுதல் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்திருந்தால், அந்த நிலத்துக்கு வழிகாட்டி மதிப்பில் விலை நிர்ணயிக்க வேண்டும்.

புதிதாக உருவாக்கப்பட்ட மாவட்ட தலைநகரிலிருந்து, 16/8 கி.மீ., சுற்றளவுக்கு உட்பட்ட பகுதிக்கு விதிக்கப்பட்ட தடை; மேய்ச்சல் புறம்போக்கு நிலங்களை பிற துறைகளுக்கு மாற்றம் செய்ய விதிக்கப்பட்ட நிபந்தனைகள் இத்திட்டத்துக்கு தளர்வு செய்யப்படுகிறது.இவ்வாறு அரசாணையில் கூறப்பட்டுஉள்ளது.

- நமது நிருபர் -  தினமலர்.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக