வெள்ளி, 11 டிசம்பர், 2015

பேரிடர் மேலாண்மை விதிகள் அமலானதா: கூடுதல் நிவாரணத்தில் சிக்கல்

சென்னை வெள்ள பாதிப்பை தேசிய பேரிடராக அறிவிக்க கோரும் தமிழக அரசு, பேரிடர் மேலாண்மை சட்டப்படி, மத்திய அரசின் சிறப்பு பணிக்குழு வகுத்த விதிமுறைகளை முழுமையாக அமல்படுத்தாதது ஏன்?' என, நகரமைப்பு வல்லுனர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர். சென்னையில் வரலாறு காணாத மழை வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகளில் இருந்து, மக்கள் படிப்படியாக மீண்டு வருகின்றனர். இந்த பாதிப்புகளின் தன்மையை கருத்தில் கொண்டு,
சென்னையை, பேரிடர் பாதித்த பகுதியாக தமிழக அரசு அறிவித்து உள்ளது. மேலும், பாதிப்பின் தாக்கம் அதிகமாக இருப்பதால், இதை, தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என, தமிழக அரசு மத்திய அரசிடம் வலியுறுத்தி உள்ளது.

பேரிடர் மேலாண்மை: இந்த பின்னணியில், பேரிடர் குறித்தும் அதை அணுகுவதற்கான நிர்வாக நடைமுறைகள் விஷயத்தில், தமிழகத்தின் நிலை என்ன என்பதும், கவனிக்க வேண்டியதாக உள்ளது. மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம், வருவாய் துறையின், ஒரு பகுதியாக உள்ளது. இதற்கு ஒரு மூத்த, ஐ.ஏ.எஸ்., அதிகாரி தலைவராக இருக்கிறார்.
தமிழகத்தில் எந்த பகுதியில், வெள்ளம், தீ விபத்து, கட்டடங்கள் இடிதல் போன்றவை நிகழ்ந்தாலும், மீட்பு மற்றும் நிவாரண பணிகளுக்கு, தீயணைப்புத் துறையினர் அழைக்கப்படுவர்.
பாதிப்பு அதிகமாக இருந்தால், அரக்கோணத்தில் இருந்து, தேசிய பேரிடர் மீட்பு படையினர் அழைக்கப்படுகின்றனர். இதைத் தவிர்த்து, பேரிடரை சமாளிப்பதில், வேறு என்ன நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன என்பது மிகப் பெரிய கேள்விக்குறியாக உள்ளது.>புதிய சட்டம்:நிலநடுக்கம், சுனாமி, புயல், மழை வெள்ளம் போன்றவற்றால் அடிக்கடி பேரிடர் ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ள தமிழகத்தில், அரசு நிர்வாகத்தில் அடி மட்டத்தில் இருந்தே, பேரிடர் மேலாண்மை என்பது இயல்பான பழக்கமாக இருக்க வேண்டியது அவசியமாகிறது.
வடகிழக்கு பருவ மழை காலத்தில், ஒடிசாவில் அடிக்கடி ஏற்படும் புயல், 2001ல் குஜராத் மாநிலம் கட்ச், புஜ் பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கம், 2004ல் ஏற்பட்ட சுனாமி போன்றவற்றுக்கு பின், 'பேரிடர் மேலாண்மைக்கான சட்டம் - 2005'ஐ மத்திய அரசு நிறைவேற்றியது.

பரிந்துரைகள்:

இந்த சட்டத்தின் படி, தேசிய, மாநில, மாவட்ட அளவில் மேற்கொள்ள வேண்டிய முன் தயாரிப்பு, மீட்பு பணிகள் நிர்வாகம், எதிர் கால திட்டமிடல் போன்றவற்றுக்கான வழிமுறைகள் வகுக்கப்பட்டன.தேசிய பேரிடர் ஆணையத்தின் உத்தரவுப்படி, பேரிடர் மேலாண்மைக்கான சிறப்பு பணிக்குழு அமைக்கப்பட்டது. அதன் பரிந்துரைகள், மத்திய திட்டக்குழு வாயிலாக, தமிழகம் உள்ளிட்ட அனைத்து மாநிலங்களுக்கும் அனுப்பப்பட்டன.

மாநில திட்டக்குழுக்கள், அந்தந்த மாநிலங்களில் புதிய திட்டங்களை உருவாக்கும் நிலையிலேயே, பேரிடர் விதிமுறைகளை சம்பந்தப்பட்ட துறைகள் கடைப்பிடிப்பதை உறுதி செய்ய வேண்டும் என, அறிவுறுத்தப்பட்டது.

சிக்கல்:

இதுகுறித்து தொழில்முறை நகரமைப்பு வல்லுனர்கள் சங்கத்தின் தலைவர் சதானந்த் கூறியதாவது:மத்திய அரசு சிறப்பான முறையில் வகுத்த பேரிடர் மேலாண்மை விதிமுறைகளை அமல்படுத்தி இருந்தால், அண்மையில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பின் போது, மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கி இருக்காது. இந்த பின்னணியில், தமிழக அரசு தற்போது, கூடுதல் நிவாரணம் கேட்கும் நிலையில், பேரிடர் விதிமுறைகள் அமலாக்கத்தை மத்திய அரசு கட்டாயப்படுத்த வாய்ப்பு உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

பேரிடர் மேலாண்மை குறித்த மத்திய அரசின் சிறப்பு பணிக்குழு வழங்கிய சில முக்கிய பரிந்துரைகள்

* பேரிடர் மேலாண்மையில் பொதுமக்கள், ராணுவ பிரிவுகளுக்கிடையில், ஒருங்கிணைப்பை உறுதி செய்வதற்கான நவீன, தேசிய கட்டுப்பாட்டு மையத்தை ஏற்படுத்த வேண்டும். அவசர
கால செயல்பாட்டு குழுக்களுக்கும், மீட்பு பணியில் ஈடுபடும் அரசு சாரா அமைப்புகளுக்கும், இடையில் ஒருங்கிணைப்பை ஏற்படுத்துவதற்கான சட்ட விதிமுறைகள் வகுக்கப்பட வேண்டும்
* பேரிடர் தடுப்பு மற்றும் சமாளிப்பதற்கான வழிமுறைகளை, அனைத்து வளர்ச்சி பணிகள் திட்டமிடலில் சேர்க்க வேண்டும். ஒவ்வொரு திட்டத்திலும், பேரிடர் அபாயம் என்ன என்பதை உரிய முறையில் ஆய்வு செய்ய வேண்டும்
* புதிய உள்கட்டமைப்பு திட்டங்களை உருவாக்கும் போது, அதில் பேரிடர் குறித்த திட்டமிடல், அனைத்து நிலைகளிலும் இருக்க வேண்டும். பேரிடர் மேலாண்மையில் ஈடுபடுவோர், முடிவுகள் எடுக்கும் நிலையில் இருப்பவர்கள், சமுதாயம் இடையே பேரிடர் குறித்த, அறிவுசார் தொடர்பை ஏற்படுத்த வேண்டும்
* தேசிய அளவில் பேரிடர் மேலாண்மை நடைமுறைகளை மக்களிடம் பழக்கமாக்க, இது குறித்த நடைமுறைகளை பள்ளி பாட திட்டத்தில் சேர்ப்பது, படிப்புகளை துவக்குவது, பயிற்சிக்கான வழிமுறைகளை ஏற்படுத்துவது போன்ற நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்
* சமுதாய அளவிலும், அடித்தள நிலையிலும் பேரிடர் மேலாண்மையில், மக்களின் பங்கேற்பை உறுதிபடுத்தும் வகையிலான ஏற்பாடுகளை செய்ய வேண்டும்
* பேரிடர்களை சமாளிப்பதற்காக வட்டார அளவில் தேவையான விதிமுறைகளை வகுக்க வேண்டும்; கட்டடங்களுக்கான விதிமுறைகள், வடிவமைப்புகள் அனைத்தும், பேரிடர் சமாளிப்பை அடிப்படையாக கொண்டதாக இருக்க வேண்டும்

மாவட்ட அளவில்:

பேரிடர் மேலாண்மையில் மாவட்ட அளவில் மேற்கொள்ள வேண்டிய முன் தயாரிப்பு நடவடிக்கைகள்

* மக்களுடன் தொடர்பில் உள்ள அரசு துறை பணியாளர்களுக்கு, பேரிடர் கால செயல்பாடு குறித்த பயிற்சி அளிக்க வேண்டும்
* ஓய்வுபெற்ற ராணுவ, போலீஸ் அதிகாரிகளை கொண்டு, சமுதாய அளவில், பேரிடர் மேலாண்மை குறித்த விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்த வேண்டும்
* இவர்களை கொண்டு, மாவட்ட அளவிலான பேரிடர் மேலாண்மை அமைப்புகள் செயல்பட வேண்டும். இவர்களுக்கு உரிய கால இடைவெளியில் புத்தாக்க பயிற்சி அளிக்க வேண்டும்
* நிலையான பயிற்சி நடைமுறைகள் உருவாக்க வேண்டும். வாழ்க்கை முறையில் பேரிடர் சமாளிப்பு குறித்த பழக்கங்களை ஏற்படுத்தும் பயிற்சிகளை ஊக்குவிக்க வேண்டும்
* பேரிடர் காலத்தில், மீட்பு பணிக்கு உடனடியாக அழைக்கும் வகையில், ஒவ்வொரு துறையிலும் ஓய்வு பெற்ற அலுவலர்கள் இருக்கும் இடங்கள் குறித்த வரைபட தொகுப்புகளை தயாரிக்க வேண்டும்
* அனைத்து நகரங்கள், கிராமங்களில், 50 கி.மீ.,க்கு ஓர் இடத்தில், பேரிடர் மீட்பு, நிவாரண வசதிக்கான கட்டமைப்புகளை ஏற்படுத்த வேண்டும். பேரிடர் ஏற்பட்டால், பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக தேவையான உதவிகள் கிடைப்பதை உறுதி செய்யலாம்
* அரசு மற்றும் அரசு சாரா நிறுவனங்களை, பேரிடர் சேத மதிப்பீடு மற்றும் ஆராய்ச்சியில் ஈடுபடுத்த வேண்டும்
* மாவட்ட அளவில் பேரிடர் கால மீட்பு, நிவாரண பணிகளுக்கான தனி நிதியை நிர்வகிக்க வேண்டும். மாவட்ட கலெக்டர் நிலையில் உள்ள அதிகாரிகள் இந்நிதியை பயன்படுத்த அதிகாரம் பெற்று இருக்க வேண்டும்.

மாநில அளவில்:


பேரிடர் மேலாண்மையில் மாநில அளவில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள்

* மாநில மீட்பு மற்றும் நிவாரண பணிகள் ஆணையரை, மாநில அளவில் பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக நியமிக்க வேண்டும். அவர் அலுவலகம், மாநிலத்தில் பேரிடர் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ள பகுதிகள் குறித்த முழு விவரங்களையும் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்
* அந்தந்த மாநிலங்களின் சூழலுக்கு ஏற்ப, மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்துக்கு ஆலோசனை குழுக்களை அமைக்க வேண்டும். மாநில ஆணையத்தின் செயல் திட்டங்களை தயாரிப்பதில் இக்குழு முக்கிய பங்காற்ற வேண்டும். குறிப்பிட்ட தலைப்புகளில் நிபுணத்துவம் பெற்றவர்களை கொண்டு இதற்கு துணைக்குழுக்களையும் அமைக்கலாம்
* துறைவாரியாக நிலையான செயலாக்க வழிமுறைகள், செயல் திட்டங்களை உருவாக்க வேண்டும்
* அரசு நிர்வாகத்தில், பேரிடர் குறித்த நிபுணத்துவம் மிக்க மனித வளத்தை மேம்படுத்தும் பணிகளை தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும். அனைத்து துறைகளின் இயல்பான செயல்பாட்டிலும் பேரிடர் மேலாண்மை வழிமுறைகளை புகுத்த வேண்டும்
* மாநில அளவிலான பேரிடர் மீட்பு மற்றும் நிவாரண நிதியை பயன்படுத்தும் அதிகாரம், இந்த ஆணையத்துக்கு அளிக்கப்பட வேண்டும்.
* ஒவ்வொரு மாநிலத்திலும், தேவையான எண்ணிக்கையில், 24 மணி நேரமும் செயல்படும் வகையில், பேரிடர் குறித்த அவசர கால செயலாக்க மையங்களை ஏற்படுத்த வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக