புதன், 30 டிசம்பர், 2015

சென்னையை சுத்தம் செய்யும் பெல்ஜியம் பீட்டர் வான்

.nisaptham.com பீட்டர் வான் கெய்ட் பெல்ஜியம் நாட்டுக்காரர். ஆனால் சென்னைவாசி. கிட்டத்தட்ட பதினைந்து வருடங்களுக்கு மேலாக இங்குதான் குப்பை கொட்டுகிறார். குப்பை கொட்டுகிறார் என்று சொல்வதற்கு அர்த்தம் இருக்கிறது. சென்னையைச் சுத்தம் செய்வதற்காக ஒரு பெரும் அணியைச் சேர்த்துக் கொண்டு சேரி, கடற்கரை, கூவம், அடையாறு என ஓரிடம் பாக்கியில்லாமல் குப்பைகளை அள்ளிக் கொட்டுகிறார். இது அவருக்கு முழு நேர வேலை இல்லை. மென்பொருள் துறையில் பெரும்பதவியில் இருக்கிறார். லட்சக்கணக்கில் சம்பளம் வரும். அதெல்லாம் வயிற்றுப்பாட்டுக்கு மட்டும்தான். குப்பைகளுக்குள் இறங்கும் போது தனது அத்தனை பின்னணிகளையும் கழற்றி வைத்துவிட்டு சாதாரண மனிதராக கால் வைக்கிறார்.

ஆரம்பத்தில் பீட்டர் மலையேற்றம் போன்ற வேலைகளைத்தான் செய்து கொண்டிருக்கிறார். அவர் மலையேறச் செல்லுமிடங்களுக்கு சிறு குழுவையும் அழைத்துச் சென்றிருக்கிறார். சில ஆண்டுகளுக்கு முன்பாக அந்தக் குழுவை சென்னை ட்ரக்கிங் க்ளப் என்ற பெயரில் ஓர் முறையான அமைப்பாக மாற்றியிருக்கிறார். அதன் வழியாக தனது குழுவினரோடு சென்னையின் குறுக்கும் நெடுக்குமாக அலைந்தவருக்கு சென்னையின் கசகசப்பைக் கொஞ்சமாவது மாற்ற முடியும் என்று தோன்றியிருக்கிறது. சுத்தம் செய்யத் தொடங்கியிருக்கிறார்கள். மெரினா கடற்கரையிலிருந்து கோட்டூர்புரம் குப்பம் வரைக்கும் சகல இடங்களிலும் களமிறங்குகிறார்கள்.
யார் தங்களோடு வருகிறார்கள், யாரெல்லாம் கவனிக்கிறார்கள் என்பதையெல்லாம் பீட்டர் கண்டுகொள்வதேயில்லை. எந்தவிதமான எதிர்பார்ப்புமில்லாத அர்பணிப்புடன் கூடிய சேவை அது. எந்த இடத்தைச் சுத்தம் செய்யப் போகிறோம் என்பதை முன்பே முடிவு செய்துவிடுகிறார்கள். குறிப்பிட்ட தினத்தில் குறிப்பிட்ட இடத்தில் காலை ஆறு மணிக்கு இணைந்து கொள்ளச் சொல்லி மின்னஞ்சல் வழியாகத் தகவல் கொடுக்கிறார்கள். வருகிறவர்களுடன் இணைந்து வேலையை ஆரம்பிக்கிறார் பீட்டர். தன்னார்வலர்களுக்குத் தேவையான கையுறைகள், பூட்ஸ், குப்பைகளை அள்ளிப் போடுவதற்கான கோணிப்பைகள் என சகலத்தையும் தயாராக வைத்துக் கொள்கிறார்கள். ஜேசிபி, ட்ராக்டர் உள்ளிட்ட ஏற்பாடுகளையும் கூட செய்து வைத்து விடுகிறார்கள். தேர்வு செய்யப்பட்டிருக்கும் இடம் படு வேகமாக சுத்தமாகிறது. ஒருவேளை சுத்தம் செய்ய முடியாவிட்டால் மீண்டும் இன்னொரு நாள் அதே இடத்தில் கூடுகிறார்கள்.
விடுமுறை நாட்களில் மட்டும்தான் இந்த வேலையைச் செய்கிறார்கள் என்று அர்த்தமில்லை. வேலை நாட்களிலும் கூட காலை ஆறு மணியிலிருந்து ஏழரை மணி வரைக்கும் செய்துவிட்டு வீட்டுக்குச் சென்று கிளம்பி அலுவலகத்துக்குச் செல்கிறார்கள். அசாத்தியமான உழைப்பு இது. இத்தகைய வேலைகளின் போது பீட்டர் காலில் பூட்ஸ் கூட அணிவதில்லை. செருப்பை மட்டும் அணிந்து கொண்டு எந்தவிதமான சங்கோஜமுமில்லாமல் சகதிகளுக்குள்ளும் சேற்றுக்குள்ளும் கால் வைக்கிறார். சிறுநீர் கழித்து வைத்திருக்கும் இடத்தைத் தாண்டும் போதே மூக்கின் மீது கர்சீப்பை வைத்துக் கொண்டு நகரும் மனிதர்களுக்கிடையில் பீட்டர் மாதிரியான மனிதர்கள் ஆச்சரியமூட்டக் கூடியவர்கள்.
வெளிநாட்டு மனிதர்கள் என்றாலே கேரளா மசாஜிலும், ஜெய்ப்பூர் யானைச் சவாரியிலும் பொழுதைக் கழிப்பார்கள் என்கிற நினைப்பில் சம்மட்டியை எடுத்து ஒரு வீசு வீசுகிறார் பீட்டர். தான் வாழ்கிற சென்னையில் தன்னால் சிறு சலனத்தை உருவாக்க முடியும் என்று நம்புகிறார். துரும்பைக் கூட எடுத்துப் போடாத பெரும்பாலானவர்களுக்கு மத்தியில் கூடை கூடையாக குப்பைகளை அள்ளி ஒதுக்குகிறார்கள் பீட்டரும் அவரது குழுவினரும். 
பீட்டர் இன்னமும் திருமணம் செய்து கொள்ளவில்லை. சென்னையில் தனியாகத்தான் வசிக்கிறார். பெல்ஜியத்தில் வசிக்கும் அம்மாவை மட்டும் அவ்வப்போது சென்று பார்த்து வருகிறார். தான் தனியன் என்பதை அவர் உணர்ந்ததாகவே தெரியவில்லை. சென்னையில் அவருக்கு ஏகப்பட்ட உறவுகள் இருக்கின்றன. எப்பொழுதுமே அவருடன் ஓர் இளைஞர் குழாம் சேர்ந்துவிடுகிறது. அத்தனை பேரும் முப்பது வயதைத் தாண்டாத இளரத்தங்கள். பீட்டர் எதைச் சொன்னாலும் செய்கிறார்கள். பாலித்தீன் பைகளைப் பொறுக்கச் சொன்னாலும் பொறுக்குகிறார்கள். சேற்றை வாரி எடுக்கச் சொன்னாலும் செய்கிறார்கள். நன்றாகப் படித்து, பன்னாட்டு நிறுவனங்களில் வேலை செய்யும் இந்த இளைஞர்கள் எப்படி சென்னையின் சேரிகளுக்குள் அருவெறுப்பில்லாமல் வேலை செய்கிறார்கள் என்பது ஆச்சரியமாக இருக்கிறது. ஆனால் பீட்டர் முன்னுதாரணமாக இருக்கிறார். வெறும் உத்தரவுகளோடு நின்று விடுகிறவன் வெற்றுத் தலைவனாகத்தான் இருக்க முடியும். பீட்டர் அப்படியில்லை. அவரே இறங்கி வேலையைச் செய்கிறார். மற்றவர்கள் அவர்களைப் பின்பற்றுகிறார்கள்.
இந்த வேலையைத்தான் செய்ய வேண்டும் என்கிற எந்த வரையறையும் பீட்டருக்கு இல்லை. மழை சென்னையை திணறடித்துக் கொண்டிருந்த போது களத்தில் இறங்கி நூற்றுக்கும் அதிகமானவர்களை பீட்டர் மீட்டிருக்கிறார். கடலூரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வீடுகள் கட்டித்தரும் வேலையை ஆரம்பித்திருக்கிறார். அத்தனை வேலைகளையும் ஆத்மார்த்தமாகச் செய்கிறார். அவரைப் பற்றி அதிகமான ஊடகச் செய்திகள் வெளிவருவதில்லை. ஆனால் அவர் அதை எதிர்பார்ப்பதும் இல்லை. நூற்றுக்கணக்கான தன்னார்வலர்களுக்குத் தான் ஒரு முகமாக இருக்கிறோம் என்பதை அவர் உணர்ந்திருக்கிறார். அவரோடு களத்தில் இறங்கும் போது இதைப் புரிந்து கொள்ள முடிகிறது. எந்த வேலையாக இருந்தாலும் செய்கிறார். சாக்கடை அள்ளுகிறார். குப்பைகளைப் பொறுக்குகிறார். வழித்தும் கொட்டுகிறார். 
பீட்டர் மாதிரியான மனிதர்கள் நமக்குக் கிடைத்திருக்கும் வரப்பிரசாதம். இத்தகைய மனிதர்கள்தான் ஏதேனுமொருவிதத்தில் நம் நம்பிக்கையைக் காக்கிறவர்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக