திங்கள், 21 டிசம்பர், 2015

விஜயகாந் யாரோடு......கணக்கு கணக்கு கணக்கு பார்த்தவண்ணமே உள்ளார்

வரும் சட்டசபை தேர்தலில், தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்துடன் கூட்டணி அமைக்க, பிரதான கட்சிகளான, தி.மு.க., - பா.ஜ., - காங்கிரஸ் மற்றும் ம.தி.மு.க., தலைமையிலான மக்கள் நலக் கூட்டணியினர் ஆர்வர் காட்டி வருகின்றனர். அதனால், கூட்டணியில் சேரும்படி, அழைப்பு மேல் அழைப்பு விடுத்து வருகின்றனர்.ஆனாலும், தொகுதி பேரத்தை அதிகரிக்கவும், முதல்வர் வேட்பாளர் என்ற நிபந்தனையை உறுதி செய்யவும் விஜயகாந்த் முடிவு செய்துள்ளதால், கூட்டணி தொடர்பாக வாய் திறக்காமல் தொடர்ந்து மவுனம் சாதித்து வருவதாக கூறப்படுகிறது. கடந்த, 2011 சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., கூட்டணியில் இடம்பெற்ற தே.மு.தி.க., 41 தொகுதிகளில் போட்டியிட்டு, 29 தொகுதிகளில் வெற்றி பெற்று, எதிர்க்கட்சி அந்தஸ்தை பிடித்தது; விஜயகாந்த், சட்டசபை எதிர்க்கட்சித் தலைவரானார். ஆனாலும், அ.தி.மு.க., கூட்டணியில் நீடிக்க முடியாமல் வெளியேறினார்.   இவரு ஏதோ பெருசா புரட்டுவார்னு எல்லாரும் நம்புறாய்ங்க ஆனா நானு நம்பல்ல இவரு இன்னொரு டம்மியாதான் .....
இதனால், 2014 லோக்சபா தேர்தலின் போது தங்கள் கூட்டணியில், தே.மு.தி.க.,வை இடம்பெறச் செய்ய, தி.மு.க., கடும் முயற்சி எடுத்தது. அதற்கு பிடி கொடுக்காத விஜயகாந்த், பா.ஜ., தலைமையிலான, தே.ஜ., கூட்டணியில் சேர்ந்து, 14 தொகுதிகளை பெற்றார். ஆனால், ஒரு தொகுதியில் கூட தே.மு.தி.க., வெற்றி பெறவில்லை. இருப்பினும், கூட்டணியில் இடம்பெற்ற பா.ஜ., சார்பில், மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனும், பா.ம.க., சார்பில் அன்புமணியும் வெற்றி பெற, தே.மு.தி.க.,வின் ஓட்டு வங்கி பக்கபலமாக இருந்தது.

இந்நிலையில், 'லோக்சபா தேர்தலில் கோட்டை விட்டதை, சட்டசபை தேர்தலில் பிடித்துவிடலாம்' என்ற எண்ணத்தில், வரும் தேர்தலில், தே.மு.தி.க.,வுடன் கூட்டணி அமைக்க, தி.மு.க., தரப்பில் துாது அனுப்பி, பேச்சு நடத்தப்பட்டது. அதற்கு, விஜயகாந்த் எந்த பதிலும் தெரிவிக்கவில்லை. இருந்தாலும், பொதுக்கூட்டங்களில் பேசும் போது, 'அ.தி.மு.க., உடனோ அல்லது தி.மு.க., உடனோ கூட்டணி
இல்லை' எனக்கூறி, தி.மு.க.,வினரை வெறுப்பேற்றி வருகிறார்.

அதே நேரத்தில், ம.தி.மு.க.,வின் வைகோ, விடுதலை சிறுத்தைகள் திருமாவளவன் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் ஒன்று சேர்ந்த, 'மக்கள் நலக் கூட்டணி, மக்கள் நலன் சார்ந்து செயல்படுகிறது' என பாராட்டி, அவர்களின் கூட்டணி ஆசையை துாண்டி வருகிறார்.அதனால், 'மக்கள் நலக் கூட்டணிக்கு விஜயகாந்த் வந்துவிடுவார்' என, அதில் இடம் பெற்றுள்ள தலைவர்கள், வழிமேல் விழிவைத்து காத்திருக்கின்றனர். இதற்காக, விஜயகாந்துடன் பேசவும் துாது அனுப்பி வருகின்றனர். பொதுக்கூட்டங்களில் எல்லாம் விஜயகாந்தை ஆஹா ஓகோ என புகழ்ந்து பேசி, ஐஸ் வைத்தும் வருகின்றனர்.

அதே நேரத்தில், அ.தி.மு.க., பக்கமும் சேர முடியாமல், தி.மு.க., பக்கமும் சேர முடியாமல் உள்ள, பா.ஜ., கட்சியினர், 'தனித்து போட்டியிடுவோம்' என, சில நேரங்களில் வீர வசனங்கள் பேசினாலும் உள்ளுக்குள், கண்டிப்பாக ஏதாவது ஒரு கூட்டணியில் இடம்பெற வேண்டும் என்ற முடிவில் உள்ளனர். அதற்காக, ஏற்கனவே கூட்டணியில் இடம் பெற்றிருந்த விஜயகாந்தை சமாதானப்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளனர். இதன் ஒரு பகுதியாக, மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், தமிழக பா.ஜ., தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், பா.ஜ., அமைப்புச் செயலர் மோகன்ராஜுலு ஆகியோர், நேற்று முன்தினம், விஜயகாந்தை சந்தித்து பேசியுள்ளனர். அப்போது, 'மக்கள் நலக் கூட்டணிக்கு போகாதீங்க; பிரதமர் மோடியை நீங்கள் சந்திக்க ஏற்பாடு செய்கிறோம்; தொடர்ந்து, பா.ஜ., கூட்டணியில் நீடிக்க வேண்டும்' என, கேட்டுக் கொண்டுள்ளனர்.

ஆனால், விஜயகாந்தோ, 'வெங்கையா நாயுடு, அருண் ஜெட்லி போன்ற, மத்திய அரசில் இடம் பெற்றுள்ள மூத்த அமைச்சர்கள் எல்லாம் தமிழகத்திற்கு வரும் போது, முதல்வர் ஜெயலலிதாவையே சந்திக்கின்றனர். பா.ஜ., கூட்டணியில் இடம் பெற்றுள்ள முக்கிய கட்சியின் தலைவரான என்னை சந்திப்பதில்லை.'சட்டசபை தேர்தல் வருகிறது என்ற உடன் தான், நான் உங்களின் கண்ணுக்கு தெரிகிறேனா; என்னை பார்த்தால், மத்திய அமைச்சர்களுக்கும், உங்களுக்கும் கிண்டலாக தெரிகிறதா' என, காரசாரமாக பேசி, கடுப்பேற்றியதோடு, சந்தித்த தலைவர்களுக்கு எந்தப் பதிலையும் கூறாமல் திருப்பி அனுப்பியுள்ளார்.
அதேநேரத்தில், விஜயகாந்திற்கு நெருக்கமான வட்டாரங்களோ, 'முதல்வர் வேட்பாளர் என்ற நிபந்தனையை எந்தக் கூட்டணி ஏற்கிறதோ, அந்தக் கூட்டணியில் தான், விஜயகாந்த் சேருவார். அத்துடன், 100க்கும் மேற்பட்ட தொகுதிகளை பெறுவார்; இந்த நிபந்தனைகள் ஏற்கப்படும் வரை, மவுனமாகவே இருப்பார். தனக்குள்ள கிராக்கியை அவர் சாதகமாக்க நினைக்கிறார்' என, தெரிவித்துள்ளன.

இதற்கிடையில், சென்னை, தாயகத்தில் இன்று நடக்கும், ம.தி.மு.க., மாவட்ட செயலர்கள் கூட்டத்தில், விஜயகாந்த், த.மா.கா., தலைவர் வாசன் ஆகியோரை, மக்கள் நலக் கூட்டணியில் சேர்க்க, முக்கிய ஆலோசனை நடத்தப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

கூட்டணி பற்றி விஜயகாந்துடன் தொடர்ந்து பேசுவோம். அவர் எங்கள் கூட்டணியில் நீடிப்பார் என்ற நம்பிக்கை உள்ளது.
பொன்.ராதாகிருஷ்ணன், மத்திய இணை அமைச்சர் - பா.ஜ.,

மக்கள் நலக் கூட்டணிக்கு, விஜயகாந்த் வர வேண்டும் என விரும்புகிறோம்; அவர் வந்தால் வரவேற்போம்.
வைகோ, பொதுச் செயலர் - ம.தி.மு.க.,

நிவாரண பொருட்கள் திருட்டா? நிர்வாகிகளை விரட்டிய விஜயகாந்த்
தே.மு.தி.க., பொருளாளராக இளங்கோவன், கொள்கை பரப்பு செயலராக சந்திரகுமார் எம்.எல்.ஏ., தலைமை நிலைய செயலராக பார்த்தசாரதி எம்.எல்.ஏ., ஆகியோர் உள்ளனர். விஜயகாந்த், ரசிகர் மன்றம் துவங்கியது முதல், அவருடன் உள்ளனர். தே.மு.தி.க., - எம்.எல்.ஏ.,க்களை, அ.தி.மு.க., இழுத்த போதும், சந்திரகுமார், பார்த்தசாரதி ஆகியோர் அசரவில்லை; தொடர்ந்து விஜயகாந்துடனே உள்ளனர். இந்நிலையில், இவர்கள் மூவரையும், 'கட்சி அலுவலகத்திற்கு வரக்கூடாது' என, விஜயகாந்த் விரட்டியதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதுகுறித்து தே.மு.தி.க., வட்டாரங்கள் தெரிவித்ததாவது: வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ, மாநிலம் முழுவதும் இருந்து நிவாரணப் பொருட்கள், கட்சியின் தலைமை அலுவலகம் வருகின்றன. இவை, மக்களுக்கு வினியோகம் செய்யப்படுகின்றன. இதில், ஏராளமான பொருட்கள் சமீபத்தில் மாயமாகி விட்டன. இதுகுறித்து, மாநில நிர்வாகிகளான இவர்களிடம் விஜயகாந்த் விளக்கம் கேட்டுள்ளார். 'உங்களை நம்பித்தான், அலுவலகத்தை ஒப்படைத்துள்ளேன். நிவாரணப் பொருட்கள் உங்களுக்கு தெரியாமல் எப்படி வெளியே போகும். இதுபோன்று, கட்சி ஆவணங்கள், அலுவலக பொருட்கள் காணாமல் போனால் என்ன செய்வது. நிவாரணப் பொருட்களை எடுத்தது யார் என, கண்டுபிடிக்கும் வரை, கட்சி அலுவலகத்திற்கு வர வேண்டாம்' என, மூவரையும் விரட்டி உள்ளார். 'நிவாரணப் பொருட்களை எடுத்துச் செல்லும் அளவுக்கு, நாங்கள் கல்மனம் கொண்டவர்கள் இல்லை. எந்த பேரத்திற்கும் அடிபணியாமல் விசுவாசமாக இருக்கும் எங்களை சந்தேகப்படுவது நியாயமா; இதற்கு மேல் கட்சி அலுவலகம் வர எங்களுக்கும் இஷ்டம் இல்லை' என, மூவரும் கூறி சென்று விட்டனர்.இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
- நமது நிருபர் -  தினமலர்.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக