வியாழன், 17 டிசம்பர், 2015

ஜெயலலிதா போட்டோ ஷாப் செய்யாமல் ஒரு வீடியோவைக் கூட வெளியிட முடியாத நிலையில்தான்...சவுக்கு

பெருமழை வெள்ளம், தமிழகத்தை புரட்டிப் போட்டிருக்கிறதோ இல்லையோ, ஜெயலலிதாவையும் அதிமுகவையும் தலைகீழாக புரட்டிப் போட்டிருக்கிறது. எப்போதும் ஆணவமும் அதிகாரமும் கொண்டு பேசும் ஜெயலலிதா முதன் முதலாக “எனக்கென்று யாருமே கிடையாது” என்று கழிவிறக்கத்தோடு புலம்புகிறார்.   தலைமறைவான குற்றவாளி யுவராஜ் வாட்ஸப்பில் ஆடியோ வெளியிடுவது போல, வாட்ஸப்பில் ஆடியோ வெளியிட்டு அதில் “எனக்கு சுயநலமே கிடையாது” என்று பச்சையாக பொய்யை பரப்புகிறார். தமிழகமே வெள்ளத்தில் சிக்கித் தவித்தபோது போயஸ் தோட்டத்தில் ஓய்வெடுத்தவர், மக்கள் சாக்கடை நீரில் நீந்திக் கொண்டிருந்தபோது ஹெலிகாப்டரில் ஒய்யாரமாக பார்வையிட்டவர், “உங்கள் துன்பங்களை நான் சுமக்கிறேன்” என்று பசப்புகிறார்.    ஆட்சி செய்யவும், தமிழகத்தின் நலனை பேணவும் மக்கள் வாக்களித்தால், வருடத்தில் நான்கு முறை, கொடநாட்டில் ஓய்வெடுக்கும் கோமலவள்ளி, “என் இல்லமும் உள்ளமும் தமிழகம்தான்” என்று பொய்யுரைக்கிறார்.

1991 முதல், மன்னார்குடி மாபியா தமிழகத்தை அடித்த கொள்ளை நாடறியும்.    அந்தக் கொள்ளை சற்றும் குறையாமல், தற்போதும் ஆயிரக்கணக்கான கோடிகளுக்கு அந்த மன்னார்குடி குடும்பம் பல்வேறு தியேட்டர்களை வாங்கிக் குவித்த வண்ணம் இருக்கிறது.   மன்னார்குடி குடும்பம் நூற்றுக்கணக்கான புதிய நிறுவனங்களை தொடங்கி அந்த நிறுவனங்கள் பெயரில் சொத்துக்களை குவித்து வருவது குறித்து சவுக்கு தளம் உள்ளிட்ட பல்வேறு ஊடகங்கள் தொடர்ந்து செய்திகள் வெளியிட்டு வருகின்றன.   சசிகலா இளவரசி, சுதாகரன், சிவக்குமார், கார்த்திகேயன் என்று தற்போதும் மன்னார்குடி குடும்பம் வளைத்துச் சேகரிக்கும் சொத்துக்களின் பட்டியல்கள் வெளியானபடியே உள்ளன.
இந்தச் சொத்துக்களையெல்லாம்  அள்ளிக் குவிக்கும் இந்த மன்னார்குடி கும்பல் இன்றளவிலும் ஜெயலலிதாவோடு போயஸ் தோட்டத்திலேதான் வசித்து வருகிறது.   1996ல் ஒரு முறையும், டிசம்பர் 2011ல் ஒரு முறையும் இந்தக் கொள்ளைக் கூட்டத்தை வெளியேற்றிய ஜெயலலிதா, மீண்டும் இந்தக் கொள்ளைக் கூட்டத்தை போயஸ் தோட்டத்தில் அனுமதித்து, இந்தக் கொள்ளையை தொடரச் செய்து வருகிறார் என்பது அனைவரும் அறிந்ததே.  இப்படி இருக்கையில் எனக்கென்று யாருமே இல்லை என்று ஜெயலலிதா வடிக்கும் முதலைக் கண்ணீரை மக்கள் யாரும் நம்பத் தயாராக இல்லை.
மேலும் ஜெயலலிதா வாட்ஸப்பில் ஆடியோ வெளியிட்டுள்ளது ஒரு சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.   ஜெயா குழும தொலைக்காட்சிகள் ஜெயலலிதா கட்டுப்பாட்டிலேதான் உள்ளது.  அது தவிரவும், அவர் முதல்வர் என்பதால், அவருக்கு சொம்படிக்கும் கூடகங்களை உள்ளிட்ட அனைத்து ஊடகங்களும் அவர் உரையை வெளியிடும் என்பதில் சந்தேகம் இல்லை.  அப்படி இருக்கையில், மிக எளிதாக ஒரு வீடியோ பதிவை உருக்கமாக வெளியிட்டிருந்தால், அது மக்களை இன்னமும் அதிகமாக சென்றடைந்திருக்கும்.   ஆனால், அப்படிச் செய்யாமல், ஆடியோ பதிவாக வெளியிட்டது ஏன் என்று கேள்விகள் எழுகின்றன.  இதற்கு ஒரே விடை, வீடியோ பதிவில், அரசு செய்தித் துறை புகைப்படங்களில் செய்வது போல போட்டோ ஷாப் செய்ய முடியாது என்பதே காரணமாக இருக்க முடியும்.
இப்படி போட்டோ ஷாப் செய்யாமல், ஒரு வீடியோவைக் கூட வெளியிட முடியாத நிலையில்தான் ஜெயலலிதா இருக்கிறார்.   வெள்ளத்தை பார்வையிட பிரதமர் ஹெலிகாப்டரில் வருகை தருகிறார் என்ற தகவல் வராமல் இருந்திருந்தால், ஜெயலலிதா நிச்சயமாக வெள்ளத்தை பார்வையிட வந்திருக்கவே மாட்டார்.  அந்த அளவுக்கு எதிலும் ஆர்வமில்லாமல், சொத்துக் குவிப்பு வழக்கின் அடுத்த கட்டத்தை நினைத்து மன உளைச்சலில் இருக்கிறார்.   ஒரு மணி நேரம் தலைமைச் செயலகத்தில் செலவிட்டு அலுவலகப் பணிகளை தினந்தோறும் பார்க்க முடியாத ஒரு நபருக்கு, வரலாறு காணாத வெள்ளத்தில் மக்களை சந்திக்க முடியாத ஒரு நபருக்கு, பத்திரிக்கையாளர்களை சந்திக்க திராணியில்லாத ஒரு நபருக்கு,  மீண்டும் முதல்வராக வேண்டும் என்ற ஆசை மட்டும் எதற்கு என்பதுதான் புரியவில்லை.    மீண்டும் ஆயிரக்கணக்கான கோடிகளை கொள்ளையடிப்பதற்பதைத் தவிர்த்து வேறு என்ன காரணம் இருக்க முடியும் ?
செம்பரம்பாக்கம் ஏரியை டிசம்பர் 1 அன்று இரவு திறந்து  விட்டதன் காரணமாகவே சென்னை தத்தளித்தது என்ற உண்மை சமூக வலைத்தளங்கள் மற்றும் நேர்மையான சில ஊடகங்கள்  மூலமாக அனைவரிடத்திலும் பரவியதையடுத்து, வேறு வழியேயின்றி, மங்குணி அரசியின் லகுடபாண்டியான தலைமைச் செயலாளர் ஞானதேசிகனை வைத்து ஒரு நீண்ட விளக்க அறிக்கையை அளித்துள்ளார்.
K__Gnanadesikan_2230438e
அணையைத் திறந்து விடுவதற்கு யாருடைய அனுமதியும் தேவையில்லை.   சம்பந்தப்பட்ட அதிகாரிகளே திறந்து விடுவார்கள் என்பது எவ்வளவு பெரிய பொய் என்பதை கடந்த நாண்காண்டுகளாக வெளியிடப்பட்டுள்ள தமிழக அரசின் செய்திக் குறிப்பை பார்த்தாலே தெரியும்.   “மாண்புமிகு தமிழக முதல்வர் அம்மாவின் ஆணைக்கிணங்க” என்ற வார்த்தைகள் இல்லாமல் ஒரே ஒரு செய்திக் குறிப்பு கூட வெளியானது கிடையாது.   இப்படி ஒரு நிலையில், எந்த அதிகாரிக்கு தன்னிச்சையாக ஏரியைத் திறந்து விட துணிவு வரும் ?
தமிழக பொதுப்பணித்துறையின் விதிகளின் படி, ஏரிகள் மற்றும் அணைகளைத் திறந்து விடுவதற்கான அதிகாரம், பொதுப் பணித் துறையின் தலைமைப் பொறியாளர் வசம் உள்ளது.   ஆனால் 2011ல் அதிமுக ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு, நடைமுறையில் தலைமைப் பொறியாளர் உத்தரவு பிறப்பித்ததே கிடையாது.  அனைத்தும் மாண்புமிகு அம்மாவின் ஆணைதான்.
29 நவம்பர் 2015 அன்று, செம்பரம்பாக்கம் ஏரியைத் திறந்து விட அனுமதி கோரி பொதுப்பணித் துறை தலைமைச் செயலருக்கு கடிதம் எழுதியதாகவும், ஆனால், யாருடைய உத்தரவுக்காகவோ காத்திருந்த தலைமைச் செயலாளர் டிசம்பர் 1 இரவு வரை அனுமதி அளிக்கவில்லை என்றும் ஆங்கில ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.    வழக்கமாக இப்படி ஒரு செய்தி வெளியிட்டால், தமிழக அரசு உடனடியாக எடுக்கும் நடவடிக்கை அவதூறு வழக்கு பதிவு செய்வதே.   ஆனால், இந்தச் செய்திகள் தொடர்ச்சியாக வெளி வந்து பல நாட்கள் ஆகியும், எந்த ஊடகத்தின் மீதும் அவதூறு வழக்கு பதிவு செய்யப்படவில்லை.    200க்கும் மேற்பட்ட அவதூறு வழக்குகளை பதிவு செய்த தமிழக அரசுக்கு, கூடுதலாக ஒன்றிரண்டு வழக்குகள் பதிவு செய்வது ஒன்றும் சிரமமே அல்ல.   ஆனால், அவ்வாறு செய்யாமல், பத்து நாட்கள் கழித்து லகுடபாண்டியை வைத்து விளக்கம் அளித்திருப்பதே இதில் உள்ள உண்மைக்கு சான்று.
லகுடபாண்டியின்  விளக்க அறிக்கையின்படியே, நவம்பர் 17 அன்று செம்பரம்பாக்கம் ஏரியில் நீர் மட்டம் 22.3 அடியாக இருந்தபோது 18 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டது என்று கூறப்பட்டுள்ளது.   நவம்பர் 30 அன்று ஏரியின் நீர் மட்டம் 22.05 என்றும், அப்போது 800 கன அடி நீர் வெளியேற்றப்பட்டது என்றும் குறிப்பிடுகிறார்.   அடுத்த இரு நாட்களில் கன மழை பெய்யும் என்று வானிலை மையங்கள் குறிப்பிட்டும், வெளிநாட்டு வானிலை ஆய்வு மையங்கள் 50 சென்டி மீட்டர் மழை என்று குறிப்பிட்டிருந்தும், நவம்பர் 30 அன்று வெறும் 800 கன அடி நீரை வெளியேற்றியது பச்சை அயோக்கியத்தனமா இல்லையா ?
எத்தனையோ  எச்சரிக்கைகள் இருந்தும், தமிழக அரசின் தவறான நடவடிக்கையினால்தான் சென்னை நகரம் மூழ்க நேர்ந்தது என்பது அப்பட்டமாக தெரிய வந்துள்ளது.
இதற்கு பொறுப்பாக்கப் படுவது யார் என்பதுதான் தற்போது எழும் கேள்வி.   நவம்பர் 2011ல், டேம் 999 என்ற திரைப்படம் கேரளாவில் வெளியானது.     முல்லைப் பெரியாறு அணை குறித்து அத்திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது.  அணை உடைவது போல காண்பித்தால், இரு மாநில மக்களுக்கிடையே பகையுணர்வு உருவாகும்.  அதனால் திரைப்படத்தை தடை செய்கிறோம் என்று உத்தரவிட்டுள்ளது.  இந்தத் தடையை நியாயப்படுத்தி உச்சநீதிமன்றம் வரை சென்றது தமிழக அரசு.
சென்னை பத்மா சேஷாத்ரி பள்ளியின் நீச்சல் குளத்தில், ஒரு சிறுவன் தவறுதலாக விழுந்து இறந்து விட்டான்.   அது விபத்துதான் என்றாலும், பள்ளித் தாளாளர் மீதும், சம்பந்தப்பட்டவர்கள் மீதும் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது.   பத்மா சேஷாத்ரி பள்ளி நிர்வாகத்தின் பார்ப்பன செல்வாக்கு காரணமாக அப்போது கைது செய்யப்பட்டவர்கள், கைது செய்யப்பட்ட அன்றே விடுவிக்கப்பட்டனர்.
ஜேப்பியார் பொறியியல் கல்லூரி வளாகத்தில் நடந்த கட்டுமானப் பணிகளின்போது, நடந்த இடிபாட்டில் 10 கட்டுமானத் தொழிலாளர்கள் மரணமடைந்தனர்.   இதையொட்டி சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரர் மீது வழக்கு பதிவு செய்ததோடு, ஜேப்பியார் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டு அவர் 15 நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டார்.  பின்னாளில் 25 கோடி மன்னார்குடி மாபியாவுக்கு செலவு செய்து, சிறையிலிருந்து வெளியேறினார் ஜேப்பியார்.
இந்த இரண்டு வழக்குகளுக்கும் செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து டிசம்பர் 1 அன்று இரவு முன்னறிவிப்பின்றி 29 ஆயிரம் கன அடி நீரை திறந்து விட்டதற்கும் என்ன வேறுபாடு ?  முந்தைய இரு வழக்குகளையும் விட, இது இன்னமும் தீவிரமானது.
பொதுப்பணித் துறை ஏரியை திறந்து விடலாம் என்று 29ம் தேதியே கடிதம் எழுதியும், கடுமையான மழை பெய்யும் என்று சர்வதேச வானிலை மையங்கள் எச்சரிக்கை விடுத்திருந்தும், டிசம்பர் 1 அன்று இரவு 10 மணி வரை காத்திருந்து திடீரென்று 29 ஆயிரம் கன அடியை திறந்து விட்டதற்கு ஒரே பொறுப்பு லகுடபாண்டி ஞானதேசிகன் மட்டுமே.    ஒரு அரசில் தலைமைச் செயலாளர் பதவிக்கு முதலமைச்சரை விட கூடுதலான பொறுப்பு உண்டு.  ஒரு மாநிலத்தின் அனைத்து ஐஏஎஸ் அதிகாரிகளுக்கும் அவரே தலைவர்.   ஒரு நிர்வாகத்தின் தலைவராக கருதப்படுவது தலைமைச் செயலாளரின் பதவி மட்டுமே.   உச்சநீதிமன்ற உத்தரவாகட்டும், மத்திய அரசின் கடிதங்களாகட்டும், அனைத்தும், தலைமைச் செயலாளருக்கே வரும்.    அந்த வகையில் நிர்வாகத் தலைமையாக இருக்கும் ஞானதேசிகன், முதலமைச்சரை கலந்தாலோசித்தோ, ஆலோசிக்காமலேயோ செம்பரம்பாக்கம் ஏரி திறப்பு குறித்து உரிய நேரத்தில் முடிவெடுத்திருந்தால், பல நூற்றுக்கணக்கான உயிர்ச்சேதங்கள் தவிர்க்கப்பட்டிருப்பதோடு, பல கோடிக்கணக்கான பொருள் இழப்பும் தவிர்க்கப்பட்டிருக்கும்.
மாண்புமிகு தமிழக முதல்வர் அம்மா அவர்களை கேட்காமல் ஏரியைத் திறக்க உத்தரவிட்டிருந்தால் அதிகபட்சம் என்ன நடந்திருக்கும் ?    யாரைக் கேட்டு எரி திறக்கப்பட்டது என்று கோபப்பட்டு, மீசை நட்ராஜ் ஐபிஎஸ் அதிமுகவை விட்டு நீக்கப்பட்டது போல, ஞானதேசிகனும், அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டிருப்பார்.  மன்னிக்கவும்.  தலைமைச் செயலர் பதவியிலிருந்து நீக்கப்பட்டிருப்பார்.  அவ்வளவுதானே ?  தூக்கிலா போடப்பட்டிருப்பார் ?
tneb
ஆனால், கேவலம் தன் தலைமைச் செயலாளர் பதவியை காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக, செம்பரம்பாக்கம் ஏரி உடையும் நிலை வரை தாமதித்து, மிகத் தாமதமாக திறக்க உத்தரவிட்டு, லட்சக்கணக்கான உயிர்களை ஆபத்துக்குள்ளாக்கிய பதவி வெறி பிடித்த ஞானதேசிகனை கழுவில் ஏற்ற வேண்டுமா வேண்டாமா ?     தற்போது தமிழக மின் வாரியம் ஒரு லட்சத்து 20 ஆயிரம் கோடிக்கும் அதிகமான கடனில் மூழ்கி இருப்பதற்கும் ஒரே காரணம் இந்த லகுட பாண்டி மட்டுமே.
இப்படிப்பட்ட இந்த அதிகாரி மீது இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு 304ன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட வேண்டுமா வேண்டாமா ?
தவறான நேரத்தில் செம்பரம்பாக்கம் ஏரியை திறப்புக்கு காரணமான தலைமைச் செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகள் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில், பொது நல வழக்கு தாக்கல் செய்யப்பட்டு அது விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.  சென்னை உயர்நீதிமன்றம் தமிழக அரசை பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை தள்ளி வைத்துள்ளது.
மங்குணி அரசியும், லகுடபாண்டியும் கோடிக்கணக்கில் ஊழல் செய்து கொள்ளையடிப்பது ஒரு புறம் இருக்கட்டும்.   இப்படி கோடிக்கணக்கான மக்களின் உயிரோடு விளையாடும் இவர்கள் தமிழகத்துக்கு எவ்வளவு ஆபத்தானவர்கள் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
கொலைமேற்கொண் டாரிற் கொடிதே அலைமேற்கொண்டு
அல்லவை செய்தொழுகும் வேந்து.
அறவழி மீறிக் குடிமக்களைத் துன்புறுத்தும் அரசு, கொலையைத் தொழிலாகக் கொண்டவரைவிடக் கொடியதாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக