வியாழன், 17 டிசம்பர், 2015

ராமதாஸ்: கொலைகாரனே கொலைசெய்யப்பட்ட வீட்டாரிடம் ஆறுதல் கூறுவதுபோல ஜெயலலிதாவின் வாட்ஸப்..

சென்னை: சென்னை உள்ளிட்ட மாவட்டங்கள் வெள்ளத்தில் தத்தளித்து, மெல்ல மீண்டு வரும் நிலையில், இரு வாரங்களுக்கு பின், முதல்வர் ஜெயலலிதா, 'வாட்ஸ் ஆப்' மூலம் மக்களிடம் பேசி உள்ளார். உருக்கமும், உறுதியும் நிறைந்த அவரது உரையும், அதற்கு, தி.மு.க., - பா.ம.க., போன்ற எதிர்க்கட்சிகள் எழுப்பிய கண்டன குரலும், இங்கே பதிவு செய்யப்படுகின்றன.பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் அறிக்கை:
வெள்ளத்தில் சிக்கி, அனைத்தையும் இழந்து, மக்கள் தவித்துக் கொண்டிருக்கும் நிலையில், 15 நாட்களாக அவர்களை எட்டிக்கூட பார்க்காத ஜெயலலிதா, இப்போது, வாட்ஸ் ஆப் மூலம், அவர்களின் துயரத்தை நினைத்து, வருத்தம் தெரிவித்திருக்கிறார்.ஜெயலலிதாவின் ஆறுதலை கேட்கும் போது, துக்க வீட்டில், கொலைகாரன் வந்து ஆறுதல் கூறும்போது என்ன உணர்வு ஏற்படுமோ, அதே உணர்வு தான் ஏற்படுகிறது.
துன்பத்தில் இருந்து, மக்களை அவர் மீட்பது இருக்கட்டும். இந்த துன்பத்தை ஏற்படுத்தியவரே அவர் தான், என்பதை ஒப்புக் கொள்வதில், தயக்கம் ஏன்?
னையில் மழை இல்லாத நாட்களில், செம்பரம்பாக்கம் ஏரி தண்ணீரை திறந்து விட்டால், அதிக மழை பெய்யும் போது வெள்ளம் ஏற்படாமல் தடுக்கலாம் என, அனுமதி கோரி, பொதுப்பணித் துறை பொறியாளர்கள் அனுப்பிய கோப்பின் மீது, நான்கு நாட்களாக முடிவு எடுக்காமல், முதல்வரும், தலைமைச் செயலரும் செய்த தாமதத்தால் தானே இரவு நேரத்தில் வினாடிக்கு, 34 ஆயிரம் கன அடி நீரை திறக்கும் நிலை ஏற்பட்டது. அதனால், சென்னையில் வெள்ளம் ஏற்பட்டது. இதற்கு, ஜெயலலிதா தானே பொறுப்பேற்க வேண்டும்.இச்சிக்கலில் குற்றவாளி என்ற நிலையில் இருந்து தப்ப, 'நல்ல மீட்பர்' வேடம் போடும் ஜெயலலிதாவிடம், தமிழக மக்கள் ஏமாற மாட்டார்கள். தமிழக மக்களை, எந்த அளவுக்கு முட்டாள்களாக அவர் நினைக்கிறார் என்பதற்கு, இது உதாரணம்.

சென்னையில் வெள்ளம் ஏற்பட்டு 15 நாட்களாகி விட்ட நிலையில், பல பகுதிகளில் இன்னும் வெள்ளம் வடியவில்லை. இது தான் போர்க்கால அடிப்படையில், பணிகள் மேற்கொள்ளப்படும் அழகா?சென்னை, காஞ்சி, திருவள்ளூர், கடலுார் ஆகிய, 4 மாவட்டங்களையும், நவ., 8ம் தேதி முதல், 40 நாட்களாக மழை ஆட்டிப் படைத்தது. 'உங்களுக்காக நான்; உங்களோடு நான்' என்று கூறும் ஜெயலலிதா, ஒரு நாளாவது பாதிக்கப்பட்ட மக்களை, நேரில் சந்தித்து ஆறுதல் கூறியிருப்பாரா?

கோடிக்கும் அதிகமான மக்கள், வெள்ளத்தில் தவித்த போதும், பசியில் துடித்த போதும், உறவுகளை பலி கொடுத்து கதறிய போதும், எட்டிக்கூட பார்க்காமல், போயஸ் தோட்டத்தில் ஓய்வெடுத்த ஜெயலலிதா, இப்போது திடீரென, வாட்ஸ் ஆப் வசனம் பேசி ஏமாற்ற முயன்றால், ஏமாறுவதற்கு, தமிழக மக்கள், 50 ஆண்டுகளாக திராவிடக் கட்சிகளை மாற்றி மாற்றி ஆட்சியில் அமர்த்தி, ஓய்ந்து போன வாக்காளர்கள் அல்ல. அடுத்த தேர்தலில், புரட்சி படைப்பதற்காக புதுத் தெளிவு பெற்றுள்ள வாக்காளர்கள். அவர்கள், இனி நடிப்புக்கு மயங்க மாட்டார்கள்.

தம்மை இயேசு நாதராகவே நினைத்துக் கொண்டு, வசனங்களை வாரி இறைத்திருக்கிறார் ஜெயலலிதா. இன்னும் எத்தனை நாட்களுக்குத் தான், இப்படியே வசனம் பேசியும், 'கிளசரின்' போடாமல் கண்ணீர் வடித்தும், மக்களை ஏமாற்றி விடலாம் என, ஜெயலலிதா நினைக்கிறார் என தெரியவில்லை. மக்கள் மீதான அனைத்து துன்பங்களையும், சுமத்துபவர் ஜெயலலிதா என்பது தான் உண்மை.'தமக்கென்று தனி வாழ்க்கை கிடையாது' என்றால், கோடநாட்டில் 898 ஏக்கரில் மாளிகை; சிறுதாவூரில் 25.4 ஏக்கரில் பண்ணை வீடு; பையனுாரில்

3 ஏக்கரில் பண்ணை வீடு; கன்னியாகுமரி மாவட்டத்தில் 1,190 ஏக்கர் நிலம்; துாத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டத்தில் 1,167 ஏக்கர் நிலம்; காஞ்சிபுரத்தில் 300 ஏக்கர் நிலம்; முதல் 5 ஆண்டு ஆட்சியில் குவித்த, 23 கிலோ நகைகள் எதற்காக?மக்கள் குடியை கெடுத்து, வருவாயை கொட்டும், 'மிடாஸ்' உள்ளிட்ட, 44 பினாமி நிறுவனங்கள் எதற்காக? ஜெயலலிதாவுக்கு உறவினர்கள் கிடையாதாம். அப்படியானால், போயஸ் தோட்டத்தில் முகாமிட்டு, ஒட்டுமொத்த தமிழகத்தையும், ஆட்டிப்படைப்பவர்கள் யார்? 44 நிறுவனங்களை நிர்வகிப்போர் யார்; ஆட்சியைப் பயன்படுத்தி, கொள்ளையடித்த பணத்தில், திரையரங்குகளை வாங்கிக் குவிப்பவர்கள் யார் என்பதற்கு, முதல்வர் ஜெயலலிதா விளக்கம் அளித்தால், சிறப்பாக இருக்கும்.

'எனக்கு எல்லாமும், நீங்கள் தான்' என்பதற்கு பதிலாக, 'உங்களுடையது எல்லாமும், என்னுடையது தான்' என கூறியிருந்தால், பொருத்தமாக இருந்திருக்கும். அதேபோல், 'என் இல்லமும், உள்ளமும் தமிழகம் தான்' என்பதற்கு பதிலாக, 'ஒட்டுமொத்த தமிழகத்தையும் வளைத்து போட்டு விட்டதால், தமிழகமே எனது இல்லம் தான்' என, ஜெயலலிதா பதிலளித்திருந்தால், சாலச்சிறந்ததாக இருந்திருக்கும்.தமிழக மக்கள், தம்மை, 'அம்மா' என்று அழைப்பதாக, ஜெயலலிதா கூறுவதைப் பார்க்கும் போது, அவர் மாயையில் வாழ்வதை உணர முடிகிறது.

எந்த தமிழனும் தாயைத் தவிர, வேறு யாரையும், 'அம்மா' என்று அழைக்க மாட்டான். அம்மா என்பதை, தனது வணிகப்பெயராக மாற்ற ஜெயலலிதா முயன்றார். இதற்காக, மதுக்கடை தவிர மற்ற அனைத்துக் கடைகளுக்கும், 'அம்மா' என்ற பெயரைச் சூட்டினார்.அதே போல் ஜெயலலிதா, தங்கள் துயர் துடைக்க வேண்டும் என்று எவரும் எதிர்பார்க்கவில்லை. மாறாக, இனியும் செயற்கைப் பேரிடரை ஏற்படுத்தி, உயிரை எடுக்காமல் இருந்தால் போதும் என்று தான், மக்கள் கருதுகின்றனர்.

முதல்வர் என்பவர், படைத்தளபதி; போரில் படையை வழி நடத்திச் செல்வதைப் போல, நெருக்கடியான நேரத்தில், மக்களை வழிநடத்திச் செல்ல வேண்டும்.
முதல்வர் என்பவர் பலம் வாய்ந்த கழுகை எதிர்த்து போராடி, குஞ்சுகளைக் காக்கும், கோழியைப் போல இருக்க வேண்டும். ஆனால், ஜெயலலிதா அப்படிப்பட்டவர் அல்ல. மாறாக, நெருக்கடியான நேரங்களில், மக்களை ஆபத்தில் சிக்க விட்டு, தப்பித்துக் கொள்ளும், சுயநலப் பிறவியாகவே இருக்கிறார் என்பதற்கு ஏராளமான உதாரணங்களை கூற முடியும்.முதல்வர் என்பவர், காட்சிக்கு எளியவராய், மக்கள் நினைத்த நேரத்தில் சந்திக்கக் கூடியவராக இருக்க வேண்டும். ஆனால், ஒரு நாளைக்கு, 23 மணி நேரம் ஓய்வெடுக்கும் முதல்வரை சுற்றி, உடன்பிறவா சகோதரி மற்றும் அவரது உறவினர்கள் ஓர் அடுக்கு; ஓய்வுபெற்ற பிறகும், பதவியில் இருக்க வேண்டும் என்பதற்காக, நியமிக்கப்பட்ட ஆலோசகர்கள் அடுத்த அடுக்கு; தலைமைச் செயலர் மற்றும் முதல்வரின் செயலர்கள் உள்ளிட்ட அதிகாரிகள், இன்னொரு அடுக்கு என, மூன்று அடுக்குகள் சூழ்ந்திருக்கின்றன.

'இவர்கள் தான் உலகம்; இவர்கள் சொல்வதே வேதம்' என்று தான் முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்து கொண்டிருக்கிறார். இவர்களைத் தவிர, வேறு எவரும் அவரை அணுக முடியாது. அப்படி இருக்கும் போது, வழக்கமான வசனங்களைப் பேசி, மக்களை ஏமாற்ற முயல்வது, வீண் வேலை. வரும் தேர்தலில், மக்கள் தங்களின் கோபத்தை காட்டுவர்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஜெயலலிதா வாட்ஸ் ஆப் வாயிலாக கூறியதாவது:நுாறு ஆண்டுகள் கண்டிராத மிகப் பெரும் தொடர் மழை ஏற்படுத்திய வெள்ள சேதங்களால், நீங்கள் அடைந்துள்ள துயரத்தை நினைத்து நான் வருந்துகிறேன்; கவலை வேண்டாம். இது உங்கள் அரசு; எதையும் எதிர்கொண்டு வெல்லும் சக்தியை எனக்கு நீங்கள் அளித்திருக்கிறீர்கள்.உங்களுக்காக நான் உங்களோடு எப்போதும் இருக்கிறேன். விரைவில் இப்பெரும் துன்பத்தில் இருந்து உங்களை மீட்டு புது மலர்ச்சியும், எழுச்சியும் அடையச் செய்வேன்; இது உறுதி.போர்க்கால அடிப்படையில் மீட்பு பணிகளையும், நிவாரண பணிகளையும், புனரமைப்பு பணிகளையும் முழு வீச்சில் முடுக்கி விட்டிருக்கிறேன். அமைச்சர்கள், அரசு அலுவலர்கள், காவல் துறையினர், தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர், முப்படையினர், தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்பு படையினர்,
தன்னார்வ தொண்டர்கள் என, எல்லாரும், அயராது தோளோடு தோள் சேர்த்து, உங்களுடன் கடுமையாக உழைத்தனர்.உங்களுக்கு வரும் துன்பங்களை எல்லாம் நானே சுமக்கிறேன். எனக்கென்று தனி வாழ்க்கை கிடையாது; எனக்கென்று உறவினர் கிடையாது; எனக்கு சுயநலம், அறவே கிடையாது. எனக்கு எல்லாமும் நீங்கள் தான்; என் இல்லமும், உள்ளமும் தமிழகம் தான்.என் பெற்றோர் வைத்த 'ஜெயலலிதா' என்ற பெயரே, மறந்து போகும் அளவுக்கு நீங்கள் அழைக்கிற, 'அம்மா' என்கிற ஒரு சொல்லுக்காகவே என் வாழ்நாட்களை உங்களுக்காக அர்ப்பணித்து உழைத்துக் கொண்டிருக்கிறேன். இந்த அரசு இயற்கை பேரிடர்களை வெற்றி கொள்வதில் எப்போதும் பெயர் பெற்ற அரசு என்பதை மீண்டும் ஒரு முறை நிலைநாட்டுவேன்.எத்துயர்வரினும் அதையும் இத்தாயின் கரங்கள் துடைக்கும் என்ற நம்பிக்கையோடு இருங்கள்; நன்றி. இவ்வாறு ஜெ., கூறி உள்ளார்.


சினிமா வசனம்!

தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின் பேட்டி:செம்பரம்பாக்கம் ஏரியை திறந்தது தொடர்பாக சரியான விளக்கத்தை ஜெயலலிதாவால் சொல்ல முடியவில்லை. அதனால் தலைமை செயலரை விட்டு முரண்பாடுகளுடன் அறிக்கை விட வைத்துள்ளார். பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்காத ஜெயலலிதா, அதையெல்லாம் மறைத்து இன்றைக்கு 'மக்களுக்காக நான், மக்களால் நான்' என, சொல்லி கொண்டிருக்கிறார். மக்கள், கடும் கோபத்தில் இருப்பதை அறிந்து சினிமாவில் வசனம் பேசுவது போல, 'வாட்ஸ் ஆப்'பிலும் வசனம் பேசியுள்ளார்.இவ்வாறு அவர் கூறினார்.  தினமலர்.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக