புதன், 30 டிசம்பர், 2015

தமிழ்நாடு திவால் நிலையை நோக்கி போகிறது .....தலைக்கு 28 ஆயிரத்து 778 ரூபாய் கடன் சுமை

தமிழகத்தின் கடன் எவ்வளவு என்பதை ஆண்டு வாரியாகப் பார்த்தால் - 2010-2011இல் 91,050 கோடி ரூபாய் - 2011-2012இல் 1,03,999 கோடி ரூபாய் - 2012-2013இல் 1,20,205 கோடி ரூபாய் - 2013-2014இல் 1,40,042 கோடி ரூபாய் - 2014-2015இல் 1,78,171 கோடி ரூபாய் - 2015-2016இல் 2,11,483 கோடி ரூபாய் என்று அ.தி.மு.க. ஆட்சியில் கடனை வெகுவாகப் பெருக்கி யிருக்கிறார்கள் என்று நானல்ல, “டைம்ஸ் ஆப் இந்தியா” ஆங்கில நாளேடு எழுதியது. அதாவது தி.மு. கழக ஆட்சியில் இருந்ததை விட, அ.தி.மு.க. ஆட்சியில் கடன் சுமார் 200 சதவிகிதத்திற்கு மேல் அதிகரித்துள்ளது.
திவாலாகும் தமிழ்நாடு” என்ற தலைப்பில் “தினகரன்” நாளேட்டில் ஒரு செய்திக் கட்டுரை வந்துள்ளது.  அதைப் படித்ததால், ஜெயலலிதா ஆட்சியின் ஐந்தாண்டு கால முடிவில் தமிழக அரசின் கடன் சுமையும், நிதி நிலையும் எவ்வாறு உள்ளன என்பதை நீயும் அறிந்து,  மற்றவர்களுக்கும் விளக்க வேண்டுமென்பதற்காகச் சில புள்ளி விவரங்களைத் தந்திட விரும்புகிறேன். ஜெயலலிதாவின் ஐந்தாண்டு கால ஆட்சி முடியப்போகிறது. சட்டப்பேரவைக்கான பொதுத் தேர்தலும் நெருங்கிக் கொண்டிருக்கின்றது.  இப்போதுள்ள நிலைமையில் மின் வாரியக் கடன்களைச் சேர்க்காமல், தமிழக அரசுக்கு உள்ள  மொத்தக் கடன்  2 இலட்சத்து 11 ஆயிரத்து 483 கோடி ரூபாயாகும்.  அதாவது  தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொருவருடைய  தலையிலும், 28 ஆயிரத்து 778 ரூபாய் கடன் சுமை இருக்கிறது.
அ.தி.மு.க. ஆட்சியில் சுமார் ஒன்றரை இலட்சம் கோடி ரூபாய் கடன் ஏற்கனவே இருந்ததை விடக் கூடுதலாகி இருக்கின்றது.இன்னும் குறிப்பாகச் சொல்ல வேண்டுமே யானால் ஜெயலலிதா ஏற்கனவே 2001-2006 ஆண்டுகளில் ஆட்சியிலே இருந்தபோது மாநில மொத்த உற்பத்தி மதிப்பில் 22.29 சதவிகிதம் அளவிற்கு கடன் சுமை வைத்திருந்தார். 2006-2011 தி.மு. கழக ஆட்சியில் கடன் சுமை மாநிலத்தின் மொத்த உற்பத்தி மதிப்பில் 19.58 சதவிகிதமாகக் குறைந்தது.

தி.மு. கழக அரசின் மீது இந்தியாவின் நிதி அமைச்சராக அப்போதிருந்த   பிரணாப் முகர்ஜி அவர்கள் 9-4-2011 அன்று சென்னையிலே கூறும்போது, “இந்தியாவில் நிதி ஒழுங்கையும், நிலைத்தன் மையையும் திருப்திகரமாகக் கடைப் பிடித்துவரும் ஒரு சில மாநிலங்களுள்  தமிழகமும் ஒன்றாகும்.
தமிழக அரசின் கடன் அளவு, பரிந் துரைக்கப்பட்ட அளவை விட மிகவும் குறைவாகவே உள்ளது.  இந்திய ரிசர்வ் வங்கியிலிருந்து  ஒரு நாள் கூட தன் கணக்கில் பணம் இல்லாமல், கூடுதல் வரைவுத் தொகையை - ஓவர்-டிராப்ட்டை தமிழக அரசு பெற்றதில்லை” என்று கழக அரசின்  சிறப்பான நிதி மேலாண்மை குறித்துப் பாராட்டிச் சொல்லியிருந்தார்.  ஆனால் இன்றைய அ.தி.மு.க. ஆட்சியின் நிலை குறித்து ஆங்கில நாளேடுகள் எல்லாம் சொல்வது என்ன?  

2011-ஆம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்த  பத்து மாத காலத்தில் பால் விலை உயர்வு, பேருந்துக் கட்டண உயர்வு ஆகியவற்றைத் தொடர்ந்து மின் கட்டண உயர்வினை ஒரேயடியாக 37 சதவிகித அளவிற்கு உயர்த்தி அறிவித்தார்கள்.   

2001ஆம் ஆண்டு ஜெயலலிதா முதல் அமைச் சராக வந்தபோதும், 1-12-2001 முதல் மின் கட்டணங்களை உயர்த்தினார். மீண்டும் 15-3-2003 அன்றும் 1398 கோடி ரூபாய்க்கு மின் கட்டண உயர்வுகளைச் செய்தார். அன்றையதினம் தான்  தி.மு. கழக ஆட்சியில் வழங்கப்பட்ட விவசாயம் மற்றும் குடிசைகளுக்கான இலவச மின்சாரத்தை ரத்து செய்து அறிவித்தார். வீடுகளுக்கான மின் கட்டணத்தை 22.13 சதவிகிதமும், கல்வி நிலையங் களுக்கு  16.61 சதவிகிதமும் உயர்த்தினார்.   

அப்படியும் தமிழ்நாட்டில் நிதி நிலைமை எவ்வாறு உள்ளது?   
“இந்து” வெளியிட்டுள்ள செய்தியில், “It’s Official and out in the open. The State Government’s financial health is quite bad.  It was revealed in an innocuous statement by Chief Minister, O. Panner selvam” அதாவது “அது அலுவல் சம்மந்தப்பட்டது; ஆனாலும் வெளியே வந்து விட்டது. மாநில அரசின் நிதி நிலைமை மிக மோசமாக உள்ளது” என்று எழுதப் பட்டிருந்தது.   

13-2-2014 அன்று அன்றைய முதலமைச்சரும், இன்றைய நிதியமைச்சருமான ஓ.பன்னீர் செல்வம் பேரவையில் படித்த நிதி நிலை அறிக்கையில் பக்கம் 68இல், “2014-2015ஆம் ஆண்டில் வருவாய் உபரி 289.36 கோடி ரூபாயாக இருக்கும்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.  ஆனால் அவருடைய இந்தக் கணிப்பு தவறாகி விட்டது.  இந்த நிதியாண்டின் முதல் ஆறு மாத நிறைவில், தமிழ்நாடு அரசின் வருவாய்ப் பற்றாக்குறை 7,652 கோடி ரூபாயாக இருப்பதாக “இந்து” பத்திரிகை தெரிவித்தது.  

அரசின் வரி வருவாய், மொத்த வருவாயில் மூன்றில் இரண்டு பங்கிற்கும் அதிகமாக இருப்பது வழக்கம். ஆனால் எதிர்பார்த்த அளவுக்கு வருவாய் வரவில்லை என்பது 2014ஆம் ஆண்டின் ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான அரசின்  செயல்பாடுகளைப் பார்த்தபோது தெரிய வந்தது. 91 ஆயிரத்து  835 கோடி ரூபாய் மாநில அரசின் சொந்த வரி வருவாயாகக் கிடைக்க வேண்டுமென்று மதிப்பிடப்பட்டதற்கு மாறாக, 37ஆயிரத்து 56 கோடி ரூபாய் மட்டுமே அந்தக் காலகட்டத்தில் கிடைத்துள்ளது.  மாநில அரசின் வரி வருவாயில் உள்ள பல்வேறு இனங் களின் புள்ளி விவரங்களைப் பார்க்கும் போது, எந்தத் துறையும் எதிர்பார்த்த அளவுக்கு வருவாயை ஈட்ட வில்லை என்பதை அறியலாம்.  எதிர்பார்க்கப்பட்ட மாநில அரசின் வருவாய் 20.3 சதவிகித மென்றால், வந்திருப்பது 14.6 சதவிகிதம்தான்; மத்திய வரி மற்றும் மத்திய அரசின் ஒதுக்கீடு மூலமாக 49 சதவிகித வருவாய் கிடைக்குமென்று எதிர்பார்த்த தற்கு மாறாக, 37.68 சதவிகிதம்தான் வரவு வந்துள்ளது.    

“The early signs of the declining financial health were visible  even during the previous year (2013-2014) when the State registered a revenue deficit of about Rs. 1,790 crore, as per supplementary accounts.   The revenue deficit came after two successive years of revenue surplus” (சென்ற ஆண்டே, அதாவது  2013-2014 நிதியாண்டிலேயே 1,790 கோடி ரூபாய் அளவுக்கு மாநிலத்தில் வருவாய்ப் பற்றாக்குறை ஏற்பட்ட போதே தமிழக நிதி நிலை மோசமாகிக் கொண்டு வருவதற் கான அறிகுறிகள் வெளிப்படையாகத் தெரிந்தன. இரண்டாண்டுகள் தொடர்ந்து வருவாய் உபரி ஏற்பட்ட தற்குப் பிறகு, வருவாய்ப்  பற்றாக்குறை ஏற்பட்டுள் ளது) என்று அ.தி.மு.க. அரசின் நிதி நிலையை “இந்து” நாளேடு அப்போதே தோலுரித்துக் காட்டி யிருந்தது.

இன்னும் சொல்லப்போனால் “ஜூனியர் விகடனில்”  “நிதி நெருக்கடியில் தமிழக அரசு” என்ற தலைப்பில் செய்தியாளர் எஸ்.ஏ.எம். பரக்கத் அலி விளக்கக் கட்டுரை ஒன்றையே தீட்டி யிருந்தார்.  அதில், “எந்த இலக்கையும் எட்ட முடியா மல் நிதித் துறை தடுமாறி வருகிறது. டாஸ்மாக் வருவாயை உயர்த்துவதில் தான் அரசு அதிக அக்கறை எடுத்துக் கொண்டது.  அந்த அளவுக்கு நிர்வாகத் திறமையை மற்ற துறைகளிலும் காட்டி யிருந்தால், மொத்த வருவாய் அதிகரித்திருக்கும். அரசின் மெத்தனம்தான் இதற்குக் காரணம். இதைச் சமாளிக்க கடன் வாங்குவதைத் தவிர அரசுக்கு வேறு வழியில்லை. ஏற்கனவே ஒரு லட்சத்து 80 ஆயிரம் கோடி ரூபாய் கடனில் தமிழக அரசு தத்தளித்துக் கொண்டிருக்கிறது.  இதனால் மாநிலத்தின் மொத்த வளர்ச்சியும் பாதிக்கப்படும்.  பழைய வரி பாக்கிகளை வசூலிக்கவும், வரி ஏய்ப்பைத் தடுக்கவும் அரசு உறுதியான நடவடிக்கைகளை எடுக்கவில்லை. தமிழக அரசின் கடன் தவிர மின்வாரியத்தின் கடன் ஒன்றரை இலட்சம் கோடி ரூபாய் இருக்கிறது. பொதுத் துறை நிறுவனங்களின் கடனையும் சேர்த்தால்  தமிழகத் தின் மொத்தக் கடன் சுமை நான்கு இலட்சம் கோடி ரூபாயைத் தாண்டும்” என்று நிதித் துறை வட்டாரம் தெரிவித்ததாக விரிவாக “ஜூனியர் விகடன்”  எழுதியிருந்தது.  

கூவம் நதியைச் சீரமைக்க ரூ. 3,833.62 கோடியில் பெரும் திட்டம், ஆறுகள் இணைப்பு வெள்ளத் தடுப்புப் பணிக்கு ரூ. 5,166 கோடி, 3 வழித் தடங்களில் ரூ. 8,350 கோடியில் மோனோ ரெயில் திட்டம், ரூ. 1,075 கோடியில் நெமிலிச்சேரியையும் மீஞ்சூரையும் இணைக்கும்  இரண்டாம் கட்ட வெளிவட்டச் சாலை, சென்னை டி.பி.ஐ. வளாகத்தில் ஒருங்கிணைந்த அறிவுசார் பூங்கா, தேர்வாய்க் கண்டிகை, திருக்கண் டலம், ராமஞ்சேரி ஆகிய இடங்களில் தலா ஒரு டி.எம்.சி. கொள்ளளவு  கொண்ட புதிய ஏரிகள் என கடந்த நிதி நிலை அறிக்கைகளில் அறிவிக்கப்பட்ட பல அறிவிப்புகள் எல்லாம் என்ன ஆயின? விளம்பரக் காற்றில் பறந்து போய் விட்டனவோ! 

ஏன்? தமிழக அரசு அலுவலர்களுக்கு  ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் போனஸ் வழங்கப்பட்டு வருகிறது. தமிழர் திருநாள், பொங்கல் விழாவிற்கு இன்னும் இரண்டு வார காலம் மட்டுமே உள்ள நிலையில், தமிழக அரசு உடனடியாக போனஸ் வழங்குவதற் கான அறிவிப்பினைச் செய்திட வேண்டும்.   

13-2-2014 அன்று தமிழகச் சட்டப்பேரவையில், அ.தி.மு.க. அரசின் சார்பாக  நிதி நிலை அறிக்கை யைப் படித்த அன்றைய முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம், அந்த அறிக்கையின் பக்கம் 31இல்  “நமது மாநிலத்தில் தொழில் வளத்தையும் கட்டமைப்பையும் மேலும் ஊக்குவிக்க இந்த அரசு வரும் அக்டோபர் மாதத்தில் சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாட்டை சென்னையில் நடத்தும் என்பதை இந்த மாமன்றத்திற்கு மகிழ்ச்சியோடு தெரிவிக்க விரும்பு கிறேன். இதற்காக இந்த வரவு செலவுத் திட்டத்தில்  100 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது”  என்று  படித்தார்.  

இது 2014ஆம் ஆண்டு பெப்ரவரியில் நிதி நிலை அறிக்கையில் படித்த அறிவிப்பு! ஆனால் அமைச்சர் பேரவையில் படித்தபடி அக்டோபர் மாதத்தில் முதலீட்டாளர் மாநாடு நடைபெற்றதா என்றால்  இல்லை.     

2012ஆம் ஆண்டிலேயே ஒரே நாளில் 12 கம்பெனிகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத் திடுவதாகவும்,  அதன் மூலம் 36,855 பேருக்கு வேலை கிடைக்குமென்றும், 20 ஆயிரத்து 925 கோடி ரூபாய் முதலீட்டில் தொழிற்சாலைகள் தொடங்குமென்றும் பூதாகாரமாக அறிவிப்பெல் லாம் செய்து, ஏடுகளில் எல்லாம் பெரிதாகச் செய்தி வெளியிட்டார்கள்.  அந்த 12 கம்பெனிகளின் முதலீடும் தமிழகத்திற்கு வந்து அவர்கள் எல்லாம் தொழில்களைத் தொடங்கி விட்டார்களா,  அந்தக் கம்பெனிகளில் 36 ஆயிரத்து 855 பேர் வேலை வாய்ப்புப் பெற்றிருக்கிறார்களா என்ற விவரங்களை  யெல்லாம் அரசின் சார்பில் மக்களுக்கு தெரிவித் தால் நல்லது என்று கேட்டுக் கொண்டோம்.  ஆனால் ஆட்சியினர் வாயே திறக்கவில்லை.  நடந்திருந்தால் அல்லவா நாவசைக்க முடியும்!

 மீண்டும் ஒரு முறை 5,081 கோடி ரூபாய்க்கு 16 நிறுவனங்களுடன் ஒப்பந்தம் கையெழுத்தானது என்றும்  ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட  தொழில் நிறுவனங்கள் இன்னமும் உற்பத்தி பணியைத் துவக்கவில்லை என்றும் செய்தி வந்தது.  மேலும்  கடந்த ஆண்டு நிதி நிலை அறிக்கையில்,  26,625 கோடி ரூபாய் அளவிற்கு மொத்த முதலீட்டிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத் திடப்பட்டு, அதன் தொடர்ச்சியாக 10,660 கோடி ரூபாய் அளவிலான முதலீடுகள் மட்டுமே செய்யப்பட்டுள்ளன என்றும், இதனால் 10,022 பேருக்கு கூடுதல் வேலை வாய்ப்புகள் உருவாக்க ப்பட் டுள்ளன என்றும் தெரிவித்தார்கள்.   

அதன் பிறகு 2015ஆம் ஆண்டு  மே மாதத்தில் முதலீட்டாளர்கள்  மாநாடு நடைபெறும் என்று அன்றைய முதலமைச்சர் பன்னீர்செல்வம் அறிவித் தார்.  சட்டப்பேரவைக்கான பொதுத்தேர்தல் நடைபெறுவதற்கு  ஓராண்டே உள்ள நிலையில், 2015 மே மாதத்தில் மாநாடு நடத்தி என்ன பயன் ஏற்படப் போகிறது என்று நான் அப்போதே கேட்டிருந்தேன்.  அதற்கும் பதிலளிக்கவில்லை.

மே மாதம் நடக்கவிருந்த இந்த மாநாட்டை யொட்டி 13-2-2015 அன்று சென்னையில் நடை பெற்ற முன்னோட்ட மாநாட்டில் 18 ஆயிரம் கோடி ரூபாய்க்கு ஏழு நிறுவனங்களோடு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என்று மிகப் பெரிய விளம்பரம் செய்தார்களே தவிர அங்கே அந்த நிகழ்ச்சி நடைபெற்றதா?    

இந்த முதலீட்டாளர்கள் மாநாடு இவ்வாறு தள்ளி வைக்கப்படக்  கூடக் காரணம், ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு மேல் முறையீட்டு வழக்கில் ஜெயலலிதா விடுதலையாகி, அவர் முதலமைச்சர்  பொறுப்பிலே இருக்கிற போது இந்த மாநாடு நடைபெற வேண்டும் என்பதற்காகத்தான் மாநாடு மீண்டும் மீண்டும் ஒத்தி வைக்கப்பட்டு வருவதாகவும் கூறப்பட்டது. அதை உண்மை  என்று நிரூபிப்பதைப் போல முதலமைச்சராக ஜெயலலிதா வந்த பிறகுதான் முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற்றது.  ஆனால் அந்த மாநாட்டில் முதல் அமைச்சர் ஜெயலலிதா அறிவித்தவாறு  இரண்டு இலட்சத்து 42 ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டுக்கான தொழில்கள் வந்தனவா? இல்லை என்பதுதான் வேதனையான பதில்!   

அ.தி.மு.க. அரசின் நான்காண்டு கால ஆட்சி முடிவடைந்து, ஐந்தாம் ஆண்டு ஆட்சி நடைபெற் றுக் கொண்டிருக்கின்ற இந்த நேரத்தில், இந்த ஆட்சியினர் தமிழ்நாட்டு மக்களை எந்த அளவுக்குக் கடனிலே  சிக்க  வைத்திருக்கிறார்கள் என்பது பற்றி  “டைம்ஸ் ஆப் இந்தியா”  ஆங்கில நாளேடு  ஒரு நீண்ட கட்டுரையை, வரைபடத்தோடு வெளியிட்டிருந்தது. அந்தச் செய்திக்குத் தலைப்பு “How Tamil Nadu Government Debt  keeps  people in Red ? With Interest Payments  climbing, State has little left to help the Poor who depend on Moneylenders” (தமிழக அரசு வாங்கியுள்ள கடன்கள் மாநில மக்களை  எத்தகைய அபாய கட்டத்திற்குக் கொண்டு சென்றுள்ளன?  அரசு செலுத்திட வேண்டிய வட்டித் தொகை அதிகரித்துக் கொண்டே செல்வதால், வட்டிக்குப் பணம் தருபவர்களைச் சார்ந்திருக்கும்  ஏழைகளுக்கு உதவிட மாநில அரசிலும்  சொற்பத் தொகையே எஞ்சியிருக்கிறது)  அதாவது தி.மு. கழக ஆட்சியில் சுமார் 90 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு கடன் இருந்தது, தற்போது 2 இலட்சத்து 11 ஆயிரத்து 483 கோடி ரூபாய் என்ற அளவுக்கு அந்தக் கடன், அதாவது  முன்பு இருந் ததை விட 234.98 சதவிகிதம்  உயர்ந்திருக்கிறது.  

தமிழகத்தின் கடன் எவ்வளவு என்பதை ஆண்டு வாரியாகப் பார்த்தால் - 2010-2011இல்  91,050 கோடி ரூபாய்  - 2011-2012இல் 1,03,999 கோடி ரூபாய் - 2012-2013இல் 1,20,205 கோடி ரூபாய் -  2013-2014இல் 1,40,042 கோடி ரூபாய் - 2014-2015இல் 1,78,171 கோடி ரூபாய் - 2015-2016இல்  2,11,483 கோடி ரூபாய் என்று அ.தி.மு.க. ஆட்சியில் கடனை வெகுவாகப் பெருக்கி யிருக்கிறார்கள் என்று நானல்ல, “டைம்ஸ் ஆப் இந்தியா” ஆங்கில நாளேடு எழுதியது. அதாவது தி.மு. கழக ஆட்சியில்  இருந்ததை விட,  அ.தி.மு.க. ஆட்சியில் கடன் சுமார் 200 சதவிகிதத்திற்கு மேல் அதிகரித்துள்ளது.

தி.மு. கழக ஆட்சியில் 2010-2011ஆம் ஆண்டு வருவாய்ப் பற்றாக்குறை 3,396.45 கோடி ரூபாய் ஏற்படும் என்றும்,  நிதிப் பற்றாக்குறை 16,222.13 கோடி ரூபாயாக இருக்கும் என்றும் நிதிப் பற்றாக்குறை மாநில மொத்த உற்பத்தி மதிப்பில் 3.72 சதவிகிதமாக இருக்கும் என்றும் நிதி நிலை அறிக்கையில் தெரிவிக் கப்பட்டது. ஆனால் நான்காண்டு கால அ.தி.மு.க. ஆட்சிக்குப் பிறகு வருவாய்ப் பற்றாக்குறையோ, நிதிப் பற்றாக்குறையோ தி.மு. கழக ஆட்சியில் இருந்ததைவிடக் குறைந்திருக்கிறதா என்று பார்த்தால், கடந்த ஆண்டு நிதி நிலை அறிக்கை யில்,  2015-2016ஆம் ஆண்டிற்கான வருவாய்ப் பற்றாக்குறை  4,616.02 கோடி ரூபாயாக இருக்கும் என்றும், நிதிப் பற்றாக்குறை 31,829.19  கோடி ரூபாயாக இருக்குமென்றும் கணிக்கப்பட்டுள்ளது. கழக ஆட்சியோடு ஒப்பிடும்போது, அ.தி.மு.க. ஆட்சியில் வருவாய்ப் பற்றாக்குறை 1,219.57 கோடி ரூபாயும்,  நிதிப் பற்றாக்குறை 15,607.06 கோடி ரூபாயும் உயர்ந்துள்ளது என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

அ.தி.மு.க. ஆட்சியில் கடன் சுமை பெருகி விட்டது.  வருவாய்ப் பற்றாக்குறையும், நிதிப் பற்றாக் குறையும் அதிகமாகி “பற்றாக்குறை”  என்னும் நோயால் பாதிக்கப்பட்டு விட்டது  தமிழகம்.   அரசின் கட்டண விகிதங்கள் அதிகமாகி,  அத்தியா வசியப் பொருள்களின் விலைகளும் விண்ணள வுக்கு உயர்ந்து விட்டன.  இயற்கையால் பெய்த பெருமழையோடு, செயற்கையான வெள்ளமும்  இணைந்து மக்களின் வாழ்க்கையைத் தலைகீழா கப் புரட்டிப் போட்டு விட்டது.  ஏழையெளிய  நடுத்தர மக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி  விடியல் வரும் வரை காத்திருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு விட்டது. தமிழகத்தின் நிதி நிலையோ திவால் திசையை நோக்கி வேகமாகப் பயணித்துக் கொண்டிருக்கிறது! ஐந்தாண்டு கால அ.தி.மு.க. ஆட்சியின்  அவலச் சாதனை இதுதானா?’’ nakkheeran,com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக