வியாழன், 12 நவம்பர், 2015

மற்றவர்களை துச்சமாக பார்ப்பதில் நம் நடிகர் திலகத்திற்கு ஈடு இணை கிடையாது....savukkuonline.com

tng 9அவரைப் பற்றி நான் நிறையக் கேள்விப் பட்டிருந்தேன் – சுற்றி எப்போதும் துதிபாடிகள், கதை சொல்லும்போதும் அவருக்கு ஐஸ் வைத்துக்கொண்டே இருக்கவேண்டும், உடனிருப்போர் ஆஹா ஆஹா என்று சொல்லுமளவு, ஷூட்டிங்கில் மற்றவர்கள் சாப்பிட்டார்களா என்பதைப் பற்றி கவலைப்படவே மாட்டார்
திரையுலக நிருபராக !
எதிர்பாராத வகையில் எனக்கு சம்பந்தத்திடமிருந்து விடுதலை கிடைத்தது.
இண்டியன் எக்ஸ்பிரஸ் குழுமம் ஸ்க்ரீன் என்று ஆங்கில வார ஏடு ஒன்றையும் வெளியிட்டு வந்தது. திரையுலகச் செய்திகள் தாங்கி வந்த இதழுக்கு அகில இந்திய அளவில் நல்ல மதிப்பு இருந்தது. அதன் சென்னை நிருபர் சங்கர் வயதானவர். எக்ஸ்பிரஸ் நிருபர்கள் அறையைத் தான் அவர் பயன்படுத்திக்கொள்ளவேண்டும். ஏதோ ஒரு நேரம் வந்து ஓரிரண்டு மணி நேரம் இருந்துவிட்டுச் சென்றுவிடுவார். யாரிடமும் அதிகம் பேசமாட்டார். அவருக்கும் சம்பந்தத்திற்கும் ஆகாது எனத் தெரிந்துகொண்டேன். ஒரு நாள் மதியம் அலுவலகத்தில் வேறு எவரும் இல்லாத நேரத்தில் சங்கரிடம் எல்லாவற்றையும் மூச்சுவிடாமல் சொன்னேன்.

” நான் ஒண்ணும் சொல்றதுக்கில்ல…ஸ்க்ரீனுக்கு வந்துட்றீங்களா?”
எனக்கு அதில் அவ்வளவு ஆர்வமில்லை. ஆனால் எக்ஸ்பிரசில் நீடிக்கமுடியுமா என்ற சந்தேகம் வலுத்துகொண்டிருந்தது. அடுத்த massacreல் தப்புவது கடினம் என்றே பட்டது. ”செய்யுங்க சார்…நான் வந்திட்றேன்..”
“சரி பார்ப்போம்..”
இடதுபுறம் அமர்ந்திருந்த அவரிடம் பேசி முடித்துவிட்டு நிம்மதிப் பெருமூச்சுவிட்டுக்கொண்டே தற்செயலாக வலது பக்கம் திரும்பினால் அதிர்ச்சி. அந்தப் பக்கம் உட்கார்ந்திருந்தது சம்பந்தத்தின் தலைமை ஒற்றர் என்றறியப்பட்டவர். நான் அவர் பக்கம் திரும்பியவுடன் அவசர அவசரமாகத் தன் பார்வையினை தன் டைப்ரைட்டர் பக்கம் திருப்பினார். இவர் எப்போது இங்கே வந்தார்? எல்லாவற்றையும் கேட்டிருப்பாரோ? போட்டுக்கொடுத்தால்?
மிகுந்த மனக் கிலேசத்துடனேயே அன்று வேலையை முடித்து அறைக்குத் திரும்பினேன்.
மறுநாள் காலை வழக்கம்போல் சம்பந்ததிற்கு ஃபோன் செய்து எங்கே செல்லவேண்டும் எனக் கேட்டபோது, “ஸ்க்ரீன் சங்கருக்குப் ஃபோன் பண்ணி கேட்டுக்கப்பா,” என்றார்.
“சார்…” நான் வெலவெலத்துப்போனேன்.
“இல்லப்பா..ஒனக்கு அங்க வேலை செய்யணும்னு இஷ்டம்தானே…”
நா எழவில்லை. நக்கல் அடிக்கிறாரா?
“சரி, சரி.. சங்கர் கேட்டாரு…சரின்னிட்டேன்…அவ்ருக்கு ஃபோன் பண்ணிக்க.”
சங்கருக்கு ஃபோன் செய்து உறுதிப்படுத்திக்கொள்ளும் வரை என் உயிர் என்னிடம் இல்லை.
சம்பந்தத்தின் ஒற்றர் படை குறித்து ஏற்கெனவே குறிப்பிட்டிருக்கிறேன். அவர்களில் ஒருவர்தான் அவரது ஆங்கிலப் போதாமை பற்றி நான் கூறியதை பற்றவைத்தது என்பது பிறகுதான் எனக்குத் தெரியும்.
ஆனால் ஸ்க்ரீன் மாற்றலுக்கும் அதேபடைக்குத் தான் நான் நன்றி சொல்லவேண்டும். நினைத்திருந்தால் சம்பந்தம் என்னை வீட்டுக்கனுப்பியிருக்கலாம். மீண்டும் தப்பித்தேன்.
திரையுலக செய்தியாளராக இரண்டு மூன்று மாதங்கள்தான். ருசிகரமான சம்பவங்கள் பல. அவமானப்பட நேர்ந்ததும் உண்டு.
முதல்நாளே அப்படித்தான். விஜயா ஸ்டூடியோவிற்கு சங்கர் வரச் சொல்லியிருந்தார். எனக்கு ஒரே பரபரப்பு. சினிமா நிருபராக நான் விரும்பவில்லையெனினும் பல நடிகர்களை மிக அருகிலிருந்து பார்க்கமுடியுமே.
குறிப்பிட ஒரு தளத்துக்கு வரசொல்லியிருந்தார். கதவடைக்கப்பட்டிருந்தது. கூர்காவிடம் நான் பத்திரிகையாளன் என்று சொல்லி என் ஸ்டேட்டசை நிறுவிட முயன்றேன். பலிக்கவில்லை. சரி சங்கர் சார் வரட்டும், எனக் கறுவினேன். ஆனால் அவருக்கும் அதே நிலைதான் என்பது எனக்கு எப்படித் தெரியும் !
அவர் வந்தவுடன் நடந்ததைச் சொன்னேன். சற்று இறுகிய முகத்தோடு அவர் தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டு, தன்னை வரச் சொன்னது திரைப்படத் தயாரிப்பாளரே என்று சொல்லிப்பார்த்தார். அதுவே எனக்கு விநோதமாக இருந்தது. மூத்த நிருபர் தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டுதான் பேசவேண்டுமா, அதுவும் மிக மென்மையாக, வேண்டுகோள் தொனியில்? ஆனால் யாராயிருந்தாலும், எப்படிக்கேட்டாலும் பதில் ஒன்றே. ”உத்திரவு.”
”சரி இப்படித்தான்பா…ஷாட் முடிஞ்சப்றம் தொறந்துவிடுவாங்க…”
அப்படித்தான் நடந்தது. ஏதோ ராஜேஷ் கன்னா ஹேமமாலினி தோன்றிய காட்சி. ஆசுவாசப்படுத்திக்கொண்டிருந்தார்கள். சங்கர் நேரே தயாரிப்பாளரிடம் போனார்.
“ஓ வாங்க வாங்க சார்…எப்டியிருக்கீங்க?
“உங்க கூர்கா என்னை உள்ளவிட மறுத்துவிட்டான் தெரியுமா?”
“ஓ அப்டியா சாரி….டைரக்டர் சொல்லிட்டாரு கண்டிப்பா க்ளோஸ் பண்ணச் சொல்லி…சரி நீங்க பெரிசா எடுத்துக்காதீங்க…நானும் சொல்லிவைக்கிறேன்.”
அவர் பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை, சங்கரும் அத்துடன் விட்டுவிட்டார்.
பொதுவாக செய்தியாளர்கள் என்றால் பல இடங்களில் முக்கியத்துவம் இருக்கும். குறிப்பாக அரசியல் கட்சிகளிடம். ஏனெனில் அவர்கள் தொடர்பான செய்திகள் வெளியாகவேண்டுமே. ஊடகங்களுக்கும் அரசியல் செய்திகள் வேண்டும் என்றாலும், கட்சிகள் தலைவர்கள் தாங்கள் பேசப்படவேண்டும் என்பதில் அக்கறை காட்டுவார்கள்.
ஆனால் திரையுலகைப் பொறுத்தவரை நிலை தலைகீழ். அவர்களை நம்பியல்லவோ பத்திரிகைகள்! சினிமாக்காரன் பற்றிய செய்திகளை எல்லா தரப்பு மக்களும் விரும்பிப் படிக்கின்றனர். சிவாஜி, எம்ஜிஆராயிருந்தாலென்ன, சில்லுண்டியாயிருந்தாலென்ன, நடிகர், நடிகை என்றால் அப்படி ஒரு கவர்ச்சி. எனவே நிருபர்கள் தவம் கிடக்கவேண்டியதுதான். எந்த அளவு மரியாதையென்றாலும் அத்தோடு திருப்திப் பட்டுக்கொண்டு காலத்தை ஓட்டியாகவேண்டும். நான் யார் தெரியுமா என்றெல்லாம் சலம்பமுடியாது. பத்திரிகையாளர்கள் உட்பட பலர் சுய மரியாதையைக் கழற்றி வைத்துவிட்டே ஸ்டூடியோவுக்குள் நுழைய வேண்டும்.
மற்றவர்களை துச்சமாக பார்ப்பதில் நம் நடிகர் திலகத்திற்கு ஈடு இணை கிடையாது. அவரைப் பற்றி நான் நிறையக் கேள்விப் பட்டிருந்தேன் – சுற்றி எப்போதும் துதிபாடிகள், கதை சொல்லும்போதும் அவருக்கு ஐஸ் வைத்துக்கொண்டே இருக்கவேண்டும், உடனிருப்போர் ஆஹா ஆஹா என்று சொல்லுமளவு, ஷூட்டிங்கில் மற்றவர்கள் சாப்பிட்டார்களா என்பதைப் பற்றி கவலைப்படவே மாட்டார் என்று எத்தனையோ – எனவே  அவர் பக்கமே நான் செல்லவில்லை, நான் அவரது பரம ரசிகன் என்றபோதும்.
ஒரு காட்சி இன்னமும் பசுமையாக நினைவில் இருக்கிறது. ஏதோ பாலாஜி பட ஷூட்டிங். அடுத்த காட்சிக்காக மற்றவர்கள் தயாராகிக்கொண்டிருக்கையில் இவர் தளத்திற்கு வெளியே அமர்ந்து புகை பிடித்துக்கொண்டிருந்தார். லூஸ் மோகனை அவர் முன் கொண்டு நிறுத்தினார்கள். அவருக்கு திரைப்பட வாய்ப்பெதுவும் இல்லாத நேரம். அழைத்துச் சென்றவர் சிவாஜியிடம் ஏதோ சொல்ல, அவர், சரி நடித்துக் காண்பிக்கட்டுமே என்றார். அங்கேயே ஐந்து நிமிடம் தனக்குத் தெரிந்த வித்தையெல்லாம் காட்டினார் மோகன். சிவாஜி சிரித்துக்கொண்டிருந்தார். ”சார், ரெடி,”  என உள்ளிருந்து குரல். டக்கென்று சிகரெட்டை அணைத்துவிட்டு, சீட்டைவிட் எழுந்து உள்ளே சென்றுவிட்டார்.
அத்தோடு சரி. அழைத்து வந்தவரும் மோகனும் பரிதாபமாக ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர். மேலும் சில நிமிடங்கள் அங்கே காத்திருந்தவர்கள், பிறகு வருத்தம் தோய்ந்த முகத்துடன் அங்கிருந்து நகர்ந்தனர்.
எனக்கு மிக எரிச்சலையூட்டிய அம்சம் பல நடிகைகளின் பந்தாதான். குட்டி ஸ்டார் கூட வந்து இறங்கும்போது கூட ஒரு படையே இருக்கும். கார் டிக்கியிலிருந்து அவருடைய நாற்காலி இறக்கிவைக்கப்படும். தளத்தில் படப்பிடிப்பு ஏரியாவிற்கெதிர்புறம் வைக்கப்படும். அந்த நாற்காலியில் அவர் மட்டும்தான் உட்காரலாம். வேறு யாரும் தவறிப்போய் உட்கார்ந்துவிட்டால் பிரச்சினைதான். சர்வர் சுந்தரம் மனோரமாதான் ஒவ்வொருவரும்.
நான் சந்தித்தவர்களில் மிகவும் மனதைக் கவர்ந்தவர் ரஜினிகாந்த்தான். காலையில் அவர் அப்போது தங்கியிருந்த ஹோட்டல் பிரெசிடெண்ட் அறையை விட்டு வெளியேறியதிலிருந்து மாலை ஆறு மணி வரை அவருடனேயே இருந்து பேசி, என் அனுபவத்தை ரஜினியுடன் ஒரு நாள் என்ற கட்டுரையாக்கினேன்.
மன அழுத்தம், வேறு ஏதோ உடல் நிலைக் கோளாறு இவற்றிலிருந்து அப்போதுதான் மீண்டுகொண்டிருந்தார். அது குறித்து அவரைக் கேட்டபோது,  ”என்ன எல்லாம் பணத் திமிர்தான்…ஓவர் வொர்க்…ஓவர் தண்ணி, ஓவர் …(கண்ணடித்தார்)…இப்டியெல்லாம் உடம்பைக் கெடுத்துகிட்டா…இப்ப சரியாயிட்டேன் இனிமே ஜாக்கிரதையாயிருப்பேன் என நினைக்கிறேன்,” என்றார் சிரித்துக்கொண்டே.
லதாவைத் திருமணம் செய்வது பற்றி அவரை சந்திக்கவந்தவர்கள் கேட்டபோது ஒய்.ஜி.மகேந்திரன் தேவையில்லாமல் வதந்தியைக் கிளப்புவதாகச் சொல்லி மழுப்பினார்,
மற்றபடி கேட்ட கேள்விகளுக்கெல்லாம் நேர்மையாகவே பதிலளித்தார். ஷாட்டுகளுக்கிடையிலான நேரத்தில் சகஜமாக கீழேயே உட்கார்ந்து மற்றவர்களுடன் உரையாடினார்
தொடரும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக