சனி, 28 நவம்பர், 2015

ஆர்.எஸ்.எஸ்.-பா.ஜ.க பார்ப்பன பாசிச பயங்கரவாதத்திற்கு முற்றுப்புள்ளி.....

ருப்பைப் பதுக்கி வைத்திருக்கும் கள்ள வியாபாரிகளைவிட, மாட்டுக் கறி உணவு அருந்துபவர்களைத்தான் மிகப் பெரும் கொடியவர்களாக, சமூக விரோதிகளாகச் சித்திரிக்கின்றன மோடி அரசும் ஆர்.எஸ்.எஸ். பரிவாரங்களும். பருப்பைப் பதுக்கி வைத்த கள்ள வியாபாரிகளுக்கு உடனடி தண்டனை வழங்கப்பட்ட செய்தி எதுவும் இதுவரை நமக்குக் கிட்டவில்லை. ஆனால், பசு மாட்டிறைச்சியைச் சாப்பிட்டதாக பழிபோடப்பட்ட 50 வயதான முகம்மது அக்லக் செங்கற்களால் அடித்தே கொல்லப்படுகிறார்; பசு மாட்டினைக் கொன்றதாகப் பழி போடப்பட்ட 24 வயதான ஜாஹித் அகமது பட் உயிரோடு எரித்துக் கொல்லப்படுகிறார்; மாடுகளை இறைச்சிக்காகக் கடத்திச் செல்வதாகப் பழி போடப்பட்ட 28 வயதான நோமன் அக்தர் அடித்துக் கொல்லப்படுகிறார்.

முகமது அக்லக்
உ.பி மாநிலம் தாத்ரி பகுதியிலுள்ள பிஸாரா கிராமத்தில் ஆர்.எஸ்.எஸ்-ன் கைக்கூலிகளால் சதித்தனமான முறையில் படுகொலை செய்யப்பட்ட முகமது அக்லக்
ஜம்மு காஷ்மீரிலுள்ள உதம்பூரைச் சேர்ந்த ஜாஹித் அகமதும், உ.பி. மாநிலத்தைச் சேர்ந்த நோமன் அக்தரும் தமக்கு முன்பின் அறிமுகமில்லாத இந்து மதவெறிக் கும்பலால் கொல்லப்பட்டனர். ஆனால், உ.பி. மாநிலம், தாத்ரி பகுதியிலுள்ள பிஸாரா கிராமத்தைச் சேர்ந்த முகம்மது அக்லக், தனது சொந்த கிராமத்திலேயே, தனது வீட்டின் எதிரிலேயே, தனது மனைவி, தாய், மகள் ஆகியோரின் கண் முன்னாலேயே, அதே கிராமத்தைச் சேர்ந்த, அக்லக்கின் குடும்பத்தினருக்குத் தெரிந்த, அவர்களோடு பழகிவந்த ‘இந்து’க்களாலேயே அடித்துக் கொல்லப்படுகிறார். இந்த மதவெறி எந்த அளவிற்கு இரக்கமற்றது, கண்மூடித்தனமானது என்பதற்கு அக்லக்கின் படுகொலை இன்னொரு சான்று. அது மட்டுமின்றி, மேற்கு உ.பி.யை இந்து மதவெறியின் புதிய சோதனைச்சாலையாக ஆர்.எஸ்.எஸ். கும்பல் உருமாற்றியிருப்பதையும் அக்லக் படுகொலை எடுத்துக் காட்டுகிறது.
அக்லக் படுகொலை: திடீரென நடந்த விபத்தா?
ராமர் கோவில், பொது சிவில் சட்டம், 370-வது சட்டப்பிரிவை நீக்குவது, இட ஒதுக்கீடு எதிர்ப்பு ஆகியவற்றை முன்னிறுத்தி முசுலீம் எதிர்ப்பு கலவரங்களையும் படுகொலைகளையும் நடத்திவந்த ஆர்.எஸ்.எஸ். இப்பொழுது லவ் ஜிகாத், பசுவதைத் தடை – எனத் தனது தந்திரோபாயத்தை மாற்றிக் கொண்டிருப்பதை சமீபத்திய நிகழ்வுகள் எடுத்துக் காட்டுகின்றன. முசாஃபர் நகரில் முசுலீம்களுக்கு எதிராக ஜாட் சாதியினரைத் தூண்டிவிடுவதற்கு “லவ் ஜிகாத்” என்ற சதித்தனமான பிரச்சாரத்தை நடத்திய ஆர்.எஸ்.எஸ். கும்பல், 2014 நாடாளுமன்றத் தேர்தலின்பொழுது காங்கிரசை ‘இந்துக்களின்’ எதிரியாகக் காட்டுவதற்கு மாட்டிறைச்சி ஏற்றுமதிக்கு பசுக்கள் கொல்லப்படுவதாக ஒரு அழுகுணி பிரச்சாரத்தை நடத்தியது.
நரேந்திர மோடி பிரதமர் நாற்காலியில் குந்தியவுடனேயே பசுவதை தடைச் சட்டத்தை நாடெங்கும் கடுமையாக அமல்படுத்த வேண்டும் என்ற பிரச்சாரத்தையும், தாக்குதல்களையும் ஆர்.எஸ்.எஸ். பரிவாரங்கள் வட மாநிலங்களில் பரவலாக கட்டவிழ்த்துவிட்டன. குறிப்பாக, பசுவைக் கொன்றதாகப் பழி சுமத்தப்பட்ட ஒருவரை பஜ்ரங் தள் குண்டர்கள் கொடூரமாகத் தாக்கும் காட்சியும், அக்கும்பல் விடுத்த எச்சரிக்கையும் சமூக வலைத்தளங்கள் வழியாகப் பரப்பப்பட்டு, உ.பி.யின் முசாஃபர் நகர், ஷாம்லி பகுதிகளில் மீண்டும் கலவரச் சூழல் ஏற்படுத்தப்பட்டது. பா.ஜ.க. கூட்டணி ஆளும் மகாராஷ்டிராவிலும், அக்கட்சி தனித்து ஆளும் ம.பி., ராஜஸ்தான், சத்தீஸ்கர் மாநிலங்களிலும் பசுவதை தடைச் சட்டம் ஐந்து முதல் பத்தாண்டு வரை தண்டிக்கக்கூடியதாகக் கடுமையாக்கப்பட்டது. ஜம்மு-காஷ்மீரில் யாரோ ஒரு இந்து மதவெறியன் போட்ட வழக்கினைச் சாதகமாக்கிக் கொண்டு, பசுவதைத் தடைச் சட்டத்தை கடுமையாக அமல்படுத்துமாறு, அம்மாநில போலீசுக்கு அம்மாநில உயர்நீதி மன்றத்தின் ஜம்மு கிளை உத்தரவிட்டது.
முகம்மது அக்லக்கின் இரண்டாவது மகன் தானிஷ்
உயிருக்குப் போராடும் நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட முகம்மது அக்லக்கின் இரண்டாவது மகன் தானிஷ்
ஆர்.எஸ்.எஸ்.-பா.ஜ.க.வினரின் புரவலர்களான ஜைன மதத்தினர் கடைபிடிக்கும் பர்யுஷன் சடங்கின்போது, இரண்டு நாட்கள் இறைச்சிக் கடைகளை அடைப்பது மகாராஷ்டிராவில் ஏற்கெனவே நடைமுறையில் இருந்து வருகிறது. இதனை நான்கு நாட்களாக நீட்டித்தும் அந்நாட்களில் ஆட்டிறைச்சி, கோழி இறைச்சி விற்பதையும் தடை செய்து தீர்மானம் நிறைவேற்றியது பா.ஜ.க.-சிவசேனா கூட்டணியின் கீழுள்ள மும்பய் மாநகராட்சி. அம்மாநிலத்தைச் சேர்ந்த மற்றொரு மாநகராட்சி இதனை எட்டு நாட்களுக்கு நீட்டித்துத் தீர்மானம் நிறைவேற்றியது. இந்து மதவெறிக் கும்பல் ஆளும் ராஜஸ்தான், குஜராத் மற்றும் பஞ்சாபிலும் இது போன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டது; சத்தீஸ்கர் மாநிலத்தில் இந்த உத்தரவு விநாயகர் சதுர்த்தியின்பொழுதும் நடைமுறையில் இருக்கும் என இன்னொரு அடி தாண்டியது. பா.ஜ.க. மும்பய் மாநகராட்சி பிறப்பித்த உத்தரவை மும்ப உயர்நீதி மன்றமும், அதன் பின் உச்சநீதி மன்றமும் ரத்து செய்துவிட்டபோதும், இந்து மதவெறிக் கும்பலுக்குத் தலைக்கேறிய பசு போதை இறங்கவேயில்லை என்பதை இதன் பின் நடந்த முகம்மதுஅக்லக் கொலையும், அதனைத் தொடர்ந்து அடுத்தடுத்து நடந்த நோமன் அக்தர், ஜாஹித் அகமது பட் ஆகியோரின் கொலைகளும் எடுத்துக் காட்டிவிட்டன.
ஆர்.எஸ்.எஸ்.தான் அடிக்கொள்ளி
அக்லக் கொல்லப்பட்ட நாளன்று, பசு மாட்டுக் கறியின் எச்சங்கள் வீதியில் கிடப்பதைப் போன்ற ஒரு காட்சி சமூக வலைத்தளங்கள் வழியாக அக்கிராமத்தினரின் கைபேசிகளுக்குத் திடீரென அனுப்பப்பட்டிருக்கிறது. அன்றிரவு பத்து மணி போல், அக்கிராமத்தைச் சேர்ந்த பெரும்பாலோர் தூங்கப் போய்விட்ட நேரத்தில், அக்கிராம கோவிலின் ஒலிபெருக்கியில் அக்கோவில் பூசாரி, அக்லக் பசு மாட்டைக் கொன்று, அதன் மாமிசத்தைச் சாப்பிட்டு விட்டு மிச்சத்தை வீட்டில் வைத்திருப்பதாகவும், அதன் எச்சங்களை வீட்டிற்கு எதிரே எரிந்திருப்பதாகவும் அறிவிக்கிறார். இந்த அறிவிப்பைக் கேட்டவுடனேயே 1,000-க்கும் மேற்பட்டோர் கோவில் வாசலில் கூடுகிறார்கள். அவர்களுள் ஒரு கும்பல் அக்லக்கின் வீட்டிற்குள் நுழைந்து, அவரது இளைய மகனை மயங்கிவிழும் வரை அடித்துவிட்டு, அக்லக்கை வீதிக்கு இழுத்து வந்து செங்கல் கற்களால் அடித்துக் கொல்கிறது.
ஏறத்தாழ 15,000 பேர் வசிக்கும் பிஸாரா கிராமத்தில் முசுலீம்களின் மொத்த எண்ணிக்கையே வெறும் 300 தான். அக்லக் குடும்பமோ தாகூர் சாதியினர் வசிக்கும் பகுதிக்கு அருகிலேயேதான் வசித்து வந்தது. இப்படிபட்ட நிலையில் பசு மாட்டைக் கொன்று, அதன் கறியைச் சாப்பிட்டுவிட்டு, அதன் எச்சங்களைத் தெருவில் வீசியெறிய அக்லக் உள்ளிட்டு அக்கிராமத்தைச் சேர்ந்த எந்தவொரு முசுலீமும் துணிந்திருக்க முடியாது. எனவே, பசுவைக் கொன்றதாக, அதன் மாமிசத்தைச் சாப்பிட்டதாக வதந்தியைப் பரப்பி, பின்னர் மேல்சாதியினர் மத்தியில் வாழும் அக்லக்கை இலக்காக நிர்ணயித்து இத்தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது.
எஞ்சினியர் ரஷீத் மீது தாக்குதல்
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் மாட்டுக் கறி விருந்து நடத்திய சுயேச்சை சட்டமன்ற உறுப்பினர் இன்ஜினியர் ரஷீத்தின் முகத்தில் மையையும், ஆயிலையும் வீசித் தாக்கியது இந்து மதவெறிக் கும்பல்.
இரண்டாவதாக, அக்கோவில் பூசாரி பிஸாராவைச் சேர்ந்தவரல்ல. மூன்று மாதங்களுக்கு முன்பு கோவில் பூசாரி வேலையை ஏற்றுக் கொண்ட அவர் எந்தப் பகுதியைச் சேர்ந்தவர், அவரை அழைத்துவந்து, நியமித்தது யார் என்பது இன்று வரை மர்மமாக உள்ளது. மேலும், அந்த பூசாரி தனது வாக்குமூலத்தில் தன்னை மிரட்டி, அக்லக் வீட்டில் பசு மாமிசம் இருப்பதாக அறிவிக்கச் செய்ததாகக் கூறியிருக்கிறார்.
ஜாட் சாதியைச் சேர்ந்த பெண்ணை முசுலீம் இளைஞன் பின்தொடர்ந்து தொந்தரவு செய்வதாக வதந்தி பரப்பபட்டும், பாகிஸ்தானில் இந்து மதத்தைச் சேர்ந்த ஒருவர் முசுலீம்களால் தாக்கப்பட்ட சம்பவத்தை இந்தியாவில் நடந்ததைப் போல சமூக வலைத்தளங்களில் மோசடியாகப் பதிவேற்றம் செய்தும்தான் முசாஃபர் நகர் கலவரம் தூண்டிவிடப்பட்டது. டெல்லியிலுள்ள நஜாப்கர் பகுதியில் நடந்த கலவரமும் கோவிலில் பூசாரி செய்த அறிவிப்பிற்குப் பிறகுதான் தொடங்கியது. உ.பி.யிலுள்ள அஸம்கர் பகுதியிலுள்ள ஒரு கோவிலின் அருகே மாட்டுக் கறியை வீசியெறிந்துவிட்டுத் தப்பிச்செல்ல முயன்ற பர்தா அணிந்திருந்த நபரைப் பிடித்து விசாரித்தபொழுது, அவன் ஆர்.எஸ்.எஸ்.-ஐச் சேர்ந்தவன் என்பது அம்பலமானது. இத்தகைய வஞ்சகமான ஆர்.எஸ்.எஸ். பாணியில்தான் அக்லக் படுகொலையும் நடந்திருக்கிறது.
மேலும், இப்படுகொலை தொடர்பாகக் கைது செயப்பட்டுள்ள 11 பேரில் 8 பேர் பிஸாரா கிராம பஞ்சாயத்துத் தலைவர் சஞ்ஜய் ரானாவின் உறவினர்கள்; குறிப்பாக, முதல் குற்றவாளியான விஷால் சஞ்சய் ரானாவின் மகன். சஞ்சய் ரானா இருபது ஆண்டுகளுக்கும் மேலாக பா.ஜ.க.வில் இருந்து வருவதோடு, இப்படுகொலையைக் கொச்சைத்தனமாகப் பூசிமெழுகிவரும் கலாச்சாரத் துறை இணை அமைச்சர் மகேஷ் ஷர்மாவின் அல்லக்கை.
இதுவொருபுறமிருக்க, பிஸாரா கிராமத்தில் ராஷ்டிரவாதி பிரதாப் சேனா, சமாதான் சேனா, ராம் சேனா என்ற முகமூடியை அணிந்துகொண்டு ஆர்.எஸ்.எஸ். கும்பல் தாகூர் சாதியினரை அணிதிரட்டி வைத்திருக்கிறது. குறிப்பாக, சமாதான் சேனாவை நடத்திவரும் கோவிந்த் சௌத்ரி ஆர்.எஸ்.எஸ். பிரச்சாரகன் என்பதோடு, கடந்த ஆகஸ்டில் கிம்ராலா கிராமத்தைச் சேர்ந்த மூன்று முசுலீம் இளைஞர்கள் படுகொலை செயப்பட்ட சம்பவத்தில் சமாதான் சேனாவிற்குத் தொடர்பு இருப்பதற்கான ஆதாரங்கள் உள்ளன. இந்த சந்தர்ப்ப சாட்சியங்கள் அக்லக் படுகொலையின் அடிக்கொள்ளியாக ஆர்.எஸ்.எஸ்.-பா.ஜ.க. கும்பல் இருப்பதை நிறுவுகின்றன.
பெரு நகரங்களில் ரவுடிகளையும், மாஃபியா கும்பலையும் தூண்டிவிட்டு சுபாரி கொலைகள் நடத்தப்படுவதைப் போல, ஆர்.எஸ்.எஸ். நேரடியாகத் தலையிடாமல், புதுப்புது இந்துத்துவா அமைப்புகளை உருவாக்கி, அதன் மூலம் தனது திட்டங்களைச் செயல்படுத்தி வருவதை அக்லக் படுகொலையில் மட்டுமின்றி, மலேகான் குண்டுவெடிப்பு தொடங்கி தபோல்கர், கோவிந்த் பன்சாரே, கல்புர்கி படுகொலைகள் வரையிலும் காண முடியும். ஆர்.எஸ்.எஸ். ஆட்கள் பா.ஜ.க.விற்கு சப்ளை செயப்படுவது போல, இப்புதிய இந்துத்துவா அமைப்புகளிலும் முன்னாள்/இந்நாள் ஆர்.எஸ்.எஸ். ஆட்கள் வேலை செகிறார்கள். முசுலீம் தீவிரவாத அமைப்பான அல்காய்தாவின் “ஸ்லீப்பர் செல்களை”ப் போல இந்த அமைப்புகள் ஆர்.எஸ்.எஸ்.-ன் மறைமுக ஆதரவோடு திடீர்த் தாக்குதல்களை நடத்தி வருகின்றன.
நோமன் அக்தர், ஜாஹித் அகமது பட்
இறைச்சிக்காகப் பசுவைக் கடத்துவதாகப் பழிபோடப்பட்டு அடித்துக் கொல்லப்பட்ட நோமன் அக்தர் (இடது) மற்றும் எரித்துக் கொல்லப்பட்ட ஜாஹித் அகமது பட்.
“பசுவைக் கொல்லுபவர்களைக் கொன்று போடுவோம்” என அறிவித்து, இமாச்சலப் பிரதேசத்தில் நோமன் அக்தரைப் படுகொலை செய்தது; காஷ்மீர்-உதம்பூரில் ஜாஹித்அகமதுவை எரித்துக் கொன்றது; ஜம்மு-காஷ்மீர் மாநில சுயேச்சை சட்டமன்ற உறுப்பினரான இன்ஜினீயர் ரஷீதின் முகத்தில் மையையும், ஆயிலையும் பூசியது; மாட்டுக் கறி விருந்தில் கலந்துகொண்ட கன்னட எழுத்தாளரும் நடிகையுமான சேத்னா தீர்த்தஹள்ளியைப் பாலியல் பலாத்காரம் செய்து, முகத்தில் ஆசிட் வீசப் போவதாக மிரட்டியது; கர்நாடகாவில் ஆஸ்திரேலிய நாட்டுச் சுற்றுப்பயணியான மாத்யூ கார்டன், எல்லம்மா என்ற பெண் தெவத்தின் உருவத்தைத் தனது காலில் பச்சைக் குத்தியதற்காக மிரட்டப்பட்டது என நீண்டுகொண்டே போகும் இத்தாக்குதல்களுக்கும் தமக்கும் சம்மந்தமில்லை என ஆர்.எஸ்.எஸ்.-பா.ஜ.க. கும்பல் சூடத்தைக் கொளுத்தி சத்தியம் செதபோதும், அதனை நம்புவதற்கு யாரும் தயாராக இல்லை.
தலை சும்மா இருக்க, வால் மட்டும் ஆடுகிறதா?
“இந்தியாவின் வளர்ச்சிக்காக மோடி உழைத்துக் கொண்டிருக்கும் வேளையில், இந்த அமைப்புகள் அவருக்கு முட்டுக்கட்டைப் போடுவதாக” மோடியின் ஆதரவாளர்கள் முன்வைக்கும் சப்பையான, மோசடியான வாதங்களை நயன்தாரா சேகல் உள்ளிட்ட பிரபலமான எழுத்தாளர்கள் எள்ளிநகையாடி அம்பலப்படுத்தியதோடு, தமக்கு அளிக்கப்பட்ட சாகித்ய அகாதமி விருதுகளைத் திருப்பி அளித்ததன் மூலம் மோடியின் முகத்தில் காரி உமிழ்ந்துவிட்டனர். “இந்தியாவை இந்து மத ஏகாதிபத்திய நாடாக மாற்ற பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசு முயல்வதைக் கண்டித்து” தமக்கு அளிக்கப்பட்ட பத்மபூஷண் விருதைத் திருப்பி அளிக்கப் போவதாக அறிவியலாளர்கள் புஷ்ப மித்ர பார்கவா, அசோக் சென், பி.பல்ராம் ஆகியோர் அறிவித்திருக்கின்றனர். “மதரீதியாக பிளவுபட்ட சமூகம் என்பது அணுகுண்டைவிடவும் நமது நாட்டுக்கு ஆபத்தானது. மாட்டிறைச்சி உண்பவர்கள், மூடநம்பிக்கைகளை எதிர்ப்பவர்கள் கொல்லப்படுவதைத் தடுத்து நிறுத்துங்கள்” எனக் குறிப்பிட்டு நூற்றுக்கும் மேற்பட்ட அறிவியலாளர்கள் அரசுத் தலைவருக்குக் கடிதம் எழுதியுள்ளனர். பிரதமர் மோடியின் கள்ளமௌனத்தைக் கண்டித்து ரொமிலா தாப்பர், இர்பான் ஹபிப் உள்ளிட்ட 53 வரலாற்று அறிஞர்கள் கண்டன அறிக்கையை வெளியிட்டுள்ளனர். இவை அனைத்தும் மோடியின் அரசு வர்க்க வேறுபாடுகளையும் கடந்து பெருவாரியான மக்களிடமிருந்து தனிமைப்பட்டு, அவர்களின் நம்பகத்தன்மையை இழந்து நிற்கிறது என்பதை எடுத்துக் காட்டுகின்றன.
சேத்னா தீர்த்தனஹள்ளி, மாத்யூ கார்டன்
கர்நாடகாவில் எழுத்தாளர்கள் நடத்திய மாட்டுக்கறி விருந்தில் கலந்து கொண்டதற்காக இந்து மதவெறிக் கும்பலால் அச்சுறுத்தும் வகையில் மிரட்டப்பட்ட கன்னட எழுத்தாளரும் நடிகையுமான சேத்னா தீர்த்தஹள்ளி (இடது). எல்லம்மா என்ற பெண் தெய்வத்தைத் தனது காலில் பச்சை குத்திக் கொண்டதற்காக இந்து மதவெறிக் கும்பலால் நடுத்தெருவில் அச்சுறுத்தப்பட்ட ஆஸ்திரேலிய நாட்டு சுற்றுலா பயணி மாத்யூ கார்டன்
இந்த எதிர்வினைகளுக்கு நியாயமான பதிலை அளிக்க முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ள மோடி அரசு, தன்னைக் குற்றஞ்சாட்டுபவர்களை காங்கிரசுகாரர்களாகச் சித்தரித்துத் தன்னை விடுவித்துக் கொள்ளும் கீழ்த்தரமான தந்திரத்தில் இறங்கியிருக்கிறது. நாட்டில் மத சகிப்புத்தன்மை நிலவ வேண்டும் எனக் கோரியிருக்கும் இந்த அறிவுத்துறையினரை, “சகிப்புத்தன்மையற்றவர்கள்” எனச் சாடியிருக்கும் அருண் ஜெட்லி, “இதனால் மோடி வெகுவாகப் பாதிக்கப்பட்டிருக்கிறார்” என்ற நகைக்கத்தக்கவிதமாக வாதாடி வருகிறார்.
தினமணி உள்ளிட்ட பார்ப்பனக் கும்பலால் வளர்ச்சியின் நாயகனாக முன்னிறுத்தப்படும் நரேந்திர மோடியின் உண்மை சொரூபத்தை அவ்வளவு எளிதாக மறைத்துவிட முடியாது. குஜராத்தில் முசுலீம்களுக்கு எதிராக மிகப்பெரும் படுகொலையை நடத்திவிட்டு, “காரில் செல்லும்போது ஒரு நாய்க்குட்டி குறுக்கே வந்து அடிபட்டால் எந்தளவிற்கு வருத்தப்படுவேனோ அதற்கு மேல் இதில் வருத்தப்பட எதுவுமில்லை” என அலட்சியமாகப் பதில் அளித்த இரக்கமற்ற கொடியவன்தான் மோடி. அப்படுகொலைக்குப் பிறகு நடந்த குஜராத் சட்டமன்றத் தேர்தலின்பொழுது முசுலீம்கள் ஐந்து பெண்டாட்டிகளைக் கட்டிக்கொண்டு, இருபத்தைந்து பிள்ளைகளைப் பெற்றுப் போடுவதாகப் பிரச்சாரம் செய்த கீழ்த்தரமான பேர்வழிதான் மோடி. கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்பொழுது ஆதிக்க சாதிகளைச் சேர்ந்த ‘இந்துக்களின்’ ஓட்டுக்களைப் பொறுக்குவதற்கு, ஏற்றுமதிக்காகப் பசுக்களைக் கொல்லும் இளஞ்சிவப்பு புரட்சியை காங்கிரசு அரசு நடத்தி வருவதாகக் குறிப்பிட்டு, தன்னைப் பசுவின் பாதுகாவலனாக முன்னிறுத்திக் கொண்ட தந்திரக்காரன்தான் மோடி. இப்பொழுது பீகார் தேர்தல் பிரச்சாரத்திலும் மோடி-அமித் ஷா கூட்டணி மாட்டிறைச்சி, பாக். எதிர்ப்பு என்ற இந்து மதவெறி அரசியலை முன்னிறுத்திதான் லல்லு-நிதிஷ்குமார் கூட்டணியை ‘இந்துக்களிடமிருந்து’ தனிமைப்படுத்திவிட முயன்று வருகிறது.
முசுலீம்களுக்கு எதிராக ஆபாசமாகவும், அவதூறாகவும் பேசி வரும் சங்கீத் சோம், மகேஷ் ஷர்மா, சாக்ஷி மகாராஜ், பலியான் ஆகியோரை அழைத்து பா.ஜ.க. தலைவர் அமித் ஷா கண்டித்திருப்பதாகக் கூறப்படுவதெல்லாம் வடிகட்டிய மோசடி மற்றும் பொய். இந்தக் கும்பலின் கட்சிப் பதவிகூட பறிக்கப்படவில்லை என்பது ஒருபுறமிருக்க, “அக்லக்கைக் கொலை செய்தவர்கள் அவரது மகளின் மேல் கைவைக்கவில்லை” என கீழ்த்தரமாகப் பேசிய கலாச்சாரத் துறை இணை அமைச்சருக்கு மோடி கொடுத்த பரிசு என்ன தெரியுமா? முன்னாள் அரசுத் தலைவர் அப்துல் கலாமிற்கு ஒதுக்கப்பட்டிருந்த அரசு பங்களா, இப்பொழுது மகேஷ் ஷர்மாவிற்கு அளிக்கப்பட்டிருக்கிறது. கேபினட் தகுதியுள்ள அமைச்சருக்குக்கூட, அவ்வளவு வசதிமிக்க பங்களா ஒதுக்கப்படவில்லை எனக் குறிப்பிடுகிறது, இந்து நாளிதழ்.
சிறீநகர் போராட்டம்
ஜம்மு-காஷ்மீரில் மாட்டுக் கறிக்குத் தடை விதிக்க வேண்டுமெனப் பரிந்துரை செய்த அம்மாநில உயர்நீதி மன்ற ஜம்முக் கிளையின் உத்தரவைக் கண்டித்து சிறீநகரில் நடந்த போராட்டம்
முந்தைய காங்கிரசு ஆட்சியைவிட, மோடியின் ஆட்சியில் மாட்டிறைச்சி ஏற்றுமதி இன்னும் அதிகரித்திருக்கிறது. காங்கிரசு ஆட்சியில் பசு மாட்டிறைச்சிதான் ஏற்றுமதி செயப்படுவதாகக் கூசாமல் குற்றஞ்சுமத்திய மோடி, தனது ஆட்சியில் எருமை மாட்டிறைச்சி மட்டுமே ஏற்றுமதி செய்யப்படுவதாகக் கூறி, தன்னை நியாயப்படுத்திக் கொள்கிறது. இதுவொருபுறமிருக்க, பசுவின் பாதுகாவலனாகத் தன்னை முன்னிறுத்தி வரும் உ.பி. சட்டமன்ற உறுப்பினரான சங்கீத் சோம், அல் துவா என்ற மாட்டிறைச்சி ஏற்றுமதி நிறுவனத்தின் முதலாளிகளுள் ஒருவன் என்பதும் தற்பொழுது அம்பலமாகியிருக்கிறது. மோடியும், அவரது கும்பலும் எத்தகைய மோசடிப் பேர்வழிகள் என்பதை இவை எடுத்துக் காட்டுகின்றன.
இவற்றுக்கு அப்பால், மைய அரசின் கல்வி, கலாச்சார, அறிவியல், வரலாற்று ஆராய்ச்சி மையங்கள் அனைத்திலும் ஆர்.எஸ்.எஸ். பின்னணி கொண்டவர்களை, அவ்வமைப்புகளின் தலைவர்களாக, இயக்குநர்களாக நியமிப்பதோடு, அந்த அமைப்புகளையே இந்துத்துவா கருத்தியல் தளங்களாக மாற்றுவதையும் நோக்கமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது, மோடி அரசு. லலித் கலா அகாடெமி, ரிக் வேதம் முதல் ரோபா வரை என்ற கண்காட்சியை சமீபத்தில் நடத்தியிருப்பதையும், மைய அறிவியல் மற்றும் தொழில் ஆராச்சி கவுன்சில் நடத்திய இயக்குநர்கள் மாநாட்டில் ஆர்.எஸ்.எஸ். ஆட்கள் கலந்து கொண்டிருப்பதையும் அரசு காவிமயமாக்கப்படுவதன் உதாரணங்களாகக் குறிப்பிடலாம்.
06-beef-policingஆர்.எஸ்.எஸ்.-பா.ஜ.க. அமைப்பிற்குள் மிதவாதிகள், தீவிரவாதிகள் என இரு பிரிவினர் இருப்பது போன்ற கட்டுக்கதையைப் பார்ப்பன ஏடுகள் வெகுகாலமாகவே திட்டமிட்டே பரப்பி வருகின்றன. வாஜ்பாயி மிதவாதியாகவும், அத்வானி தீவிரவாதியாகவும்; அதன் பின்னர் அத்வானி மிதவாதியாகவும், மோடி தீவிரவாதியாகவும்; இப்பொழுது மோடி வளர்ச்சி நாயகனாகவும், சங்கீத் சோம், சாக்ஷி மகாராஜ் உள்ளிட்டோர் தீவிரவாதிகளாகவும் இந்த ஏடுகளால் திட்டமிட்டே சித்தரிக்கப்படுகின்றனர். கழுதை விட்டையில் முன்விட்டை என்ன, பின்விட்டை என்ன? பசுவதை எதிர்ப்பை முன்வைத்து முசுலீம்களும் தாழ்த்தப்பட்டோரும் தாக்கப்படுவதை சங்கீத் சோமும், சாக்ஷி மகாராஜும் கவனித்துக் கொள்கிறார்கள் என்றால், அரசு கட்டமைவை காவிமயமாக்குவதை மோடி கவனித்துக் கொள்கிறார். இதுதான் அவர்களுக்கு இடையே இப்பொழுதுள்ள வேலைப் பிரிவினை!
06-courts-for-beefவளர்ச்சியைச் சாதிப்பேன், ஊழலை ஒழிப்பேன் எனத் தம்பட்டம் அடித்து ஆட்சியைப் பிடித்த மோடி கும்பல், தனது தேர்தல் வாக்குறுதிகளில் ஒரு சிறு துளியைக்கூட நிறைவேற்ற முடியாமல் தோல்வி அடைந்து, ஒண்ணரை ஆண்டுகளுக்குள்ளாகவே மக்களின் நம்பிக்கையை இழந்துவிட்டது. இன்னொருபுறத்தில் முந்தைய காங்கிரசு அரசைவிட வேகமாகவும் விசுவாசமாகவும் நாட்டின் அனைத்துத் துறைகளையும் முற்றிலுமாக ஏகாதிபத்திய நிறுவனங்களின், உள்நாட்டு தரகு முதலாளிகளின் கொள்ளைக்குத் திறந்துவிட முயன்று வருகிறது. மேலும், அரசு கட்டமைவை வேகவேகமாக காவிமயமாக்கி வருகிறது. இவற்றுக்கு எதிராகத் தொழிலாளர்கள், விவசாயிகள், பொதுத்துறை நிறுவன ஊழியர்கள், அறிவுத்துறையினர் ஆகியோரிடமிருந்து எழும் எதிர்ப்பைத் திசை திருப்ப ஆர்.எஸ்.எஸ்.-பா.ஜ.க. கும்பல் இந்து மதவெறி உணர்வையும் மோதல்களையும் திட்டமிட்டே தூண்டிவருகிறது. இதன் மூலம் தனது ஆட்சியை மக்களின் எதிர்ப்பிலிருந்து காப்பாற்றிக் கொள்வதோடு, சமூகத்தின் மீது இந்து மதவெறி அமைப்புகளின் சட்டத்திற்கு அப்பாற்பட்ட மேலாண்மையை, கண்காணிப்பை நிறுவிக் கொள்ளவும் முயலுகிறது. சுருக்கமாகச் சொன்னால், மறுகாலனியாதிக்கத்திற்கு ஏற்ப ஒரு இந்து ராஷ்டிரத்தை அமைப்பதை நோக்கமாகக் கொண்டு செயல்படுகிறது, மோடி அரசு.
எனவே, மோடி தலைமையில் உள்ள மைய அரசு இந்து மதவெறி தாக்குதல்களைத் தடுத்து நிறுத்திவிடும்; நாட்டின் சகிப்புத்தன்மையைக் காப்பாற்றும் என நம்பிக் கொண்டிருப்பது தற்கொலைக்கு ஒப்பானது. மாறாக, மக்களிடமிருந்து தனிமைப்பட்டு நிற்கும் மோடி ஆட்சியை மக்கள் அதிகாரத்தின் மூலம் அகற்றுவதும்; ஆக்டோபஸ் போல பல கொடுங்கரங்களைக் கொண்டிருக்கும் ஆர்.எஸ்.எஸ்.-பா.ஜ.க. கும்பலை நேருக்கு நேர் நின்று மோதி வீழ்த்துவதன் மூலம் மட்டுமே நாட்டைக் கவ்வியிருக்கும் பார்ப்பன பாசிச பயங்கரவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும்.
– செல்வம் வினவு.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக