திங்கள், 2 நவம்பர், 2015

சாதி சாதி ..நாயர்- ரெட்டி- கவுடா -பட்டீல்- முதலியார்- கவுண்டர் -செட்டியார் -நாயக்கர்.........ரிவேஸ் கியரில் நாடு?

nisaptham.com : எங்கே பார்த்தாலும் சாதிதான். திரும்பிய பக்கங்களிலெல்லாம் சாதிய வாசகங்களுடன் போஸ்டர் அடித்து வைத்திருக்கிறார்கள். சுதந்திரப் போராட்ட வீர்ர்களிலிருந்து சினிமா நடிகர்கள் வரை அத்தனை பேருக்கும் ஒரு சாதி முத்திரையைக் குத்தியாகிவிட்டது. ஒருவரைத் தப்பிக்கவிடுவதில்லை. இந்தியாவில் அத்தனை மாநிலங்களிலும் தங்களின் சாதியைப்  பெயருடன் சேர்த்து வைத்துக் கொள்கிறார்கள். நாயர்களும் ரெட்டிகளும் கோஷ்களும் கெளடாக்களும் பட்டீல்களும் இன்னபிற சாதியினரும் பெருமையாகக் காட்டிக் கொள்கிறார்கள். தமிழகத்தில் மட்டும்தான் பெயருக்குப் பின்னால் சாதியைச் சேர்த்துக் கொள்ளாத ஒரு பக்குவம் இருந்தது. அறுபதுகளுக்குப் பிறகு முதலியார், கவுண்டர், செட்டியார், நாயக்கர் என்கிற விகுதிகள் பெயர்களிலிருந்து உதிர்ந்து போயின. அதைப் பக்குவம் என்றுதான் சொல்ல வேண்டும். உள்ளுக்குள் சாதிப்பாசம் இருந்தாலும் அதை வெளிப்படையாகக் காட்டிக் கொள்கிற தயக்கம் உருவாகியிருந்தது. ஆனால் அதை வெகு வேகமாகச் சிதைத்துக் கொண்டிருக்கிறோம்.
கடந்த பதினைந்து இருபதாண்டுகளில் தங்களுடைய சாதிய அடையாளத்தை பெருமிதத்துடன் காட்டிக் கொள்ளும் பெருங்கூட்டம் உருவாகிக் கொண்டிருக்கிறது. ‘அப்படிக் காட்டிக் கொள்வதில் என்ன தவறு?’ என்று கேட்கலாம்தான். இப்போதைக்கு எந்தத் தவறும் இல்லாதது போல்தான் தெரியும். இப்படியே இன்னும் சில வருடங்கள் கடந்தால் தெரியும். அவனவன் சாதிப் பெருமையைக் காட்டிக் கொள்ள அடுத்தவன் கழுத்தில் கத்தியை வைக்கத் தொடங்குவான். இப்பொழுதே அப்படியொரு சூழல்தானே இருக்கிறது?
இணையம், ஃபேஸ்புக், ட்விட்டர், வாட்ஸப் என்று வசதிகளும் வாய்ப்புகளும் பெருகப் பெருக அவற்றை வேறு எந்தக் காரியத்துக்கு பயன்படுத்திக் கொள்கிறோமோ இல்லையோ- சுயசாதி பெருமைக்கு மிகுந்த திறனுடன் பயன்படுத்திக் கொள்பவர்களாக நாம் மாறிக் கொண்டிருக்கிறோம் என்று தோன்றுகிறது. சாதியக் குழுவில் இயங்குபவர்களில் கணிசமானவர்கள் மாணவர்களாகவும் இளைஞர்களாகவும் இருக்கிறார்கள் என்பதுதான் கொடுமை. ஆண்கள் பெண்கள் என்றெல்லாம் பாகுபாடில்லை. ஒரு சாதியைப் பற்றி ஏதேனும் எதிர்மறையாகப் பேசினால் புரிந்து கொள்ளலாம். ஆண்களாக இருந்தால் ‘உன்னை வெட்டுவேண்டா’ என்பார்கள். பெண்களாக இருந்தால் ‘நீங்கள் அப்படி பேசியிருக்கக் கூடாது’ என்பார்கள். அவ்வளவுதான் வித்தியாசம். ஆனால் ஆண் பெண் என்ற வித்தியாசமில்லாமல் சாதியப் பற்று புரையோடிக் கொண்டிருக்கிறது. குழுமங்களிலும் விவாதங்களிலும் பெருக்கெடுக்கும் இத்தகைய சாதிய உணர்வில் ரத்தத்தை சூடேற்றிக் கொள்கிறார்கள். தமிழகத்தில் கிட்டத்தட்ட அத்தனை சாதியிலும் வெறியெடுத்துத் திரிபவர்கள் கணிசமாக இருக்கிறார்கள். எவ்வளவு மட்டமாக வேண்டுமானாலும் கீழே இறங்குகிறார்கள். தங்களை ஆண்டவர்கள் என்று சொல்லி பெருமையும் அடுத்தவர்களை அடிமைகள் என்று சொல்லி இளக்காரமும் பேசுகிறார்கள். மறுப்பவர்களை நோக்கி எந்தவிதத் தயக்கமுமில்லாமல் ஆயுதங்களைத் தூக்குகிறார்கள். துரத்தி வெட்டுகிறார்கள். எவ்வளவு மோசமான சூழல் இது?
ஒரு சாதியினர் தவறு செய்யும் போது அவர்களை நோக்கி எந்த விரலையும் நீட்ட முடிவதில்லை. விரலோடு சேர்த்து கைகளையும் வெட்டுவதாகச் சொல்லி வரிசை கட்டுகிறார்கள். சாதியைப் பொறுத்தவரையில் வெளிப்படையான விமர்சனம், விவாதம் என்பதற்கெல்லாம் சாத்தியமில்லாமல் ஆகிக் கொண்டிருக்கிறது. அடுத்த சாதி குறித்தான விமர்சனம் என்பதெல்லாம் இரண்டாம்பட்சம். அவரவர் சாதியில் கூட குறைகளைப் பேச முடிவதில்லை. ‘எங்களை மட்டும் ஏன் குற்றம் சொல்லுற? அவனுக மட்டும் யோக்கியமா?’ என்று இன்னொரு சாதியைச் சுட்டிக் காட்டுகிறார்கள். ‘அவனை நிறுத்தச் சொல்லு நான் நிறுத்தறேன்’ என்று புஜபலம் காட்டுகிறார்கள். இப்படி அடுத்தவனைக் கைகாட்டியபடியே ஆளாளுக்கு ஆயுதங்களைத் தூக்கிக் கொண்டிருக்கிறார்கள். சற்று பயமாகத்தான் இருக்கிறது. எந்தவித பக்குவமும் இல்லாமல் ஒரு கூட்டமே சாதிய வெறியுடன் திரிகிறது. ‘என் சாதிக்காக எவன் தலையை வேண்டுமானாலும் சீவுவேன்’ என்கிற வெறித்தனம் பயமூட்டாமல் என்ன செய்யும்? சாதியத் தலைவர்கள் இதை ரசிக்கிறார்கள். தங்களது ஆட்கள் ஏந்தி நிற்கும் ஆயுதங்களில் சொட்டுகிற மற்ற சாதிக்காரனின் ரத்தத்தை நாக்கில் தொட்டுச் சுவைத்தபடியே புன்னகைக்கிறார்கள். இந்த வெறியும் வேகமுதான் அவர்களுக்கு மூலதனம். ‘என் சாதிக்காரன் இத்தனை பேர் என் பின்னால் நிற்கிறான்’ என்று சொல்லிக் கொள்வதுதான் அவர்களுக்கான அறுவடை. ‘என் இனமே திரண்டு வா’ என்கிறார்கள். தோளில் துண்டைச் சுற்றிக் கொண்டு விடலைகளின் கூட்டம் திரள்கிறது.
ஏன் இப்படியொரு சூழல் உருவாகியிருக்கிறது? யாரைக் குற்றம் சொல்வது? தேர்தலுக்குத் தேர்தல் பெயர் தெரியாதவனையெல்லாம் அழைத்து பெட்டியைக் கொடுத்து தோளில் சால்வையைச் சாத்தி நிழற்படம் எடுத்துக் கொண்ட அரசியல் தலைவர்களைச் சொல்ல வேண்டும். அத்தனை சாதிகளிலும் தனது சாதிய அடையாளத்தை வைத்து அறுவடை செய்ய விரும்புகிறவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்கள் தலைவர்களாகத் தலையெடுக்கிறார்கள். ஒவ்வொரு சாதியிலும் நான்கைந்து தலைவர்கள் உருவாகிறார்கள் அல்லது உருவாக்கப்படுகிற. இரண்டு பேரை இந்தக் கட்சி கொம்பு சீவினால் அந்தக் கட்சி மற்ற இருவருக்கு பரிவட்டம் கட்டுகிறது. இந்தச் சாதிய உணர்வை மட்டுப்படுத்துவதற்கான எந்தவிதமான நடவடிக்கைகளையும் எந்த அரசாங்கமும் எடுக்கப் போவதில்லை போலிருக்கிறது. சாதிய அடையாளத்துடன் எந்தத் தவறு செய்தாலும் தடுப்பதற்கு நடவடிக்கை எடுப்பதற்கும் அதிகாரிகள் தயங்குகிறார்கள். காவல்துறையை சாட்சியாக நிறுத்தி குருதி வேடிக்கை காட்டுகிறார்கள் சாதியத் தலைவர்கள். ‘நம் இனத்தின் உரிமையைக் காப்பாற்ற நான் மட்டும்தான்’ என்கிறார்கள். அத்தனையும் புரட்டுவாதம். அவனவன் வயிறு அவனவன் பிழைப்பு.
‘தலித் விடுதலையை முன்னெடுப்பேன்’ என்று பேசுகிறவனும் அயோக்கியனாக இருக்கிறான் ‘பிசிஆர் சட்டத்தில் நம் இனத்தை சிக்கவைக்கும் கீழ்சாதிக்காரனை அழிப்பேன்’ என்று பேசுகிறவனும் அயோக்கியனாக இருக்கிறான். இரண்டு பேரையும் தட்டிக் கொடுக்கும் அரசியல்வாதியும் அயோக்கியனாக இருக்கிறான். எப்படி விளங்கும்?
எல்லாமும் வாக்கு அரசியலில் வந்து நிற்கிறது. எந்தச் சாதியின் மீது கை வைத்தாலும் அந்தச் சாதியின் வாக்குகளை வளைத்துக் கொள்ள மற்றொரு கட்சி நாக்கினைத் தொங்கப் போட்டுக் கொண்டு நிற்கிறது. எப்படித் துணிவார்கள்? நேற்று முளைத்த அரசியல் காளான்கள் எல்லாம் சுள்ளான்களாகத் துள்ளுவதற்கு இது அடிப்படையான காரணம். காலங்காலமாக மட்டுப்பட்டிருந்த சாதிய உணர்வை பீய்ச்சியடிக்கச் செய்வது அதிதீவிரமான ஆபத்துக்களை விளைவிக்கப் போகிறது. சாதிய உணர்வுக்கும் வெறிக்கும் வித்தியாசம் இருக்கிறது. இங்கு பரவிக் கொண்டிருப்பது வெறி. அதற்குத்தான் தூபம் போட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஒரு பெரியவரிடம் பேசிக் கொண்டிருக்கும் போது சொன்னார் ‘சாதிங்கிறது அந்தரங்க உறுப்பு மாதிரி. எல்லோருகிட்டவும்தான் இருக்குது...என்கிட்ட இருக்கிறதுதான் பெஸ்ட் என்று அம்மணமாகத் திரிவதைப் போன்ற கேவலம் வேறு எதுவும் இருக்க முடியாது’ என்று. அவர் சொன்னது சரிதான். துரதிர்ஷ்டவசமாக அந்தக் கேவலத்தைத்தான் செய்து கொண்டிருக்கிறோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக