வியாழன், 26 நவம்பர், 2015

மது ஒழிப்பு பாடகர் கோவன் கலைஞரை சந்தித்தார் !

மது ஒழிப்புப் பிரச்சாரப் பாடல்களைப் பாடி, தமிழக அரசால் கைதுசெய்யப்பட்ட இடதுசாரிப் பிரச்சாரப் பாடகர் கோவன் தி.மு.க. தலைவர் கருணாநிதியை இன்று அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினார். கருணாநிதியை சந்தித்து மதுவிலக்கு பிரசாரக் கூட்டத்துக்கு ஆதரவு கோரிய இடதுசாரிப் பாடகர் கோவன் இந்த சந்திப்பின்போது மது ஒழிப்பிற்கு அதரவு கோரிய கோவன், தான் கைதுசெய்யப்பட்டபோது அதனைக் கண்டித்ததற்காக நன்றி தெரிவித்தார்.
இதற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய கோவன், வரும் டிசம்பர் மாதத்தில் மது ஒழிப்பிற்காக ஒரு பொதுக்கூட்டம் ஒன்றை நடத்தப்போவதாகவும் அதற்கு ஆதரவு கோரி அனைத்துக் கட்சித் தலைவர்களையும் சந்தித்துவருவதாகவும் அதன் ஒரு பகுதியாகவே தி.மு.க. தலைவர் கருணாநிதியைச் சந்தித்ததாகவும் தெரிவித்தார். அ.இ.அ.தி.மு.க., பாரதீய ஜனதாக் கட்சி ஆகிய கட்சிகளைத் தவிர அனைத்துக் கட்சியினரையும் சந்தித்து ஆதரவு கோரப்போவதாகவும் கோவன் தெரிவித்தார்.

இந்த சந்திப்பின்போது தி.மு.க. பொருளாளர் மு.க. ஸ்டாலின் உடனிருந்தார். 'மூடு டாஸ்மாக்கை மூடு' உள்ளிட்ட மது எதிர்ப்புப் பாடல்களை தான் சார்ந்த மக்கள் அதிகாரம் இயக்கத்தின் சார்பாக கோவன் பாடிவந்தார். இதையடுத்து அவர் மீது தேசத் துரோக வழக்குத் தொடர்ந்த தமிழக அரசு அவரைக் கைதுசெய்தது. இதையடுத்து தன்னை போலீஸ் காவலில் எடுக்கக்கூடாது என சென்னை உயர் நீதிமன்றத்தில் தடை உத்தரவு பெற்ற கோவன், ஜாமீனில் வெளியில் வந்துள்ளார்.bbc.tamil.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக