செவ்வாய், 3 நவம்பர், 2015

மதுவிலக்கு போராட்டம் ஒவ்வொரு தடவையும் ஏன் தோற்கிறது? லஞ்சம் வாங்கும் அரசியல்வாதிகள்- கட்சிகள்- சமயவாதிகள்.....காசு பணம் துட்டு ...

"ஒவ்வொரு முறையும் மதுவிலக்குப் போராட்டம் நீர்த்துப்போகக் காரணமாக இருப்பது, அரசியல் கட்சிகள் இந்த விவகாரத்தின் மீது போதிய அளவிலான தீவிரம் காட்டாததே.
" மக்கள் கலை இலக்கிய கழகத்தின் பாடகர் கோவன் கைதும், தமிழக முதல்வரை தரக்குறைவாக விமர்சித்ததற்காக அவர் மீது தேசத் துரோக வழக்கு பாய்ந்துள்ளதும் தமிழகத்தில் பூரண மதுவிலக்குக்கான போராட்டத்தின் மீது மீண்டும் அரசியல் வெளிச்சத்தை பாய்ச்சியுள்ளது.
கோவன் கைது செய்தி வெளியான சில மணி நேரங்களிலேயே எதிர்க்கட்சிகள் வரிசையாக தனது கண்டனக் குரலை பதிவு செய்யத் தொடங்கின. இருப்பினும், இவ்விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்று திரளவில்லை. சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும் ஒரு சில மாதங்களே இருக்கும் நிலையிலும்கூட கட்சிகள் மதுவிலக்கு போராட்டத்துக்காக ஓரணியில் திரள்வதற்கான அறிகுறிகள் தென்படவில்லை.
இது குறித்து அரசியல் பார்வையாளர்கள் கூறும்போது, "கடந்த ஜூலை மாதம் மதுவிலக்கு பிரச்சாரகர் சசிபெருமாள் மரணத்துக்குப் பிறகு உச்சம் கண்ட போராட்டம் சில வாரங்களிலேயே நீர்த்துப்போனது. ஒவ்வொரு முறையும் போராட்டத்தின் துவக்கம் பிரம்மாண்டமாக இருந்தாலும், அது விரைவில் நீர்த்துவிடுகிறது. இதற்குக் காரணம் எதிர்க்கட்சிகளுக்கிடையே இணக்கம் இல்லாததே. மேலும், அரசியல் நிர்பந்தங்கள் காரணமாகவும் மதுவிலக்குப் போராட்டத்தில் எதிர்க்கட்சிகள் ஒன்றாக கைகோக்க முடியாத சூழல் நிலவுகிறது" என்றனர்.
இதேபோல், மதுவிலக்கு கோரி மாணவர்கள் நடத்திய போராட்டமும் சுவடு தெரியாமல் முடிந்துபோனது. மதுவிலக்குப் போராட்டங்கள் வலுத்துக் கொண்டிருந்த வேளையில்தான் தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவன் தமிழக முதல்வர் ஜெயலலிதா - பிரதமர் மோடி சந்திப்பை விமர்சித்துப் பேசியது சர்ச்சையானது. பின்னர், மதுவிலக்குப் போராட்டம் திசை திரும்பி இளங்கோவனுக்கு எதிரான கண்டான போராட்டங்கள் அதிகரித்தது.
இந்த சூழ்நிலையில், தமிழக அமைச்சர் நத்தம் விசுவநாதன் ஓர் அறிவிப்பை வெளியிட்டார். "மதுவிலக்கு என்பது தற்போதைய சூழலில் தமிழகத்தில் சாத்தியமில்லை" என அனைத்துப் போராட்டங்களுக்கும் முற்றுப்புள்ளி வைக்கும்விதமாகக் கூறினார்.
அந்த அறிவிப்புக்குப் பின்னர் போராட்டத்தை வலுப்படுத்தியிருக்க வேண்டிய கட்சிகள் ஏனோ அவ்வாறு செய்யவில்லை. ஆனால், ஒவ்வொரு கட்சியும் தனிப்பட்ட முறையில், "நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மதுவிலக்கு அமலுக்கு வரும்" என்ற வாக்குறுதியை மட்டும் அளித்தன.
மதுவிலக்கு போராட்டங்கள் குறித்து முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி எம்.ஜி.தேவசகாயம் கூறும்போது, "எதிர்க்கட்சிகள் வெற்று வாக்குறுதிகளை அள்ளி வீசுகின்றன. டாஸ்மாக் வருமானம் மூலமாக மட்டுமே நலத்திட்டங்கள் செயல்படுத்தப்படுவதுபோல் ஒரு மாயையை எதிர்க்கட்சிகள் உருவாக்கியுள்ளன. டாஸ்மாக் வருமானம் இல்லாவிட்டால் நலத்திட்டங்களை செயல்படுத்த நிதிப் பற்றாக்குறை ஏற்படுமோ என்ற அச்சமும் மதுவிலக்கு போராட்டத்துக்கான ஆதரவு பெருகாததற்கு காரணம். மாற்று வருவாய்க்கு உகந்த வழியை கட்சிகள் கண்டறிய வேண்டும்.
ஆனால், எதிர்க்கட்சிகள் என்ன செய்கின்றன. மதுவிலக்கு எனும் கோரிக்கையை வைத்து அரசியல் செய்கின்றன. டாஸ்மாக் வருமானத்தை ஈடுகட்ட மாற்று வழி என்ன என்பது குறித்து எந்த ஒரு கட்சியும் இதுவரை துளியும் யோசிக்கவில்லை. வெற்று வாக்குறுதிகளால் மட்டும் மக்கள் அபிமானத்தை பெற முடியாது" என்றார்.
சென்னை பல்கலைக்கழக அரசியல் அறிவியல் துறை பேராசிரியர் ஆர்.மணிவண்ணன் கூறும்போது, "தேர்தல் நெருங்கும்போது அதிமுக, திமுக-வுடன் கூட்டணி ஏற்படுத்த முற்படும் அரசியல் கட்சிகள் சில சமரசங்களை செய்து கொள்ளத் தயாராக இருக்கும் என்பதில் ஐயமில்லை. வாக்குவங்கி அழுத்தத்தால் மதுவிலக்கு பிரச்சாரங்களை மட்டுப்படுத்த வேண்டிய சூழல் ஏற்படலாம்.
ஆனால், மிகப்பெரிய வருத்தம் அளிப்பது என்னவென்றால் நாடு முழுவதும் சாமானிய மக்கள் மீது அரசுகள் அக்கறை காட்டாமால் இருப்பதே" என்றார்.
தமிழில்: பாரதி ஆனந்த்    tamil.thehindu.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக