ஞாயிறு, 15 நவம்பர், 2015

வானிலை அறிவிப்பால் மிரண்டு போயுள்ளனர் சென்னைவாசிகள்

சென்னை: வெளுத்து வாங்கும் வடகிழக்கு பருவமழையால், சென்னை நகரமே வெள்ளக்காடாக மாறிவிட்டது. சாலைகள், குடியிருப்பு
பகுதிகளை வெள்ளம் சூழ்ந்திருப்பதால், வீடுகளில் சிறைபட்டு கிடக்கும் மக்கள், அத்தியாவசிய தேவைகளுக்குகூட பரிதவிக்கின்றனர். மழை இன்னும் தீவிரமடையுமென்ற வானிலை மையத்தின் அறிவிப்பால், மிரண்டு போயுள்ளனர்
சென்னைவாசிகள். ஒரு கண்ணில் வெண்ணெய்; மறு கண்ணில் சுண்ணாம்பு: அ.தி.மு.க., கட்சி தலைமை அலுவலகம் முன், மழைநீர் தேங்காமல் இருக்க, 25க்கும் மேற்பட்ட மாநகராட்சி ஊழியர்கள், சீரமைப்பு பணியை மேற்கொண்டு வருகின்றனர். ஆனால் அதன் அருகிலேயே ஒரு தெருவில், குளம் போல் தேங்கியுள்ள மழைநீரை வெளியேற்ற ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. கனமழையால், சென்னையின் பல பகுதிகள், வெள்ளத்தில் மூழ்கி உள்ளன. குறிப்பாக ராயபுரம், தண்டையார்பேட்டை, பெரம்பூர், திரு.வி.க., நகர் உள்ளிட்ட வடசென்னைவாசிகள் மழைநீரில் தத்தளித்து வருகின்றனர்.

மழைநீருடன் கழிவுநீர் கலந்துள்ளதால், வீட்டை வீட்டு வெளியே வர முடியவில்லை. இந்த நிலையில், ராயப்பேட்டை யில், அ.தி.மு.க., கட்சி தலைமை அலுவலகம் உள்ள, அவ்வை சண்முகம் சாலையில், தேங்கியிருந்த மழைநீர் வடிந்து, சிறிதளவே தண்ணீர் தேங்கி இருந்தது. அதுகுறித்து, கட்சி அலுவலகத்தில் இருந்து, மேயருக்கு அலைபேசி மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.இதையடுத்து, அவ்வை சண்முகம் சாலை, ராயப்பேட்டை நெடுஞ்சாலை சந்திக்கும் இடத்தில் உள்ள மழைநீர் வடிகாலை சீரமைக்கும் பணி நேற்று காலையிலேயே ஜரூராக துவங்கியது.இதற்காக, மூன்று ஜே.சி.பி., இயந்திரங்கள், இரண்டு சூப்பர் சக்கர் இயந்திரங்கள் ஆகியவை கொண்டு வரப்பட்டன. ௨௫க்கும் மேற்பட்ட மாநகராட்சி ஊழியர்கள் களமிறக்கப்பட்டனர். மத்திய வட்டார துணை கமிஷனர் அருண் சுந்தர் தயாளன், தேனாம்பேட்டை மண்டல அலுவலர், மண்டல பொறியாளர், மண்டல உதவி செயற்பொறியாளர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் குவிந்தனர்.அவர்கள் இட்ட கட்டளைக்கேற்ப, மழைநீர் வடிகாலை துார்வாரும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர். இதற்காக, நடைபாதை முழுவதும் பெயர்த்தெடுக்கப்பட்டது. இன்றும் பணி தொடரும் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதுகுறித்து, பகுதிவாசிகள் கூறியதாவது:அவ்வை சண்முகம் சாலை, ராயப்பேட்டை நெடுஞ்சாலையில் துவங்கி, கோபாலபுரம் வரை உள்ளது. அதில், ராயப்பேட்டை நெடுஞ்சாலை முதல் டி.டி.கே., சாலை வரையில் உள்ள, மழைநீர் வடிகாலை துார்வாரும் பணியை, மாநகராட்சியினர் மேற்கொண்டனர். ஆனால், அந்த சாலையை ஒட்டியுள்ள அவ்வை சண்முகம் சாலை 1வது சந்து முழுவதும், தண்ணீர் குளம் போல் தேங்கி உள்ளதை யாரும் கண்டுகொள்ளவில்லை. இது 'ஒரு கண்ணில் வெண்ணெய்; மறு கண்ணில் சுண்ணாம்பு' என்ற பழமொழியைத் தான் நினைவுபடுத்துகிறது. எப்படியாவது, துார்வாரினால் சரி தான்.இவ்வாறு அவர்கள் கூறினர். >இயல்பு வாழ்க்கையை புரட்டி போட்ட மழை:
>காஞ்சிபுரம் மாவட்டத்தில், நேற்று முன்தினம் பெய்த மழையின் பாதிப்பிலிருந்து, நகரவாசிகள் மீள முடியாமல் உள்ளனர். ஏற்கனவே, ஆறு பேர் இறந்ததை தொடர்ந்து, மேலும் ஆறு பேர் இறந்துள்ளனர். நீர்நிலைகளுக்கு அருகில் வசிப்போரிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.காஞ்சிபுரம் மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள குடியிருப்பு பகுதிகள் நீரில் மூழ்கிஉள்ளன.காஞ்சிபுரம் மற்றும் வாலாஜாபாத் பகுதிகளில், அமைக்கப்பட்டுள்ள, 26 மழை பாதுகாப்பு மையங்களில், தங்க வைக்கப்பட்டுள்ளவர்களில், 2,000 பேருக்கு, வேட்டி - சேலை, படுக்கை, போர்வை ஆகியவை, மாவட்ட நிர்வாகம் சார்பில் நேற்று வழங்கப்பட்டு உள்ளன.வேகவதி மற்றும் செய்யாறு ஆறுகளில், தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது. பாலாற்றில் தண்ணீர் சென்ற வேகம் குறைந்து, ஆங்காங்கே குட்டை போல் தண்ணீர் தேங்கியுள்ளது.

காஞ்சிபுரம் நகரில், தேங்கிய மழைநீர் ஓரளவு வடிந்ததால், நகரவாசிகள் நிம்மதியடைந்துள்ளனர். நேற்று காலை நிலவரப்படி, பொதுப்பணி துறையின், 912 ஏரிகளில், 398 ஏரிகள், 100 சதவீதமும்; 319 ஏரிகள் 75 சதவீதமும்; 195 ஏரிகள், 50 சதவீதமும் நிரம்பியுள்ளன. ஊத்துக்காடு ஏரி உடைந்ததை தொடர்ந்து, நேற்று, அப்பகுதியில் ஆட்சியர் கஜலட்சுமி ஆய்வு செய்தார். இதையடுத்து, தென்னேரி ஏரியையும் அவர் பார்வையிட்டார்.மாமல்லபுரம், புதுப்பட்டினம், கோவளம் உட்பட பல்வேறு பகுதிகளில், நேற்று கடல் சீற்றமாக காணப்பட்டது. மீன்பிடி தொழில் பாதிக்கப்பட்டது. படகுகள், வலைகள் ஆகியவை, மேட்டு பகுதிகளில் பாதுகாக்கப்பட்டன.மழை காரணமாக ஏற்கனவே ஆறு பேர் இறந்ததை தொடர்ந்து, இரு நாட்களில் மட்டும், மேலும் ஆறு பேர் இறந்திருப்பது மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஸ்ரீபெரும்புதுார் ஏரி நீரில் அடித்து செல்லப்பட்ட, மணிகண்டன், 16, மற்றும் லோகநாதன் ஆகிய இரு சிறுவர்களையும், மீட்பு படையினர் தேடி வருகின்றனர். நேற்று, தென்னேரி ஏரியில் அடித்து செல்லப்பட்ட அயிமிச்சேரியைச் சேர்ந்த பிரேமா, 27, என்பவரது சடலம், நேற்று மாலை மீட்கப்பட்டது.இதேபோல், நேற்று முன்தினம், காஞ்சிபுரம் அடுத்த, ஏனாத்துார் ஏரியில் அடித்து செல்லப்பட்ட கோனேரிக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த குமரவேல் மகன்கள், சதீஷ்குமார், 16; சரத்குமார், 18, ஆகிய இருவரது சடலங்களும் நேற்று மீட்கப்பட்டன. பாலாற்றில் அடித்து செல்லப்பட்ட முரளி, 21, என்பவரின் சடலமும் நேற்று மீட்கப்பட்டது.>பூண்டி நீர்த்தேக்கத்தில் நீர்மட்டம் 'விர்': பூண்டி நீர்த்தேக்கத்தில், தொடர் மழையால் நீர்மட்டம் அதிகரித்து உள்ளது.திருவள்ளூர் மாவட்டத்தில், தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், 12 ஆண்டுகளுக்கு பின், கூவம் ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதை பொதுமக்கள் ஆர்வமாக கண்டுகளித்து வருகின்றனர்.கொற்றலை ஆற்றில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ள நீர், சென்னை நகரின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் முக்கிய ஏரிகளில் ஒன்றான பூண்டி நீர்த்தேக்கத்திற்கு வந்து கொண்டிருக்கிறது. இதனால், நீர்த்தேக்கத்தில், 1,436 மில்லியன் கனஅடி தண்ணீர் உள்ளது. வினாடிக்கு, 5,600 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. சென்னை நகரின் குடிநீர் தேவைக்காக, வினாடிக்கு, 50 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

- நமது நிருபர் குழு - dinamalar.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக