சனி, 14 நவம்பர், 2015

உயில் சொத்து மனைவிக்கே; வாரிசுக்கு அல்ல

புதுடில்லி: மனைவிக்கு கணவன் எழுதி வைத்த சொத்து மீது, மகன்கள் உரிமை கோர முடியாது' என சுப்ரீம் கோர்ட், அதிரடி தீர்ப்பு வழங்கிஉள்ளது. ந்திராவைச் சேர்ந்தவர் வெங்கட சுப்பா. இவர், 1920ல், தன் உயிலில், மூன்றாவது மனைவி, வீரராகவம்மாவுக்கு, ராஜமுந்திரியில் உள்ள வீட்டை எழுதி வைத்தார். ஆனால், வாரிசு இல்லாத வீரராகவம்மா, தன் வீட்டை, சுப்பாராவ் என்ற உறவினருக்கு, 1976ல் கொடுத்து விட்டார். இந்நிலையில், அந்த வீட்டை, வெங்கட சுப்பாவின் இரண்டாவது மனைவி மகன் நரசிம்மராவ், பார்த்தசாரதி என்பவருக்கு விற்பனை செய்துள்ளார். இதை எதிர்த்து, சுப்பாராவ் தொடர்ந்த வழக்கில், 'சொத்தில் வாரிசுக்கு உரிமை உள்ளது' எனக் கூறிய கீழ் கோர்ட், வீடு விற்பனையை நிறுத்தி வைத்தது. ஆனால், ஐகோர்ட்டில் செய்த மேல்முறையீட்டில், சுப்பராவுக்கு சாதகமாக தீர்ப்பு வந்தது. இதை எதிர்த்து, நரசிம்மராவ் வாரிசுகள், சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தனர்.


இந்த வழக்கை விசாரித்த, நீதிபதி எம்.ஒய்.இக்பால் தலைமையிலான அமர்வு, நேற்று அளித்த தீர்ப்பு: இந்து சட்டப்படி, மனைவியை கணவன் பராமரிக்க வேண்டும். அதனால், கணவன் ஒதுக்கும் சொத்துக்களை, பரிபூரணமாக அனுபவிக்கும் உரிமை, மனைவிக்கு உள்ளது. இதற்கான உரிமையை, இந்து வாரிசு சட்டம், பிரிவு - 14 வழங்குகிறது. அதனால், விதவையின் சொத்துக்கு, வாரிசுகள் உரிமை கோர முடியாது.

கணவன், 'என் சொத்தை, மனைவி, தன் வாழ்நாள் முழுவதும் அனுபவிக்கலாம்' என, உயில் எழுதியிருந்தால் கூட, அந்த சொத்து, மீண்டும் கணவனின் வாரிசுகளுக்கு சொந்தமாகாது. தன் பராமரிப்பிற்காக கணவன் எழுதிய சொத்தை, தன் விருப்பப்படி என்ன வேண்டுமென்றாலும் செய்யும் உரிமை, மனைவிக்கு உள்ளது. அதில், வாரிசுகள் தலையிட முடியாது. பராமரிப்பு தொடர்பான இந்து விதவையின் கோரிக்கையை, சலுகை, கருணை அல்லது தானம் என, வெறும் சம்பிரதாய கண்ணோட்டத்துடன் பார்க்கக் கூடாது; அதை, விதவையின் தார்மீக உரிமையாக, கருத வேண்டும். எனவே, இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. வீடு விற்பனை செல்லாது என, அறிவிக்கப்படுகிறது.இவ்வாறு நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.  dinamalar.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக