புதன், 11 நவம்பர், 2015

வெள்ளத்தில் பலியானோர் எண்ணிக்கை 36...கடலூரில்

தமிழகத்தின் பல பகுதிகளில், மூன்று நாட்களாக கொட்டிய கன மழைக்கு, பலியானோர் எண்ணிக்கை, 36 ஆக உயர்ந்துள்ளது; 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கர் நிலங்களில், சம்பா பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன. மழையால் கடலுார் மாவட்டம் வெள்ளத்தில் மிதக்கிறது. வங்கக் கடலில், புதுச்சேரி அருகே, 150 கி.மீ., தொலைவில் மையம் கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு நிலை, தாழ்வு மண்டலமாக மாறி, நேற்று முன்தினம் கடலுார் அருகே கரையை கடந்தது. இதனால், சென்னை, கடலுார், விழுப்புரம், திருவண்ணாமலை, நாகை, சேலம் உட்பட, பல மாவட்டங்களில் கனமழை கொட்டியது.மழை வெள்ளத்துக்கு, கடலோர மாவட்டங்களில் அதிக அளவில் உயிர் சேதம் ஏற்பட்டுள்ளது; ஏராளமான இடங்களில், நெல் பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன. நேற்று மாலை நிலவரப்படி, மூன்று நாட்களில், தமிழகம் முழுவதும், மழை, வெள்ள பாதிப்புகளுக்கு, 36 பேர் உயிரிழந்துள்ளனர்.கடலுார் மாவட்டத்தில் மட்டும் அதிகபட்சமாக, 19 பேர் பலியாகியுள்ளனர்.
பண்ருட்டியை அடுத்த, பெரிய காட்டுப்பாளையம், கெடிலம்
ஆற்றங்கரையிலிருந்த குடிசைகள், நேற்று முன்தினம் இரவில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. இதில், குடிசைகளில் வசித்த, 5 வயது சிறுமி, ஏழு பெண்கள் உள்பட, 15 பேர் வெள்ளத்தில் சிக்கி இறந்தனர். குறிஞ்சிப்பாடியில் சுவர் இடிந்து ஒருவரும், நீர் நிலைகளில் மூழ்கி, மூன்று பேரும் பலியாகியுள்ளனர். இது தவிர, சென்னை - 5, விழுப்புரம் - 4, அரியலுார் - 1, காஞ்சிபுரம் - 2, புதுக்கோட்டை - 1, கன்னியாகுமரி -1, திருவாரூர் - 1 மற்றும் திருவண்ணாமலையில் இரண்டு என, பலியானோர் எண்ணிக்கை, மூன்று நாட்களில், 36 ஆக உயர்ந்துள்ளது.>பயிர்கள் சேதம்: மழை வெள்ளத்தால், பல மாவட்டங்களில், 50ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கர் நிலங்களில் பயிரிடப்பட்டிருந்த சம்பா பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன. கடலுார், குறிஞ்சிப்பாடி, குமராட்சி, பண்ருட்டி உள்ளிட்ட இடங்களில், 25 ஆயிரம் ஏக்கர் பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன.
இதுகுறித்து, இந்திய விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு மாநில பொதுச் செயலாளர் விருதகிரி கூறியதாவது: அறுவடைக்குத் தயாரான நெல் கதிர்களும், நடவு செய்யப்பட்ட பயிர்களும் தண்ணீரில் மூழ்கிவிட்டன. வடிகால் வசதியை அரசு ஏற்படுத்தி தராததால், இவ்வளவு பெரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, தமிழக அமைச்சர்களும், அதிகாரிகளும் தாமதம் செய்யாமல், உடனடியாக, பாதிக்கப்பட்ட நெல் பயிர்களை பார்வையிட வேண்டும். விவசாயிகள் மீண்டும் பயிரிட விதை நெல் வழங்குவதுடன், நிவாரணமும் வழங்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.மேலும், காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, பலத்த காற்று வீசியதால், கடலுார், விழுப்புரம் மாவட்டங்களில் பல இடங்களில், மின் ஒயர்கள் அறுந்து, மின்சாரம் தடைபட்டுள்ளது. மின் தடையால், குடிநீர் வினியோகமும் பாதித்துள்ளது; நுாற்றுக்கணக்கானஇடங்களில், வீடுகள் இடிந்துள்ளன; குடிசைகள் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்டவர்கள், அருகிலுள்ள மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.>இன்றும் மழை உண்டு: 'தமிழத்தில், இன்றும் மழை தொடரும்' என, சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று அறிவித்தது.< >இதுதொடர்பாக, அந்த மையம் வெளியிட்ட அறிக்கை:
கடலுார் அருகே நேற்று முன்தினம் கரையை கடந்த, காற்றழுத்த தாழ்வு மண்டலம், நேற்று பகலில், வேலுாரில் இருந்து தென்கிழக்கே, 70 கி.மீ., தொலைவில், காற்றழுத்த தாழ்வு நிலையாக, மையம் கொண்டுள்ளது. இதனால், வட மாவட்டங்களில் பரவலாக மழை பெய்யும்; மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கன மழை பெய்யலாம்.தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்யலாம். சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.நேற்று காலை, 10:00 மணியுடன் முடிவடைந்த, 24 மணி நேரத்தில், நெய்வேலியில் அதிகபட்சமாக, 48 செ.மீ., மழை பெய்துள்ளது. பண்ருட்டி - 35, சேத்தியாதோப்பு, சிதம்பரம் - 34, பரங்கிப் பேட்டை - 33, சேலம் மாவட்டம், ஏற்காடு - 25, விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலுார் மற்றும் தர்மபுரி மாவட்டம் - 21, விருத்தாச்சலம், ஊத்தங்கரை, ஆம்பூர், திருவண்ணாமலை - 19 செ.மீ., மழை பதிவாகியுள்ளது.காஞ்சிபுரம் மாவட்டம் - 13, சென்னை - 7 செ.மீ., மழை பதிவாகியுள்ளது. குறைந்தபட்சமாக, திருச்சி, ஈரோடு, கரூர் மற்றும் நீலகிரியில், 1 செ.மீ., மழை பெய்துள்ளது.>- நமது நிருபர் - தினமலர்.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக