வியாழன், 5 நவம்பர், 2015

எழுத்தாளர் அருந்ததி ராய் மற்றும் 25 சினிமா கலைஞர் கள் தேசிய விருதுகளை திருப்பி அளிக்க முடிவு.


பிரபல கன்னட எழுத்தாளர் எம்.எம்.கல்புர்கி கடந்த ஆகஸ்டு மாதம் சுட்டுக் கொல்லப்பட்டார். உத்தரபிரதேசத்தின் தாத்ரியில் மாட்டிறைச்சி சாப்பிட்டதாக ஒருவர் அடித்து கொல்லப்பட்டார். மேலும் கடும் எதிர்ப்பு காரணமாக பாகிஸ்தான் பாடகர் குலாம் அலியின் மும்பை நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது. கருத்து சுதந்திரத்திற்கு எதிரான இது போன்ற சம்பவங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், நாட்டில் மத சகிப்புத்தன்மை குறைந்து வருவதாகவும் கூறி எழுத்தாளர்கள் மத்திய அரசுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தி வருகின்றனர். மேலும் சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர்கள் 30-க்கும் மேற்பட்டவர்கள் தங்களுக்கு கிடைத்த விருதை திருப்பி அனுப்பி வருகின்றனர். தற்போது இந்தப் பட்டியலில் பிரபல எழுத்தாளர் அருந்ததி ராயும் இணைந்துள்ளார்.
இது குறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், “நான் என்னுடைய தேசிய விருதை திருப்பியளிக்க முடிவு செய்துள்ளேன். ஏனென்றால் கருத்தியல் ரீதியான வக்கிரத்திற்கெதிராக எழுத்தாளர்கள், இயக்குனர்கள், அறிஞர்கள், விஞ்ஞானிகள் என்று பலரும் முன்னெடுத்திருக்கும் அரசியல் இயக்கத்தின் ஒரு பகுதியாக இருக்க இது என்னை அனுமதிக்கும். நாட்டில் தற்போது நடக்கும் சம்பவங்களுக்காக நான் அவமானப்படுகிறேன். அதே நேரம் என்னுடைய விருதை திருப்பியளிப்பதற்காக நான் பெருமைப்படுகிறேன்.” என்றார்.

அற்பங்களின் கடவுள் (The God of Small Things) என்ற புத்தகத்திற்காக புக்கர் விருது பெற்ற அருந்ததி ராய், 1989-ம் ஆண்டு In Which Annie Gives it Those Ones என்ற திரைப்படத்திற்காக சிறந்த திரைக்கதைக்கான தேசிய விருது பெற்றார்.

முன்னதாக கடந்த 2005-ம் ஆண்டு தான் பெற்ற சாகித்ய அகாடமி விருதை காங்கிரஸ் ஆட்சியின் போது அவர் திருப்பியளித்தது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக