ஞாயிறு, 8 நவம்பர், 2015

2016 இல் தமிழக தேர்தல்....தனிதனியா கேட்டு அப்புறம் சேருவாய்ங்க.....வேற வழி? குதிரை பேரம்!

ஆர்.மணி வரும் 2016 ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் இதுவரையில் தமிழகம் கண்டிராத ஒன்றாக மாறும் அனைத்து சாத்தியங்களும் உள்ளன. . தமிழக அரசியல் வரலாற்றில் இத்தனை முதலமைச்சர் வேட்பாளர்களும், கட்சிகள் தனித் தனி அணிகளாய் நிற்கும் காட்சியும் இதுவரையில் நடந்தேறியதில்லை. அஇஅதிமுக சார்பில் ஜெயலலிதா, பாமக சார்பில் அன்புமணி ராமதாஸ், பாஜக சார்பில் ஒரு முதலமைச்சர் வேட்பாளர், தேமுதிக சார்பிலோ அல்லது ஒரு கூட்டணியின் சார்பிலோ விஜயகாந்த், மக்கள் நலக் கூட்டியக்கத்தின் சார்பில்  ஒரு வேட்பாளர். இது தவிர திமுக சார்பில் அனேகமாக இரண்டு வேட்பாளர்கள், ஆம்... மு.க. ஸ்டாலின் மற்றும் மு.கருணாநிதி. எல்லா கட்சிகளின் சார்பிலும் ஒரு முதலமைச்சர் வேட்பாளர் என்றால் திமுக சார்பில் இரண்டு முதலமைச்சர் வேட்பாளர்கள் இருக்கலாம். இந்த இரண்டு முதலமைச்சர் வேட்பாளர்கள் என்பது அறிவிக்கப் படாததாக இருக்கும். விஸ்வரூபம் எடுத்து நிற்கும் ஜெயலலிதாவுக்கு எதிராக ஸ்டாலினை முதலைமச்சர் வேட்பாளராக அதிகாரபூர்வமாக நிறுத்தும் காரியத்தை திமுக ஒரு போதும் செய்யாது.
அது சமமற்ற சமராகவே இருக்கும். அரசியல் சதுரங்கத்தில் இந்தப் போட்டி ஒரு வேளை ஸ்டாலின் வெளிப்படையாக முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்தப் பட்டால், ஆரம்பம் முதலே ஒரு தலைப்பட்சமானதாகவே இருக்கும் என்பது திமுக அறிந்ததுதான். ஆனால் தமிழகம் முழுவதும் சூறாவளியாய் சுற்றி வரும் ஸ்டாலின் தான் திமுக வெற்றிப் பெற்றால் அடுத்த முதலமைச்சராகப் போகிறார் என்பது இப்போதைக்கு திமுக வால் அறிவிக்கப்பட முடியாத விஷயம். அதனால் அதிகாரபூர்வமாக கருணாநிதியைத்தான் திமுக முதலமைச்சர் வேட்பாளராக களமிறக்க முடியும். இந்தச் சூழலில் திமுக வுடன் கூட்டணிக் கொள்ள வாய்ப்புள்ள கட்சி எதுவென்று பார்த்தால் பதில் சூன்யமாகத்தான் தற்போது வருகிறது. பாமக தனியாகத்தான் போகப் போகிறது. இடதுசாரிகள் வரப் போவதில்லை. வைகோவைப் பற்றி சொல்லவே வேண்டாம். தேமுதிக வும் காங்கிரசும் தான் மிஞ்சியிருப்பவை. காங்கிரஸ் வந்தாலும் அதுவும் நிபந்தனைகள் இல்லாமல் இருக்காது. காங்கிரஸ் ஆட்சியில் பங்கு கேட்கும். தேமுதிக துணை முதலமைச்சர் பதவியை கேட்பதாகவே கூறப்படுகிறது. ஆனால் எல்லா வாய்ப்புகளிலும் மண்ணை அள்ளிப் போட்டு விட்டார் ஸ்டாலின். இன்று சனிக்கிழமை ஒரு தொலைக்காட்சிக்கு கொடுத்த பேட்டியில் தமிழகத்தில் கூட்டணி ஆட்சிக்கு வாய்ப்பே இல்லையென்றும், தமிழகத்தில் ஆட்சியில் எந்த கட்சிக்கும் பங்கில்லையென்றும் ஸ்டாலின் அடித்துச் சொல்லிவிட்டார். 'தமிழகத்தில் கூட்டணி ஆட்சி முறையை மக்கள் ஏற்க மாட்டார்கள். 1980ல் திமுக காங்கிரஸ் கூட்டணி ஆட்சி என்ற முழக்கத்தை மக்கள் நிராகரித்து விட்டார்கள்', என்று அந்த பேட்டியில் ஸ்டாலின் தெளிவாகவே கூறியுள்ளார். மேலும் ஆட்சியில் பங்கு கேட்கும் கோரிக்கை சுயநலமானது என்றும் ஸ்டாலின் கூறுகிறார். இதன் மூலம் அமைச்சரவையில் இடத்தை எதிர்பார்த்திருக்கும் கட்சிகளின் கனவில் ஸ்டாலின் டன் கணக்கில் மண்ணை அள்ளிப் போட்டு விட்டார். ஸ்டாலினின் இந்தப் பேட்டி வெளிவந்த சில மணி நேரத்துக்கு முன்னர்தான் தேமுதிக தலைவர் விஜயகாந்த் ‘தி ஹிந்து' ஆங்கில நாளிதழுக்கு கொடுத்த பேட்டியும் வெளிவந்திருக்கிறது. சில வருடங்களுக்குப் பிறகு முதன் முறையாக பத்திரிகைக்கு விஜயகாந்த் பேட்டியளித்திருக்கிறார். இந்தப் பேட்டியில் வழக்கம் போலவே திமுக, அஇஅதிமுக வுக்கு மாற்று தேமுதிக தான் என்று சொல்லும் விஜயகாந்த், ‘திமுக எல்லோரும் அவர்களிடம் வந்து பேச வேண்டும் என்றே விரும்புகிறது. அவர்கள் மேலே உட்கார்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள் ஏன் ஒரு முறை கீழே இறங்கி வந்து பேசக் கூடாது? உங்கள் விளையாட்டிலிருந்து என்னை விட்டுவிடுங்கள் என்றுதான் கேட்கிறேன். நான் தனிப் பாதையை தேர்ந்தெடுத்து விட்டேன்... நாங்கள் கருணாநிதியையே நம்ப முடியாத போது ஸ்டாலினை எவ்வாறு நம்புவது? இந்த இரண்டு கட்சிகளையும் எதிர்த்தே தேமுதிக போராடும், தமிழகத்தில் பெரிய மாற்றத்தை கொண்டு வரும். இந்தளவுக்கு என்னால் உங்களுக்கு உறுதி மொழி கொடுக்க முடியும்' என்கிறார் விஜயகாந்த். கூட்டணி பற்றிய கேள்விக்கு, ‘தற்போது நாங்கள் எந்த கூட்டணியிலும் இல்லை. ஆனால் எந்தக் கூட்டணியில் சேருவதென்பது பற்றி நாங்கள் இன்னமும் முடிவு செய்யவில்லை என்பதையும் தெரிவித்துக் கொள்ளுகிறேன். திமுக அல்லது அஇஅதிமுக ஆகிய கட்சிகளுடன் கூட்டணி சேர மாட்டோம் என்பதில் மட்டும் தெளிவாக இருக்கிறேன். இதுதான் எங்களுடைய தற்போதைய நிலைப்பாடு', என்கிறார் கேப்டன். இதில் கடைசி வாக்கியம் பொருள் நிறைந்தது. இதுதான் எங்களுடையை தற்போதய நிலைப்பாடு என்பதில் தான் கேப்டனின் சூட்சுமம் நிறைந்திருக்கிறது. இதனுடன் இரண்டு வாரங்களுக்கு முன்பு அவர் மீண்டும் ஜெயலலிதா முதலைமைச்சராக வருவதைத் தடுக்க எந்த தியாகத்தையும் செய்யத் தயாரென்று கூறியதை ஒப்பிட்டுப் பார்த்தால் கடைசி நேரத்தில் அவர் திமுக பக்கம் வர வாய்ப்பிருப்பதாகவே திமுக நினைக்கிறது. ஆனால் தேர்தல்களுக்கு இன்னமும் ஐந்தாறு மாதங்கள் உள்ள நிலையில் ஆட்சியில் பங்கில்லை என்று இப்போதே கதவுகளை ஓங்கிச் சாத்துவதென்பது என்ன அரசியல் தந்திரமென்பது திமுக வுக்குத்தான் வெளிச்சம். இது தேமுதிக மற்றும் காங்கிரசை வெறுப்படைய வைக்கலாம். அதாவது, ஆட்சியில் பங்கில்லை என்பதைக் கடைசி நேரத்தில் கூறினால் அதனை வேறுவழியின்றி இக்கட்சிகள் ஜீரணிக்கலாம். ஆனால் இப்போதே சொல்லுவதும், அதன் பிறகு அந்தக் கட்சிகள் கூட்டணிக்கு வரவேண்டும் என்று நினைப்பதும் அவர்களின் ஈகோவை சம்மட்டியினால் அடிப்பதாகும். இதனை இப்போதே திமுக வும், ஸ்டாலினும் ஏன் செய்கிறார்கள் என்பதுதான் ஆச்சரியமானது. தற்போதய நிலைமையில் திமுக மீண்டும் ஆட்சியை கைப்பற்றுவெதென்பது ஒன்றும் அவ்வளவு சுலபமானதல்ல. வரலாற்றுரீதியாகவே அஇஅதிமுக வை விட திமுக வின் வாக்கு வங்கியானது குறைவானதுதான். சாதுர்யமான கூட்டணிகள் மூலம்தான் திமுக ஒவ்வோர் முறையும் ஆட்சியைக் கைப்பற்றியிருக்கிறது. அஇஅதிமுக வும் கூட்டணிகள் மூலம்தான் ஆட்சியை கைப்பற்றியிருக்கிறது. ஆனால் எல்லோரும் தனியாக நின்றால் அஇஅதிமுக வின் வெற்றியென்பது தவிர்க்க முடியாதது. இது பாமரனுக்கும் புரியக்கூடிய சாதாரண கணக்குத்தான். இந்தப் பின் புலத்தில் பார்த்தால், ஆட்சியில் பங்கில்லை, மக்கள் கூட்டணி ஆட்சியை தமிழகத்தில் ஒருபோதும் விரும்பியதில்லை என்று 1980 ல் நடந்த, அதாவது, 35 ஆண்டுகளுக்கு முந்தய நிலைமையை ஸ்டாலின் சொல்லுவதன் பொருள் அதீத தன்னம்பிக்கையா அல்லது வேறெதுவும் அரசியல் உள்நோக்கம் கொண்டதா என்பதும் அவருக்கும், திமுக வுக்கும் மட்டுமே தெரிந்த ரகசியமாக இருக்கலாம். குறைந்தது நான்கு அணிகள் வரும் தேர்தலில் தமிழகத்தில் இருக்கப் போகின்றன. அஇஅதிமுக கூட்டணி (அநேகமாக சில சிறிய கட்சிகளைத் தவிர்த்து இதில் வேறெவரும இருக்கப் போவதில்லை), பாமக கூட்டணி, மக்கள் நலக் கூட்டணி, பாஜக கூட்டணி (தேமுதிக இருக்கலாம் அல்லது இல்லாமல் இருக்கலாம்), கடைசியாக திமுக கூட்டணி ... இதில் தேமுதிக வும், காங்கிரசும் இருக்கலாம் .... ஆகவே எப்படி பார்த்தாலும் குறைந்தது நான்கு முனைப் போட்டியை நோக்கி தமிழக சட்டமன்றத் தேர்தல் 2016 நகர்ந்து கொண்டிருக்கிறது. 2014 மக்களைவைத் தேர்தல் களம் அப்படியே திரும்பலாம். துண்டு, துண்டாய் வாக்குகள் சிதறினால் அஇஅதிமுக வின் வெற்றி சுலபமாகிவிடும். ஆனால் இரண்டு நிகழ்வுகளால் இந்த எல்லா கணக்குகளும் மாறலாம். ஒன்று, 2ஜி வழக்கில் வரக்கூடிய தீர்ப்பு. இந்த தீர்ப்பு ஒருவேளை தேர்தலுக்கு முன்பு வந்து, அதுவும் திமுக வுக்கு எதிராக போனால், திமுக வின் நிலைமை இன்னமும் அதள பாதாளத்துக்குப் போகும். இதே போல ஜெயலலிதா சொத்து குவிப்பு ஊழல் வழக்கு மேல் முறையீட்டு வழக்கில் தீர்ப்பு வராவிட்டாலும், தீர்ப்பின் திசை தெரிந்தாலே அஇஅதிமுக வின் நிலை திண்டாட்டமாகிப் போகும். வரும் 23 ம் தேதி ஜெ வழக்கில் தினசரி விசாரணைக்கான தேதியை உச்ச நீதிமன்றம் தீர்மானிக்க இருப்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் இந்த இரண்டும் நிகழாமல், நான்கு முனைப் போட்டி வந்தால் அம்மா மீண்டும் அரியணை ஏறுவதென்பது, உறுதியாகிவிடும். கடந்த 30 ஆண்டுகளில் எந்தவோர் ஆட்சியும் தமிழகத்தில் இரண்டாவது முறை மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டதில்லை. இந்த வரலாறு இப்படியே தொடருமா இல்லையா என்பது கேப்டனின் கையில்தான் இருக்கிறது. ஆக, இந்த நிமிடம் வரை வரும் தீபாவளி ஜெயலலிதாவுக்கு நிம்மதியான தீபாவளியாக இருக்கும்.. அடுத்த தீபாவளியும் இப்படியே அமையுமா இல்லையா என்பதை நிர்ணயிக்கப் போகிறவர் விஜயகாந்த்தான்!

Read more at:://tamil.oneindia.com/

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக