செவ்வாய், 13 அக்டோபர், 2015

திருமாவளவன்l:யுவராஜ் என்ன போராளியா.. சரணடைய வைத்து வேடிக்கை பார்க்கிறதே போலீஸ்..?

சென்னை: கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட யுவராஜை ஒரு போராளி போல நடக்க அனுமதித்து, சரணடைய வைத்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் போலீஸின் செயல் கண்டனத்துக்குரியது என்று விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவன் கூறியுள்ளார். இதுகுறித்து திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கை:  விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் உயர்நிலைக்குழு கலந்தாய்வுக்கூட்டம் நேற்று கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தலைமையில் கூடியது. இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: சேலம் கோகுல்ராஜ் படுகொலை வழக்கையும், காவல்துறை அதிகாரி விஷ்ணுபிரியா சாவு வழக்கையும் சி.பி.சி.ஐ.டி விசாரணையிலிருந்து மாற்றி, சி.பி.ஐ விசாரணைக்கு ஆணையிட வேண்டுமென தமிழக அரசை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் உயர்நிலைக்குழு கேட்டுக்கொள்கிறது. கோகுல்ராஜ் கொலை வழக்கில் முதன்மைக் குற்றவாளியை கைது செய்யமால், சரணடைதல் என்னும் பெயரில் ஒரு கொலை குற்றவாளியையும், கொலை குற்றவாளியின் ஆதரவாளர் களையும் சட்டவிரோதமாக கூடுவதற்கு அனுமதித்து வேடிக்கைப் பார்க்கும் அவலத்தை தமிழக காவல்துறை அரங்கேற்றியுள்ளது. குறிப்பாக, இவ்வழக்கை விசாரிக்கும் சி.பி.சி.ஐ.டி காவல்துறையினர், கொலையாளியின் இந்த அருவறுப்பான அற்பச் செயல்களுக்கு இடமளித்துள்ளனர் என்பது பாதிக்கப்பட்டோருக்கு பெரும் வேதனையளிக்கும் போக்காகும். இது காவல்துறையின் மீதான நம்பிக்கையை முற்றிலும் தகர்ப்பதாகவுள்ளது. ஒரு கொடூரமான கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நபரை ஒரு போராளியைப் போல் சரணடைய வைத்து வேடிக்கைப்பார்க்கும் காவல்துறையினர் பாதிக்கப்பட்டோருக்கு நீதி கிடைக்கச் செய்வார்கள் என நம்ப இயலவில்லை. எனவே, கோகுல்ராஜ் கொலை வழக்கையும், விஷ்ணுபிரியா சாவு வழக்கையும் சி.பி.ஐ விசாரணைக்கு உட்படுத்தவேண்டுமென இக்குழு வேண்டுகோள் விடுக்கிறது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read more at: //tamil.oneindia.com/

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக