சனி, 3 அக்டோபர், 2015

மும்பை பெண்கவுன்சிலர் சசிகலா மாலதி தற்கொலை? ரெயில் முன் பாய்ந்து...

மாலதி (வயது 43). தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த இவர் நெருல் 3–வது செக்டர் பகுதியில் வசித்து வந்தார். கடந்த 23–ந் தேதி வெளியில் வேலை இருப்பதாக கூறிவிட்டு வீட்டில் இருந்து சென்றார். ஆனால் அதன்பிறகு சசிகலா மாலதி வீடு திரும்பவில்லை.
இதனால் அவரது குடும்பத்தினர் மிகுந்த கலக்கம் அடைந்தனர். மேலும் சசிகலா மாலதி காணாமல் போனது பற்றி அவரது மகள் அனுராதா (23) நெருல் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கவுன்சிலர் சசிகலா மாலதியை தேடி வந்தனர்.
நகைகள் மூலம் கண்டுபிடிப்பு இருப்பினும் கடந்த 9 நாட்களாக அவரை பற்றிய எந்த தகவலும் கிடைக்காமல் இருந்தது. இந்த நிலையில், வாஷி மருத்துவமனையில் ரெயிலில் அடிபட்டு இறந்த ஒரு பெண்ணின் உடல் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக அடையாளம் காணப்படாமல் இருப்பதாக நெருல் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

உடனே போலீசார் ரெயில்வே போலீசார் உதவியுடன் அந்த பெண்ணின் உடலை சென்று பார்வையிட்டனர். அப்போது, காணாமல் போன பெண் கவுன்சிலர் சசிகலா மாலதியின் உடல் தான் என்பது தெரியவந்தது. சம்பவ இடத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் நகைகள் மூலம் ரெயிலில் அடிபட்டு இருந்தது சசிகலா மாலதி தான் என்பதை போலீசார் உறுதிப்படுத்தினார்கள்.
தற்கொலை இதையடுத்து அவரது உடல் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. போலீஸ் விசாரணையில் கவுன்சிலர் சசிகலா மாலதி மத்திய ரெயில்வேயின் துறைமுக வழித்தடத்தில் மான்கூர்டு – கோவண்டி ரெயில் நிலையங்களுக்கிடையே மின்சார ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது.
தற்கொலை செய்து கொண்ட கவுன்சிலர் சசிகலா மாலதி முதன்முறையாக கவுன்சிலராக தேர்வு செய்யப்பட்டவர். தேர்தலின் போது வேட்பு மனுவில் தான் ‘ஓ.பி.சி.‘ வகுப்பு சார்ந்தவர் என்று குறிப்பிட்டு இருந்தார்.
ஆனால் சாதி சான்றிதழை சமர்ப்பிக்கவில்லை என்று கூறப்படுகிறது. அதை சமர்ப்பிக்க வேண்டி நவிமும்பை மாநகராட்சி அவருக்கு நெருக்கடி கொடுத்து வந்ததாக தெரிகிறது.
போலீஸ் விசாரணை மேலும் அரசியல் ரீதியான நெருக்கடிகளையும் அவர் சமாளிக்க முடியாமல் மனஉளைச்சலில் இருந்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இதுமட்டுமின்றி அவரது கணவர் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு படுக்கையில் இருந்து வருகிறார்.
இதனால் அவர் மனரீதியாகவும் பாதிக்கப்பட்டு இருந்துள்ளார்.
இதன் காரணமாகவே அவர் வாழ்க்கையில் விரக்தி அடைந்து ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். dailythanthi.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக