வியாழன், 22 அக்டோபர், 2015

அமராவதி! ஆந்திராவின் புதிய தலைநகரம் அடிக்கல் நாட்டு விழா!

இந்தியாவின் ஆந்திரா மாநிலத்திற்கான புதிய தலைநகருக்கு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். ஆந்திராவில், குண்டூர் மாவாட்டத்தில் கிருஷ்ணா நதிக்கரையில் உள்ள உத்தண்டராயனிபாளையம் என்ற இடத்தில் தான் இந்த அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.
அமரவாதி என்ற பெயரில், 16.9 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில், சுமார் ஒன்றரைக் கோடி மக்கள் வாழ்வதற்கு ஏற்ற விதத்தில் இந்தத் தலைநகரம் உருவாக்கப்படவுள்ளது.
மின்சாரம், நீர் போன்றவற்றிக்கு தட்டுப்பாடு இல்லாத, மாசு ஏற்படாத தூய்மையான நகராகவும் இந்த பிரதேசம் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி, இந்தியா சுதந்திரம் பெற்ற பின்னர் மிகக் குறைவான நகரங்களே உருவாக்கப்பட்டுள்ளது என்றார்.

இந்த நிலையை மாற்ற வேண்டும் என்று கூறிய அவர், நகரமயமாக்கல் என்பதை பிரச்சனையாக கருதக்கூடாது என்றும், அது நாட்டின் வளர்ச்சிக்கு பேருதவியாக இருக்கும் என்றும் கூறினார்.
இதன் காரணமாகவே மத்திய அரசு ஸ்மார்ட் நகரத் திட்டங்களை நிறைவேற்றி வருவதாகவும் மோடி தெரிவித்தார்.
முன்னதாக, இந்த நிகழ்ச்சியில் பேசிய ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, பிரதமர் நரேந்திர மோடியிடம் சில கோரிக்கைகளை நேரடியாக முன்வைத்தார்.

'சாதவாகனர் சாம்ராஜ்யத்தின் பிறப்பிடம்'

குறிப்பாக தமிழகத்திற்கு சென்னை, கர்நாடகத்திற்கு பெங்களூரு போன்று அண்டை மாநிலங்களில் அதிக வருவாயை உண்டாக்கித் தரும் பெருநகரங்கள் உள்ளதாகவும், ஆனால் ஆந்திராவிற்கு அவ்வாறான நகரம் ஒன்று இல்லை என்பதால் தான் இந்த அமராவதி நகரை உருவாக்க தான் முக்கியத்துவம் அளிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதனால் மத்திய அரசின் உதவிகள் அனைத்தையும் முழுமையாகவும் விரைவாகவும் வழங்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
மேலும், தாமாக முன்வந்து நிலங்களை வழங்கிய விவசாயிகளுக்கும் சந்திரபாபு நாயுடு இங்கு நன்றி கூறினார்.
பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட மத்திய அமைச்சர்கள் கலந்துக்கொண்ட இந்த நிகழ்ச்சியில், சிங்கப்பூரின் அமைச்சர் ஈஸ்வரன் உள்ளிட்ட வெளிநாடுகளின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.
ஆந்திர மாநிலத்திலிருந்து தெலுங்கானா தனி மாநிலமாக பிரிந்த பின்னர், ஹைதராபாத் அந்த மாநிலத்தின் தலைநகராக மாறியது.
அதனால் ஆந்திராவிற்கான புதிய தலைநகரை தேர்ந்தெடுக்கும் முயற்சிகள் நடந்துவந்தன. அமராவதியை புதிய தலைநகராக உருவாக்கும் திட்டம் கடந்த ஏப்ரல் முதலதம் தேதி அறிவிக்கப்பட்டது.
சாதவாகனர் சாம்ராஜ்யத்தின் பிறப்பிடமான அமராவதி நகரின் பெயரையே இந்த புதிய தலைநகருக்கு சூட்டுவதாக முதல்வர் சந்திரபாபு நாயுடு அப்போது கூறியிருந்தார். bbc.tamil.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக