புதன், 28 அக்டோபர், 2015

மோடி மீது பாஜக தலைவர் அருண் ஷோரி கடும் தாக்கு...இது போன்ற ஒரு பலவீனமான பிரதமரை நாடு கண்டதில்லை..

மத்தியில் ஆட்சியிலிருந்த முந்தைய காங்கிரஸ் அரசுக்கும், தற்போதுள்ள பாஜக அரசுக்கும் வேறுபாடு எதுவுமில்லை என்று மத்திய முன்னாள் அமைச்சரும், பாஜகவின் மூத்த தலைவருமான அருண் ஷோரி குற்றம்சாட்டினார்.
 தற்போது உள்ளதைப் போன்ற பலவீனமான பிரதமர் அலுவலகத்தை இதுவரை பார்த்ததில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
 வாஜ்பாய் ஆட்சிக் காலத்தில் இணையமைச்சராக இருந்த அருண் ஷோரி, மத்திய பாஜக அரசு மீது இத்தகைய கடும் விமர்சனங்களை முன்வைத்திருப்பது அரசியல் வட்டாரத்தில் புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
 "பிஸினஸ் ஸ்டாண்டர்டு' பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் டி.என். நைனன் எழுதிய "டர்ன் ஆஃப் டார்டாய்ஸ்' என்ற நூலின் வெளியீட்டு விழா தில்லியில் திங்கள்கிழமை நடைபெற்றது.
 இந்நிகழ்ச்சியில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், மத்திய அரசின் தலைமை பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன், முன்னாள் வெளியுறவுத் துறைச் செயலர் ஷியாம் சரண் ஆகியோர் பங்கேற்றனர்.

 இதில் அருண் ஷோரி பேசியதாவது: பொருளாதாரம் சீராக உள்ளதாக செய்திகள் வெளியாகும்படி பார்த்துக் கொள்வதே பொருளாதாரத்தை நிலையாக வைத்திருக்கும் நடவடிக்கை என்று மத்திய பாஜக அரசு கருதுகிறது. ஆனால், இந்தச் செயல்பாடுகள் பலனளிக்காது.
 தற்போது உள்ளதைப் போல பலவீனமான பிரதமர் அலுவலகத்தை இதுவரை பார்த்ததில்லை. அனைத்துத் துறைகளுக்கும் ஒரே அதிகார மையமாக பிரதமர் அலுவலகம் செயல்பட்டும் பார்த்ததில்லை. வரி நிர்வாகத்தில் எந்தவிதமான மாற்றமும் செய்யப்படவில்லை. ஒன்றரை ஆண்டுகளாக வங்கிச் சீர்திருத்தங்களும் மேற்கொள்ளப்படவில்லை. மத்திய அரசுக்கு எதிராகப் பேச தொழிலதிபர்கள் பயப்படுகின்றனர். நாடாளுமன்றம் என்பது சம்பிரதாய இடமாக மட்டுமே இருக்கிறதே தவிர, அங்கு ஆக்கப்பூர்வமான செயல்பாடுகள் எதுவும் நடைபெறுவதில்லை. இவையெல்லாம் முந்தைய மன்மோகன் சிங்கின் ஆட்சிக் காலத்தை மக்களுக்கு நினைவுறுத்துகின்றன.
 முந்தைய காங்கிரஸ் ஆட்சிக்கும், பாஜக ஆட்சிக்கும் கொள்கை அளவில் எந்த மாற்றமும் இல்லை. காங்கிரஸும் பசுவும் இணைந்ததுதான் பாஜக ஆட்சி. (தாத்ரி சம்பவம், மாட்டிறைச்சி விற்பனை தடை விவகாரம் ஆகியவற்றை விமர்சித்து அவர் இவ்வாறு தெரிவித்தார்) பிற தரப்பினருடன் மோதல் போக்கைக் கடைப்பிடிக்காமல் சமரசத்துடன் மத்திய அரசு செயல்பட வேண்டும்என்றார் அருண் ஷோரி.

 வெங்கய்ய நாயுடு மறுப்பு: இந்நிலையில், மத்திய அரசின் மீதான அருண் ஷோரியின் விமர்சனத்தை நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு மறுத்துள்ளார்.
 இதுகுறித்து தில்லியில் செய்தியாளர்களிடம் அவர் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:
 நாம் ஜனநாயக நாட்டில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அருண் ஷோரி தெரிவித்தது அவரது தனிப்பட்ட கருத்தாக இருக்கக்கூடும். ஆனால் மக்கள் மனநிலை வேறு மாதிரியாக உள்ளது. பிரதமர் மோடிக்கு மக்கள் பேராதரவை அளித்து வருகின்றனர். ஒன்றன் பின் ஒன்றாக அனைத்துத் தேர்தலிலும் பாஜக வெற்றி பெற்று வருகிறது என்றார் வெங்கய்ய நாயுடு.
 தருண் கோகோய் வரவேற்பு: இதனிடையே, மத்திய அரசுக்கு எதிரான அருண் ஷோரியின் விமர்சனம் மிகவும் சரியானதுதான் என்று அஸ்ஸாம் முதல்வர் தருண் கோகோய் தெரிவித்தார்.dinamani.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக