திங்கள், 26 அக்டோபர், 2015

குற்றக் கும்பல் போலீசு ! விஷ்ணுப்பிரியா தற்கொலைக்கு காதல்கதை ஜோடிக்கும் கிரிமினல்கள்...

விஷ்ணுபிரியானிதர்களின் கழுத்தைக் கடித்து இரத்தம் குடிக்கும் வக்கிர டிராகுலாவாகிய கிரிமினல் குற்றக் கும்பலின் நெருங்கிய கூட்டாளிதாம் போலீசார் என்பதற்கு கண்முன்பாக வெளிவந்திருக்கும் சான்றுகள்: கோகுல்ராஜ் மற்றும் விஷ்ணுப்பிரியா சாவுகள் குறித்த  திருச்செங்கோடு வழக்குகள்; மேலூர், கீழவளவு – சின்னமலம்பட்டி கிராமத்தில் சட்ட ஆணையர் சகாயம் குழுவினர் தோண்டத் தோண்ட வரும் நரபலி செய்யப்பட்டவர்களின் பிணங்கள்- எலும்புக் கூடுகள். கோகுல்ராஜ்-அவருக்கு முன்பு இளவரசன், விஷ்ணுப்பிரியா-அவருக்கு முன்பு முத்துக்குமாரசாமி, கீழவளவு கிரானைட் கொள்ளைகளுக்கு நடுவில் நடந்த நரபலிக் கொலைகள் மட்டுமல்ல, மணற்கொள்ளைகளுக்கு இடையே நடக்கும் கொலைகள் – இவற்றுக்குக் காரணமான குற்றவாளிகளைக் கண்டுபிடித்துத் தண்டிக்க வேண்டிய போலீசார் மட்டுமல்ல, நீதிமன்றங்களும்  அநேகமாக அனைத்து அரசுத் துறைகளும் ஆட்சியாளர்களும் குற்றவாளிகளின் காவலர்களாகவும் கூட்டாளிகளாகவும் செயல்படுகிறார்கள்.
‘தற்கொலை’ செய்து கொண்ட போலீசு துணைக் கண்காணிப்பாளர் விஷ்ணுப்பிரியா
இத்தகைய போக்குகள் ஒட்டுமொத்த அரசுக் கட்டமைப்பும் நெருக்கடிகளில் சிக்கி, நிலைகுலைந்து, நாட்டுக்கும் மக்களுக்கும் எதிர்மறைச் சக்திகளாக மாறிப்போயுள்ளதையும் அது சமூத்துக்கே மாபெரும் அச்சுறுத்தலாகவும் சவாலாகவும் விளங்குவதையும் காட்டுகின்றன. இந்த உண்மையை கோகுல்ராஜ், விஷ்ணுப்பிரியா சாவுகள் குறித்த  திருச்செங்கோடு வழக்குகள் மற்றும் கிரானைட் கொள்ளை-நரபலிக் கொலைகள் துலக்கமாக வெளிப்படுத்தியிருக்கின்றன. இந்த விவகாரங்கள் தொடர்பான அன்றாட நிகழ்வுகளைப் பரபரப்பூட்டும் தகவல்களாகவும் கிசுகிசுக்களாகவும் வெளியிட்டு வியாபாரம் பார்ப்பதோடு ஊடகங்கள் பெரும்பாலும் நின்றுவிடுகின்றன. இந்த விவகாரங்கள் எல்லாம் நிலவும் அரசியல், சமூக சீரழிவின் வெளிப்பாடுகள்தாம். இவற்றுக்கான அடிப்படைகளை ஆழமாக ஆய்வு செய்து, தீர்வு காண்பதற்கான முயற்சிகளில் அரசியல், சமூக சிந்தனையாளர்கள்கூட ஈடுபடுவதில்லை.
“பணி நெருக்கடி, குறிப்பாகப் பெண்களுக்கு எதிராக மேலதிகாரிகளின் நிர்ப்பந்தம், மன அழுத்தம் போன்றவை காரணமாக விஷ்ணுப்பிரியா தற்கொலை” நேர்ந்துவிட்டது என்ற மேலெழுந்தவாரியான ஆராய்ச்சிகளில் மக்கள் மூழ்கடிக்கப்படுகிறார்கள். இலஞ்ச-ஊழல், வசூல்வேட்டை, அதிகார முறைகேடுகள், சாதி ஆதிக்கம், இயற்கை வளக் கொள்ளை, இலாபவெறி முதலானவற்றை நோக்கமாகக் கொண்ட இறுக்கமான வலைப் பின்னலாக அரசுக் கட்டுமான அமைப்பு செயல்படுகிறது. அதனுடன் ஒத்துப்போக முடியாதவர்கள், குறிப்பாக அரசுப் பணிகள் மக்கள் சேவைக்கான உன்னதமானவை என்று உருவாக்கப்பட்டிருக்கும் பொய்த் தோற்றத்தை நம்பும் புதிய அலுவலர்கள் பலியாக்கப்படுகிறார்கள்.
‘விஷ்ணுப்பிரியா தற்கொலை’க்குக் காரணமானவர் என்று கை காட்டப்படுபவர் அவரது மேலதிகாரி நாமக்கல் எஸ்.பி.செந்தில்குமார். விஷ்ணுப்பிரியா மரணச்செய்தி எட்டிய உடனே இரவு ஏழு மணிக்குள் அவர் தூக்கில் தொங்கிய அறைக்குள் புகுந்த செந்தில்குமார் உள்ளேயிருந்தவர்கள் அனைவரையும் வெளியே விரட்டிவிட்டார். தற்கொலை செய்துகொண்டவரின், அதுவும் ஒரு உயர் போலீசு அதிகாரியின் உடலை மீட்கும் போது போலீசார் கட்டாயம் செய்திருக்க வேண்டிய கடமை – அதை வீடியோவாகப் பதிவு செய்திருக்க வேண்டும். அப்படிப் பதிவு செய்ய வந்த போலீசு வீடியோ பதிவாளரை அதெல்லாம் வேண்டாமென்று வெளியேற்றிவிட்டு, செய்தி ஊடகத்தாரையும் உள்ளே விடாமல் தடுத்துவிட்டார். தற்கொலை செய்து கொண்டவர் ஒரு உயர் அரசு அதிகாரி ஆதலால், முதலில் ஒரு ஆர்.டி.ஓ. அல்லது வட்டாட்சியர் வரவழைக்கப்பட்டிருக்க வேண்டும். இவை எதையும் செய்யாமல் அந்த அறைக்குள் தனக்கு விசுவாசமான ஒரு போலீசுக்காரரை மட்டும் வைத்துக்கொண்டு வேறு சில வேலைகளைச் செய்திருக்கிறார். தூக்கை அறுத்து சடலத்தைக் கீழேபோட்டு புகைப்படங்கள் எடுத்திருக்கிறார். விஷ்ணுப்பிரியா எழுதிய கடிதம், என அவரது செல்போன்கள், மடிக்கணினி, கேமரா முதலானவற்றைக் கைப்பற்றிக் கொண்டுள்ளார். கடிதத்திலிருந்த தான் சம்பந்தப்பட்ட பக்கங்களை மறைத்திருக்கிறார். அதன் பிறகுதான், போலீசு டி.ஐ.ஜி., ஐ.ஜி. முதலானோர் வந்திருக்கிறார்கள். குற்றவாளிகளைத் தப்புவிக்கும் நோக்கில், அரசே, யாரும் கோராமலேயே தனக்கும் மிகவும் விசுவாசமானதும் செந்தில்குமாரின் நெருங்கிய சகாக்களைக் கொண்டதுமான சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு உத்திரவிட்டது. சி.பி.சி.ஐ.டியோ, வழக்குக்கு அவசியமான ஆதாரங்களை எல்லாம் நீக்கிவிட்டு, சிலநாட்களுக்குப் பிறகு நீதிமன்றத்தில் மேற்படிப் பொருட்களைத் தாக்கல் செய்துள்ளது.
சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு உத்திரவிட்ட கையோடு, அந்த மாவட்டத்தில் விஷ்ணுப் பிரியாவுக்கு உதவியாகப் பணியாற்றி வந்த ஏ.டி.எஸ்.பி. சேவியர் பிரான்சிஸ் பெஸ்கி உட்பட சில போலீசார் வேறு இடத்துக்குத் தூக்கியடிக்கப்பட்டிருக்கிறார்கள். போலீசுக்கேயுரிய கிரிமினல் புத்தியோடு, குற்றவாளிகளைத் தப்புவிக்கும் நோக்கில் முக்கிய ஆதாரங்களை அழித்ததோடு, கைக்கூலி ஊடகங்களைக் கொண்டு பொய்யான வதந்திகள் பரப்பப்படுகின்றன. எல்லாக் கோணங்களிலும் புலனாய்வு செய்வதாகக் கூறிக்கொண்டு திசைதிருப்பும் வகையில் வழக்கு முடுக்கி விடப்படுகிறது. பாதிக்கப்பட்டவர்கள் மீதே, குறிப்பாக, பெண்களானால் அவர்கள் மீதே  பழிபோட்டு, அவதூறுகளும் வதந்திகளும் பரப்பி, குணக்கேடு விளைவிக்கும் போலியான, கோமாளித்தனமான சாட்சியங்களை சோடிக்கும் வழக்கமான, போலீசு உத்திகளில் சி.பி.சி.ஐ.டி. போலீசு ஈடுபடுகிறது.
சட்ட ஆணையர்  சகாயம்
சட்ட ஆணையர் சகாயத்திற்கு வந்த “சோதனை”! : சின்னமலம்பட்டி கிராமத்தில் நரபலியிடப்பட்டவர்கள் புதைக்கப்பட்ட இடத்தில் படுத்துறங்கும் சகாயம்.
விஷ்ணுப்பிரியா விசாரித்து வந்த வழக்குகளில் முக்கியமானது கோகுல்ராஜ் கொலை வழக்கு மட்டுமல்ல, குமாரபாளையம் தொழிலதிபர் ஜெகந்நாதன் கொலை வழக்கும் அடங்கும். அதில் இரண்டு ஆளும் கட்சி அமைச்சர்கள் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள். இந்த இரு கொலைகளையும் செய்தது தூத்துக்குடியைச் சேர்ந்த பாயாசம் எனப்படும் பேச்சிமுத்து தலைமையிலான கூலிக்கொலை கும்பல்தான். அக்கும்பல் விஷ்ணுப்பிரியாவைக் கொல்லவும் முயன்றிருக்கிறது. ஜெகந்நாதன், கோகுல்ராஜ் கொலை வழக்குகளையும் விசாரிக்கும் பொறுப்பில் இருந்த விஷ்ணுப்பிரியாவை அவற்றுக்குக் காரணமான குற்றவாளிகளோடு, வேறுபிற சமூக விரோதச் செயல்களில் ஈடுபட்டுவரும் குற்றவாளிகளையும் நெருங்கவிடாமல் மேலதிகாரியான செந்தில்குமார் தடுத்து, நெருக்கடிகள் கொடுத்து வந்தார். இத்தகைய புகார்கள் நம்பத்தகுந்தனவாக இருந்தும் இவை மீது, இந்தக்கோணங்களில் இந்தக் கூலிக்கொலைக் கும்பலையும் சாதிவெறிக் கொலைக் கும்பலையும் பிடிப்பதிலோ, இவற்றின் கூட்டாளியான செந்தில்குமாரைத் தீர்க்கமாக விசாரிப்பதிலோ சி.பி.சிஐ.டி. போலீசு பாரிய அக்கறை காட்டவோ இல்லை.
செந்தில்குமாருக்கு மாமியார் வீட்டு மரியாதைகளுடன் உபசரிப்புகள் காட்டிய அதே சமயம், ‘விஷ்ணுப்பிரியா தற்கொலை’க்கு காரணம் காதல் விவகாரங்கள்தாம் என்பதற்கான ஆதாரங்களை சோடிப்பதிலே சி.பி.சிஐ.டி. போலீசு முனைப்புக் காட்டுவது அனைவரும் அறிந்த பகிரங்கமான உண்மை. ‘விஷ்ணுப்பிரியாவின் காதலர்கள்’ என்று சித்தரிக்கப்படுபவர்கள், போலீசு மிரட்டலுக்குப் பயந்து தலைமறைவாக இருக்கும் சிவகங்கை கோயில் குருக்கள் விஜயராகவன், மதுரை வழக்கறிஞர் மாளவியா. விஷ்ணுப்பிரியா இவ்விருவரிடம் தொலைபேசியில் அடிக்கடி பேசினார் என்பது போலீசு கூறும் ஆதாரம். (இப்படித்தான் கர்நாடகாவில் அதிகாரி ரவி மரண வழக்கில் போலீசு இட்டுக்கட்டிய புளுகுமூட்டை அம்பலப்பட்டுப் போனது.) செந்தில்குமார் மீது புகார் கூறிய மாளவியா, கீழக்கரை டி.எஸ்.பி. மகேஸ்வரி ஆகியோரிடமிருந்து விசாரணை என்ற பெயரில் பொய்யான வாக்கு மூலங்களைப் பெறவும் ஆதாரங்களைப் பறித்துக் கொள்ளவும்தான் போலீசு  எத்தனித்தது. ஜெயா-சசி சொத்துக் குவிப்பு வழக்கில் பிறழ் சாட்சியம் முதல் பவானி சிங் நியமனம் ஈறாக ஜெயாவின் பொறுப்பிலுள்ள சி.பி.சி.ஐ.டி. போலீசு செய்த தில்லுமுல்லுகள் எல்லோரும் அறிந்ததே. அதனால்தான் தனக்கு முக்கியமான வழக்குகளை, தமக்கு விசுவாசமான சி.பி.சி.ஐ.டி. போலீசிடம் ஜெயா-சசி கும்பல் ஒப்படைக்கிறது. அதேபோன்று அக்கும்பலுக்கு விசுவாசமான சாதியின் வாக்கு வங்கியையும் அதன் பிரதிநிதிகளான தனது இரு அமைச்சர்களையும், அக்ரி கிருஷ்ணமூர்த்தியைப் போலத் தனக்காக வசூல் வேட்டைகளை நடத்தும் எஸ்.பி. செந்தில்குமாரையும் காப்பதற்காகவே சி.பி.சி.ஐ.டி.யிடம்  இந்த வழக்குகள் ஒப்படைக்கப்பட்டிருக்கின்றன. இந்த விசாரணை மூலம் நீதி கிடைக்கும் என்று அரசியல் முட்டாள்கள்தாம் நம்புவார்கள்.
– ஆர்.கே.வினவு.com 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக