திங்கள், 12 அக்டோபர், 2015

சாதிவெறியர்கள் காட்டுமிராண்டித்தனமாக நடக்கின்றனர்’ - திருமாவளவன் கண்டனம்

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”உத்திரபிரதேசம், கிரேட்டர் நொய்டா அருகே காவல் துறையினர் தலித் குடும்பத்தினரைப் பொது இடத்தில் நிர்வாணப்படுத்திக் கொடுமை செய்துள்ளனர். ஆண்கள், பெண்கள், குழந்தைகள் ஆகிய  அனைவரையும் பொதுமக்கள் வேடிக்கை பார்க்கும் வகையில் பட்டப் பகலில் இந்தக் கொடுமையை அரங்கேற்றியுள்ளனர்.இதனைப் படம் பிடித்த வர்கள் ‘வாட்ஸ் ஆப்’ எனும் சமுக வலைதளத்தில் பரவ விட்டுள்ளனர். நெஞ்சைப் பதறவைக்கும்  இக்கொடுமையை இந்திய நாடே அமைதியாக இன்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது.மனிதாபிமான அடிப்படையில் கூட இந்த அநாகரிகத்தைக் கண்டிக்கிற துணிச்சல் யாருக்குமில்லை. பத்துபேர் முன்னிலையில் ஆடைகளைக் கழற்றி அவமானப்படுத்துவது படுகொலையை விடவும் கொடுரமானதல்லவா? இந்தக் கேவலத்தை விடுதலைச் சிறுத்தைகள் வன்மையாக கண்டிக்கிறது.

 
இந்தியாவில் இது முதல் முறையாக நிகழும் கேவலமல்ல!  எத்தனையோ தலித்துகள் இவ்வாறு அவமானப்படுத்தப்பட்டுள்ளனர். மாரட்டிய மாநிலத்தில் நாக்பூர் அருகே கயர் லாஞ்சி என்னுமிடத்தில் சாதி வெறியர்கள் ஒரே குடும்பத்தைச் சார்ந்தவர்களைப் பொது இடத்தில், அம்மணப்படுத்தி, அங்குலம், அங்குலமாக சிகரெட் நெருப்பினால் சுட்டு, சகித்துக் கொள்ளவியலாத வகையில் வதைகளைச் செய்து, தாயையும், மகளையும் படுகொலை செய்தனர்.
 
இந்தக் காட்டுமிராண்டித்தனமான அநாகரிகம் இன்னும் தொடர்கிறது. சாதிவெறியர்கள் மட்டுமின்றி காவல் துறையினரே இந்தக் கேவலத்தைச் செய்துள்ளனர். காவல்துறை உள்ளிட்ட அரசு துறைகள் யாவற்றிலும் இத்தகைய சாதிவெறியர்கள் பரவியுள்ளனர் என்பதை அன்றாட வாழ்வில் காண முடிகிறது.
 
உத்திர பிரதேசத்தில் மட்டுமின்றி இத்தகைய அவலம் இந்தியா முழுவதும் நடைபெற்று வருகிறது. தலித்துகளுக்கு எதிரான இந்த இழிவுப் போக்குகளை கட்டுப்படுத்திட ஆட்சியாளர்கள் அக்கறை  காட்டுவதில்லை என்பது மேலும் கூடுதலான அதிர்ச்சி அளிக்கிறது. இதுவரை இந்திய அளவில் அரசியல் கட்சித் தலைவர்கள் யாரும் இது குறித்து வாய் திறக்கவில்லை.
 
தமிழகத்திலும் இது போன்ற கொடுமைகள் அவ்வப்போது அரங்கேறி வருகின்றன. திண்ணியம் என்னுமிடத்தில் தலித்து களின் வாயில் மலம் திணித்தக் கொடுமையும், நிலக்கோட்டை அருகே தலித் ஒருவன் வாயில் சிறுநீர்ப் பாய்ச்சிய கொடுமையும் நடந்தது. அண்மையில் சேலம் கோகுல்ராஜ் என்னும் தலித் இளைஞர் தலை துண்டிக்கப்பட்டு படுகொலையானார்.
 
இவ்வாறு எத்தனை எத்தனையோ வன்கொடுமைகள் தமிழகத்திலும் அரங்கேறி வருகின்றன. எனினும் மனிதாபிமான அடிப்படையிலும் கூட இந்தக் கேவலங்களைக் கண்டித்திட அரசியல் கட்சித் தலைவர்களும் முன்வரவில்லை என்பதுதான் வேதனையிலும் வேதனையாக உள்ளது.
 
உத்திரபிரதேசத்தில் நடந்துள்ள வன்கொடுமைக்குக் காரணமானவர்கள் யாராயிருந்தாலும் அவர்கள் மீது உத்திரபிரதேச அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதனை மூடி மறைத்திட முயற்சிக்க கூடாது.
 
மாநில அரசு உரிய நடவடிக்கை எடுக்க தவறினால், அரசியலமைப்புச் சட்டப்படி அந்த மக்கள் விரோத அரசின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு விடுதலைச் சிறுத்தைகள் வேண்டுகோள் விடுக்கிறது.
 
திருத்தப்பட்ட வன்கொடுமைகள் தடுப்புச்சட்டத்தின் படி குற்றவாளிகளை உடனடியாகச் சிறைபடுத்த வேண்டுமெனவும் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டுமெனவும் உத்திரபிரதேச அரசை விடுதலைச் சிறுத்தைகள் கேட்டுக்கொள்கிறது” என்று கூறியுள்ளார். webdunia.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக