வெள்ளி, 23 அக்டோபர், 2015

டாஸ்மாக்குக்கு எதிராக சிறைசென்ற பச்சையப்பன் கல்லுரி மாணவர்களின்......

மூடு டாஸ்மாக் போராட்டத்தில் பங்கேற்று, 38 நாட்கள் புழல் சிறையிலடைக்கப்பட்டிருந்து நீண்ட போராட்டங்களுக்குப் பிறகு பிணையில் விடுவிக்கப்பட்ட மாணவர்களுடன்...
டாஸ்மாக் போராட்டம் - சிறை சென்ற மாணவர்கள்டாஸ்மாக்கை மூடு” என்ற முழக்கத்துடன் கடந்த ஆகஸ்ட் 3 அன்று சென்னை பச்சையப்பன் கல்லூரி மாணவர்களை ஒருங்கிணைத்து புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி நடத்திய போராட்டத்தில் அக்கல்லூரிக்கு அருகாமையில் உள்ள டாஸ்மாக் கடை அடித்து நொறுக்கப்பட்டது. அப்போராட்டத்தில் பங்கேற்று, சாராய பாட்டிலை உடைத்ததற்காக 38 நாட்கள் புழல் சிறையிலடைக்கப்பட்டிருந்த 13 மாணவர்கள் நீண்ட போராட்டங்களுக்குப் பிறகு பிணையில் விடுவிக்கப்பட்டிருக்கின்றனர்.
சிறை சென்ற மாணவர்கள்
சிறை சென்றவர்களில் செல்வம், தினேஷ், நினைவேந்தன் ஆகியோர் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள்; கனிமொழி சட்டக்கல்லூரி மாணவி; நிவேதிதா, வாணிசிறீ, ஜான்சி ஆகியோர் ராணிமேரிக் கல்லூரி மாணவிகள்; மாரிமுத்து பள்ளி மாணவர்; மணி ஐ.டி.ஐ. மாணவர்; சாரதி, ஆசாத், திருமலை மற்றும் ரூபாவதி ஆகியோர் பு.மா.இ.மு. அமைப்பின் முன்னணியாளர்கள். போராட்டம், போலீசின் அடக்குமுறை, சிறை அனுபவம் குறித்து அவர்களுடன் கலந்துரையாடினோம்.
“டாஸ்மாக் கடையை இழுத்து மூடனும்ற உணர்வோடதான் போராட்டத்துல கலந்துகிட்டேன். ஆனா, ஜெயில்ல போடுவாங்கனெல்லாம் நினைக்கல. ஜெயிலுக்குள்ள வந்த முத நாளே அழுதிட்டேன். தோழர்கள் புத்தகம் படித்து விவாதிப்பதும் அமைப்பு பாட்டு பாடிகிட்டும், மத்த கைதிங்ககூட அரசியல் பேசிகிட்டும் இயல்பா இருந்தாங்க. இவங்களால மட்டும் எப்படி இருக்க முடியுதுன்னு யோசிச்சேன்…” என்கிறார், பச்சையப்பன் கல்லூரி மாணவரான தினேஷ்.
“யார்கூடவும் சகஜமாக பேசமாட்டேன்; பத்து மணிவரைக்கும்கூட வீட்டுல தூங்குவேன். ரேஷன் அரிசியில சமைச்சிருந்தா மூனு நாளானாலும் சாப்பிடாம அடம்பிடிப்பேன். புக் படிக்கற பழக்கமே இருந்ததில்லை. ஆனா, ஜெயிலுக்கு வந்தப்பிறகு எல்லாமே மாத்திகிட்டேன்…” என்கிறார், பச்சையப்பன் கல்லூரி மாணவரான நினைவேந்தன்.
“ஜெயில்ல அம்மா வந்து என்னை பாத்தப்ப வீட்டை காலி பண்ணவச்சிட்டாங்கனு சொல்லி அழுதாங்க. அப்போ மனசு கொஞ்சம் கஷ்டமாத்தான் இருந்துச்சி” எனும் மாரிமுத்து, மதுரவாயல் அரசு மேநிலைப்பள்ளியில் 12-ம் வகுப்பு பயிலும் பள்ளி மாணவர். அப்பாவின் ஆதரவில்லாத குடும்பம் அவருடையது. கல்லூரி செல்லும் அக்கா; பத்தாம் வகுப்பு பயிலும் தம்பி; சிற்றாள் வேலை செய்து ஒற்றை ஆளாய் நின்று மொத்தக் குடும்பத்தையும் காப்பாற்றும் தாய். மூன்றுமாதங்களாக வீட்டுவாடகை செலுத்தவியலாத அளவுக்கு வாட்டும் குடும்ப வறுமை. எந்நேரமும் வீட்டைக் காலி செய்து வீதியில் துரத்தியடிக்கப்படலாம் என்ற நெருக்கடியான அந்தச் சூழலிலும் மனம்தளராமல் போராட்டத்தில் கலந்துகொண்டு சிறைசென்றவர் மாரிமுத்து.
மணி
மணி
“இந்த சமூகத்தில் பெண்கள் போராட வருவதே அரிது. அமைப்பு கற்றுக்கொடுத்த அரசியல் உணர்விலிருந்து இளம்பெண்களாக இருந்தபோதிலும் நாங்கள் போராட்டக் களத்தில் முன்னிற்கிறோம். இப்போராட்டங்களின் பொழுது, எங்களை கைது செய்ய முயன்ற போலீசார் மாணவிகளாகிய எங்களிடம் அருவருக்கத்தக்க முறையில் நடந்து கொண்டனர். கண்ட இடங்களில் கையை வைத்து எங்களைத் தூக்குவதும், உடைகளைக் கிழித்துவிடுவதும், பேண்ட் நாடாவை அவிழ்த்துவிடுவதும் என சொல்ல நாக்கூசும் அளவிற்குக் கீழ்த்தரமான முறையில்தான் எங்களை போலீசார் நடத்தினர்.” என்கிறார் சட்டக்கல்லூரி மாணவியான கனிமொழி.
“ஏட்டய்யாவ பத்தி எஸ்.ஐ. கிட்ட கம்ப்ளைண்ட் பன்னினா என்ன ரெஸ்பான்ஸ் இருக்குமோ, அதுமாதிரித்தான், போலீசோட டார்ச்சர பத்தி ஜட்ஜ் கிட்ட சொன்னப்பவும் இருந்துச்சி. போலீசு அடிச்சாங்கன்னு சொன்னா, ‘அடிச்சு கை-கால் உடைஞ்சிருச்சா, இல்ல இரத்தம் வந்திச்சான்னு’ எங்களையே திருப்பிக் கேட்குது கயல்விழின்னு எழும்பூர் ஜட்ஜ். காக்கிச் சட்டை போட்ட போலீசும், கருப்பு கோட்டு போட்ட நீதிபதியும் எங்களுக்கு ஒன்னாதான் தெரிஞ்சாங்க…” என்கிறார் ராணிமேரிக் கல்லூரி மாணவியான வாணிசிறீ.
“மூனுநாள்ல வெளிய வந்திருவோம்னுதான் முதல்ல நினைச்சோம். அப்புறம் ஒருமாசம்கூட ஆகலாம்னு தெரிஞ்சப்ப, கொஞ்சம் கஷ்டமாத்தான் இருந்திச்சி…” என்று ராணிமேரிக்கல்லூரியில் இளங்கலை முதலாமாண்டு பயிலும் மாணவி ஜான்சி சொல்லி முடிப்பதற்குள் இடைமறித்த, அவரது சீனியரான நிவேதிதா, “பொய் கேசு போட்டு போலீசு ஸ்டேசன்ல மூனு நாளா முழுநிர்வாணமா வச்சே கொடுமைப்படுத்துனாங்கன்னு ஒரு பெண் கைதி தனக்கு நேர்ந்த கொடுமையை விவரிச்சப்ப அதிர்ச்சியில் நாங்க உறைஞ்சி போனோம். பொய் கேசுலேயும், சின்ன சின்ன தப்பு செஞ்சதுக்காகவும் ஜெயிலுக்கு வந்திருக்க சாதாரண மக்களே இவ்வளவு கொடுமைகளை அனுபவிக்கும்பொழுது, போராட்டம் நடத்தி அரசியல் கைதியாக உள்ள வந்திருக்கோம், பத்துநாள் இருந்துட்டு போனா என்ன குடிமுழுகிடப் போவுதுன்னு தோணுச்சி…” என்கிறார், அவர்.
“டாஸ்மாக் குடியினால் பல பெண்களின் தாலியறுக்கப்படுகிறது. அன்றாடம் குடிகார கணவன்களின் சித்திரவதைக்குள்ளாகிறார்கள் தமிழகத்தின் தாய்மார்கள். இவர்கள் அனுபவிக்கும் சித்திரவதைகளுடன் ஒப்பிடும்போது, போராட்டத்தின் பொழுதும் சிறைக்குள்ளும் நாங்கள் அனுபவித்த அடக்குமுறைகள் ஒன்றும் பெரிதாகப் படவில்லை.” என்கின்றனர் சிறை சென்ற மாணவர்கள்.
“இந்த சவாலான நெலமைய மாத்தனும்னுதானே போராடுறோம்…”
“போலீசையும், ஜெயில் வாழ்க்கையும் கூட சமாளிச்சிட்டேன். பெயில் கிடைச்சு வீட்டுக்குப் போனா, மொத்தக் குடும்பமும் சேர்ந்து என்ன அடிச்சது. ‘பொட்டபுள்ள ஜெயிலுக்கெல்லாம் போயிட்டு வர்றீயே, இனி உன்னை எவன்டி கட்டிக்குவான்?’ னு கண்டபடி பேச ஆரம்பிச்சிட்டாங்க…” என்று கூறும் ரூபாவதி, எட்டாம் வகுப்பு மட்டுமே படித்தவர். எக்ஸ்போர்ட் கம்பெனிக்கு வேலைக்குச் செல்லும் இளம்பெண்.
ரூபாவதி
ரூபாவதி
“கல்லூரி மாணவியல்லாத நீங்கள் இந்தப் போராட்டத்தில் கலந்துகொண்டு சிறை சென்றது எப்படி?” என்று கேள்வியை முடிப்பதற்குள்ளாகவே, பேசத் தொடங்கினார் ரூபாவதி. “பு.மா.இ.மு. அமைப்புல உறுப்பினர் என்பதையும்தாண்டி, டாஸ்மாக் குடியினால் சொந்தமுறையில் பாதிக்கப்பட்டவர்களில் நானும் ஒருத்தி. குடியினாலேயே 29 வயதில எங்க அண்ணனை இழந்திருக்கேன். எங்கப்பாவும் மொடா குடிகாரர்தான். சம்பாத்தியம் முழுசையும் குடிச்சே அழிக்கிறவரு. நினைவுக்கு தெரிஞ்ச நாள் வரையில் பல இரவுகள் சாப்பிடாம பச்ச தண்ணிய மட்டுமே குடிச்சிட்டு தூங்கியிருக்கேன். குடிக்கலைன்னா எங்கப்பா எங்க மேல அவ்ளோ பாசமா நடந்துப்பாரு. அதே குடிச்சுட்டு வந்துட்டாருன்னா அப்படியே ஆப்போசிட்டா மாறிடுவாரு. அம்மா சமைச்சு வச்ச சாப்பாட்டுல உப்பையோ, மண்ணையோ அள்ளிப் போட்டுருவாரு. அது மட்டுமில்லாம, அந்தச் சாப்பாட்டை நாங்க எல்லாம் சாப்பிடனும்னு அடிப்பாரு. அப்பாவோட அடிக்கு பயந்தே பல நாளு மண்ணள்ளிப்போட்ட சொத்தை மொத்தக் குடும்பமும் சேர்ந்து சாப்பிட்டிருக்கோம். இப்படி, குடியினால சொந்த முறையில அதன் பாதிப்ப உணர்ந்த என் குடும்பமே எனக்கு ஆதரவா இல்லையேனு நினைக்கிறப்போ வருத்தமாத்தான் இருக்கு. ஆனாலும், இந்த சவாலான நிலைமையை மாத்தனும்னு தானே பு.மா.இ.மு. தோழர்கள் போராடுறாங்க.” என்கிறார், ரூபாவதி.
“நல்ல விசயத்துக்குத்தான் எம்புள்ள ஜெயிலுக்குப் போயிருக்கான்…”
அமுதம்
அமுதம்
“என் வீட்டுக்காரனால பைசா காசு பிரயோசனம் இல்லை. இவனயும் வயசுக்கு வந்த பொம்பள புள்ளையும் வச்சிகிட்டு வீட்டுவேலை செஞ்சி ஒத்த ஆளா நின்னு நாந்தான் கஷ்டபடுறேன். கொழந்த கால்ல மாட்டியிருந்த கொலுசு, காமாட்சி விளக்குனு வூட்ல இருக்க ஒரு பொருள் வுடாம அடகு வச்சு குடிச்சுருவான் எம் புருசன். அந்த ஆளு குடிச்சிட்டு வந்து பிரச்சினை பண்றதாலேயே வீட்டு ஓனருங்க துரத்திவுட்டு, இதுவரைக்கும் எட்டு வீட்டுக்கு மேல மாறிட்டோம். புருசன்தான் சேத்திக்கில்லைனா, புள்ளைனாச்சும் உருப்படுமானு பார்த்தா இவனும் இந்த நாசமத்த குடியைத்தான் குடிச்சுட்டு வந்து நிக்கிறான். 17 வயசுல குடி என்ன வேண்டியிருக்கு?
இவன் போராட்டத்துக்கு போயி ஜெயில்ல புடுச்சி போட்டுட்டாங்கனு புள்ளைங்க (பு.மா.இ.மு. தோழர்கள்) சொன்னப்ப நான் மண்ண அள்ளி தூத்தாத குறையா புள்ளைகள திட்டிபுட்டேன். அப்புறம் புள்ளைங்க எடுத்து சொன்னிச்சிங்க. ‘சாராயக்கடையை மூடனும்னு நல்ல விசயத்துக்குத்தான் எம்புள்ள போராடி ஜெயிலுக்குப் போயிருக்கானு நினைக்கிறப்ப ஒருபக்கம் சந்தோசமாத்தா இருக்கு’. ஆனா, இவன் முதல்ல திருந்தனுமே?” எனக் கேள்வியெழுப்புகிறார், இப்போராட்டத்தில் சிறை சென்றவர்களுள் ஒருவரான ஐ.டி.ஐ. மாணவர் மணியின் தாயார் அமுதம்.
குடிப்பழக்கமுள்ள ஒரு மாணவர் டாஸ்மாக்கிற்கு எதிரானப் போராட்டத்தில் பங்கெடுத்திருப்பது வியப்பைத் தரலாம். இதைவிட ஆச்சரியமானது, பச்சையப்பன் கல்லூரியில் தன் நண்பனைப் பார்க்கச் சென்ற மணி இப்போராட்டத்தில் கலந்துகொண்டு கைதாகியிருப்பது. மக்கள்திரள் போராட்டங்கள் எப்பொழுதுமே இப்படிப்பட்ட ஆச்சரியங்களை உருவாக்கக் கூடியவைதான்! vinavu.com
– இளங்கதிர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக