வியாழன், 1 அக்டோபர், 2015

மும்பை: 5 பேருக்கு தூக்கு 7 பேருக்கு ஆயுள் தண்டனை....தொடர் ரயில் குண்டு வெடிப்பு வழக்கில்...

மும்பை: கடந்த 2006, ஜூலை 11ம் தேதி 188 பேரை பலி கொண்ட மும்பை தொடர் ரயில் குண்டு வெடிப்பு வழக்கில் குற்றவாளிகள் என்று தீர்ப்பு கூறப்பட்ட 12 பேரில் 5 பேருக்கு தூக்கு தண்டனை வழங்கி மும்பை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது. கடந்த 2006, ஜூலை 11ம் தேதியன்று சர்ச்கேட்டில் இருந்து புறப்பட்ட 7 புறநகர் ரயில்களில் அடுத்தடுத்து ஆர்.டி.எக்ஸ். குண்டுகள் வெடித்தன. கார் ரோடு-சாந்தாகுரூஸ், பாந்த்ரா-கார் ரோடு, கேஸ்வரி-கோரேகாவ்,மீரா ரோடு-பயந்தர், மாகிம்-மாட்டுங்கா ஆகிய ரயில் நிலையங்களுக்கு இடையே புறநகர் ரயில்கள்சென்று கொண்டிருந்த போது இந்த குண்டு வெடிப்புகள் நடந்தன.
இதுதவிர மாகிம் மற்றும் போரிவலியில் நின்று கொண்டிருந்த ரயில்களிலும் குண்டுகள் வெடித்தன. இந்த 7 குண்டுகளும் புறநகர் ரயிலின் முதல் வகுப்பு பெட்டிகளில் வைக்கப்பட்டிருந்தன. குண்டுவெடிப்பில் மொத்தம் 188 பேர் உடல் சிதறி பலியானார்கள். 829 பேர் படுகாயமடைந்தனர்.
இந்த பயங்கர சம்பவம் தொடர்பாக 13 பேர் மகாராஷ்டிரா தீவிரவாத தடுப்பு படையினரால் கைது செய்யப்பட்டனர். இவர்கள் அனைவரும் தடை செய்யப்பட்ட ‘சிமி’ இயக்கத்தைச் சேர்ந்தவர்கள். பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ. மற்றும் லஷ்கர் இ தொய்பா தீவிரவாத இயக்கத்தின் தூண்டுதல் பேரில் இந்த பயங்கர குண்டு வெடிப்பு சம்பவம் நடைபெற்றது.

முக்கிய குற்றவாளியாக கருதப்படும் அஸாம் சீமா உள்ளிட்ட 17 பேர் தலைமறைவாகி விட்டனர். அவர்கள் இதுவரை சிக்கவில்லை. இந்த 17 பேரி்ல் 13 பேர் பாகிஸ்தானை சேர்ந்தவர்கள். 30 பேர் மீதும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டாலும் 17 பேர் தலை மறைவு குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டனர். கைது செய்யப்பட்ட 13 பேருக்கும் எதிரான வழக்கு மும்பையில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் 9 ஆண்டுகள் விசாரிக்கப்பட்டது. நீதிபதி யதீன் டி.ஷிண்டே கடந்த 11ம் தீர்ப்பளித்தார். அதில் 12 பேரை குற்றவாளிகள் என அறிவித்தார். இதைத் தொடர்ந்து குற்றவாளிகளுக்கு என்ன தண்டனை வழங்கலாம் என்பது குறித்து வக்கீல்களின் வாதம் நடந்தது.

கடந்த மாதம் 23ம் தேதி வக்கீல்களின் வாதம் முடிந்தது. இதனை தொடர்ந்து 12 குற்றவாளிகளுக்கும் நேற்று  தண்டனை விவரம் அறிவிக்கப்பட்டது. இதில் 5 பேருக்கு மரண தண்டனையும், 7 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டது. மரண தண்டனை விதிக்கப்பட்டவர்கள் விவரம்: கமல் அகம்மது அன்சாரி(37), முகம்மது பைசல் ஷேக்(36), ஈத்தேஷாம் சித்திக்(30), நவீத் ஹுசைன் கான்(30) மற்றும் ஆசிப் கான்(38). இந்த 5 பேரும்தான் ரயில்களில் குண்டு வைத்தவர்கள். ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டவர்கள் விவரம்: தன்வீர் அகம்மது அன்சாரி(37), முகம்மது மஜ்ஜித் ஷாபி(32), ஷேக் ஆலம் ஷேக்(41), முகம்மது ஷாஜித் அன்சாரி(34), முஜ்ஜாம்மில் ஷேக்(27), சோகைல் மெஹ்மூத் ஷேக்(43) மற்றும் ஜமீர் அகம்மது ஷேக்(36).

தீர்ப்பை எதிர்த்து அப்பீல்

குற்றவாளிகளின் வக்கீல் ஷேக் கூறியதாவது: தண்டனை விதிக்கப்பட்ட 12 பேரும் அப்பாவிகள். உண்மையில் அவர்கள் பாதிக்கப்பட்டவர்கள். நீதிமன்றம்  எங்கேயோ தவறு இழைத்துவிட்டது. உண்மையை கண்டறிய நீதிமன்றம் எந்த  முயற்சியும் செய்யவில்லை. வக்கீல்களாலும், அட்வகேட்களாலும்  என்னவெல்லாம் செய்ய முடியுமோ அத்தனையும் செய்துவிட்டனர். இந்த தீர்ப்பை  எதிர்த்து மும்பை ஐகோர்ட்டில் அப்பீல் செய்வோம். ஐகோர்ட்டில் நீதி  வழங்கப்பட்டு அப்பாவி இளைஞர்கள் அனைவரும் விடுதலை செய்யப்படுவார்கள் என்று நம்புகிறோம். இவ்வாறு வக்கீல் ஷேக் தெரிவித்தார் dinakaran.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக