செவ்வாய், 27 அக்டோபர், 2015

ஆப்கான் பூகம்பம்..சுமார் 260 பலி..பாகிஸ்தான் இந்தியா நேபால்...சென்னையிலும் அதிர்வு...


இஸ்லாமாபாத்: வட கிழக்கு ஆப்கனை மையமாக வைத்து, நேற்று ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால், ஆப்கன், பாக்., நாடுகளில், 200க்கும் மேற்பட்டோர் பலியாகினர்; இந்தியாவில், டில்லி உட்பட, வட மாநிலங்கள் குலுங்கியதால், மக்கள் பீதியில், வீடுகளிலிருந்து ஓட்டம் பிடித்தனர்.ஆப்கன் தலைநகர் காபூலிலிருந்து, 250 கி.மீ., தொலைவில், இந்துகுஷ் மலைப்பகுதியில், 213 கி.மீ., ஆழத்தில், நேற்று பிற்பகல், 2:40 மணிக்கு, சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில், 7.5 புள்ளியாக பதிவான, இந்த நிலநடுக்கத்தால், ஆப்கன் மட்டுமல்லாது, அண்டை நாடான பாகிஸ்தானின் பெரும்பகுதிகள், பலத்த பாதிப்புக்கு உள்ளாகின.
பாகிஸ்தானில், நிலநடுக்கத்தால், 100 பேர் பலியாகினர்; நுாற்றுக்கணக்கானோர் காயங்களுடன் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். பெஷாவர் நகரில் மட்டும், 18 பேர் பலியானதாக, மாகாணத் தகவல் துறை அமைச்சர் முஷ்டாக் கனி கூறினார். ஸ்வாட் பள்ளத்தாக்கில், பெண்கள், குழந்தைகள் உட்பட, எட்டு பேர் உயிரிழந்தனர். நிலநடுக்கத்தின் மையப்பகுதிக்கு அருகே உள்ள பாக்., பகுதியான, சித்ராலில், 13 பேர் பலியாகினர்.பாகிஸ்தானின் மலைப்பகுதிகளில், பல இடங்களில், நிலச்சரிவுகள் ஏற்பட்டதாகவும், அதனால், பலி எண்ணிக்கை கணிசமாக உயரும் என்றும் கூறப்படுகிறது. ஸ்வாட் பள்ளத்தாக்கில், காயமடைந்த, 194 பேர், மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். பெஷாவர் நகர மருத்துவமனைகளில், 100க்கும் மேற்பட்டோர் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கராச்சி, லாகூர், இஸ்லாமாபாத், ராவல்பிண்டி, குவெட்டா, கோஹத், மலாகண்ட் ஆகிய நகரங்களிலும், நிலநடுக்கத்தின் பாதிப்பு இருந்தது. ஆப்கனில், பல்வேறு மாகாணங்களில் இருந்து கிடைத்த தகவல்களின்படி, 100க்கும் மேற்பட்டோர் பலியாகினர். தக்தார் மாகாணத்தில், பள்ளிக் கட்டடம் குலுங்கியதை அடுத்து, தப்பிக்க ஓட்டம் பிடித்த மாணவியர், நெரிசலில் சிக்கியதில், 12 பேர் பலியானதாக தகவல்கள் கூறுகின்றன. நிலநடுக்கத்தால், ஆப்கனின் பல மாகாணங்களில் வீடுகள் நொறுங்கி விழுந்தன. இதனால், உயிர் பலி அதிகமாக இருக்கும் என அஞ்சப்படுகிறது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகளை எதிர்கொள்ள, பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் அவசர கூட்டத்தை, ஆப்கன் அரசு கூட்டியுள்ளது. தலைநகர் காபூலில், மின்சாரம் துண்டிக்கப்பட்டது; தொலைபேசிசேவையும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.>வட மாநிலங்கள் அதிர்ந்தன:

ஆப்கனில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் தாக்கம், இந்தியாவின் வட மாநிலங்களிலும் எதிரொலித்தது. தலைநகர் டில்லியிலும், ஜம்மு - காஷ்மீர் மாநிலத்திலும், நில நடுக்கத்தின் தாக்கம் அதிகமாக இருந்தது. பீதியில், வீடுகளை விட்டு ஓட்டம் பிடித்த மக்கள், சாலைகளில் தஞ்சம் புகுந்தனர்.நிலநடுக்கத்தின் அதிர்வுகள், கடுமையாக உணரப்பட்டதால், டில்லி அரசு, பேரிடர் மேலாண்மை குழுக்களை, உடனடியாக நிவாரணப் பணிகளில் ஈடுபடுத்தியது. நிலநடுக்கத்தால், டில்லி மெட்ரோ ரயில் சேவை, 5 நிமிடம் நிறுத்தி வைக்கப்பட்டது. அதன் பின், சேவை மீண்டும் துவங்கினாலும், மிக மெதுவாக ரயில்கள் இயக்கப்பட்டன.பஞ்சாப், உத்தரகண்ட், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில், நில அதிர்வுகள் உணரப்பட்டன.

ஜம்மு - காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகர் அருகே, ராணுவத்தின் பாதுகாப்பு மறைவிடம், கடுமையான நில அதிர்வுகளால் நொறுங்கியது. இதில், இரு ராணுவ வீரர்கள் காயமடைந்தனர். நேற்றைய நிலநடுக்கத்துக்கு பின், மாலையில், மீண்டும், பல இடங்களில் நில அதிர்வுகள் உணரப்பட்டதாக, தகவல்கள் கூறுகின்றன.உதவிக்கரம் : நிலநடுக்கத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள, பாக்., ஆப்கானிஸ்தான் நாடுகளுக்கு உதவத் தயாராக இருப்பதாக, பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். 'டுவிட்டர்' சமூக வலைதளத்தில்,மோடி கூறியிருப்பதாவது: ஆப்கன் - பாக்., நாடுகளில், கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்ட செய்தி அறிந்தேன். அதன் அதிர்வுகள், இந்தியாவின் பல பகுதிகளிலும் உணரப்பட்டுள்ளன. அனைவரும் பாதுகாப்பாக இருக்க, இறைவனை பிரார்த்திக்கிறேன். நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரம் குறித்து, அவசர மதிப்பீடு தரும்படி கேட்டுள்ளேன். பாதிப்புக்குள்ளான, பாக்., ஆப்கன் நாடுகளுக்கு உதவ, இந்தியா தயாராக உள்ளது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

 துரத்தும் சோகம் : ஆப்கன் - பாக்., நாடுகளில் நேற்று ஏற்பட்ட நிலநடுக்கம், கடந்த, 2005ல், பாகிஸ்தானில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தை நினைவுபடுத்தியதாக, காஷ்மீர் மக்கள் தெரிவித்தனர். அந்த>சுனாமிக்கு வாய்ப்பில்லை: 'இன்காய்ஸ்' எனப்படும், தேசிய பெருங்கடல் தகவல் சேவை மையம் வெளியிட்ட அறிக்கை:ஆப்கனில் ஏற்பட்ட நிலநடுக்கம், இந்துகுஷ் மலையின் நிலப்பகுதியில் மையம் கொண்டிருந்தது. நிலநடுக்க வரலாறு மற்றும் சுனாமி தகவல்களின் அடிப்படையில், நேற்றைய நிலநடுக்கத்தால், இந்தியாவுக்கு சுனாமி பாதிப்பு கிடையாது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

சென்னையிலும்... : சென்னை, மீனம்பாக்கத்தில் உள்ள நில அறிவியல் துறையின், நிலநடுக்க பதிவு மைய அதிகாரி ஒருவர் கூறியதாவது: ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் தாக்கம், வட மாநிலங்களில் அதிகளவு உணரப்பட்டது. நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதியில் இருந்து, அதன் அதிர்வு அலைகள், நான்கு திசையிலும் பரவுகின்றன. நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதிக்கு, மிக அருகில் உள்ள பகுதிகளில், அதன் தாக்கம் மிக அதிகமாக உணரப்படுகிறது.ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் தாக்கம், சென்னையில், அம்பத்துார், பட்டினப்பாக்கம் பகுதிகளில் உணரப்பட்டு உள்ளது. சென்னையில் ஏற்பட்ட நில அதிர்வால் பாதிப்பு இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.தினமலர்.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக