செவ்வாய், 15 செப்டம்பர், 2015

சன்னி லியோனா, திப்புவா? ரஜினிக்கு இராம கோபாலன் உத்தரவு

meghna - vinavu cartoonபுண்ணிய பாரத தேசத்தின் புதல்வர்களாம் ஹிந்துக்கள் முக்தியடைந்து வைகுந்தமோ கைலாயமோ செல்வதற்காக இருபத்தி நான்கு மணி நேரமும் இடையறாத சிந்தித்து வருபவர் மானனீய ஸ்ரீ வீரத்துறவி இராம கோபாலன்ஜி அவர்கள். அம்பாளுக்கு உகந்த ஹிந்துக்களின் புனித தினமாம் வெள்ளிக்கிழமை (11/09/2015) அன்று இன்னொரு (குட்டி) தேசபக்தர் திருவாளர் ரஜினி காந்துக்கு வேண்டுகோள் விடுத்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் மானனீய வீரத்துறவிஜி.
”பிரபல கன்னட சினிமா தயாரிப்பாளர் ஒருவர் திப்பு சுல்தானின் வாழ்க்கையை சினிமாவாக எடுக்கவுள்ளதாகவும், அதில் நடிக்க ரஜினி காந்திடம் பேச்சு நடத்தப் போவதாகவும் செய்தி வெளியாகியுள்ளது. திப்பு சுல்தான் தமிழர்களைக் கொன்றவன்; அதனால் அவனது வாழ்க்கை வரலாற்றில் தமிழரை மதிக்கும் ரஜினி நடிக்கக் கூடாது” என்று மானனீய ஸ்ரீ வீரத்துறவி ராம கோபாலன் அறிவுறுத்தியுள்ளார்.
இதை பரம்பூஜனிய மோடிஜியின் பெயரில் ஆணையாக ஸ்ரீமான் ரஜினி சார்வாள் புரிந்து கொள்வார் என்பதில் ஐயமில்லை.
மேலும் அன்னாரது அறிக்கையில், ”கொங்கு பகுதியான பொள்ளாச்சியில் வசித்து வந்த அமரர் எம்.ஜி.ஆரின் தமிழ் மூதாதையர்கள் கேரளாவுக்கு இடம் பெயரக் காரணமே திப்பு சுல்தானின் படையெடுப்பும், அவன் தமிழர்களைப் படுகொலை செய்ததும் தான்” என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், “திப்பு சுல்தான் ஒரு ஹிந்து மத விரோதி. அவனது வாழ்க்கை வரலாற்றை வைத்து எடுக்கப்படும் படத்தைத் திரையிட விடமாட்டோம்,” என்றும் குறிப்பிட்டுள்ளதாக பத்திரிகைகளில் வெளியாகியுள்ளது. புரட்சித் தலைவரின் மூதாதையர்களை கொன்றவன் என்பதால் புரட்சித் தலைவியும், ரத்தத்தின் ரத்தங்களும் பொங்கி இந்த தர்ம யுத்தத்திற்கு ஆதரவு அளித்தாக வேண்டும். கூடவே தேச நலன் கருதி உருவாக இருக்கும் பா.ஜ.க – அ.தி.மு.க கூட்டணிக்கு இந்த அறப்போர் ஒரு ஓப்பனிங்காக இருக்கும் என்பது நிச்சயம்.
மானனீய ஸ்ரீ வீரத்துறவியார் அவர்கள் ஹிந்துக்களின் நலன் குறித்து பேச ஆரம்பித்தாலே வயிற்றுப் போக்கு வந்த ஆசன வாய் போல் நில்லாது கொட்டும் என்பது ஈரேழு லோகமும் அண்ட சராசரங்களும் அறிந்த உண்மை. அப்படியிருக்க, விதேசி சித்தாந்தத்தை இறக்குமதி செய்து பேசும் இடதுசாரிகளின் செல்வாக்குக்கு உட்பட்ட பத்திரிகை உலகம் மானனீய ஸ்ரீ வீரத்துறவியாரின் அறிக்கையை கத்தரித்திருக்கவே வாய்ப்புள்ளது.
இது ஒரு பக்கமிருக்க, நீங்களே யோசித்துப் பாருங்கள். கொடுங்கோல முஸல்மான் திப்பு சுல்தானின் கொடுமைகள் அதிகரித்த காரணத்தால் பச்சைத் தமிழ்க் கொங்குவேளாள கவுண்டர்களான எம்ஜியாரின் முன்னோர்கள் பாலக்காட்டுக்கு இடம்பெயர்ந்ததோடு மதமாற்றத்தைத் தவிர்க்க மலையாள நாயர்களாக ஜாதியே மாறியுள்ளனர்.
சாட்சாத் அந்த மதுரை மீனாக்‌ஷியின் திருவுளத்தால் திப்புவின் கொடுங்கோன்மை ஒரு கட்டுக்குள் இருந்திருக்கிறது; ஒருவேளை அடங்காதிருந்து கவுண்டரிலிருந்து நாயராக ஜாதி மாறாமல் ஒரேயடியாக எல்லோரும் அய்யராகவும் அய்யங்காராகவும் மாறியிருந்தால் வருண தருமத்தின் நிலை என்னவாகியிருக்கும்? எல்லோரும் ஆன்மீகப் பணியில் ஆழ்ந்திருக்க, ஷத்ரிய, வைஸ்ய மற்றும் ஷூத்ர தர்மங்கள் என்னவாகியிருக்கும்? தோளும் உடலும் காலுமின்றி – அதாவது முண்டம் இல்லாமல் – தலை மட்டுமே கொண்ட ஸமூகம் நிலைகுலைந்திருக்குமே?
மீனாக்‌ஷி காப்பாற்றினாள்.. போகட்டும்.
மானனிய ராமகோபாலன்ஜி பெரியவாள் கூறியிருப்பதில் ஒரு உண்மையை பக்தர்கள் எண்ணிப் பார்க்க வேண்டும். இன்று கொங்கு மண்டலத்தில் ஜீன்ஸ் பேண்ட் போட்டு பெண்களை மயக்கும் ஈனச்சாதி ஆண்களை எதிர்த்து தளபதி யுவராஜின் தலைமையில் வேளாளக் கவுண்டர்கள் ஒரு மகாபாரத யுத்தமே நடத்தி வருகிறார்கள். பிறகு கொங்கு வேளாள சிங்கங்களுக்கு போதிய பெண்கள் கிடைக்காததால், மலையாள தேச நாயர் பெண்களை மணம் செய்து வருகின்றனர். இந்த படிக்கு பார்த்தாலும் புரட்சித் தலைவரின் முன்னோர்கள் நாயராக அவதாரமெடுத்தது பொருந்தி வருகிறது.
சதா சர்வகாலமும் ஹிந்துக்களின் நலன் குறித்தே சிந்திக்கும் மானனீய ஸ்ரீ வீரத்துறவியாரின் மூளைச் சுரப்பை நாங்கள் நன்கு அறிந்தவர்கள் என்பதால், சுருக்கப்படாத அன்னாரின் அறிக்கையின் பிற பகுதிகள் எப்படி இருந்திருக்கும் என்பதை வாசகர்களுக்கு அறியத் தருவது ஹிந்து பூமியில் பிறந்தவர்கள் என்ற முறையில் எமது கடமை; அதை அவ்வண்ணமே கீழேயுள்ள வியாஸத்தின் மூலம் நிறைவேற்றியுள்ளோம்.

ஓம்

வீர ஷிவாஜியின் அவதார பூமியில் பிறந்த ரஜினிகாந்த் வெள்ளைக்காரனோடு சண்டை போட்ட தீவிரவாத முஸல்மான் திப்பு சுல்தானின் வேடத்தில் நடிக்க பேச்சு நடக்கிறதாம். இந்த நாட்டில் ஹிந்துக்களின் நிலை மிகவும் தாழ்ந்து போய் விட்டது. அப்படித்தான் மன்னர்கள் வேடத்தில் நடிக்க வேண்டுமென்றால் ஆழ்வார்களும், நாயன்மார்களும், சாதுக்களும் நடமாடிய தமிழகத்தில் ஹிந்து மன்னர்களுக்கா பஞ்சம்?
பாண்டிய மன்னர்கள் இருந்தார்கள், சோழ மன்னர்கள் இருந்தார்கள்.. இன்னும் வேளிர்குல குறுநில மன்னர்கள் ஏராளம் ஏராளம்… இன்னும் மைசூர் மாநிலத்திலே மைசூர் மகாராஜா வம்சத்தினர் இன்னும் கொலுவீற்றிருக்கிறார்கள். ஆந்திர தேசத்தில் கிருஷ்ண தேவராயர் எனும் மாபெரும் ஹிந்து சக்கரவர்த்தி இருந்திருக்கிறார். இவர்களெல்லாம் ஹிந்துக்கள்; ஹிந்து ஸநாதன தருமத்தைப் போஷித்தவர்கள். பாண்டியனாகவும் சோழனாகவும் ராயராகவும் நடிக்க வேண்டியது தானே? நான் திருவாளர் ரஜினிகாந்த்தை கண்டிப்பதாக நினைக்க கூடாது. பரம பூஜனிய ஸ்ரீமான் மோடிஜியை தன்னுடைய சொந்த வீட்டில் தரிசிக்கும் பாக்யதை பெற்ற இரண்டாவது தேசபக்தர் ரஜினி என்பதை நாங்கள் அறிவோம். போயஸ் தோட்டத்தில் இருக்கும் முதல் தேசபக்தர் புரட்சித் தலைவி அம்மாஜி என்பதையும் இவ்வியாஸத்தில் பதிவு செய்ய வேண்டியிருக்கிறது.
என்றாலும், பாண்டிய ஹிந்துத் தமிழ் மன்னர்களும் சோழ நாட்டு ஹிந்துத் தமிழ் மன்னர்களும் மாற்றி மாற்றி அடித்துக் கொண்டு மக்களைக் கொன்றவர்கள் தானே என்று ஆசிய சீனாவிடம் காசு வாங்கும் இடதுசாரி தீவிரவாதிகள் கேட்பார்களோ என்று ரஜினிகாந்த் பயந்திருக்க வேண்டும். அவர்கள் அப்படிக் கேட்டால் தான் என்ன? வன்னியத் தமிழர்களும் கொங்கு வெள்ளாளத் தமிழர்களும் தலித் தமிழர்களைக் கொன்ற போது ”அண்ணன் தம்பிகளுக்குள்ளே இதெல்லாம் சகஜமப்பா” என்று தமிழ் ஹிந்து உணர்வாளர்கள் காவி தருமத்தை விளக்கிய திறமை ஹிந்து தமிழ் உணர்வாளர்களுக்கு மட்டும் இல்லாமலா போய் விட்டது? நமது குட்டி உணர்வாளர்கள் பதினாறடி பாய்ந்தால் தாயான நாம் முப்பத்திரண்டடி பாய மாட்டோமா என்ன?
சரி, அப்படித்தான் புராண காவியங்களில் நடிக்க ரஜினிக்கு ஆசையென்றால் ஹிந்து ஸநாதன தருமத்தின் பெரும் சாதனைகளாம் காமசூத்ரா காவியத்தையும், கஜூராஹோ ஓவியங்களையும் பற்றிய விழிப்புணர்வை பரத வர்ஷத்து மக்களிடையே ஏற்படுத்த அல்லும் பகலும் அயராமல் கலைச்சேவை செய்து வரும் புன்யஸ்த்ரீ சன்னி லியோனுக்கு ஜோடியாக நடித்திருக்க வேண்டும். அட, வயதாகி விட்டது என்று ஸ்ரீமான் ரஜினிகாந்த் யோசிப்பதாக இருந்தால், குறைந்த பட்சம் அதே கலைச்சேவையை ரிஷிகளும் முனிகளும் உலாவிய கடவுளின் சொந்த தேசத்தில் (கேரளா) செய்த ஸ்ரீமதி ஷகீலாவுக்காவது ஜோடி போட்டிருக்க வேண்டும்.
ஏன் ரஜினிகாந்த் இப்படி ஆக்கப்பூர்வமான வழிவகைகளில் யோசிக்க மறுக்கிறார்? அக்மார்க் ஐயங்காரை மணந்திருக்கும் சூப்பர் ஸ்டார் அவர்கள் மனது வைத்தால் தெற்கிலாவது ஹிந்து தர்மத்தின் கீர்த்தியை பரப்பலாமே? ஏற்கனவே மும்பையில் மூன்று கான்கள் உட்கார்ந்து கொண்டு பாரத தேசமெங்கும் இளைஞர்களை கவர்ந்திருக்கிறார்கள். பகவான் மோடியை அவர்கள் கண்டு சேவித்தாலும், விழுந்து நமஸ்கரித்தாலும் அடிப்படையில் அவர்கள் அனைவரும் முசல்மான் ஜாதி அல்லவா? தமிழகத்தில் குஷ்புவை இப்போது ஒரு ஆளாக்கி ஐ.எஸ்.ஐ சதி செய்வது நம்மவாளுக்கு தெரியுமா என்ன?
ஏனென்றால் இதற்கெல்லாம் காரணம் நமது மூளைகளில் படிந்திருக்கும் ஐரோப்பிய மையவாத சிந்தனைகளும், அந்த சிந்தனைகளுக்கு அடிப்படையான சீனா மற்றும் பாகிஸ்தானின் சதியும் தான். இன்றைக்கு ஹிந்துக்களுக்கும் அவர்களது ஸநாதன தருமத்திற்கும் எந்தப் பாதுகாப்புமின்றிப் போய் விட்டது.
யோசித்துப் பாருங்கள், அக்காராடிசிலும், புளியோதரையும் ஆண்ட ஹிந்து தமிழ் பூமியை இன்று திண்டுக்கல் தலப்பாகட்டியும், ராவுத்தர் பிரியாணியும் ஆக்கிரமித்துள்ளன. தயிர் சாதம் சதிராடிய ஹிந்து தமிழ் பூமியில் ஞாயிற்றுக் கிழமையானால் தெருவுக்குத் தெரு ஆடும், மாடும், கோழியும் தோலுரிந்து தொங்குகின்றன. இதற்குப் பின்னே உள்ள பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ சதியை பாரதத் தாயின் தமிழ் வடிவமான புரட்சித் தலைவி அம்மா அவர்கள் சீக்கிரம் முறியடிப்பார் என்று எனது நண்பர் சோ ராமசாமி சமீபத்தில் என்னிடம் சொன்னார்.
சாப்பாடில் மட்டுமா? உடுக்கும் உடையைக் கூட ஐரோப்பிய மையவாத சிந்தனை விட்டு வைக்கவில்லை. நாகா சாமியார்களைப் போல் காற்றோட்டமாக திரியும் ஹிந்து ஞான மரபு இன்றைக்கு சீரழிந்து கெவின் க்ளெய்ர் ஜட்டியோடு அலைகிறார்கள் இளைஞர்கள். நடிகர்கள் கூட நமது ஹிந்து பாரம்பரிய உடையாம் கோவணத்தை மறந்து லீவைஸ் ஜீன்ஸ் போட்டு ஆடுகிறார்கள். என்ன அக்கிரமம்? பெண்களைப் பாருங்கள், மொகலாய முஸல்மான்கள் அறிமுகம் செய்த சல்வார் கமீசும் சுடிதாரும் அணிந்து வளைய வருகிறார்கள். கிறித்தவர்கள் கண்டுபிடித்த ஜட்டியும், பிராவும், லங்கோட்டை கொன்று போட்டது குறித்து மானமுள்ள ஹிந்து சகோதரன் என்றைக்காவது யோசித்திருப்பானா?
இப்படி நமது ஸநாதன தருமம் தறிகெட்டுக் கிடக்கும் நிலையை மாற்றத் தான் ஹிந்து முன்னணி வாதாடியும் போராடியும் வருகிறது. மிலேச்சர்களின் அநாச்சாரம் இன்றைக்கு எல்லை மீறிப் போனதன் விளைவு தான் ஒரு கன்னட தயாரிப்பாளர் ரஜினியிடம் திப்பு சுல்தான் வேடத்தில் நடிக்க பேச்சு நடத்துவதாக வெளியாகியுள்ள செய்தி.
அப்படி அவர் படமெடுக்க வேண்டுமென்றால், திப்புவை விட மைசூர் உடையாரின் வரலாற்றைத் தான் எடுக்க வேண்டும். பாகிஸ்தானைச் சேர்ந்த இசுலாமிய தீவிரவாதியான திப்பு சுல்தானைப் போலன்றி மைசூர் மன்னர் உடையார் பரம்பரை என்பது எட்டப்பன் தொண்டைமான் சக்கரவர்த்திகளின் முன்னோடி அல்லவா?
திப்பு சுல்தான் வெள்ளைக்காரர்களை எதிர்த்து போராடியவர் என்று சில வரலாற்று நூல்களில் சொல்லப்பட்டிருக்கலாம். இந்த விசயத்தை மேன்மை பொருந்திய மத்திய கலாச்சாரத் துறை அமைச்சர் ஸ்மிருதி இராணி அவர்கள் கவனிக்க வேண்டும். உடனடியாக பழைய பதிப்பு வரலாற்று நூல்களை திரும்ப பெற்று புதிய பதிப்பை அச்சிட ஆவண செய்ய வேண்டும். இன்னும் மத்திய ஸர்க்காரால் திருத்தப்படாத பழைய வரலாற்றை ஹிந்துக்கள் எப்படி புரிந்து கொள்ள வேண்டும்? அது இரண்டு மிலேச்சர்களுக்குள் நடந்த சண்டை. திப்பு ஒரு முஸல்மான் – அப்படி என்றால் அவர் விநாயகர் சதுர்த்தி கொண்டாட மாட்டார். விநாயகர் சதுர்த்தி கொண்டாடாதவர் எப்படி தேசபக்தராக இருக்க முடியும்? கொழுக்கட்டையை விழுங்காதவர் எப்படி ஹிந்து ஞான தருமத்தை பின்பற்ற முடியும்?
தேசபக்தியைப் புரிந்து கொள்ள முதலில் நமது தேசபக்தர்களைப் புரிந்து கொள்ள வேண்டும். வீர சாவர்கர், பரமபூஜனிய ஹெட்கேவார், வாஜ்பாய் போன்றவர்களின் வரலாற்றை ஹிந்துக்கள் படிக்க வேண்டும். வெள்ளைக்காரனோடு சண்டை என்று வந்தால் இவர்கள் குபீரென்று அவன் காலில் விழுந்தவர்கள் ஆயிற்றே என்று தீயவர்களான கம்யூனிஸ்டுகள் தூற்றலாம். ஆனால், அதில் இருக்கும் ராஜதந்திரத்தை இவர்களின் ஐரோப்பிய மையவாத மூளை பார்ப்பதில்லை. அப்படிக் காலில் விழுந்து என்ன செய்தார்கள்? ஹிந்து ஸநாதன தர்மத்திற்கு தொண்டாற்றினார்கள். அது தான் ஒரு தேசபக்தனுக்கு அழகு.
அதனால் தான் சொல்கிறோம், விடுதலைக்காக போராடியதாக சொல்லப்படும் (மீண்டும் ஸ்மிருதி இராணி அவர்கள் கவனத்திற்கு) திப்புவை விட, வெள்ளைக்காரன் காலில் விழுந்தாவது ஆட்சியில் அமர்ந்து ஹிந்து கோயில்களுக்கு கும்பாபிஷேகம், முக்கால பூஜை நடத்தவும், புரோஹிதர்களை போஷித்தும் கோயில் திருவிழாக்களில் நாட்டியமாடிய தேவதாசிகளை பராமரித்தும் சிறப்பாக செயல்பட்ட உடையார், குவாலியர் மன்னர் பரம்பரை, திருமலை நாயக்கர், எட்டப்பர், தொண்டைமான், தஞ்சை சரபோஜி போன்றோரின் செயல்பாடுகளே மிகச் சிறந்த தேசபக்திக்கு அடையாளம். இன்றும் மானனீய இல.கணேசன்ஜியிடம் கேட்டால் தஞ்சையில் எப்படி மாமன்னர் சரபோஜி குடும்பம் ஆர்.எஸ்.எஸ் பிரச்சாரக்குகளை கவனிக்கிறது என்பதை வில்லுப்பாட்டாகவே பாடுவார்.திருவாளர் ரஜினிகாந்த் இதையெல்லாம் சிறப்பாக சீர்தூக்கிப் பார்த்து செயல்பட வேண்டும்.
திருமதி லதா ரஜினிகாந்த் இத்தகைய சூழ்நிலையில் என்ன செய்கிறார் என்றே தெரியவில்லை. பாரத தேசத்திற்கு இழுக்கு வரும்போது ஒரு ஐயங்கார் ஆத்து மாமி இன்னேநரம் மடிசாரை கட்டிண்டு பொங்கி வெடித்திருக்க வேண்டாமோ? என்ன இருந்தாலும் ரஜினி சார்வாள் நம்மவதான். இல்லையென்றால் ஹரிஜன்களைப் பற்றி படமெடுத்த ரஞ்சித் என்ற இயக்குநரை பிடித்துப் போட்டு மயிலை கபாலிஸ்வரர் பெயரில் ஒரு படமெடுக்க வைக்க முடியுமா?
என்னமோ அவருக்கு கொஞ்சம் பணப் பிரச்சினை. புத்திரிகள் பொம்மைப் படமெடுத்து கடனாக்கிவிட்டார்கள். இதை நம்ம அதானியிடமோ அம்பானியடமோ எடுத்துச் சொன்னால் ஸிம்பிளா தீர்த்து விடலாமே? எதற்கு இந்த கேடுகெட்ட முஸல்மான் திப்புவாக நடித்து பிச்சையெடுக்க வேண்டும்?
அவருக்கு தற்போது கொஞ்சம் கிரகம் சரியில்லை. எல்லாம் ஷேமமாகிவிடும்.
பாரத் மாதாகி ஜெய்!
வந்தே மாதரம்!
ஹிந்து என்று சொல்லு! தலை நிமிர்ந்து சொல்லு!
ஓம் காளி ஜெய் காளி!
இவண் – இராம கோபாலன்
ஹிந்து முன்னணி, தமிழ்நாடு vinavu.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக