திங்கள், 21 செப்டம்பர், 2015

மோடி:விவசாயிகள் தற்கொலைகள் குறைந்து வருகின்றன! இதுவுல பெருமை வேற.....

06-farmer-suicideர்நாடகத்தில் 200-க்கும் மேற்பட்ட விவசாயிகளின் தற்கொலைச் சாவுகள் தீவிரமடைந்து கொண்டிருந்த நேரத்தில்தான், மோடி ஆட்சியில் விவசாயிகளின் தற்கொலைச் சாவுகள் குறைந்து வருகின்றன என்று கடந்த ஜூலையில் மத்திய விவசாயத் துறை அமைச்சர் ராதா மோகன் சிங் ஆரவாரமாக அறிவித்துக் கொண்டிருந்தார். விவசாயிகளின் தற்கொலைச் சாவுகளுக்கு கடன் சுமையோ, விவசாயப் பிரச்சினைகளோ காரணமல்ல; காதல் விவகாரம், குடும்பப் பிரச்சினைகள், நோகள், ஆண்மையின்மை, போதை மருந்து, குடிப்பழக்கம், வரதட்சிணை முதலான தனிப்பட்ட விசயங்கள்தான் காரணம் என்று தேசிய குற்றப்பதிவு ஆணையகத்தின் புள்ளிவிவரங்களை எடுத்துக் காட்டி, வாய்க்கொழுப்பேறி இந்த அமைச்சர் வக்கிரமாகப் பேசியுள்ளார். தற்கொலைகள் மேலும் குறைந்துள்ளதால் நாம  செவ்வாய் கிரகத்துக்கு மட்டுமல்ல அப்பிடியே வியாழன்  சுக்கிரன் நெப்டியூன் போன்ற கிரகங்களுக்கும் ராக்கெட்டுக்களை அனுப்புவோம்.. அதுமட்டுமல்ல அம்பானியையும் அதானியையும் பில்கேட்டை விட பணக்காரராக்குவோம்ல...

விவசாய அமைச்சர் ராதாமோகன் சிங்.
விவசாயிகளின் தற்கொலைச் சாவுகளை இழிவுபடுத்தி வக்கிரமாகப் பேசிய விவசாய அமைச்சர் ராதாமோகன் சிங்.
அமைச்சர் ஆதாரமாகக் காட்டும் தேசிய குற்றப்பதிவு ஆணையகத்தின் புள்ளிவிவரங்களின்படி, கடந்த 2013-ல் நாடு தழுவிய அளவில் 11,700 ஆக இருந்த விவசாயிகளின் தற்கொலைச் சாவுகள், 2014-ம் ஆண்டில் 5,650 ஆகக் குறைந்துள்ளது. அதாவது, மோடி ஆட்சிக்கு வந்தவுடன் விவசாயிகளின் தற்கொலைச் சாவுகள் 50 சதவீத அளவுக்குக் குறைந்துள்ள அதிசயம் நடந்துள்ளது. மகாராஷ்டிராவில் 2013-ல் 3,146 பேராக இருந்த விவசாயிகளின் தற்கொலைச் சாவுகள், மோடி ஆட்சிக்கு வந்தபின் 2014-ல் 2,568 பேராகக் குறைந்துள்ளது. 2014-ம் ஆண்டில் 12 மாநிலங்களிலும் 6 யூனியன் பிரதேசங்களிலும் விவசாயிகளின் தற்கொலைச் சாவுகளே இல்லை என்று விவசாய அமைச்சர் கணக்கு காட்டுகிறார். மோடி ஆட்சிக்கு வந்தவுடன் இது எப்படி சாத்தியமாயிற்று?
இது, மோடி கும்பல் கிரிமினல் முறையில் செய்துள்ள அதிநவீன மோசடி. தேசிய குற்றப்பதிவு ஆணையகத்தின் பட்டியலில், விவசாயத்தில் ஈடுபடும் விவசாயி என்று ஒரு பிரிவும், விவசாயம் சார்ந்த பிற துறைகளில் வேலை செய்பவர் என்று ஒரு பிரிவுமாக இரண்டாகப் பிரிக்கப்பட்டுள்ளது. தற்கொலை செய்து கொள்ளும் விவசாயியை “விவசாயத்தில் ஈடுபடும் விவசாயி” என்று குறிப்பிடுவதற்குப் பதிலாக, அவர் விவசாயியே இல்லை என்றும் “பிற துறைகளில் வேலை செய்பவர்” என்றும் குறிப்பிட்டு திட்டமிட்டே இந்த மோசடி செய்யப்பட்டுள்ளது. மேலும் ஒரு விவசாயிக்கு நிலம் இருந்தும் அவர் தற்கொலை செய்து கொண்டால், அதற்கு கடன் சுமையோ, விவசாயப் பிரச்சினைகளோ காரணமல்ல; குடும்பப் பிரச்சினைகள், நோய்கள், குடிப்பழக்கம், வரதட்சினை முதலானவைதான் காரணம் என்று அயோக்கியத்தனமாகப் பதிவு செய்யப்பட்டு கிரிமினல்தனமாக இந்தப் புள்ளிவிவரக் கணக்குத் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த மோசடியின் மூலம் 12 மாநிலங்களில் விவசாயிகளின் தற்கொலைச் சாவுகள் நடக்கவில்லை என்று கணக்கு காட்டினாலும், அதே தேசிய குற்றப்பதிவு ஆணையகத்தின் புள்ளிவிவரப்படி விவசாயம் சார்ந்த பிற துறைகளில் தற்கொலைச் சாவுகள் அதிகரித்துள்ளன.
கிராமப்புறங்களில் தொடரும் விவசாயிகளின் தற்கொலைச் சாவுகளை வருவாய்த்துறை அதிகாரிகள் நேரில் வந்து விசாரித்துப் பதிவு செய்வதில்லை. கிராம நிர்வாக அலுவலரது பதிவேடுகளிலிருந்துதான் அவர்கள் இத்தகைய மரணங்களைப் பற்றிக் கணக்கிடுகின்றனர். இதனால் விவசாயிகளின் தற்கொலைச் சாவுகள் பற்றிய விவரங்களும் தற்கொலைக்கான காரணங்களும் முழுமையாக வெளிவருவதில்லை. மேலும், விவசாயிகளுக்கான அரசின் நிவாரணங்களும் மானியங்களும் நிலமுள்ளவர்களுக்கு மட்டுமே என்பதாக உள்ளதால், அத்தகையோரை மட்டுமே விவசாயிகள் என்றும், மற்றவர்களை விவசாயக் கூலிகள் அல்லது பிற வேலைகளில் ஈடுபடுபவர் என்றும் வருவாய்த்துறையினர் மோசடியாகப் பதிவு செகின்றனர். இதனால்தான் மோடி ஆட்சியில் விவசாயிகளின் தற்கொலைச் சாவுகள் குறைந்துள்ள அதிசயம் நடந்துள்ளது.
புள்ளிவிவரக் கணக்கு காட்டி விவசாயிகளின் தற்கொலைச் சாவுகள் குறைந்துவிட்டதாக மாய்மாலம் செய்தாலும், மோடி ஆட்சிக்கு வந்த பின் கடந்த ஓராண்டு காலத்தில் விவசாயிகளின் தற்கொலைச் சாவுகள் 20 சதவீத அளவுக்கு அதிகரித்துள்ளன என்று பல்வேறு விவசாய சங்கங்கள் குற்றம் சாட்டுகின்றன. “பழங்குடியின விவசாயிகளை, நிலமற்றவர்கள் – கூலி வேலை செய்பவர்கள்- விவசாயிகள் அல்லாதவர்கள் என்று காட்டி இம்மோசடிப் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது” என்று சாடுகிறார் விதர்பா மக்கள் போராட்டக் குழு (VJAS) தலைவர் கிஷோர் திவாரி. விவசாயிகள் தற்கொலைச் சாவுகள் பற்றி ஆய்வு செய்துவரும் இந்திரா காந்தி வளர்ச்சி-ஆராய்ச்சிக் கழகத்தின் (IGIDR) பேராசிரியரான சிறீஜித் மிஸ்ரா, “விவசாயிகளின் தற்கொலைச் சாவுகளைக் குறைத்துக் காட்டுவதற்காகவே திட்டமிட்டே இந்த மோசடியான புள்ளிவிவரக் கணக்கு தயாரிக்கப்பட்டுள்ளது” என்று குற்றம் சாட்டுகிறார்.
தேசிய குற்றப்பதிவு ஆணையகமானது, போலீசு நிலைய குற்றப் பதிவேடுகளிலிருந்துதான் இந்த புள்ளிவிவரப் பட்டியலைத் தயாரித்துள்ளது. போலீசார் ஒரு தற்கொலைச் சாவை எப்படித் திரித்துப் புரட்டிக் குறிப்பிடுவார்கள் என்பதை யாவரும் அறிவர். மாண்டுபோன விவசாயியின் பெயரில் பெயரில் நிலம் இருந்தால்தான், ஒரு விவசாயி தற்கொலை செய்து கொண்டதாகப் போலீசார் குறிப்பிடுகின்றனர். தற்கொலை செய்து கொண்ட விவசாயியின் தந்தை அல்லது உறவினர் பெயரில் நிலம் இருந்தால், மாண்டு போனவரை விவசாயி என்று குறிப்பிடுவதில்லை. தற்கொலை செய்து கொண்டவர் ஒரு பெண்ணாக இருந்தால், ஒரு விவசாயியின் மனைவி என்றுதான் குறிப்பிடுகின்றனர். பெண்களின் பெயரில் நிலம் இல்லாததை வைத்து, மாண்டுபோன பெண் விவசாயிகளின் தற்கொலை சாவுகள் திட்டமிட்டே மறைக்கப்படுகின்றன.
இதேபோல, குத்தகை விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டால், விவசாயிகளின் தற்கொலையாக போலீசாரால் காட்டப்படுவதில்லை. மாறாக, விவசாயக் கூலியின் மரணமாக மாற்றிப் பதிவிடப்படுகின்றன. குத்தகையானது பெரும்பாலும் வாவழியாக நம்பிக்கை யின் அடிப்படையில்தான் நடப்பதால், பத்திரங்களோ ஆவணங்களோ இல்லை என்றும், அவர் பெயரில் நிலம் இல்லை என்றும் காரணம் காட்டி இத்தகையோரின் தற்கொலைச் சாவுகள் புறக்கணிக்கப்படுகின்றன.
மகசூல் குறைவு, கந்துவட்டிக்காரர்களின் அச்சுறுத்தல், சர்க்கரை ஆலைகள் நிலுவைத் தொகை வழங்காததால் ஏற்பட்ட கடன் சுமை, வங்கியில் பெற்ற கடனை அடைக்க முடியாத நிலையில் வங்கி நிர்வாகம் நிலத்தை ஏலம் விடுவதற்கான நோட்டீசு அனுப்பியதால் மனமுடைந்துபோவது – எனப் பல்வேறு காரணங்களால் விவசாயிகளின் தற்கொலை செய்து கொள்ளும் கொடுமை நம் கண்முன்னே நிகழ்ந்து கொண்டிருக்கிறது. குறிப்பாக, தனியார்மயம் – தாராளமயம் திணிக்கப்பட்ட கடந்த 20 ஆண்டுகளில் மட்டும் நாடு முழுவதும் ஏறத்தாழ 3.2 லட்சம் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். ஆனாலும், நாட்டின் முதுகெலும்பான விவசாயிகளின் தற்கொலைச் சாவுகளைத் தேசிய முக்கியத்துவம் வாந்த பிரச்சினையாகக் கருதாமல், இன்றைய அரசியலமைப்பு முறையே இத்தகைய சாவுகளை அற்ப விவகாரமாக ஒதுக்கித் தள்ளுகிறது.
விவசாயிகளின் தற்கொலைகளைத் தடுக்கப் போவதாகவும், விவசாயத்தில் முதலீட்டை அதிகரிக்கப் போவதாகவும் தேர்தல் அறிக்கையில் சவடால் அடித்ததோடு, விவசாய அமைச்சகத்தை, “விவசாயம் மற்றும் விவசாயிகள் நல அமைச்சகம்” என்று பெயர் மாற்றியுள்ளதாக ஆகஸ்டு 15 அன்று ஆரவாரமாக அறிவித்து விவசாயிகள் நல அரசாக காட்டிக் கொண்டு மோடி கும்பல் நாடகமாடுகிறது. ஆனால், தனது ஆட்சியில் விவசாயிகளின் தற்கொலைகளே நடக்கவில்லை என்று கிரிமினல்தனமாக புள்ளிவிவர மோசடி செய்வதோடு, விவசாயிகளின் நிலங்களைப் பறிக்கும் நிலம் கையகப்படுத்தல் சட்டத் திருத்த மசோதாவை நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற வெறியோடு அலைந்து கொண்டிருக்கிறது. சொல்லுக்கும் செயலுக்கும் நேர்மையற்ற மோடி கும்பல், காங்கிரசை விஞ்சிய கயவாளிகளின் கூட்டம்தான் என்பதை நிரூபிக்க இதைவிட வேறென்ன சான்று வேண்டும்?
– குமார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக