வியாழன், 17 செப்டம்பர், 2015

ஜாதி இருக்கும் வரை ஜாதி இட ஒதுக்கீடும் இருக்கும்! வீரமணி.

135 அடி தந்தை பெரியார் சிலை அமைப்பதன் நோக்கம்!
திருச்சி சிறுகனூரில் அமையவிருக்கும் பெரியார் உலகத்தில்/20தந்தை பெரியாரின் 135 அடி உயர சிலைக்கு ஒரு முன்னோட்டம்தான் சென்னை பெரியார் திடலில் திறக்கப்பட்டுள்ள 21 அடி உயர சிலை தந்தை பெரியார் சிலை திறப்பு விழாவில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் செய்தியாளர்களுக்கு விளக்கம் சென்னை, செப்.17-
திருச்சி சிறுகனூரில் அமைய விருக்கும் பெரியார் உலகத்தில், தந்தை பெரியாரின் 135 அடி உயர சிலைக்கு ஒரு முன்னோட்டம்தான் சென்னை பெரியார் திடலில் இன்று (17.9.2015) திறக்கப்பட்டுள்ள 21 அடி உயரமுள்ள தந்தை பெரியார் சிலை என்று திராவிடர் கழகத் தலைவர்  ஆசிரியர்கள் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறினார்.

17.9.2015 அன்று சென்னை பெரியார் திடலில் நடைபெற்ற பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் அவர்களின் 21 அடி உயர சிலையைத் திறந்து வைத்து, செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அவரது பேட்டி வருமாறு:
அனைவருக்கும் தந்தை பெரியார் அவர்களுடைய 137 ஆவது பிறந்த நாள் வாழ்த்துக்கள். ஊடக சகோதரர்களுக்கு அன்பார்ந்த சிறப்பு வாழ்த்துக்கள்.
தந்தை பெரியார் நினைவிடத்தில்
சூளுரை


தந்தை பெரியார் அவர்களுடைய பிறந்த நாள் விழா, அவர்கள் உருவத்தால் மறைந்து, உணர்வால் உல கெங்கும் நிறைந்த கொள்கையாளராக, தத்துவகர்த் தாவாக மலர்ந்திருக்கக்கூடிய இந்த நாளிலே, அவர்கள் போட்டுத் தந்த பாதையில், விட்டுச் சென்ற பணிகளை முடிப்போம் என்று சற்று நேரத்திற்கு முன்பாக, அவர் தந்த அறிவுச்சுடருக்கு முன்பாக உறுதிமொழி எடுத்தோம்.
தந்தை பெரியார் அவர்கள் உருவமாக வாழ்ந்த காலத்திலே எவ்வளவு தேவைப்பட்டாரோ, அதைவிட அதிகம் இப்பொழுது தேவைப்படுகிறார். ஒரு புறத்தில் மதவெறி தலைவிரித்தாடுகிறது; இன்னொரு பக்கம் ஜாதி வெறி அரசியல் சந்தையில் மிகப்பெரிய ஆட்டம் போடுகிறது.
மூட நம்பிக்கைகள் மிகப்பெரிய அளவிலே வளர்ந்திருக்கின்றன. பகுத்தறிவுப் பூமி என்று கருதப் பட்டிருக்கக்கூடிய இந்தத் தமிழ்நாட்டிலேயே நரபலி நடந்தது என்பதற்கு எலும்புகள் தோண்டி எடுக்கப் படுகின்றன. எதற்காக நடந்தது என்பது முக்கியமல்ல; ஏன்? நடந்தது என்பதுதான் முக்கியம்.
அந்த அடிப்படையில், மூட நம்பிக்கையை எதிர்த்து, பெண்ணடிமையை ஒழிக்கவேண்டும் என் பதற்காக, பிறவி இழிவை நீக்குவதற்காக தன்னுடைய வாழ்நாள் முழுவதும் 95 ஆண்டுகாலம் உடல் தளர்ந்த நிலையில்கூட, அவர்கள் மிகுந்த உற்சாகத்தோடு பணிபுரிந்தார்கள். தொண்டாற்றினார்கள்; களம் கண் டார்கள். அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராக வேண்டும்; அதன்மூலம்தான் ஜாதி - தீண்டாமை யினுடைய கடைசி சின்னத்தைக்கூட அழிப்பதற்கு வாய்ப்பு ஏற்படும் என்று கருதினார்கள்.
உலகமெங்கும் இன்றைக்குப் பெரியார்  பிறந்த நாள் விழா கொண்டாடப்படுகிறது
அப்படிப்பட்ட தந்தை பெரியார் அவர்களுடைய கொள்கையை முன்னெடுத்துச் செல்வது, உலகமெங் கும் இருக்கக்கூடிய அவர்களுடைய தொண்டர் களுடைய கடமை. அந்தத் தத்துவத்தை ஏற்ற பகுத்தறிவாளர்களுடைய கடமை என்கிற முறையில், உலகமெங்கும் இன்றைக்குப் பெரியார் அவர்களுடைய பிறந்த நாள் விழா கொண்டாடப்படுகிறது.
அமெரிக்காவில் மூன்று நாள்களுக்கு முன்பாக மிகச் சிறப்பாக நடைபெற்றது. நடந்தது. மேலும் நடக்கவிருக்கிறது. கலிபோர்னியாவில், வாஷிங்டனில், இன்னும் பல பகுதிகளில் பிறந்த நாள் விழா நடைபெறுகிறது. தந்தை பெரியார் பன்னாட்டமைப்பு பல நாடுகளில் உருவாகியிருக்கிறது.
வருகிற 2016 ஜூலை மூன்றாவது வாரத்தில், ஜெர்மனியில் உள்ள கொலோன் நகரில், தந்தை பெரியார் பன்னாட்டமைப்பின் சார்பில், உலகப் பகுத் தறிவாளர், மனிதநேயக்காரர்கள் மாநாடு சிறப்பாக நடை பெறவிருக்கிறது. ஜெர்மனியிலுள்ள பகுத்தறி வாளர்கள் அந்த மாநாட்டிற்கான பணிகளை சிறப்பாக செய்து வருகின்றனர்.
தந்தை பெரியார் அவர்கள் இன்றைக்கு உலகத் தலைவராக உயர்ந்திருக்கின்ற நிலையில், அவர்கள் எந்த மண்ணுக்காக இந்தக் கொள்கைகளைப் போதிக்க ஆரம்பித்தார்களோ, அந்த மண்ணில் ஏற்படுகின்ற அறைகூவல்களை நாங்கள் ஏற்போம்.
பெரியார் என்கிற
மாபெரும் மாமருந்து இன்னமும் தேவை
மனித உரிமைகள் எந்த ரூபத்தில் இருந்தாலும், ஈழத் தமிழர்களுடைய வாழ்வுரிமையாக இருந்தாலும், இங்குள்ள தமிழர்கள் பிரிக்கப்பட்டு, அவர்கள் வேற்றுமைப்படுத்தப்பட்டு, இன்னமும் தீண்டாமைக் கொடுமைக்கு ஆளாகக்கூடிய நிலையில் இருக்கக் கூடிய வகையில், இன்னமும் பாலியல் வன்கொடுமை களுக்கு ஆளாகக்கூடிய நிலையில் இருக்கக்கூடிய வகையில், பிறவி அடிமை, பிறவி பேதம் இவைகளை ஒழிப்பதற்கு, பெரியார் என்கிற மாபெரும் மாமருந்து இன்னமும் தேவை.
சிலர் கேட்கிறார்கள், இன்னமும் ஆங்காங்கு நோய்கள் பரவிக் கொண்டிருக்கின்றனவே, பெரியார் எந்த அளவிற்கு வெற்றி பெற்றிருக்கிறார்? பெரியாரு டைய கருத்துகள் எந்த அளவிற்கு ஏற்கப்பட்டிருக் கின்றன? என்று கேட்கிறார்கள்.
பெரியார் அவர்களுடைய கருத்து ஏற்கப்பட்டிருக் கின்ற காரணத்தினால்தான், நாமெல்லாம் தோளிலே துண்டைப் போட்டிருக்கிறோம்; முழங்காலுங்குக் கீழே வேட்டி கட்டிக் கொண்டிருக்கின்றோம். எங்கு பார்த்தாலும் கல்லூரிகளும், பல்கலைக் கழகங்களும் உருவாகி இருக்கின்றன. சமத்துவ சமவாய்ப்பு அனை வருக்கும் கிடைக்கக்கூடிய வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது. என்றாலும் அறைகூவல்கள் இருக்கின்றன.
இட ஒதுக்கீடு, சமூகநீதி என்று இந்த மண்ணில் தோன்றியதோ, இது வடபுலத்திலும் சென்றடைந்ததி னுடைய விளைவுதான் இப்பொழுது குஜராத்தில் கூட எங்களுக்கும் இட ஒதுக்கீடு வேண்டும் என்ற ஒரு சாக்கில், பொருளாதார அடிப்படையைக் கொண்டுவர வேண்டும் என்று நினைக்கிறார்கள்.
எந்த ரூபத்திலும் இட ஒதுக்கீட்டை ஒழிக்கவேண் டும் என்று நினைத்தாலும், பெரியார் என்ற மாபெரும் ஆயுதம் நம்மிடத்திலே இருக்கிறது தத்துவமாக.
‘‘தனியார் துறையிலும்
இட ஒதுக்கீடு தேவை!’’
எனவே, அதனை அடிப்படையாகக் கொண்டு, மிகப்பெரிய அளவில் சமூகநீதிக் களத்திலும் சரி, ஜாதி ஒழிப்புக் களத்திலும் சரி, மூட நம்பிக்கை ஒழிப்புக் களத்திலும் சரி, பெண்ணடிமை ஒழிப்புக் களத்திலும் சரி, எல்லா முறைகளிலும் மூர்த்தண்யமாக அவை களை எதிர்த்து, எதிர்க்க வேண்டியவைகளை எதிர்த்து, காக்க வேண்டியவைகளை காப்பதற்குத் தயாராக இருக்கிறோம்.
வருகின்ற 2016 ஜனவரி மாதம் ‘‘தனியார் துறை யிலும் இட ஒதுக்கீடு தேவை’’ என்பதற்கான ஒரு மிகப் பெரிய மாநாட்டினை நடத்தவிருக்கிறோம் என்று இந்த நாளில் அறிவிப்பதற்கு மகிழ்ச்சியடைகின்றோம். அம்மாநாட்டில், ஒத்த கருத்துள்ள அனைத்திந்திய கட்சித் தலைவர்கள் உள்பட அனைவரையும் அழைக்கத் தயாராக இருக்கின்றோம்.
ஏனென்றால், உலகமயம், தாராளமயம், தனியார் மயம் என்கிற பெயரால், இன்றைக்குப் பொதுத் துறை நிறுவனங்கள் எல்லாம் தனியார் துறை நிறுவனங்களாக மாற்றப்பட்டு, வேகமாக தனியார் துறை வளர்ந்து கொண்டிருக்கின்ற நேரத்தில், இட ஒதுக்கீடு என்பது குழிதோண்டிப் புதைக்கப்படக்கூடிய மறைமுகமான ஒரு சதியை அவர்கள் அரங்கேற்றிக் கொண்டிருக் கிறார்கள்.
ஆகவேதான், தனியார்த் துறையிலும் இட ஒதுக்கீடு வேண்டும் என்பதை இந்தப் பெரியார் பிறந்த நாள் விழாவில், ஒரு பெரிய போராட்டக் கிளர்ச்சிக்கு முன்னெடுப்பாக உங்கள் அனைவர் முன்னிலையிலும் வைக்கின்றோம்.
இதுதான் இந்த ஆண்டு ஜாதி ஒழிப்புக்கும், சமய வேறுபாடு இல்லாமல், மதவெறி மாய்ப்புக்கும், மனித நேய காப்பிற்குமான எங்கள் திட்டம். அரசியலுக்கு அப்பாற்பட்டு, ஒத்த கருத்துள்ள அத்துணை பேரையும் அணைத்துச் செல்வது எங்கள் நோக்கம் - எங்கள் பயணம் தொடரும்!
எந்த மாதிரியான ஒருங்கிணைப்பு?
செய்தியாளர்: ஒத்த கருத்துள்ள அனைவரையும் ஒருங்கிணைப்போம் என்று சொல்கிறீர்களே, எந்த மாதிரியான ஒருங்கிணைப்பு அது?
தமிழர் தலைவர்: எது எங்களைப் பிரிக்கிறது என்பதை அலட்சியப்படுத்திவிட்டு, எது அந்தக் கருத்தினால் இணைக்கப்படுகின்றோமோ, அவர்கள் அத்துணை பேரையும் அழைப்போம். எங்களுக்கு அதிலே வேறுபாடு கிடையாது. கொள்கை அடிப்படை தான் முக்கியம்.
தமிழர் தலைவர்: இன்றைக்கும் இந்த நாட்டிற்கு, சமுதாயத்திற்குப் பெரியார் தேவைப்படுகிறார். மதவெறி, ஜாதி வெறி இவை சதிராடுகின்றன. இந்த சூழ்நிலையில் இவைகளை எதிர்க்கத்தக்க மாமருந்து பெரியார் என்கிற தத்துவம்தான். எனவே, தந்தை பெரியார் அவர்களுடைய அற்புதமான தத்துவத்தைப் பரப்புகின்ற இந்தப் பணி என்பது ஒரு நிரந்தரமான பணியாகும்.
எப்படி சில நோய்கள் தீர்ந்துவிட்டால், மருத்துவ மனைகளை மூடிவிட முடியாதோ! மருத்துவமனைகள் எப்போதும் தேவை! அதுபோல சுகாதாரத் துறை எப்போதும் தேவை! அதேபோல, மக்கள் நலத் துறையும் எப்பொழுதும் தேவை. அதுபோலத்தான் அறிவு நலம் சார்ந்து தந்தை பெரியார் இயக்கம் தொடரவேண்டும்.
தந்தை பெரியார் அவர்களுடைய 137 ஆவது ஆண்டு பிறந்த நாள் விழாவில், அவருடைய கொள்கைகள் தீவிரமாகப் பரப்பப்படக்கூடிய சூளுரை ஏற்றிருக்கிறோம். முன்பு எப்போதும் தேவைப்பட்டதை விட, இப்போது அதிகம் தேவைப்படுவதைப்போல ஒரு சூழ்நிலை நாட்டில் உருவாக்கப்பட்டிருக்கிறது மதவெறி சக்திகளால்,
ஜாதிவெறி சக்திகளால். முன்பு எப் பொழுதும் கேள்விப்படாத கவுரவக் கொலை என்ற சொல்லாடல் இன்றைக்கு வந்திருக்கிறது என்று சொன்னால், பெரியார் எவ்வளவு தேவைப்படுகிறார்; ஜாதி ஒழிப்பு எவ்வளவு மிக முக்கியமான மூச்சுக் காற்றாக நமக்கு இருக்கிறது; இருக்கவேண்டும் என்பதை தெளிவுபடுத்தி இருக்கிறார்கள்.
எனவேதான், இந்த நேரத்தில் தனியார் இட ஒதுக்கீட்டிற்காக எவ்வளவு முக்கியமாக நாங்கள் பாடுபடவிருக்கின்றோமோ, அதுபோல, ஜாதி மறுப்பு திருமணம் செய்துகொண்டு இருக்கக்கூடிய பிள்ளை களுக்குக்கூட இட ஒதுக்கீடு தேவை என்பதை வலியுறுத்த இருக்கிறோம்.
முதலில் ஜாதியை ஒழிக்க முன்வாருங்கள்; பிறகு இட ஒதுக்கீட்டை ஒழிக்க முன்வரலாம்!
செய்தியாளர்: ஜாதி வாரிக் கணக்கெடுப்புபற்றி...?
தமிழர் தலைவர்: ஜாதி வாரி கணக்கெடுப்பு என்பது ஜாதி இருக்கின்ற காரணத்தினால்தான். இப்பொழுதுகூட பலர், தங்கள் ஜாதி பிடிக்கவில்லை என்று காட்டுவதற்காக, ஜாதி அடிப்படையில் இட ஒதுக்கீடா? என்று கேட்கிறார்கள். அவர்களைப் பார்த்து நாங்கள் கேட்க விரும்புவதெல்லாம், முதலில் ஜாதியை ஒழிக்க முன்வாருங்கள்; பிறகு இட ஒதுக்கீட்டை ஒழிக்க முன்வரலாம்.
ஜாதியை வைத்துக்கொண்டு, ஜாதிய அடிப்படை யில் இட ஒதுக்கீடா? என்று கேட்பதில் அர்த்தமே கிடையாது. எந்த ஜாதியினால் அவர்கள் கல்வி வாய்ப்புகள் மறுக்கப்பட்டார்களோ, எந்த ஜாதி தர்மம் காரணமாக, மனுதர்மம் காரணமாக, அவர்கள் வேலை வாய்ப்பில், மூட்டை தூக்குபவர்களாக, வண்டி இழுப்ப வர்களாக, கட்டை உடைப்பவர்களாக ஆனார்களோ,
அதனை மாற்றுவதற்கு எல்லோருக்கும் கல்வி, எல்லோருக்கும் பதவி என்பதற்கு இட ஒதுக்கீடு தேவை என்று சொன்னால், எந்த வழியிலே அவர்கள், எந்த இடத்திலே அவர்கள் தொலைத்தார்களோ, அந்த இடத்தில் தேடித்தான் அதனைப் பிடிக்கவேண்டும். ஆகவே, ஜாதியைத் தூக்கிப் பிடிப்பது அல்ல; ஜாதியினால் ஏற்பட்ட கேடுகளைக் களைவது, அந்தப் பள்ளத்தைத் தூர்ப்பது என்பதுதான் இந்த இட ஒதுக்கீட்டினுடைய நோக்கம்.
ஜாதி மறுப்புத் திருமணம் செய்து கொள்கிறவர்களுக்குத் தனி இட ஒதுக்கீடு தேவை!
ஏதோ சிலர், ஜாதியை ஒழிப்பதைப் போல தங் களை முன்னாலே காட்டிக்கொண்டு, அதேநேரத்தில், ஜாதி வெறியர்களாக தங்களை ஆக்கிக் கொண்டிருக் கிறார்கள்; மதவெறியர்களாக தங்களை ஆக்கிக் கொண்டிருக்கிறார்கள். அதற்குப் பெரியார் என்கிற மாமருந்துதான் ஒரே வழி.
அந்த வகையிலேதான் இந்த ஆண்டு, இரண்டு வகையில், ஜாதி மறுப்புத் திருமணம் செய்து கொள்கிறவர்களுக்குத் தனி இட ஒதுக்கீட்டுக்காகப் போராட்டமும், தனியார்த் துறையில் இட ஒதுக்கீடு தேவை என்கிற போராட்டத்தினையும் முன்னெடுத்துச் செல்லக்கூடிய ஒரு செய்தியாக இங்கே அறிவிக்கின்றோம்.
செய்தியாளர்: சென்னை பெரியார் திடலில் திறக்கப்பட்டிருக்கும் பெரியார் சிலைபற்றி....?
தமிழர் தலைவர்: பெரியார் உலகம் என்று திருச்சிக்குப் பக்கத்தில் அமைக்கப்படவிருக்கிறது. அதில் 95 அடி உயரத்தில் தந்தை பெரியார் சிலை அமைக்கப்பட்டு, அந்த சிலையை 40 அடி பீடத்தில் வைக்கவேண்டும் என்று நாங்கள் திட்டமிட்டு, அந்தப் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. அதற்கு முன்பாக, 95 அடி உயர சிலை எப்படிருக்கும் என்று எல்லோருக்கும் காட்டுவதற்காக, 21 அடி உயரமுள்ள சிலையை, பெரியார் திடலில் நிறுவிக் காட்டியிருக் கிறோம்.
எனவே, 21 அடி உயர சிலையை இவ்வளவு பிரம்மாண்டமாக இருக்கின்றபொழுது, 95 அடி உயர சிலை எவ்வளவு சிறப்பாக இருக்கும் என்று எல் லோருக்கும் தெரியக்கூடிய அளவிற்கு இது ஒரு முன்னோட்டமாகும்.
திருச்சி சிறுகனூரில் பெரியார் உலகத்தில் அமையக் கூடிய 95 அடி உயர சிலை, பீடத்தோடு சேர்த்து 135 அடி உயரத்தில்  அந்த சிலை அடுத்து வரவிருக்கிறது என்பதற்கான முன்னோட்டம்தான் இந்த 21 அடி உயர சிலை.
135 அடி தந்தை பெரியார் சிலை அமைப்பதன் நோக்கம்!
செய்தியாளர்: 135 அடி உயர சிலை அமைப் பதற்கான நோக்கம் என்ன?
தமிழர் தலைவர்: பெரியார் அவர்கள் 95 ஆண்டுகாலம் வாழ்ந்தார் என்ற வரலாற்றுக் குறிப்புதான். அவர் மறைந்து 40 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டது என்பதற்காக 40 அடி உயர பீடம்; இரண்டு வரலாற்றையும் சொல்லவேண்டும். பீடத்தையும் சொல்லவேண்டும்; சிலையையும் சொல்லவேண்டும். எனவே, சிலை நின்று கொண்டிருப்பது மட்டுமல்ல, சீலத்தையும் பின்பற்றுவோம்; சிலையினுடைய வரலாறும், பெரியார் வரலாற்றில் ஒன்றிப் போயிருக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக