வெள்ளி, 25 செப்டம்பர், 2015

டாஸ்மாக்கை பாதுகாக்க உறுதி பூண்டுள்ள தமிழக அரசும் காவல்துறையும்......

தமிழகத்தில் மதுவிலக்கு சாத்தியமில்லை: பேரவையில் அமைச்சர் திட்டவட்டம் ரவுடிகள் அராஜகம், கள்ளச்சாராயம் பெருகுவதுடன் அரசு கஜானாவும் காலியாகும் என்பதால் மதுவிலக்கு சாத்தியமில்லாமல் உள்ளது என்று சட்டப்பேரவையில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் தெரிவித்தார்.
குடித்து மட்டையான தந்தை
மிழக அரசின் நிறுவனங்களுள் ஒவ்வொரு ஆண்டும் அசாத்தியமான வளர்ச்சியைச் சாதித்துவரும் ஒரே நிறுவனம் டாஸ்மாக்தான். 2002-03-ம் ஆண்டுகளில் 2,828 கோடி ரூபாயாக இருந்த டாஸ்மாக்கின் வருமானம் 2014-15-ம் ஆண்டுகளில் 26,295 கோடி ரூபாயாக அதிகரித்திருக்கிறது. இந்த ஆண்டு 30,000 கோடி ரூபாயை இலக்கு வைத்து டாஸ்மாக் அதிகாரிகளும் மாவட்ட கலெக்டர்களும் ‘உழைத்து’ வருவதாகச் செய்திகள் வருகின்றன. தமிழக மக்களில் ஆகப் பெரும்பான்மையினரைக் குடிகாரர்களாக்கி, அந்த எச்சில் காசில் வயிறு வளர்க்கிறது தமிழக அரசு குடிப்பழக்கத்தின் விபரீதம் : வீட்டுற்குக் கூட்டிப் போகவேண்டிய தந்தை குடிபோதையில் மேட்டூர் பேருந்து நிலையத்திலேயே மயங்கிச் சரிந்துவிட, என்னவென்று புரியாமல் பச்சிளம் குழந்தை முழிக்க, அதனின் அக்க பயத்தில் வீறிட்டு அழும் இக்கொடுமைக்கு இந்த அரசு பதில் சொல்லியே தீர வேண்டும்.
தமிழகத்தில் 6,835 டாஸ்மாக் கடைகள் இருப்பதாக 2013-இல் அறிவித்தது, டாஸ்மாக். மாவட்ட கூட்டுறவு சங்கங்களால் நடத்தப்படும் ரேஷன் கடைகளைத் தவிர்த்துவிட்டு, தமிழக அரசே நேரடியாக நடத்தும் ரேஷன் கடைகளின் எண்ணிக்கையை எடுத்துக் கொண்டால், அது டாஸ்மாக் கடைகளின் எண்ணிக்கையில் ஐந்தில் ஒரு பகுதிதான். இது ‘குடி’ ஆட்சி என்பதற்கு இதைவிட வேறு சான்று தேவையில்லை.
மகசூல் டிரஸ்ட் என்ற தன்னார்வ அமைப்பு கடந்த ஆகஸ்டு மாதம் வெளியிட்டுள்ள ஒரு மாதிரி புள்ளிவிவரத்தில், “தமிழக ஆண்களில் 1 கோடியே 32 இலட்சம் பேர் குடிப்பவர்களாக இருக்கிறார்கள். இவர்களுள் 53 சதவீதம் பேர் தினமும் குடிக்கிறார்கள். இப்படி தினமும் குடிப்பவர்களுள் 64 சதவீதம் பேர் தங்கள் மனைவி, குழந்தைகளை அடிக்கிறார்கள்” என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.
தினமும் குடிப்பவர்கள் மாதமொன்றுக்கு சராசரியாக 6,552 ரூபாய் குடிக்குச் செலவழிப்பதாகப் அப்புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இந்தச் செலவை மாதச் சம்பளம் வாங்கும் நடுத்தர வர்க்க குடும்பத்தாலே தாங்க முடியாது எனும்பொழுது, தினக்கூலி குடும்பங்களின் கதி அதோகதிதான். ஒரு தினக்கூலி தொழிலாளிக்கு நாளொன்றுக்கு அதிகபட்சமாக நானூறு ரூபாய் கூலி கிடைக்கலாம். அவருக்கு மாதத்தில் இருபது நாட்கள் வேலை கிடைப்பதே அரிதுதான் என்றாலும், அதன்படி கணக்கிட்டால், அவருக்கு 8,000 ரூபாய் மாத வருமானமாகக் கிடைக்கும். இதில் முக்கால் பங்கைத் தமிழக அரசு டாஸ்மாக் மூலம் பறித்துக் கொள்கிறது. இந்த மானக்கேடான கொள்ளையை நிறுத்தக் கூறினால், “இது கொள்ளை இல்லை, கொள்கை” என்று தமிழக அரசும் நீதிமன்றங்களும் எகத்தாளமாக விளக்கமளிக்கின்றன.
தாலியை அறுக்கும் டாஸ்மாக்
தாலியை அறுக்கும் டாஸ்மாக் கடைகளை மூடக் கோரி, சாராய பாட்டில்களைத் தாலிக்கொடி போலத் தொங்கவிட்டு சென்னை – பட்டினப்பாக்கம் பகுதி பெண்களால் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டம்.
அடித்தட்டு வர்க்கத்தைச் சேர்ந்த குடும்பங்கள் குடியினால் பெரும் பொருளாதார இழப்பை மட்டும் சந்திக்கவில்லை. கணவனின் குடிப்பழக்கம் அடித்தட்டு வர்க்க குடும்பப் பெண்களின் மீது கூடுதல் உழைப்புச் சுமையை ஏற்றிவைத்திருப்பதோடு, அவர்களின் நிம்மதியையே பறித்துவிட்டிருக்கிறது. அடி, உதை, சந்தேகம் என அப்பெண்கள் சந்திக்கும் வன்முறைக்கும், அவமானத்திற்கும் நரகத்தைக்கூட ஒப்பாகச் சொல்லமுடியாது. சென்னையில் உள்ள நொச்சிக்குப்பம் பகுதியைச் சேர்ந்த மீனவப் பெண்கள் இதற்கு வகைமாதிரியாக வாழ்ந்துவருவதை ஆனந்த விகடன் இதழில் வெளிவந்து கொண்டிருக்கும் “குடி குடியைக் கெடுக்கும்” தொடரில் பதிவு செய்திருக்கிறார், பாரதி தம்பி.
அரியலூருக்கு அருகில் உள்ள சுத்தமல்லி என்ற சிறிய கிராமத்தில் மட்டும் குடிப்பழக்கத்தினால் குடும்பத் தலைவனை இழந்து நிர்க்கதியாக நிற்கும் குடும்பங்களின் எண்ணிக்கை 16. 450 குடும்பங்கள் உள்ள கச்சிராயநத்தம் கிராமத்தில் (கடலூர் மாவட்டம்) இந்த எண்ணிக்கை 105. கள்ளச் சாராய மரணங்களுக்குக் கணக்கு வைத்திருக்கும் அரசு, இந்த ‘நல்ல’ சாராய மரணங்களைத் திட்டமிட்டே கணக்கில் கொண்டுவராமல் புறக்கணிக்கிறது. இந்த அகால மரணங்கள் ஒருபுறமிருக்க, கணவனின் குடிப்பழக்கம் மனைவியைத் தற்கொலை செய்து கொள்ள வைத்திருக்கிறது. கணவனையே கொலை செய்யும் அளவிற்குத் தள்ளியிருக்கிறது. ஒரு சில குடும்பங்களில் கணவனின் குடிப்பழக்கம் மனைவி, குழந்தைகள் என அனைவரையும் தொற்றுவியாதி போல பற்றிக் கொண்டிருக்கிறது. இன்று தமிழகத்துப் பெண்களிடம், குறிப்பாக அடித்தட்டு வர்க்கப் பெண்களிடம் காணப்படும் மிகப் பெரும் அச்சம் என்ன தெரியுமா? “குழந்தைகளை இந்த அரசு எதிர்காலத்தில் குடிக்கு அடிமையாக்கிவிடுமோ?” என்பதுதான்.
விழாக்களின் போதும், எழவின் போதும் ஒதுக்குப்புறமாக நடந்து வந்த குடிப்பழக்கம், இன்று பள்ளிக்கூடம், வழிபாட்டுத் தலங்கள், நடுத்தெரு எனப் பொது இடங்களைக்கூட விட்டு வைக்கவில்லை. கூலியோடு குவார்ட்டர் பாட்டிலும் சேர்த்துக் கொடுக்கும் அளவிற்கு இச்சீரழிவு வேர்விட்டு வளர்ந்து நிற்கிறது. ஒரு சிறு குழந்தைக்கு அவனது தாய் மாமனே ஊத்திக் கொடுக்கும் அளவிற்கு மனித புத்தியைப் பேதலிக்கச் செய்துவிட்டது. பிரட்டிஷ் ஏகாதிபத்தியம் சீனாவை அடிமைப்படுத்த அபினியைப் பயன்படுத்தியதைப் போல, இன்றைய மறுகாலனியாதிக்கச் சூழலில் தமிழக மக்களை அடிமைப்படுத்த மதுப் பழக்கம் பயன்படுத்தப்படுகிறது.
இந்தப் பின்னணியிலிருந்துதான் டாஸ்மாக் கடைகளை மூடக் கோரியும், முழுமையான மதுவிலக்கு கோரியும் புரட்சிகர, ஜனநாயக இயக்கங்களும், பல்வேறு சமூக அமைப்புகளும் போராடுவதையும்; இப்போராட்டங்களில் பெண்கள் முன்நிற்பதையும் பார்க்க வேண்டும். குணமாக்க முடியாத அளவிற்கு சீழ்பிடித்துப் போன உடல் பாகங்களை வெட்டி உயிரைக் காப்பாற்றும் மருத்துவ சிகிச்சை போல, “குடிநாடாக’’ச் சீரழிந்து நிற்கும் தமிழகத்தைக் காக்க முழுமையான மதுவிலக்கு தவிர, வேறெந்த சமரசமும் பயன்படாது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.
0000
மிழகத்தில் டாஸ்மாக்கை மூடக் கோரும் போராட்டங்கள் இரு வேறு தளங்களில் நடைபெற்று வருகின்றன. சசிபெருமாள் போன்ற தன்னார்வலர்கள், பாதிக்கப்பட்ட பொதுமக்களைத் திரட்டி அரசிடம் கோரிக்கை வைக்கும் போராட்டங்களை நடத்திவரும் வேளையில், மக்கள் அதிகாரம் என்ற ஜனநாயக அமைப்பு, “ஊற்றிக் கொடுக்கும் அரசிடம் கெஞ்சிப் பலனில்லை; நாமே அதிகாரத்தைக் கையிலெடுத்து டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும்” என்ற புதிய திசைவழியில் பிரச்சாரத்தையும், போராட்டத்தையும் நடத்தி வருகிறது. இந்த நிலையில்தான் சசிபெருமாள் மரணமும், புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி தலைமையேற்று நடத்திய பச்சையப்பன் கல்லூரி மாணவர் போராட்டமும் டாஸ்மாக்கிற்கு எதிரான போராட்டத்தை முன்னெப்போதும் இல்லாத வகையில் எரியும் பிரச்சினையாக்கின. அதுவரையில் இப்பிரச்சினை குறித்துப் பேசாத எதிர்க்கட்சிகளைக்கூடப் பேசும்படி செய்தன.
கலிங்கப்பட்டி டாஸ்மாக் கடை அடித்து நொறுக்கப்பட்டது.
“எங்கள் ஊரில் டாஸ்மாக் கடை தேவையில்லை” என ஊராட்சி மன்றம் தீர்மானம் நிறைவேற்றிய பிறகும், அதனை மதிக்காமல் நடத்தப்பட்டு வந்த டாஸ்மாக் கடையை அடித்து நொறுக்கும் கலிங்கப்பட்டி கிராம மக்கள்.
இந்த இரண்டு தளங்களில் நடந்துவரும் போராட்டங்களையும் குடிகெடுக்கும் ஜெயா அரசு அடக்குமுறைகளின் மூலமே ஒடுக்கத் துணிகிறது. அதிகாரத்தை மக்கள் தமது கையில் எடுத்துக்கொள்ளக் கூறிய மக்கள் அதிகாரம், பு.மா.இ.மு. அமைப்புகளை மட்டுமல்ல, சட்டத்திற்குட்பட்டுப் போராடி உயிர்நீத்த சசிபெருமாளையே வன்முறையாளர் எனச் சாடினார், அம்மாவின் அடிமை நத்தம் விசுவநாதன். ‘சசிபெருமாள் காந்தியவாதியே கிடையாது’ என வன்மத்துடன் தலையங்கம் தீட்டியது, அம்மாவின் கூஜா தினமணி நாளேடு. ‘சட்டத்தைக் கையிலெடுத்துக் கொள்ள யாருக்கும் அதிகாரம் கிடையாது’ எனப் பொங்கியெழுந்தார்கள், கருத்து கந்தசாமிகள்.
இந்த ஆட்சி அகிம்சை வழியிலும் சட்டப்படியும்தான் நடந்து கொள்கிறதா என்ற கேள்வியை உங்களுக்குள்ளேயே கேட்டுப் பாருங்கள். உண்ணாமலைக்கடை பேரூராட்சியில் பள்ளிக்கூடம் மற்றும் வழிபாட்டுத் தலங்களின் அருகாமையிலிருந்த டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி அப்பகுதி மக்கள் கிட்டதட்ட மூன்று வருடங்களாகப் போராடி வந்தனர். அக்கடையை அங்கிருந்து தூக்குமாறு மதுரை உயர்நீதி மன்றக் கிளை ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பே அரசுக்கு உத்தரவிட்டிருந்தது. மக்களின் நியாயமான, சட்டத்திற்குட்பட்ட போராட்டத்தை மட்டுமல்ல, நீதிமன்றத்தின் தீர்ப்பையும் ஜெயா அரசு அலட்சியப்படுத்தியது. “மாற்று இடம் தேடிக் கொண்டிருக்கிறோம்” என்ற ஒரே பொயைக் கடந்த இரண்டு ஆண்டுகளாகத் திரும்பத் திரும்பக் கூறி, போராடிய மக்களை எள்ளி நகையாடியது.
“எங்கள் ஊருக்கு டாஸ்மாக் கடை தேவையில்லை; அதனை அகற்றுங்கள்” என கலிங்கப்பட்டி ஊராட்சி மன்றம் தீர்மானம் நிறைவேற்றி அரசுக்கு அனுப்பியது. அத்தீர்மானத்தை கழிப்பறை காகிதம் போலக் கசக்கி எறிந்தது, ஜெயா அரசு. மக்களின் பெயரால் நடக்கும் ஆட்சியில் மக்கள் உரிமை ஏதும் அற்ற ஏதிலிகளாக நிறுத்தப்பட்டார்கள். மக்களை மதிக்காத இந்த அலட்சியத்தின், திமிரின் எதிர்விளைவாகத்தான் கலிங்கப்பட்டி டாஸ்மாக் கடை பொதுமக்களால் அடித்து நொறுக்கப்பட்டது.
அதேபொழுதில் புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணியின் தலைமையில் திரண்ட பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் ஹாரிங்டன் சாலை டாஸ்மாக் கடையை அடித்து நொறுக்கியதும்; மக்கள் அதிகாரம் தலைமையில் விருத்தாசலத்திலும், அதன் அருகிலுள்ள மேலப்பாலையூர் கிராமத்திலும், கோவை சாய்பாபா காலனியிலும் டாஸ்மாக் கடைகள் தாக்கப்பட்டதும் அந்த நேரத்தில் நடந்த உணர்ச்சிவயப்பட்ட போராட்டங்கள் அல்ல. மாறாக, அதிகாரத்தை மக்கள் தமது கையிலெடுத்துக் கொள்ள வேண்டும் என்ற அரசியல் உணர்வால் உந்தப்பட்டு நடந்த போராட்டங்கள் அவை.
சென்னையில் புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி நடத்திய போராட்டத்தில் 600-க்கும் மேற்பட்ட பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் பங்கெடுத்துக் கொண்டனர். அம்மாணவர்கள் மீது தமிழக போலீசு நடத்திய கொடூரத் தாக்குதல் ஆங்கிலேயர்களின் காலனி ஆட்சியை நினைவுபடுத்துகிறது. பொதுமக்கள் பார்க்கிறார்கள், தொலைக்காட்சி ஊடகங்களில் ஒளிபரப்பாகும் என்பது பற்றியெல்லாம் கவலைப்படாமல் அம்மாணவர்களை லத்தியாலும், இரும்புக் குழாயாலும் தாக்கியது, போலீசு. ஒரு இளம் பெண்ணின் மார்பின் மீது தனது பூட்ஸ் காலால் எட்டி உதைத்தது, இன்னொரு போலீசு மிருகம். ஜெயா-மோடி சந்திப்பை விமர்சித்து காங்கிரசு தலைவர் இளங்கோவன் பேசியது ஆபாசமென்றால், அதிகாரத் திமிரெடுத்து ஒரு இளம் பெண்ணை மார்பில் எட்டி உதைப்பதை வன்முறையாக மட்டும் பார்க்க முடியாது.
0000
சசிபெருமாள் குடும்பம் உண்ணாவிரதம் போராட்டம்
“டாஸ்மாக் கடைகளை மூடும் முடிவை அரசு அறிவிக்காமல் சசிபெருமாள் சடலத்தை வாங்கப் போவதில்லை” என்ற அறிவித்து சசிபெருமாள் குடும்பத்தினரும் அவரது ஆதரவாளர்களும் சேலம் மாவட்டத்திலுள்ள மேட்டுக்காடு பகுதியில் நடத்திய உண்ணாவிரதப் போராட்டம்.
லிங்கப்பட்டி போராட்டத்துக்குத் தலைமையேற்ற வை.கோ. உள்ளிட்டு அப்பகுதி மக்கள் மீதும் கொலைமுயற்சி, பொதுச் சொத்துக்கு சேதம் விளைவித்தல் உள்ளிட்டு 12 பிரிவுகளின் கீழ் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. இதேபோல மேலப்பாலையூர் போராட்டத்துக்குத் தலைமையேற்றிருந்த மக்கள் அதிகாரம் மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்குரைஞர் ராஜு, அக்கிராம மக்கள் மீதும்; விருத்தாசலம், கோவை சாய்பாபா காலனி போராட்டங்களை நடத்திய மக்கள் அதிகாரம் அமைப்பு தோழர்கள் மீதும்; சென்னை போராட்டத்தை நடத்திய பு.மா.இ.மு. தோழர்கள், கல்லூரி மாணவர்கள் மீதும் கொலைமுயற்சி உள்ளிட்டு 10 பிரிவுகளின் கீழ் வழக்கு தொடுக்கப்பட்டிருக்கிறது.
இத்தகைய வன்முறை, அடக்குமுறைகளின் மூலம் டாஸ்மாக்கிற்கு எதிரான போராட்டத்தை ஒடுக்கிவிடலாம் என மனப்பால் குடித்தது, ஜெயா அரசு. ஆனால், அவர்களின் கனவு குளவிக் கூட்டில் கையை வைத்தவன் கதையாக முடிந்து போனது. இந்த அடக்குமுறைகளுக்கு அஞ்சாமல் பு.மா.இ.மு., பு.ஜ.தொ.மு., பெ.வி.மு., வி.வி.மு. உள்ளிட்ட புரட்சிகர இயக்கங்களும் மக்கள் அதிகாரம் அமைப்பும் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் டாஸ்மாக் கடைகளை முற்றுகையிட்டு போராட்டங்களை நடத்தின. அவ்வமைப்புகள் முன்வைத்த முழக்கங்களை, கோரிக்கைகளைத் தமது சொந்த கோரிக்கைகளாக எடுத்துக் கொண்ட வழக்குரைஞர்கள், பொதுமக்கள், கல்லூரி – பள்ளி மாணவர்கள் எனப் பலதரப்பட்ட பிரிவினரும் நேரடியாகப் போராட்டத்தில் இறங்கி, ஜெயா அரசையும் போலீசையும் பீதி கொள்ள வைத்தனர்.
டாஸ்மாக் கடைகளுக்கும், செல்போன் கோபுரங்களுக்கும் பந்தோபஸ்து போடும் அளவிற்கு ஜெயா அரசு நடுங்கிப் போயிருந்ததைக் கண்டு ஊரே கைகொட்டி சிரித்தது. இந்த பாசிச கோமாளித்தனத்தை நையாண்டி செய்து நூற்றுக்கணக்கான பதிவுகள் முகநூலில் வெளிவந்தன. சாதாரண சுவரொட்டி ஒட்டும் அரசியல் நடவடிக்கைகூட ஜெயா அரசிற்கு கிலியூட்டியது. பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலைக் கண்டித்து சுவரொட்டி ஒட்டியதற்காக கரூரைச் சேர்ந்த ஆறு பு.மா.இ.மு. தோழர்களும், சென்னையைச் சேர்ந்த இருவரும் கைது செயப்பட்டனர். கோத்தகிரியில், நீலமலை அனைத்துத் தொழிலாளர் சங்கத்தைச் சேர்ந்த முன்னணியாளர்கள் முன்னெச்சரிக்கையாகக் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
“சென்னையில் போராட்டம் நடத்தியவர்கள் எமது கல்லூரி மாணவர்களே அல்ல” என பச்சையப்பன் கல்லூரி முதல்வர் போலீசின் கையாளாக மாறி பேட்டியளித்தார். இதற்கு பதிலடி கொடுக்கும்விதமாக பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள், கைது செய்யப்பட்ட மாணவர்களை விடுதலை செய்யக் கோரி கல்லூரி வளாகத்திற்குள்ளேயே உள்ளிருப்புப் போராட்டம் நடத்தி போலீசின் முகத்தில் கரியைப் பூசினர். சென்னை பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் தாக்கப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்ட மறுநாளே காஞ்சிபுரம் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
மேலும், சென்னையில் உள்ள கந்தசாமி கல்லூரி, பிரசிடென்சி கல்லூரி, புதுக் கல்லூரி, தியாகராயர் கல்லூரி; குடந்தை அரசு கல்லூரி, வேதாரண்யம் கலைக் கல்லூரி, திருச்சி ஈ.வெ.ரா. கல்லூரி, காங்கேயம் கல்லூரி, டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம், நெல்லை, கோவை, மதுரை, திருச்சி சட்டக் கல்லூரிகள் – இங்கெல்லாம் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் தாக்கப்பட்டதைக் கண்டித்தும் டாஸ்மாக்கை மூடக் கோரியும் மாணவர்கள் போராட்டங்களை நடத்தினர். நெல்லை இந்து கல்லூரி மாணவர்கள் போலீசின் அச்சுறுத்தலை மட்டுமல்ல, தேர்வுகளையும் புறக்கணித்துவிட்டு போராடினர்.
மூடு டாஸ்மாக்கை - திருச்சி ஆர்ப்பாட்டம்
“மூடு டாஸ்மாக்கை! அடக்குமுறையால் தடுக்க முடியாது!!” என்ற முழக்கத்தை முன்வைத்து மக்கள் அதிகாரம் அமைப்பால் ஆகஸ்ட் 31 அன்று திருச்சியில் நடத்தப்பட்ட பெருந்திரள் ஆர்ப்பாட்டம்
மாணவர்கள் நடத்திய இப்போராட்டங்களிலேயே சென்னை-பூவிருந்தவல்லி அண்ணா மேல்நிலைப்பள்ளி மாணவர்களும் சென்னை-மதுரவாயல் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்களும் நடத்திய சாலை மறியல் போராட்டங்கள் முத்தாய்ப்பாக அமைந்ததோடு, ஜெயா அரசு எந்தளவிற்குத் தொடை நடுங்கிப் போயிருக்கிறது என்பதையும் எடுத்துக் காட்டின (பார்க்க பெட்டிச் செய்தி). தருமபுரியிலும் அரசு பள்ளி மாணவர்கள் 200 பேருக்கு மேல் திரண்டு பேருந்து நிலைய வாயிலில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
சென்னை வழக்குரைஞர்கள் சங்கம் உயர்நீதி மன்ற வளாகத்திற்குள்ளேயே பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலைக் கண்டித்து ஆர்ப்பாட்டமொன்றை நடத்தியது; மதுரை வழக்குரைஞர்கள் சாலை மறியலை நடத்தினர். கைது செய்யப்பட்ட மாணவர்களும் இளைஞர்களும் போலீசு நிலையத்திலும், சிறைச்சாலையிலும் காக்கிச் சட்டை கிரிமினல்களால் மிருகத்தனமாகத் தாக்கப்பட்டதைக் கண்டித்து புழல் சிறையின் முன்பாக மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தின் தலைமையில் வழக்குரைஞர்களும், புரட்சிகர அமைப்பினரும் பங்கெடுத்துக் கொண்ட ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டம், சாலை மறியல் என்ற வழக்கமான போராட்டங்களுக்கு அப்பால் அரசையும் போலீசையும் திகைக்கச் செய்த நூதன போராட்டங்களை உசிலம்பட்டியிலும், ஓசூரிலும், பென்னாகரத்திலும் மக்கள் அதிகாரம் நடத்தியது. அவ்வூர்களில் டாஸ்மாக் கடைகள் மீது ஏவுகணை போல சாணி வீசியெறியப்பட்டு, வியாபாரம் முடக்கப்பட்டது. குறிப்பாக, பென்னாகரத்தில் சாணி, தக்காளி, முட்டை என நடந்த தாக்குதலின் இறுதிக் கட்டமாக மலம் வீசியெறியப்பட்டது. அதனையும் பொறுத்துக்கொண்டு கடமையுணர்வோடு கடையைக் காத்தது, தமிழக போலீசு. இப்போராட்டங்களின்பொழுது உசிலம்பட்டியில் நான்கு பெண் தோழர்கள் உட்பட 13 பேர் கைது செய்யப்பட்டனர். ஓசூரில் ஒரு பெண் தோழர் உட்பட ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களுள் ஒருவரான தோழர் முருகேசன் போலீசு நிலையத்தில் மிருகத்தனமாகத் தாக்கப்பட்டார்.
கோவை ஆர்ப்பாட்டம்
கோவை சாயிபாபா காலனியில் உள்ள டாஸ்மாக் கடையை அடித்து நொறுக்கிய மக்கள் அதிகாரம் அமைப்புத் தோழர்கள் மீது நடத்தப்பட்ட போலீசின் தாக்குதலைக் கண்டித்து, “ஜெயா அரசை வலுப்படுத்த அனைவரும் மது குடிக்க வாருங்கள்” என்ற நையாண்டி முழக்கத்தை வைத்து புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியைச் சேர்ந்த பெண் தோழர்களால் கோவையில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டம்.
மக்கள் அதிகாரம் அமைப்பினர் கோவை சாய்பாபா காலனி பகுதியில் பிரச்சாரம் நடத்தியபொழுது, அதனைத் தடுக்க முனைந்த போலீசின் அத்துமீறல்களைப் பொதுமக்களே துணிந்து கண்டித்தனர். உளவுப் போலீசின் அச்சுறுத்தலைக்கூடப் பொருட்படுத்தாமல், டாஸ்மாக்கால் பொதுமக்களுக்கு ஏற்படும் சங்கடங்களை எடுத்துப் பேசி, போலீசின் வாயை அடைத்தனர். இதற்கு மறுநாள் அந்தக் கடை மக்கள் அதிகாரம் அமைப்புத் தோழர்களால் அடித்து நொறுக்கப்பட, அதில் முன்னணியாக நின்ற 9 தோழர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களுள் தோழர்கள் ரகுராம், கிரிஷ், பாபு ஆகிய மூவரும் சிறையில் நிர்வாணச் சோதனையிடப்படுவதை எதிர்த்து நின்றதால், தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இப்போராட்டத்தை ஆதரித்தும், போலீசின் வன்முறையைக் கண்டித்தும் கோவை புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியைச் சேர்ந்த பெண் தோழர்களால், குடிகெடுக்கும் ஜெயா அரசைப் பரிகசிக்கும் விதமாக, “மது குடிக்க வாருங்கள், அரசின் கரத்தை வலுப்படுத்துங்கள்” என்ற நையாண்டி முழக்கத்தை முன்வைத்துப் போராட்டம் நடத்தப்பட்டது.
மக்கள் அதிகாரம் அமைப்பின் பிரச்சாரம் மற்றும் போராட்டத்தால் ஈர்க்கப்பட்ட அரியலூருக்கு அருகிலுள்ள சுத்தமல்லி கிராமப் பொதுமக்கள், தாமே டாஸ்மாக் கடையை மூடக் கோரி பிரசுரங்களை அச்சடித்து, முற்றுகை போராட்டத்தை நடத்தினர். மதுரை யானைமலை ஒத்தக்கடையில் மக்கள் அதிகாரம், வழக்குரைஞர்கள் சங்கம், பொதுமக்கள் ஆகியோர் இணைந்து நடத்திய போராட்டத்தின்பொழுது, “போலீசு கைது செய்து வழக்கு போட்டால், அவ்வழக்குகளை நாங்கள் கட்டணம் வாங்காமல் நடத்திக் கொடுப்போம். எனவே, அச்சமின்றிப் போராடுங்கள்” என வழக்குரைஞர்கள் தந்த வாக்குறுதி பொதுமக்களிடம் புதிய உற்சாகத்தை அளித்தது.
இப்பகுதிகள் தவிர, புதுச்சேரியில், விழுப்புரம் சாலமேடு பகுதியில், சென்னை கே.கே. நகரில், நாகர்கோவிலில் – எனத் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் புரட்சிகர அமைப்புகளும் மக்கள் அதிகாரமும் இணைந்தும் தனியாகவும் ஆர்ப்பாட்டங்களையும் முற்றுகைப் போராட்டங்களையும் நடத்தின. இப்போராட்டங்களின் முத்தாப்பாக, ஆகஸ்டு 31 அன்று சிறீபெரும்புதூர், விழுப்புரம், மதுரை, திருச்சி, தருமபுரி ஆகிய ஐந்து மையங்களில், “மூடு டாஸ்மாக்கை! அடக்குமுறையால் தடுக்க முடியாது!!” என்ற முழக்கத்தை முன்வைத்து பெருந்திரள் ஆர்ப்பாட்டங்களை நடத்தியிருக்கிறது, மக்கள் அதிகாரம்.
இந்த ஆர்ப்பாட்டங்களில் திராவிடர் கழகம், தி.மு.க., தே.மு.தி.க., சி.பி.ஐ., சி.பி.எம்., விடுதலைச் சிறுத்தைகள், புதிய தமிழகம், தந்தை பெரியார் திராவிடர் கழகம், ஆதித் தமிழர் பேரவை, ஆதித் தமிழர் கட்சி, அனைத்து அருந்ததியர் சங்கம், தமிழக ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்கம், திருச்சி காந்தி மார்கெட் அனைத்து வியாபாரிகள் முன்னேற்ற சங்கம், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை, மதுரை காமராசர் பல்கலைக்கழகப் பாதுகாப்புக் குழு, பென்னாகரம் வழக்குரைஞர் சங்கம், உயர்நீதி மன்ற வழக்குரைஞர் சங்கம், மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம், ம.க.இ.க., வி.வி.மு., பு.மா.இ.மு. ஆகிய கட்சிகள் மற்றும் அமைப்புகளைச் சேர்ந்த முன்னணியாளர்கள் பங்கேற்று கண்டன உரையாற்றினர்.
இன்னொருபுறத்தில் சசிபெருமாள் மரணத்துக்கு நீதி விசாரணை கோரியும், டாஸ்மாக் கடைகளை மூடக் கோரியும் சசிபெருமாள் குடும்பத்தினரும் அவரது ஆதரவாளர்களும் சசிபெருமாள் சடலத்தை வாங்க மறுப்பது, உண்ணாவிரதம் இருப்பது என்ற வகையில் போராட்டங்களை நடத்தினர். சசிபெருமாள் உடலை அரசே அடக்கம் செய்துவிடும் என மிரட்டியது மட்டுமின்றி, உண்ணாவிரதப் போராட்டத்துக்கு அனுமதி மறுத்து, சசிபெருமாளின் 11 வயது மகள் கவியரசி உள்ளிட்ட 28 பேரைக் கைது செய்து உள்ளே தள்ளியது ஜெயா அரசு.
ம.தி.மு.க., விடுதலைச் சிறுத்தைகள், மனிதநேய மக்கள் கட்சி இணைந்து 04-08-2015 அன்று முழு அடைப்புப் போராட்டத்தை நடத்தின. இப்போராட்டத்திற்கு தே.மு.தி.க., காங்கிரசு, இடது, வலது கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆதரவு தெரிவித்தன. தி.மு.க ஆகஸ்ட் 10 அன்று தமிழகம் தழுவிய அளவில் ஆர்ப்பாட்டங்களை நடத்தியது. இடது கம்யூனிஸ்ட் கட்சியின் இளைஞர் அமைப்பும், மகளிர் அமைப்பும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஆர்ப்பாட்டங்களை நடத்தின.
மூடு டாஸ்மாக்கை - மதுரை ஆர்ப்பாட்டம்
“மூடு டாஸ்மாக்கை! அடக்குமுறையால் தடுக்க முடியாது!!” என்ற முழக்கத்தை முன்வைத்து மக்கள் அதிகாரம் அமைப்பால் ஆகஸ்ட் 31 அன்று மதுரையில் நடத்தப்பட்ட பெருந்திரள் ஆர்ப்பாட்டம்
தி.மு.க.வின் பொருளாளர் மு.க.ஸ்டாலின், தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், மனித நேய மக்கள் கட்சியின் பொதுச் செயலர் ஜவாஹிருல்லா, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், ம.தி.மு.க. பொதுச் செயலர் வை.கோ., புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி, தமிழ் மாநில காங்கிரசின் மூத்த துணைத் தலைவர் ஞானதேசிகன் உள்ளிட்டோர் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள மாணவர்களைச் சந்தித்துத் தமது ஆதரவைத் தெரிவித்ததோடு, அவர்கள் தாக்கப்பட்டதைக் கண்டித்து அறிக்கைகளும் வெளியிட்டனர். அ.தி.மு.க.வுடன் கள்ளக்கூட்டு வைத்துள்ள பா.ஜ.க.வின் மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்திரராஜனும் புழல் சிறைக்கு வந்து ஆஜர் போட்டுவிட்டுப் போனார். தி.மு.க. நடத்திய மதுவுக்கு எதிரான மகளிர் அணி கருத்தரங்கில் மாணவர்களை விடுதலை செய்யக் கோரும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஓட்டுக்கட்சிகளின் இந்த ஆதரவும் போராட்டங்களும் டாஸ்மாக்கிற்கு எதிரான மக்களின் கோபம் கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியதன் விளைவாக ஏற்பட்டவை என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
இவ்வாறாக, கடந்த ஆகஸ்டு மாதம் நெடுகிலும் குடிகெடுக்கும் ஜெயா அரசிற்கு எதிரான போர்க்களமாக தமிழகம் சிவந்து நின்றது. மக்கள் அதிகாரமும் இன்ன பிறரும் நடத்திய போராட்டங்கள் ஜெயா அரசின் பாசிச திமிரை மட்டுமல்ல, நீதிமன்றங்களின் கைக்கூலித்தனத்தையும் அம்பலப்படுத்திவிட்டன. அரசின் அடக்குமுறைகள், உறுதியான போராட்டங்களை உடைக்க முடியாமல் தோற்றுப் போனதை எடுத்துக் காட்டின.
எனினும், இந்தப் போராட்டச் சூழல் மக்கள் முன் வைக்கும் கேள்வி, டாஸ்மாக்கை முற்றிலுமாக ஒழித்துக்கட்டுவதற்கு எந்தப் பாதையைத் தேர்ந்தெடுப்பது – ஓட்டுக்கட்சிகளை நம்புவதா, அரசிடம் மனு கொடுத்துக் காத்திருப்பதா, அல்லது இதையெல்லாம் ஒதுக்கிவிட்டு, மக்கள் அதிகாரம் முன்வைக்கும் அதிகாரத்தைக் கையில் எடுத்து டாஸ்மாக்கை மூடச் சொல்லும் புதிய பாதையைத் தேர்ந்தெடுப்பதா – என்பதுதான்.
இந்திய அரசியல் சட்டத்தின் 47-வது “பிரிவு மதுவிலக்கை அமல்படுத்துவது அரசின் கடமை” என்கிறது. ஆனால், தமிழக அரசோ சரக்கு விற்பதை அரசின் கொள்கை என்கிறது. எந்தச் சட்டத்தை அரசு பின்பற்ற வேண்டுமோ, அதற்கு எதிராக அரசே திரும்பிவிட்ட சூழ்நிலையை நாம் எதிர்கொண்டு நிற்கிறோம். டாஸ்மாக் விவகாரத்தில் மட்டுமின்றி, ஆற்று மணல் கொள்ளை, தாது மணல் கொள்ளை, நிலத்தடி நீர்க் கொள்ளை ஆகியவற்றிலும் மக்கள் நலன், சமூக நலனுக்கு எதிராக அரசு மாறிவிட்டதைத்தான் காண்கிறோம்.
எங்கள் ஆற்று மணலை அள்ளாதே, எனது தெருவில் டாஸ்மாக் கடையை அமைக்காதே எனக் கூறுவதற்கான உரிமை மக்களிடமிருந்து பறிக்கப்பட்டுள்ள இச்சூழலில், அவ்வுரிமையை மீட்டெடுப்பதன் மூலம்தான் இந்தப் போராட்டத்தில் நாம் வெற்றி கொள்ள முடியும். மக்கள் அதிகாரம் இந்தக் கடமையைத்தான் தமிழக மக்கள் முன்வைக்கிறது. இந்தக் கடமைக்குக் குறைவாக ஓட்டுக்கட்சிகளாலும் மற்ற பிற சமூக அமைப்புகளாலும் குட்டி முதலாளித்துவ அறிவுஜீவிகளாலும் முன்வைக்கப்படும் தீர்வுகள் – நாங்கள் ஆட்சிக்கு வந்தால் டாஸ்மாக்கை மூடுவோம் என்ற வாக்குறுதிகள்; நீதிமன்றங்களின் மூலம் தீர்வு காண முயலுவது போன்றவை – இவற்றைத் தீர்மானிக்கும் உரிமையை மீண்டும் அரசிடமும் அதிகார வர்க்கத்திடமும் ஒப்படைக்கின்றன. இத்தகைய தீர்வுகள் புண்ணுக்குப் புனுகு தடவும் நிவாரணம் போன்றவை என்பது மட்டுமல்ல, அவை நம்பகத்தன்மை அற்றவையும் ஆகும்.
– திப்பு

துணைவேந்தரின் அடாவடி!

பேராசிரியர் இராமு மணிவண்ணன்
பேராசிரியர் இராமு மணிவண்ணன்
சென்னைப் பல்கலைக்கழக அரசியல் அறிவியல் துறை மாணவர்கள் டாஸ்மாக் கடைகளை மூடக் கோரி நடத்திய போராட்டத்தை ஆதரித்து, அவர்களைக் காட்டிக் கொடுக்க மறுத்த காரணத்திற்காக, அத்துறையின் தலைவராக இருந்த பேராசிரியர் இராமு மணிவண்ணன் அப்பதவியிலிருந்து நீக்கப்பட்டார். அப்பதவி நீக்கத்தை நியாயப்படுத்துவதற்கு அவர் மீது பொயான குற்றச்சாட்டுகளை அடுக்கியிருக்கிறது, சென்னைப் பல்கலைக்கழகம். அவரை மீண்டும் அப்பதவியில் அமர்த்தக் கோரி போராடிய மாணவர்களுள் 10 பேர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மேலும், அத்துறையின் அரசியல் அறிவியல், பொது நிர்வாகம், சர்வதேச பொது நிர்வாகம் தொடர்பான வகுப்புகள் அனைத்தும் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளன.

தொடை நடுங்கிப் போன அரசு!

சென்னை அருகேயுள்ள பூவிருந்தவல்லியில் அமைந்துள்ள அண்ணா மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் கடந்த 7.8.2015 அன்று பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் தாக்கப்பட்டதைக் கண்டித்தும் அவர்களை விடுதலை செய்யக் கோரியும் சாலை மறியல் போராட்டத்தைத் துணிந்து நடத்தினர். பள்ளிச் சிறுவர்கள் என்றுகூடப் பாராமல் அம்மாணவர்களை அடித்துத் துரத்திய போலீசு, எட்டு மாணவர்களைச் சிறை பிடித்துச் சென்றது.
மதுரவாயல் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவன் ஆகாஷ்.
சாலை மறியல் நடத்திய மாணவர்கள் மீது தடியடி நடத்தி, பலவந்தமாக அவர்களைக் கைது செய்தபோதிலும் ஆவேசமாக முழக்கமிடும் மதுரவாயல் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவன் ஆகாஷ்.
போராட்டம் நடந்த அன்று மாலை 3.30 மணிக்கே பள்ளியை முடிக்குமாறு உத்தரவிட்ட போலீசு, வெளியே வந்த மாணவர்கள் அனைவரையும் வீடியோ பதிவு செய்து பயமுறுத்தியது. மேலும், 11 மற்றும் 12-ம் வகுப்பு வருகைப் பதிவேடுகளைப் பிடுங்கிக்கொண்டு சென்று, எந்தெந்த மாணவனெல்லாம் வகுப்புகளைப் புறக்கணித்துவிட்டு போராட்டத்தில் கலந்துகொண்டான் எனத் துருவித்துருவி ஆராய்ந்தது.
இதற்கு அப்பால், 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களின் பெற்றோர்களை மிரட்டுவதற்காகவே மீட்டிங் நடத்தவும் போலீசே ஏற்பாடு செய்தது. அந்த மீட்டிங்கில் போலீசு உதவி ஆணையர், பகுதி சட்டமன்ற உறுப்பினர் மணிமாறன், மாவட்டக் கல்வி அதிகாரிகள் – என ஒரு பெரும் பட்டாளமே கலந்து கொண்டு, “நான்கு மாணவர்களுக்கு டி.சி. கொடுக்கப் போகிறோம். இனிமே போராடினா எல்லோருக்குமே டி.சி.தான்” எனத் தொடை தட்டினர்.
பூவிருந்தவல்லியைத் தொடர்ந்து சென்னை – மதுரவாயல் பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்களும் சாலை மறியல் போராட்டத்தை நடத்தினர். இப்போராட்டத்திலும் தடியடி நடத்திய போலீசு, போராட்டத்தை முன்னின்று நடத்திய மாணவர்களை போலீசு நிலையத்திற்கு இழுத்துச் சென்று மிரட்டியது. அப்பள்ளியில் எட்டாம் வகுப்பு பயிலும் ஆகாஷ் என்ற மாணவன்தான் இப்போராட்டத்திற்கு மாணவர்களை அணிதிரட்டியதை அறிந்துகொண்ட பள்ளி தலைமையாசிரியர், ஆகாஷ் தவிர மற்ற மாணவர்களின் பெற்றோர்களை போலீசு நிலையத்திற்கு வரவழைத்து, அவர்களிடம் ஆகாஷை அடையாளங்காட்டி, “உங்க பையன அவனோடு சேர விடக் கூடாது” என மிரட்டியுள்ளார். போலீசின் எடுபிடிகளாகிப் போன அப்பள்ளி ஆசிரியர்கள், “போராட்டம் நடத்தின அத்தனை பேருக்கு டி.சி. கொடுத்துவிடுவோம்” என்றும் உதார் காட்டினர்.
திருவள்ளூர் மாவட்டத்தில் பூவிருந்தவல்லி, மதுரவாயல் எனப் பற்றத் தொடங்கிய பள்ளி மாணவர்களின் போராட்டத்தைத் தடுப்பதற்கு மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி தலைமையில் அரசுப் பள்ளி தலைமையாசிரியர்களின் கூட்டம் நடத்தப்பட்டது. பள்ளிக்கல்வித் துறை செயலர் கண்ணப்பன், “பள்ளி மாணவர்கள் போராட்டத்தில் இறங்குவதைத் தடுக்கும் பொறுப்பைத் தலைமையாசிரியர்களும், வகுப்பாசிரியர்களும் எடுத்துக் கொள்ள வேண்டும்” என எச்சரித்து பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பினார். தலைமையாசிரியர்களின் மீட்டிங், மாணவர்களையும் பெற்றோர்களையும் மிரட்டுவது என்ற இந்த சூரத்தனங்கள் எல்லாம் வெளிப்பார்வைக்கு “டெரர்” ஆகத் தோன்றினாலும், உண்மையில் மாணவர்களின் போராட்டத்தைக் கண்டு ஜெயா அரசு தொடைநடுங்கி நிற்பதைத்தான் காட்டுகின்றன.

தமிழக போலீசின் வக்கிரம்!

து விலக்கை அமல்படுத்தவும், சசிபெருமாள் மரணத்திற்கு நீதி விசாரணை கோரியும் மாற்றுத் திறனாளிகள் அமைப்பான “டிசம்பர் 3 இயக்கம்” கடந்த 04-08-2015 அன்று சென்னை கடற்கரையிலுள்ள உழைப்பாளர் சிலை அருகே உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினர். மறுநிமிடமே அவர்களைக் கைது செய்த போலீசு, ராயப்பேட்டையில் அடிப்படை வசதிகளே இல்லாத சத்துணவு கூடத்தில் அடைத்தது. அங்கு கழிப்பிட வசதி, குடிநீர் கேட்டு அவர்கள் போராடவே, இதைவிட வேறு நல்ல இடத்தில் தங்க வைப்பதாகக் கூறி அவர்களை வேனில் ஏற்றிய போலீசார், கொட்டும் மழையில் சேப்பாக்கம் ரயில்வே மேம்பாலத்தின் கீழே வாகனத்தை நிறுத்தி, “கிளம்பி போறதா இருந்தா போங்கடா.. இல்லாட்டி இங்கேயே கிடந்து சாவுங்கடா..” என்றுத் திமிராகவும் கேவலமாகவும் திட்டி வக்கிரமான முறையில் அவர்களை நடுத்தெருவில் இறக்கிவிட்டு விட்டு ஓடிவிட்டனர்.
தி.மு.க பொருளாளர் மு.க. ஸ்டாலின்
சென்னை சேப்பாக்கம் ரயில்வே மேம்பாலத்தின் கீழே உண்ணாவிரதமிருந்த டிசம்பர் 3 இயக்கத்தைச் சேர்ந்த மாற்றுத் திறனாளிகளைச் சந்தித்து, அவர்கள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் தி.மு.க பொருளாளர் மு.க. ஸ்டாலின்
இறக்கிவிடப்பட்ட இடத்திலேயே, கொட்டும் மழையையும் பாராது தமது உண்ணாவிரதப் போராட்டத்தை மீண்டும் தொடங்கிய அவர்கள் அப்போராட்டத்தை 7-ம் தேதிவரையில் நடத்தினர். அதன்பிறகு, ஆக-15 அன்று அரசிடமிருந்து ‘நல்ல செய்தி’ வரும் என்ற எதிர்பார்ப்பில் காத்திருப்புப் போராட்டமாக தொடர்ந்தனர். அவர்கள் எதிர்பார்ப்பு நிறைவேறாமல் போகவே, மீண்டும் உண்ணாவிரதப்போராட்டத்தைத் தொடங்கி, அதனை ஆகஸ்ட் 20-ம் தேதிவரை தொடர்ந்தனர்.
அவர்களின் போராட்டத்தை அலட்சியப்படுத்தியதோடு, “மத்தவனாலேயே புடுங்க முடியல, நொண்டிப்பய நீ என்னத்த புடுங்கப் போற” என அவர்களின் ஊனத்தைக் குத்திக்காட்டும் வகையில் வக்கிரமாகப் பேசிஇழிவுபடுத்தியது ஜெயா போலீசு.

வென்றது மக்கள் அதிகாரம்!

க்கள் அதிகாரம் அமைப்பினர் கடந்த ஜூலை மாதம் தொடங்கியே விருத்தாசலம் பகுதியிலுள்ள பவழங்குடி, மருங்கூர், கீரமங்களம், காவனூர், கீரனூர், மேலப்பாலையூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் “டாஸ்மாக்கை மூடு! கெடு விதிப்போம் ஆகஸ்டு 31!!” என்ற பிரச்சார இயக்கத்தை நடத்தி வந்தனர். இந்த நிலையில்தான் விருத்தாசலம் சந்தைக்கடை பகுதியிலுள்ள டாஸ்மாக் கடை மக்கள் அதிகாரம் அமைப்பைச் சேர்ந்த தோழர்களால் அடித்து நொறுக்கப்பட்டது. இந்த நடவடிக்கை அப்பகுதியில் மக்கள் அதிகாரம் அமைப்பினர் நடத்திவந்த பிரச்சார இயக்கத்தில் ஒரு திருப்பு முனையாக அமைந்தது. குறிப்பாக, மக்கள் அதிகாரம் அமைப்பின் பிரச்சாரத்தால் ஈர்க்கப்பட்டிருந்த மேலப்பாலையூர் பொதுமக்கள், தமது ஊரிலுள்ள டாஸ்மாக் கடையை உடனடியாக மூடும் போராட்டத்தில் இறங்கத் தயாரானதோடு, அப்போராட்டத்திற்கு மக்கள் அதிகாரம் அமைப்பின் உதவியையும் நாடினர்.
மேலப்பாலையூர்
மேலப்பாலையூரில்
ஆகஸ்டு 4 அன்று காலையில் மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் ராஜு தலைமையில் 100 பெண்கள் உள்ளிட்டு 250 பேர் திரண்டு டாஸ்மாக் கடையை நோக்கி ஊர்வலமாகச் செல்லத் தொடங்கினர். கடையின் பாதுகாப்புக்கு இரண்டு போலீசார் நிறுத்தப்பட்டிருந்தபோதும், கடை ஊழியர்கள் பொதுமக்கள் திரண்டு வருவதைப் பார்த்த மாத்திரத்திலேயே கடையைப் பூட்டிவிட்டு ஓடிவிட்டனர். கடை பூட்டப்பட்டிருப்பதைக் கண்ட பொதுமக்கள் டாஸ்மாக் போர்டை அடித்து நொறுக்கி, கடையின் கதவையும் உடைத்தனர். அதன் பின்னர் டி.எஸ்.பி. தலைமையில் வந்த போலீசு படை, ராஜு, ஓய்வுபெற்ற ஆசிரியர் சிறுதொண்ட நாயனார், வெள்ளாறு பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பஞ்சமூர்த்தி, கீரனூர் ராஜ வன்னியர், பவழங்குடி தெவக்கண்ணு, மேலப்பாலையூர் நந்தகுமார் மற்றும் 9 பெண்கள் உள்ளிட்டு 23 பேரைக் கைது செய்தது. போலீசு நிலையத்திலும் போராட்டம் தொடரவே, அன்று மாலையே கைது செய்யப்பட்ட பெண்கள் விடுதலை செய்யப்பட்டு, மற்றவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.
போராட்டத்தின் முன்னணியாளர்களைச் சிறைச்சாலையில் அடைத்துவிட்ட இறுமாப்பில் மேலப்பாலையூர் டாஸ்மாக் கடையை மறுநாளே திறப்பதற்குத் தந்திரமாக முயன்றது, அதிகார வர்க்கம். பொதுமக்களை அச்சுறுத்துவதற்காகவே அச்சிறு கிராமத்தில் பெரும் போலீசு பட்டாளம் குவிக்கப்பட்டது. ஆனாலும், அவ்வூர் மக்கள் கிராம ஊராட்சி மன்றத் தலைவர் சசிக்குமார் தலைமையில் திரண்டு அதிகார வர்க்கத்தின் முயற்சியை முறியடித்தனர்.
“எங்கள் ஊருக்குக் குடிநீர் வேண்டும், எங்கள் பள்ளிக்கூடத்திற்கு ஆசிரியர் வேண்டும், எங்களுக்கு சுகாதார நிலையம் வேண்டும், குடிகெடுக்கும் டாஸ்மாக் வேண்டாம்” என வட்டாட்சியர் முன்னிலையில் முழக்கமிட்டு, கடையைத் திறக்க மீண்டும் முயற்சித்தால், எங்கள் போராட்டமும் தொடரும் என எச்சரிக்கை செய்தனர். மக்களின் போராட்டத்தால் அன்று மூடப்பட்ட மேலப்பாலையூர் டாஸ்மாக் கடை இன்று வரை திறக்கப்படவில்லை. எத்தகைய அதிகாரம் கொண்ட அரசாக இருந்தாலும், மக்களின் வலிமை, ஒற்றுமை முன் தூசுதான் என்பதை இந்தப் போராட்டம் நிரூபித்திருக்கிறது.

டாஸ்மாக் ஊழியர்களே, உங்களைக் கொல்வது மதுவா, மக்கள் போராட்டமா?

டாஸ்மாக் எதிர்ப்பு போராட்டங்கள் தமிழகம் முழுவதும் தீவிரமடைந்திருந்த சூழலில், ஆகஸ்டு 5-ம் தேதியன்று இரவு, சேலம்-வாழப்பாடி அருகே மூடியிருந்த டாஸ்மாக் கடை மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டு, செல்வம் என்ற ஊழியர் இறந்துபோனார். ஆகஸ்டு 12-ம் தேதியன்று சென்னை தியாகராய நகரில் மாலை நேரத்திலேயே சிலர் வீசிய பெட்ரோல் குண்டின் விளைவாக கடை தீப்பற்றி, அதில் இருந்த ஊழியர் தீக்காயங்களுடன் உயிர் தப்பினார். டாஸ்மாக்கை மூடவேண்டும் என்ற கோரிக்கைக்காகப் போராடுகின்ற யாரும் இத்தகைய முட்டாள்தனமான நடவடிக்கையில் நிச்சயம் ஈடுபட்டிருக்க மாட்டார்கள்.
ஊழியரின் மரணத்தால் கோபம் கொண்ட ஊழியர் சங்கத்தினர் வட மாவட்டங்களில் வேலை நிறுத்தம் அறிவித்தார்கள். “இரவு நேரத்தில் கடைக்குள் ஊழியர்கள் படுக்க வேண்டும்” என்று நிர்வாகம் கட்டாயப்படுத்துவதை அவர்கள் எதிர்த்ததில் நியாயம் இருக்கிறது. ஆனால், “அமைதி வழியில் போராடவேண்டும்” என்று ஊழியர் சங்கங்கள் போராடும் மக்களுக்கு அறிவுரை கூறினார்கள். அப்புறம் கடை வாசலில் கண்காணிப்பு காமெரா வைக்கவேண்டும், போலீசு பாதுகாப்பு போடவேண்டும் என்று கோரிக்கை வைத்தார்கள்.
சாராய பாட்டில்களைப் பாதுகாக்கும் பொருட்டு எதையெல்லாம் செய்ய அரசு திட்டமிட்டிருந்ததோ அதையே தங்களுடைய உயிரைப் பாதுகாக்கும் பொருட்டு நிறைவேற்றித் தருமாறு கோரியிருக்கிறார்கள் ஊழியர்கள். அந்த வகையில் டாஸ்மாக் ஊழியர் சங்கங்கள் மக்களுக்கு எதிராக அரசுடன் கைகோர்த்து நின்றன.
குடிப்பழக்கத்தினால் மக்கள் சீரழிவது மட்டுமின்றி, தங்கள் ஊழியர்களே சில ஆயிரம் பேர் இறந்திருப்பதால், “டாஸ்மாக்கை மூடு, வேறு வேலைவாப்பு கொடு!” என்று சில மாதங்களுக்கு முன்னர் ஊழியர் சங்கத்தினர் சிலர் கோரிக்கை வைத்திருந்தார்கள். அந்த கோரிக்கை உண்மையாயிருப்பின், இன்று “டாஸ்மாக்கை மூடு!” என்று தமிழகமே குரல் கொடுத்து வரும் சூழலில், மக்களுடன் இணைந்து கொண்டு ஊழியர்களும் போராட்டம் அறிவித்திருக்க வேண்டும்.
ஒரு டாஸ்மாக் ஊழியரது உயிர் பெட்ரோல் குண்டினால் பறிக்கப்பட்டது வருந்தத்தக்கதுதான். ஆனால், ஆண்டுதோறும் ஓராயிரம் ஊழியர்களும், பல்லாயிரம் மக்களும் மதுவினால் மடிகின்றார்களே, அது குறித்த அக்கறை ஊழியர் சங்கங்களுக்கு இருந்தால், டாஸ்மாக்கை மூடும் போராட்டத்தில் அவர்கள் மக்களுடன் அல்லவா இணைந்து கொள்ள வேண்டும்? நாட்டு நலனுக்கு உட்பட்டதுதானே ஊழியர் நலன்?
_________________________________வினவு.com
புதிய ஜனநாயகம், செப்டம்பர் 2015

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக