வெள்ளி, 7 ஆகஸ்ட், 2015

எங்கெங்கும் குமாரசாமிகள் by Savukku

maxresdefaultதமிழகத்தில் வைகுண்டராஜன் அடிக்கும் கொள்ளையும், அவர் ஆட்சியாளர்களுக்கு துணை போவதும் தங்கு தடையின்றி பல ஆண்டுகளாக நடந்து வருகின்றன.   அரசு, காவல்துறை நிர்வாகம் என்று பல அமைப்புகளையும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும், வைகுண்டராஜன், தற்போது, நீதித்துறையையும் தன் கட்டுப்பாட்டில் கொண்டு வந்திருக்கிறார். திமுகவாக இருந்தாலும் சரி.  அதிமுகவாக இருந்தாலும் சரி.    தாது மணல் கொள்ளை தங்குதடையின்றி தொடர்ந்து வந்தது. 2013ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் வைகுண்டராஜனின் கனிம சுரங்கத்தில் சட்ட விரோதமாக தாது மணல் அள்ளப்படுவதாக தொடர்ந்துவந்த புகார்களால், அந்த சுரங்கங்களில் அதிரடி சோதனை நடத்திய தூத்துக்குடி கலெக்டர் ஆசிஷ்குமார் அந்தப் பதவியிலிருந்து தூக்கப்பட்டார்.   இந்த அதிரடி சோதனைகளுக்காகத்தான் ஆஷிஷ் குமார் தூக்கப்பட்டார் என்பது பரவலாக பேசப்பட்டாலும், ஜெயலலிதா அரசு இது குறித்து எந்த கவலையும் படவில்லை.  ஜெயா டிவி மற்றும் மிடாஸ் நிறுவனத்தில் பங்குதாரராக இருக்கும் வைகுண்டராஜனின் தொழிற்சாலையில் சோதனை என்றால் ஜெயலலிதா சும்மா இருப்பாரா என்ன ?

மக்கள் பிரச்சினைகளுக்காக மக்களோடு நிற்க வேண்டிய மார்க்சிஸ்ட் கட்சி, ஒரு கனிமக் கொள்ளையனின் கைப்பாவையாக மாறி, வைகுண்டராஜனின் கனிமச் சுரங்கத்தில் சோதனை நடத்திய ஆஷிஷ் குமார் ஐஏஎஸ்க்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தினர்.  ஆசிஷ்குமார், தனது மகன் பிறந்தநாள் விழாவில் விலையுயர்ந்த பரிசுப் பொருட்களை பெற்றதாக குற்றம்சாட்டியது. இதையடுத்து ஆசிஷ் குமார் மீது லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.
ஆஷிஷ் குமார் மாற்றம், மக்களிடையே, இந்த கனிமக் கொள்ளை பற்றி பரவலாக விவாதத்தை ஏற்படுத்தியது.  இந்த விவாதத்தை அடுத்து, இதை மூடி மறைக்க வேண்டும் என்ற எண்ணத்தில், ஐஏஎஸ் அதிகாரி ககன்தீப் சிங் பேடி தலைமையில் ஒரு விசாரணை கமிட்டியை அமைத்தார்.     சுரங்கங்களை நேரில் சென்று ஆய்வு செய்த ககன்தீப் சிங் 2013 செப்டம்பர் 17ல் அரசிடம் இடைக்கால அறிக்கை சமர்ப்பித்தார்.  அந்த இடைக்கால அறிக்கையிலேயே அரசுக்கு வைகுண்டராஜன் 3000 கோடி இழப்பு ஏற்படுத்தியதாக பேடி குறிப்பிட்டுள்ளதாக கூறுகின்றன தலைமைச் செயலக வட்டாரங்கள்.
ககன்தீப் சிங் பேடி ஐஏஎஸ்
ககன்தீப் சிங் பேடி ஐஏஎஸ்
இதனிடையே, கனிமக் கொள்ளை தொடர்பாக சிபிஐ விசாரணை வேண்டும் என்று கனிமம் அள்ளும் வேறு சில நிறுவனங்கள் மதுரை ஐகோர்ட் கிளையில் வழக்குத் தொடர்ந்தனர். நீதிபதிகள் ஜெயச்சந்திரன், வேணுகோபால் முன்னிலையில் அவை விசாரணைக்கு வந்தன.
விவி மினரல்ஸ், ட்ரான்ஸ் வேர்ல்ட் கார்னெட்ஸ் ஆகிய நிறுவனங்கள் அனுமதி அளித்ததைவிட கூடுதலான இடங்களில் கனிமம் அள்ளுவதாக புகார் கூறப்பட்டது. இந்த இரண்டும் வைகுண்டராஜனின் கம்பெனிகள். கார்னெட், இல்லுமினைட், ரூட்டைல், ஸிர்க்கான் போன்ற அரிய வகை தாதுப்பொருட்கள் அள்ளப்படுவதாகவும், இதனால் தமிழக,  மத்திய அரசுகளுக்கு பெரும் நிதி இழப்பு ஏற்படுவதாகவும்  தெரிவிக்கப்பட்டது.
விசாரணையில் ஆஜரான தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் சோமயாஜி, இதை விசாரிக்க ககன்தீப் சிங் பேடியை அரசு நியமித்து இருப்பதாகவும், மனு தாரர்கள் தங்கள் குறைகளை அவரிடம்  தெரிவிக்கலாம் என்றும் கூறினார்.
அப்போது வழக்கறிஞர் இல்லாமல் நேரில் ஆஜரான வைகுண்டராஜன், மேற்படி புகார்கள் ஏற்கனவே அரசால் பறிசீலிக்கப்பட்டு விட்டதாக தெரிவித்தார்.  ககன்தீப் சிங் பேடி தலைமையில் ஒரு குழு விசாரிப்பதால் இந்த வழக்கை விசாரிக்கவே தேவையில்லை என்று வாதிட்டார். இவரது வாதத்தின் சாரம், ககன் தீப் சிங் பேடி விசாரணை நடக்கையில் வேறு விசாரணை தேவையில்லை என்பதே.  வைகுண்டராஜனின் வாதத்தையும், அரசு வழக்கறிஞர் வாதத்தையும் ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், இந்த வாதங்களை அடிப்படையாக வைத்தும், விசாரணை ஐந்து மாதங்களுக்குள் முடிக்கப்படும் என்பதை அடிப்படையாக வைத்தும், சிபிஐ விசாரணை கோரிய மனுவை முடித்து வைத்தனர்.
Common Order (Judgement)  dt 12.12.13 in W.P.Nos. 1233, 5549, 14399,14400_Page_11
வைகுண்டராஜன் ககன்தீப்சிங் பேடி கமிட்டியை ஏற்றுக் கொண்ட தீர்ப்பு
இந்திய கடலோரத்தில் 2002 முதல் 2012 வரையிலான 10 ஆண்டுகளில் கொள்ளை அடிக்கப்பட்ட மோனசைட் தாதுவின் மதிப்பு மட்டும் 60 லட்சம் கோடி ரூபாய் என்று  நாடாளுமன்றத்தில் அரசு அறிக்கை அளித்திருக்கிறது. இதில் தமிழக கடலோரத்தில்  கொள்ளையடிக்கப்பட்ட மோனசைட் மதிப்பு மட்டும் 45 லட்சம் கோடி ரூபாய். தமிழகத்தில் 90 சதவிகித தாது மணல் வணிகம் வி.வி. மினரல்ஸ் குழுமத்திடம்தான் உள்ளது. எனவே இது தொடர்பாக சுப்ரீம் கோர்ட் நீதிபதியைக் கொண்டு விசாரணை நடத்த வேண்டும்’ என்று கவர்னரிடம் ஏற்கனவே பா.ம.க. மனு அளித்துள்ளது.
பிற சுற்றுச் சூழல் அமைப்புகளும், விரிவான விசாரணை கோரி பல மனுக்களை அளித்துள்ளன.   ககன்தீப் சிங் பேடியின் அறிக்கையில் உள்ள விபரங்கள், தமக்கு பெரும் ஆபத்தை விளைவிக்கும் என்பதை நன்கு உணர்ந்த வைகுண்டராஜன், சென்ற ஆண்டு சென்னை ஐகோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்தார்.
அந்த மனுவில், ‘1998ம் ஆண்டு திருநெல்வேலி சப் கலெக்டராக இருந்த ககன்தீப் சிங் பேடி, என் மீது வழக்குப் பதிவுசெய்து வாகனத்தைக் கைப்பற்றினார். அதன் பின்னணியில் பேடி மீது தேசிய மனித உரிமை ஆணையத்தில் புகார் அளித்துள்ளேன். கனிம விவகாரம் குறித்து அவர்  பாரபட்சம் இல்லாமல் விசாரணை நடத்தமாட்டார். எனவே, அவரை விசாரணை அதிகாரியாக நியமித்த அரசாணையை ரத்து செய்யவேண்டும்” என்பது வைகுண்டராஜனின் கோரிக்கை.
இந்த வழக்கில் நீதிபதி டி.ராஜா ஜுலை 29ம் தேதி தீர்ப்பு வழங்கினார்.      பேடி மீது மனித உரிமை ஆணையத்தில் (17 ஆண்டுகளுக்கு முன்பு) வைகுண்டராஜன் அளித்த புகார் மற்றும் வைகுண்டராஜனை பேடி நேரில் அழைத்து விசாரிக்காதது ஆகிய இரு காரணங்களால் பேடியால் நியாயமான விசாரணை நடத்த முடியாது என்ற முடிவுக்கு நீதிபதி வந்திருக்கிறார். பேடியின் விசாரணை வழக்கு விசாரணை நடக்கும் வரை, முடியாமல்தான் இருந்தது.  பேடி எப்போது வேண்டுமானாலும் வைகுண்டராஜனை அழைத்து விசாரித்திருக்க முடியும். ஆனால் இது வரை ஏன் விசாரணை நடத்தவில்லை என்பதை ஒரு முக்கிய காரணமாக குறிப்பிடுகிறார் நீதிபதி.  இந்த காரணங்களையெல்லாம் விளக்கமாக குறிப்பிட்டு, ககன்தீப் சிங் பேடியை விசாரணை அதிகாரியாக நியமித்த அரசு ஆணையை ரத்து செய்வதாக குறிப்பிட்டார்.
இந்த உத்தரவுக்கு பின்னால், தமிழக அரசு, ஒரு வேளை வேறு ஒரு அதிகாரியை நியமித்திருக்கலாம்.   அந்த அதிகாரி மீது, வைகுண்டராஜன் எந்த குற்றச்சாட்டும் சொல்லாமல் இருந்திருக்கலாம். ஆனால் அவையெல்லாம் நடந்து விடக்கூடாதோ என்ற எண்ணத்தில் சென்னை உயர்நீதிமன்றத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற நீதிபதியான வினோத் கே சர்மாவை, விசாரணை அதியாரியாக நியமித்து உத்தரவிட்டுள்ளார் நீதிபதி ராஜா.  இந்த வினோத் கே சர்மா பஞ்சாப் நீதிமன்றத்தைச் சேர்ந்தவர்.  அந்த நீதிமன்றத்தில் திருகல் வேலை செய்ததால்தான் தமிழ்நாட்டுக்கு அனுப்பி வைத்தனர்.  அப்படி இருக்கையில், இந்த நீதிபதியை விசாரணை அதிகாரியாக நியமித்தால் அந்த விசாரணை விளங்குமா ? மேலும் இவரை விசாரணை அதியாரியாக நியமிக்கலாம் என்று வைகுண்டராஜன் தரப்பிலோ, அரசுத் தரப்பிலோ, புகார்தாரர் தரப்பிலோ எவ்விதமான ஆலோசனையும் சொல்லப்படாத நிலையில் இப்படியொரு நியமனத்தை எப்படி செய்தார் நீதிபதி என்பதுதான் புரியாத புதிராக இருக்கிறது.     இந்த ஓய்வு பெற்ற நீதிபதிக்கு, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிக்கு இணையான சம்பளம், வாகனம், இதர வசதிகளை அரசு செய்து தர வேண்டும்.  இந்த பணமெல்லாம் நீதிபதி ராஜாவின் அப்பா வீட்டிலிருந்தா வரும் ?   மக்கள் வரிப்பணம்தானே ?  ககன்தீப் சிங் பேடி விசாரணையை தொடர்ந்திருந்தால் அவருக்கென்று தனியாக ஊதியம் அளித்திருக்க வேண்டியதில்லைதானே ?   ஆனால் யார் அப்பன் வீட்டுப்பணம் செலவானால் நீதிபதி ராஜாவுக்கு என்ன ?
away-prizes
நீதிபதி ராஜா
இந்த விசாரணையை ரத்து செய்ததன் மூலம், வைகுண்டராஜன் தங்குதடையின்றி கொள்ளையடிப்பதற்கு வழி செய்து தந்திருக்கிறார் நீதிபதி ராஜா.
இத்தீர்ப்பு குறித்து ஒரு மூத்த வழக்கறிஞரிடம் கேட்டபோது, “பேடியின் நியமனத்தை அங்கீகரித்து அவரிடம் உங்கள் குறைகளைத் தெரிவிக்கலாம் என்று 2013ல் உத்தரவிட்டது இரண்டு நீதிபதிகள் கொண்ட டிவிஷன் பெஞ்ச். அந்த உத்தரவில் மாறுதல் செய்யவோ, திருத்தம் செய்யவோ, புதிதாக விளக்கம் அளிக்கவோ அதே டிவிஷன் பெஞ்சுக்கு மட்டுமே அதிகாரம் உண்டு. அதைத் தவிர சுப்ரீம் கோர்ட்டுக்கு அதிகாரம் உண்டு. இந்த நிலையில், நீதிபதி ராஜா டிவிஷன் பெஞ்ச் உத்தரவுக்கு மாறாக ஒரு உத்தரவு பிறப்பித்துள்ளது சட்டபூர்வமானதாக தெரியவில்லை” என்றார்.
வைகுண்டராஜனின் எதிர்த்தரப்பினர் பேடி முன்பு ஆஜராகி மனு கொடுக்கலாம் என்று ஐகோர்ட்டில் தெரிவித்தவர் அரசு தலைமை வழக்கறிஞர் சோமையாஜி. அவர் கடந்த 20 ஆண்டுகளாக வைகுண்டராஜனின் வழக்கறிஞராக இருந்தவர்.  அப்படிப்பட்டவர்  வைகுண்டராஜனுக்கு எதிரான வழக்குகளில் அரசுத் தரப்பில்  ஆஜராவது எப்படி சரியாக இருக்கும்? இந்தக் கேள்வி பரபரப்பாக விவாதிக்கப்படும் சூழலில் சோமையாஜியின் ஜூனியரான பெருமாள்தான் இப்போதும் வைகுண்டராஜனின் வழக்கறிஞர் என்று இன்னொரு தகவல் பரபரப்பை அதிகரித்திருக்கிறது.
மணல் கொள்ளைக்கு எதிராகப் போராடி வரும் பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த சுந்தரராஜன், இந்த உத்தரவைப் பார்த்து நொந்துபோயிருக்கிறார். “திருநெல்வேலி, தூத்துக்குடி பகுதிகளில் தாதுமணல் கொள்ளையால் மக்களுக்கு சிறுநீரகக் கோளாறுகளும், புற்றுநோய்களும் பரவுகின்றன. இந்த நிலையில், இயற்கை வளங்களைச் சீரழிக்கும் நிறுவனங்களுக்கு எதிராக கடுமையான நிலைப்பாட்டை எடுக்கவேண்டிய நீதிமன்றங்கள் இவ்வாறு தாராளம் காட்டுவது வேதனை அளிக்கிறது” என்றார்.
இயற்கை வளங்களை பாதுகாக்க வேண்டிய நீதிமன்றங்கள், அதைச் செய்யாமல் கனிமக் கொள்ளையர்களுக்கு பாதுகாப்பு அரணாக நின்று கொண்டிருக்கின்றன.  குறிப்பாக, நீதித்துறையின் குமாரசாமிகள், இந்த காரியங்களைச் செய்வதில் முன்னணியில் இருக்கிறார்கள்.
இதனிடையே ராஜா மட்டும் வைகுண்டராஜனுக்கு ஆதரவாக தீர்ப்பளித்தால் நான் என்ன பின் தங்கி விடுவேனா என்று தன்னையும் குமாரசாமியாக கருதி களத்தில் குதித்தவர் நீதிபதி கர்ணன்.
கனிமச் சுரங்கத்தில் கனிம வளங்களை அள்ளுவதற்கு மத்திய அரசிடம் அனுமதி வாங்க வேண்டும்.   அந்த அனுமதி முடிவதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்னதாகவே அனுமதி புதுப்பிக்கப்பட்டால்தான் தொடர்ந்து கனிமங்களை அள்ள முடியும்.   நாம்தான் பெரிய அப்பாடக்கராயிற்றே.. நம்மை யார் கேள்வி கேட்பார் என்று உரிய நேரத்தில் அனுமதி கேட்காமல் விட்டு விட்டார் வைகுண்டராஜன்.  இதையடுத்து உடனடியாக 32 கனிமச் சுரங்கங்களில் மணல் அள்ள தடை விதித்தது மத்திய அரசு.  இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகினார் வைகுண்டராஜன்.  இந்த வழக்குகளில், மத்திய அரசின் சுரங்கத்துறை பதில் மனுக்கள் தாக்கல் செய்ய வேண்டும். ஆனால் மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்வதற்கு முன்பாகவே, 32 வழக்குகளிலும் வைகுண்டராஜனுக்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கினார்    தீர்ப்பு வழங்கிய பிறகே, இந்த வழக்கில் 31 பதில் மனுக்களை மத்திய அரசு தாக்கல் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.
Somayaji
இன்னொரு முக்கியமான விஷயம்.  கடந்த 20 ஆண்டுகளாக, வைகுண்டராஜனின் வழக்கறிஞர் யார் தெரியுமா ?  தற்போது அரசுத் தலைமை வழக்கறிஞராக இருக்கும் ஏ.எல்.சோமயாஜிதான்.  இந்த வழக்குகளில் வைகுண்டராஜனுக்கு எதிராக தற்போது ஆஜராவதும் சோமயாஜிதான்.  வைகுண்டராஜனுக்கு யார் வழக்கறிஞர் தெரியுமா ?  சோமயாஜியின் ஜுனியர் பெருமாள்தான்.  எப்படி இருக்கிறது இந்த நாடகம் ?
நீதிபதி கர்ணன்
நீதிபதி கர்ணன்
ஒரு வழக்கில் பணம் வாங்கிக் கொண்டு தீர்ப்பளிக்கும் நீதிபதிகள் கூட, இந்த பதில் மனு விவகாரத்தில் கவனமாக இருப்பார்கள்.  இரு தரப்பு கருத்தையும் கேட்டு அலசி ஆராய்ந்து முடிவெடுத்தது போல தீர்ப்பளிப்பார்கள்.   ஆனால் இந்த அடிப்படை கூட கர்ணன் பின்பற்றவில்லை. கவலையே இல்லாமல் வைகுண்டராஜனுக்கு ஆதரவாக தீர்ப்பளித்துள்ளார். இப்படிப்பட்ட நீதிபதிதான் கர்ணன்.   இந்த லட்சணத்தில் கர்ணனுக்கு வாழும் கர்ணன் நீதியரசர் கர்ணன் என்று பட்டம் வழங்கி கவுரவித்தனர் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள்.  அந்த விழாவில் பேசிய வழக்கறிஞர் சங்கரசுப்பு என்ன பேசினார் தெரியுமா ? “கர்ணன் போன்ற சிறந்த நீதிபதியை இந்தியாவிலேயே எங்கும் காண முடியாது.   அவரை உடனடியாக உச்ச நீதிமன்றத்துக்கு அனுப்ப வேண்டும்.  அப்படி அனுப்பத் தவறினால், அதை எதிர்த்து நடைபெறும் போராட்டத்தை நானே முன்னெடுப்பேன்”  இரண்டு பேரும் எப்படிப்பட்ட கேப்மாரிகள் என்பது புரிகிறதா ?

இப்படித்தான் இந்திய நீதித்துறை குமாரசாமிகளால் நிறைந்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக