திங்கள், 3 ஆகஸ்ட், 2015

நொறுங்கியது டாஸ்மாக் – பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் போர் !


மூடு டாஸ்மாக்கை ! குடிகெடுக்கும் அரசிடம் கெஞ்சியது போதும் ! கெடு விதிப்போம் ஆகஸ்டு 31 !”காந்தியவாதி சசி பெருமாளை ‘திட்டமிட்டுக்’ கொன்ற தமிழக அரசு தொடர்ந்து டாஸ்மாக்கை நடத்துவதில் வெறியாக இருக்கிறது. ஆனால் தமிழகமெங்கும் டாஸ்மாக் கடைகளை நொறுக்குவதில் மக்களும் உறுதியா இருக்கின்றனர். ஆம் சென்னை முதல் குமரி வரை போராட்டங்கள் ஆரம்பித்துவிட்டன. நெருப்பாய் பரவி வருகின்றன.
இந்நிலையில் இன்று 03.08.2015 திங்கட் கிழமை மதியம் 12.30 மணிக்கு சென்னை பச்சையப்பா கல்லூரி மாணவர்கள் சுமார் 600 பேர் வெளியே வந்து பூந்தமல்லி சாலையில் மறியல் செய்தனர். புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி ஒருங்கிணைத்த இந்த போராட்டத்தில் மாணவர்கள் போர்க்குணத்துடன் முழக்கமிட்டனர்.

எனும் மக்கள் அதிகார மையத்தின் முழக்கங்களை தொடர்ந்து எழுப்பினர். முதலில் போக்குவரத்து போலிசாரும் பிறகு சட்டம் ஒழுங்கு போலிசாரும் வந்தனர். மாணவர்களிடம் கலந்து போகுமாறு பேசிப் பார்த்தனர். மாணவர்கள் மறுத்து விட்டு தொடர்ந்து மறியலை நீட்டித்தனர். மொத்தம் அரை மணி நேரம் மறியல் நடந்தது.
மறியல் நடந்து கொண்டிருக்கும் போதே தீடிரென்று மாணவர்கள் பச்சையப்பா கல்லூரி அருகில் இருக்கும் டாஸ்மாக் கடையை நோக்கி ஓடினர். தீவிர விற்பனையில் மும்முரமாக இருந்த டாஸ்மாக் கடை இந்த மாணவர் படையை எதிர்பார்க்கவில்லை. முதலில் சில மாணவர்கள் பிறகு அனைவரும் என குழு குழுவாக உள்ளே நுழைந்தனர். கடையின் பெயர்ப் பலகை, கடையில் இருந்த பெட்டிகள், பாட்டில்கள் அனைத்தும் மாணவரின் தாக்குதலில் சின்னாபின்னமாக்கப்பட்டது. சாலை முழுவதும் சாராய வெள்ளம் ஓடியது.
இதை எதிர்பார்க்காத போலிஸ் பிறகு லத்திக் கம்புகளோடு படையை அதிகரித்துக் கொண்டு மாணவர்களை தாக்க ஓடி வந்தது. போலிஸ் தாக்க ஆரம்பித்த பிறகு மாணவர்கள் சிதறி ஓடினர். ஆனால் அவர்கள் ஓடுவதற்கு முன்னர் டாஸ்மாக் கடை சுக்கு நூறாக உடைக்கப்பட்டது. நோக்கம் நிறைவேறியது.
வெறி கொண்ட போலிஸ் கொடூரமாக அடிக்க ஆரம்பித்தது. குறிப்பாக புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி அமைப்பில் இருக்கும் மாணவர்களை தேடிப் பிடித்து அடிக்க ஆரம்பித்தது போலிஸ். அந்த மாணவர்கள் தலை உடைந்து ரத்தம் ஓடிய போதும் அவர்கள் வாய் முழக்கத்தை நிறுத்தவில்லை. பச்சையப்பன் கல்லூரியில், பு.மா.இ.முவின் முன்னாள் கிளை செயலராக இருந்த தோழர் செல்வம் ரோட்டில் சுற்றி வளைத்து அடிக்கப்பட்டார்.
அவரைக் காப்பாற்றப் போன பெண் தோழர்கள் ஏழு பேரும் மிருகத்தனமான அடிகளை வாங்கிக் கொண்டனர். மாணவர்களுக்கும் தோழர்களுக்கும் தலையுடைந்து ரத்தம் ஓடியது. ஆண் தோழர்கள் ரத்தத்தோடு கைது செய்யப்பட்டதும், பெண் தோழர்கள் கடையின் முன்னால் அமர்ந்து முழக்கம் போட ஆரம்பித்தனர்.
அவர்களை இழிவான மொழியில் திட்டிய போலிஸ் மிருகங்கள் கடைக்கு முன்னாடி இருந்த ஜேசிபி வண்டியை கிளப்பச் சொல்லி அது தோழர்களை உரசிப் பாரக்கும் வண்ணம் போகச் செய்து அழகு பார்த்தது.
இந்தக் காட்டுமிராண்டித்தனத்தை கண்டு அதிர்ச்சியுற்ற செய்தியாளர்கள், பொது மக்கள் போலிசிடம் சண்டைக்குச் சென்றனர். ஆண் போலிஸ் காலால் உதைத்து, கெட்ட வார்த்தையால் திட்டி தனது வெறியை காட்டிக் கொண்டது. பிறகு மக்கள் எதிர்ப்புக்கு பிறகு பெண் போலிஸ் வந்து ஆண் போலிஸ் செய்த அதே வேலையை செய்தது.
படுகாயமடைந்த மாணவர்கள், தோழர்கள் அருகாமையிலுள்ள கே.எம்.சி மருத்தவமனையில் சேர்க்கப்பட்டனர். கைது செய்யப்பட்ட தோழர்கள், மாணவர்கள் சென்னை சேத்துப்பட்டு காவல் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர்.
மொத்தம் 50க்கும் மேற்பட்ட தோழர்கள் – மாணவர்கள் கைது செய்யப்பட்டனர். பு.மா.இ.மு செயற்குழு உறுப்பினர் தோழர் நிவேதா மயங்கி விழுந்தார்.
ஆனால் தமிழக மக்களை மயக்கி சீரழித்து வரும் டாஸ்மாக்கை எதிர்த்து மாணவர்கள் போர் அறிவித்து விட்டனர். பச்சையப்பா மாணவர்கள் என்றால் ரவுடிகள், விஷமிகள் என்று இழிவு படுத்திய போலீசுதான் உண்மையில் ரவுடிகள் என்று நிரூபித்திருக்கிறது. மக்களின் துன்பத்தை நீக்கும் விதமாக இதோ மாணவர்கள் அணிவகுத்து விட்டனர்.
ஆலை தயாரிப்பு முதல், இலவச பொருள் வரை அனைத்துக்கும் பணத்தை அள்ளித் தரும் டாஸ்மாக்கிற்கு வரும் இடையூறை ஜெயா சசி கும்பல் பெரும் வெறுப்போடு பார்க்கிறது. அதன் காரணமாகவே போலிஸ் நாய்களை ஏவிவிட்டு ஒழித்து விடலாம் என்று பார்க்கிறது.
இதை ஏதோ வரும் தேர்தல் பிரச்சினையாக மாற்ற நினைக்கும் ஓட்டுக் கட்சிகளுக்கு மத்தியில், இல்லை இது அரசும் ஆளும் வர்க்கமும் திட்டமிட்டு செய்யும் தாக்குதல், இதை நாமே முறியடிக்க வேண்டும், மக்கள் அதிகாரத்தை கையில் எடுப்பதே தீர்வு என்று போராட்டம் சரியான பாதையை நோக்கிச் செல்ல வேண்டும்.
டாஸ்மாக்கிற்கு கெடு விதித்திருந்த “மக்கள் அதிகாரம்” எனும் அமைப்பின் சார்பில் விருத்தாசலம் இன்னபிற இடங்களில் டாஸ்மாக் கடைகள் நொறுக்கப்படுவதாக செய்திகள் வருகின்றன. பின்னர் அதை விரிவாக பதிவு செய்கிறோம்.
தற்போது சென்னை மற்றம் மதுரையில் வழக்கறிஞர்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தி வருகின்றனர். பச்சையப்பன் கல்லூரி மாணவர்களைத் தாக்கிய போலிஸ் மிருகங்களைக் கண்டித்து இந்தப்போராட்டம் நடக்கிறது.

pachayappa students rsyf (1) pachayappa students rsyf (2) pachayappa students rsyf (3) pachayappa students rsyf (4) pachayappa students rsyf (5) pachayappa students rsyf (6)

pachayappa students rsyf (3)வினவு.com 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக