திங்கள், 17 ஆகஸ்ட், 2015

யானைக்கு வழங்கிய உணவில் பிளேடு: பாகன் விஷம் குடித்து தற்கொலை!!


கேரளாவில் கோவில்களில் ஏராளமான யானைகள் வளர்க்கப்பட்டு வருகிறது. இந்த யானைகளை பராமரிக்க பாகன்களும் நியமிக்கப்பட்டு உள்ளனர். இந்த கோவில் யானைகள் உரியமுறையில் பராமரிக்க படுவதை உறுதிசெய்ய கண்காணிப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.
இதுபோல கேரள மாநிலம் திருச்சூரில் உள்ள தெச்சிக்கோட்டு காவு கோவிலில் ராமச்சந்திரன் என்ற யானை பராமரிக்கப்பட்டு வருகிறது. 51 வயதாகும் இந்த யானை கேரளாவில் உள்ள கோவில் யானைகளில் மிக உயரமானது என்ற பெருமை பெற்றது. மேலும் ஆசியாவிலேயே 2–வது உயரமான யானை என்ற சிறப்பும் ராமச்சந்திரன் யானைக்கு உண்டு.

தற்போது ஆடி மாதம் என்பதால் கோவில் யானைகளுக்கு விசேஷ உணவுகள் வழங்கி பராமரித்து வருகிறார்கள். அதுபோல ராமச்சந்திரன் யானைக்கும் விசேஷ உணவுகள் வழங்கப்பட்டு வருகிறது.
2 நாட்களுக்கு முன்பு ராமச்சந்திரன் யானைக்கு பாகன்கள் உணவு கொடுத்த போது அதில் பிளேடுகள் இருந்தது தெரியவந்தது. இந்த பிளேடுகள் உணவுடன் சேர்ந்து யானைக்கு வழங்கப்படுவதற்கு முன்பு கண்டுபிடிக்கப்பட்டது இல்லாவிட்டால் அந்த யானை உயிர் இழந்திருக்கும்.
இதனால் உணவில் பிளேடு கலந்து கொடுத்து ராமச்சந்திரன் யானையை கொல்ல முயன்றதாக பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதுபற்றி பேராமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த சம்பவம் தொடர்பாக யானை பாகன் ஷிபு (வயது 40). என்பவரிடமும் போலீசார் விசாரணை நடத்தினார்கள். நேற்று 2–வது நாளாக அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. போலீஸ் விசாரணைக்கு பிறகு ஷிபு தான் தங்கி இருந்த அறைக்கு சென்றுவிட்டார். சிறிது நேரம் கழித்து பார்த்தபோது அவர் ராமச்சந்திரன் யானை அருகில் மயங்கி கிடந்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த கோவில் ஊழியர்கள் அவரை திருச்சூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.
டாக்டர்கள் அவரை பரிசோதித்தபோது ஷிபு விஷம் குடித்திருந்தது தெரியவந்தது. இதனால் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் சிகிச்சை பலனின்றி ஷிபு பரிதாபமாக இறந்து விட்டார்.
இதுபற்றி போலீசார் நடத்திய விசாரணையில் யானை பாகன் ஷிபு விஷம் குடித்து தற்கொலை செய்தது தெரியவந்தது. அவர் தற்கொலை செய்வதற்கு முன்பு ராமச்சந்திரன் யானை முன்பு அமர்ந்து கதறி அழுதுகொண்டு இருந்ததை சில பக்தர்கள் பார்த்து உள்ளனர். இதுபற்றி போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது maalaimalar.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக