ஞாயிறு, 2 ஆகஸ்ட், 2015

பூரண மதுவிலக்குக்கு முன்னுரிமை தர திட்டம்? தி.மு.க., தேர்தல் அறிக்கை குழு இன்று கூடுகிறது

தி.மு.க.,வில், தேர்தல் அறிக்கை தயாரிப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள, ஒன்பது பேர் குழு, சென்னையில் இன்று கூடி, முதல் கட்ட ஆலோசனையை துவங்குகிறது. இக்கட்சியின் சட்டசபை தேர்தலுக்கான வாக்குறுதிகளில், பூரண மதுவிலக்குக்கே முன்னுரிமை கொடுக்கப்படும் என, தெரியவந்துள்ளது.தமிழகத்தை ஆளும், அ.தி.மு.க., ஆட்சியின் பதவிக் காலம், அடுத்த ஆண்டு மே மாதம் முடிகிறது. அதற்கு முன், தேர்தல் நடத்தப்பட வேண்டும். இன்னும், ஒன்பது மாத அவகாசம் உள்ள நிலையில், தேர்தல் பணிகளை, தி.மு.க., இப்போதே துவங்கி உள்ளது.சட்டசபை தேர்தலுக்கு என்னென்ன வாக்குறுதிகள் வழங்கலாம் என்பது குறித்து விவாதித்து, தலைமைக்கு பரிந்துரைப்பதற்காக, முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு தலைமையில், ஒன்பது பேர் குழு அமைக்கப்பட்டுள்ளது.


இக்குழுவின் முதல் கூட்டம், இன்று காலை, அறிவாலயத்தில் நடக்கிறது. குழுவில் இடம் பெற்றுள்ள, ராஜ்யசபா எம்.பி., கனிமொழி, பேராசிரியர் ராமசாமி, வழக்கறிஞர் சண்முகசுந்தரம், முன்னாள் அமைச்சர் சுப்புலட்சுமி ஜெகதீசன், வி.பி.துரைசாமி, என்.ஆர்.இளங்கோ, டி.கே.எஸ். இளங்கோவன் மற்றும் தங்கம் தென்னரசு ஆகியோர் பங்கேற்கின்றனர்.

இது குறித்து, தி.மு.க., வட்டாரத்தில் கூறப்படுவதாவது:இந்த தேர்தலில், மதுவிலக்கு பற்றிய முழக்கம் தான் பெரியளவில் இருக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே, இது பற்றிய அறிவிப்பை, கருணாநிதி வெளியிட்டுள்ளார்.

எனவே, தி.மு.க.,வின் தேர்தல் அறிக்கையில், முதல் வாக்குறுதியாக, பூரண மதுவிலக்கு இடம்பெறும் வாய்ப்பு உள்ளது. அதோடு, மறைந்த அப்துல் கலாம் பெயரில், இளைஞர்களையும், மாணவர்களையும் கவரக்கூடிய புதிய திட்டம் ஒன்றை அறிவிப்பது பற்றியும் விவாதிக்கப்பட உள்ளது.

கடந்த, 2006 சட்டசபை தேர்தலில், தி.மு.க.,வின் தேர்தல் அறிக்கை, மக்களிடத்தில் பெரிய வரவேற்பை பெற்றது. தற்போது, மதுவிலக்கை கொண்டு வருவதால், இலவச திட்டங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க முடியாத நிலை உள்ளது.

இதை எப்படி சரிக்கட்டுவது என்றும், மக்களிடத்தில் பெரும் வரவேற்பை பெறக்கூடிய திட்டமாக, எதை அறிவிக்கலாம் என்பது குறித்தும், இன்றைய கூட்டத்தில், முக்கியமாக விவாதிக்கப்பட உள்ளது.இவ்வாறு, தி.மு.க., வட்டாரத்தில் கூறப்படுகிறது.  dinamalar.com

2 கருத்துகள்: