வெள்ளி, 14 ஆகஸ்ட், 2015

சுந்தர் பிச்சைகளை பார்த்து ஆச்சரியப்படும் பரம பிச்சைகள்!

Sundar Pichaiசுந்தர் பிச்சைகளையும், சத்யா நாதெல்லாக்களையும், இந்திரா நூயிகளையும் மனசுவிட்டு பாராட்டும் கருத்துக்கள் எல்லாம் ஆளும் வர்க்கத்தின் கருத்துக்கள் என்பதையும் அவர்களின் அடிப்பொடிகளின் கருத்துக்கள் என்பதையும் நாம் புரிந்துகொள்ள வேண்டும். நமக்கான வழி காட்டிகளாக இவர்கள் ஒரு போதும் ஆகமுடியாது. அப்படி சொல்பவர்களும் நேர்மையான மனிதர்களாக இருக்கமுடியாது அம்பானியையும், அதானியையும், டாட்டாவையும், பிர்லாவையும் பார்த்துப் பார்த்து பிரமிக்கும் நடுத்தர வர்க்கம் தன்னுடைய இயலாமையையும், ஆற்றாமையும் ஆற்றுப்படுத்திக் கொள்ள யார் மூலமாகவாவது முயற்சிக்கின்றது. தன்னால் முடியாத ஒன்றை மற்றவர்கள் செய்யும் போது ஒருபக்கம் புழுவாக துடித்தாலும், மறுபக்கம் அதை தனதாக மாற்றிக்கொள்ள எல்லா வகையிலும் முயலுகின்றது. நடுத்தர வர்க்கத்தைப் பொருத்தவரை அமெரிக்கா, ஐரோப்பா போன்றவை அவர்களின் சொர்க்க பூமி. அங்கு செல்வதும், ஓர் ஐந்திலக்க சம்பளம் பெறுவதும், அங்கேயே குடியுரிமை பெற்று தன்னுடைய மீதிவாழ்நாளை கழிப்பதும் வாழ்வின் மிக உயர்ந்த விழுமியங்களில் ஒன்று.

 அப்படி அமெரிக்க வாழ்க்கையும் ஐந்திலக்கச் சம்பளமும் யாராவது பெற்றுவிட்டால் அவர்களுக்கு முன்னால் ஏழை என்ற கூடுதல் தகுதியும் இருந்துவிட்டால் நடுத்தர வர்க்கத்தின் கனவு நாயகனாக அவர் மாற்றப்பட்டுவிடுவார். அப்படித்தான் கூகுள் நிறுவனத்தின் சிஇஒ-வாக புதிதாக நியமிக்கப்பட்டிருக்கும் சுந்தர் பிச்சையை நடுத்தர வர்க்கமும், கார்ப்ரேட் ஊடகங்களும் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிக்கொண்டு இருக்கின்றன. காரணம் அவர் ஏழையாகப் பிறந்தாராம், சிரமப்பட்டு படித்து வாழ்க்கையில் மிக உயர்ந்த இடத்திற்கு சென்றிருக்கின்றராம். இதில் ஆச்சரியப்பட என்ன இருக்கின்றது!.
 இந்திய மக்களின் வரிப்பணத்தில் இயங்கும் ஐ.ஐ.டி, ஐ.ஐ.எம், போன்றவற்றில் படித்துவிட்டு அமெரிக்காவுக்கு ஓடிவிடுதல் என்பது எப்போதும் காலம் காலமாக அம்பிகளால் கடைபிடிக்கப்பட்டு வரும் நடைமுறைதானே! இதில் சுந்தர்பிச்சை எந்த வகையில் வித்தியாசமானவர்? ஒரு வேளை அவருடைய பதவியும், அவருடைய சம்பளமும் பெரியதாக இருக்கலாம்.
 பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் அவருக்கு வாழ்த்துக்களை சொல்லிய வண்ணம் உள்ளனர். ஒருவன் ஏழையாகப் பிறந்தாலும் தன்னுடைய கடின முயற்சியால் வாழ்க்கையில் உயர்ந்த நிலையை அடையலாம் என்ற சொத்தை வாதம் திரும்பத் திரும்ப ஓதப்படுகின்றது. மைக்ரோசாப்டின் சத்யா நாதெல்லாக்கலும், பெப்சியின் இந்திரா நூயிகளும் ஒருபோதும் ஒட்டுமொத்த இந்திய மக்களின் பிரதிநிதிகளாக ஆகமுடியாது.
 சுந்தர் பிச்சைக்கு ஒளிவட்டத்தை உருவாக்குவதற்காக ஊடகங்கள் அவரது பழைய வரலாற்றை அவருக்கே தெரியாமல் தோண்டி எடுத்து இந்திய மக்களிடம் மலிவாக விற்பனை செய்து கொண்டு இருக்கின்றன. சுந்தரும் அவரது பெற்றோரும் இரண்டு அறைகள் கொண்ட வீட்டில் வசித்தார்களாம். சுந்தர் சிறுவனாக இருந்த போது அவரது வீட்டில் டிவியோ, காரோ இல்லையாம். சுந்தர் சிறுவனாக இருந்த போது எங்கு சென்றாலும் அரசு பேருந்தில்தான் செல்வாராம். மேலும் அவருக்கு 12 வயது இருக்கும் போதுதான் அவரது வீட்டில் தொலைபேசி வாங்கினார்களாம். இப்படி ஒரு பரம ஏழையை நீங்கள் இதுவரை எங்காவது பார்த்து இருக்கின்றீர்களா?
 இந்தியாவில் 2011 ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கீட்டின்படி 1 கோடியே 30 லட்சத்து 70 ஆயிரம் பேர் சேரிகளில் வசிக்கின்றார்கள். அதுமட்டும் அல்ல 10 லட்சத்து 90 ஆயிரம் பேர் வீடுகளே இல்லாமல் உள்ளனர். 25 ஆப்ரிக்க நாடுகளில் வசிக்கும் ஏழைகளுக்கு எந்தவகையிலும் குறைவில்லாத 44 கோடி பேர் இந்தியாவின் 8 மாநிலங்களில் உள்ளனர் என்று ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக ஆய்வு தெரிவிக்கின்றது. ஆனால் இது எல்லாம் இந்திய கார்ப்ரேட் ஊடகங்களுக்கும் அவர்களால் சரியான வகையில் கட்டமைக்கப்பட்டுள்ள இந்திய நடுத்தர வர்க்க அறிவுஜீவிகளுக்கு வெறும் புள்ளி விவரங்கள்தான். அவர்களைப் பொருத்தவரை இது எல்லாம் இந்தியாவின் சாபக்கேடுகள். உழைப்பதற்குத் தயாராக இல்லாத சோம்பேறிகள் தான் எப்போதும் ஏழைகளாக உள்ளனர். ஆனால் சுந்தர் பிச்சை போன்றவர்கள் தன்னுடைய கடின உழைப்பால் தன்னுடைய ஏழ்மை நிலையில் இருந்து மீண்டு, மற்றவர்களுக்கு முன் உதாரணமாக உள்ளனர். எனவே அவர்கள் கொண்டாடப்பட வேண்டியவர்கள், மற்றவர்களுக்கு வழிகாட்டியாக திகழக்கூடியவர்கள். இதுதான் நடுத்தர வர்க்க அறிவுஜீவிகளின் குணாதிசயம்.
 தன்னைப் பற்றி பேசுவதற்கு, தன்னைப்பற்றி புகழுவதற்கும் ஒன்றும் இல்லாத போது ஏக்கப்படும் அற்பமனது அடுத்தவனின் வெற்றியையும், அடுத்தவனின் புகழையும் போற்றிப்பாடுகின்றது. என் சொந்தக்காரன் பெரிய பணக்காரனாக இருக்கிறான் தெரியுமா? அதா, அந்த ஊர்லா ஒரு பெரிய மல்டி ப்ளக்ஸ் காம்ளக்ஸ் இருக்கே அவரு யாருனு நெனச்ச அவரு எனக்கு ஒருவகையில மாமா முறையாவது, நம்ம ஊர் எஸ்.ஐ இருக்கிறாரே அவரு எங்க அப்பாவுக்கு ரொம்ப வேண்டியவரு எங்களுக்காக என்ன வேண்டும் என்றாலும் செய்து தருவார். இப்படியெல்லாம் தன்னுடைய இயலாமையை நடுத்தர வர்க்கம் சரிசெய்து கொள்கின்றது. தன்னால் ஒரு பெரிய பணக்காரனாகவோ, மல்டிபிளக்ஸ் காம்ளக்ஸ் கட்டும் அளவுக்கு வசதி வாய்ப்புகள் உள்ளவனாகவோ, குறைந்தபட்சம் ஒரு எஸ்.ஐ ஆகவோ மாற முடியாமால் போனதற்குக் காரணம் என்னவென்று ஒரு போதும் அது யோசிப்பது கிடையாது. அவர்களைப் பொருத்தவரை இப்போது நாம் அப்படி இல்லை என்றாலும் முயற்சி செய்தால் நாளை நாம் கண்டிபாக அவர்களைப்போல வரலாம் அவ்வளவுதான்.
 அம்பானியின் வாழ்க்கை வரலாறையும். டாட்டாவின் வாழ்க்கை வரலாறையும் கரைத்துக் குடித்த நடுத்தர வர்க்க அறிவு ஜீவிகள் அதைப்போலவே தாமும் வரமுடியும் என்று நம்புகின்றார்கள். கடைகளுக்குப் போய் உடனே சுயமுன்னேற்ற புத்தகங்களை வாங்கி தங்களை அப்பட்டமான பிழைப்புவாதிகளாகவும், அடுத்தவர்களின் ஏழ்மையைப்பற்றிய குற்ற உணர்வற்ற அற்பவாதிகளாகவும் மாற்றிக் கொள்கின்றார்கள். அடுத்து அவர்களின் வேலை என்னவென்றால் சத்யா நாதெல்லாக்களையும், இந்திரா நூயிகளையும், சுந்தர் பிச்சைகளையும் புகழ்பாடுவது. அதுவும் சாதாரணமாக அல்ல, ஒரு பக்தன் இறைவனிடம் புகழ்பாடுவானே ஊண்உருக உயிர்உருக அதைப்போல!
 கோடிக்கணக்கான இளைஞர்கள் வேலைவாய்ப்பற்று இருக்கும் ஒரு நாட்டில், கோடிக்கணக்கான மக்கள் ஒரு வேலை சோற்றுக்கே வக்கற்று இருக்கும் ஒரு நாட்டில், ஏழையாகப் பிறந்த ஒரே காரணத்திற்காக ஐந்து வயதுகூட பூர்த்தியாகமல் இறந்துபோகும் 72.7% குழந்தைகள் இருக்கும் ஒரு நாட்டில் சுந்தர் பிச்சைகள் கொண்டாடப்படுவது என்பது அவமானகரமான செயலாகும். உன்னால் முடியும் தம்பி தத்துவங்கள் எல்லாம் அம்பானிகளுக்கு, அதானிகளுக்கும் வேண்டும் என்றால் பொருந்தலாம் ஆனால் நமக்கு? சமூகத்தை ஆளும் கருத்துக்கள் எல்லாம் ஆளும்வர்க்கத்தின் கருத்துக்கள் என்பார் மார்க்ஸ்.
 சுந்தர் பிச்சைகளையும், சத்யா நாதெல்லாக்களையும், இந்திரா நூயிகளையும் மனசுவிட்டு பாராட்டும் கருத்துக்கள் எல்லாம் ஆளும் வர்க்கத்தின் கருத்துக்கள் என்பதையும் அவர்களின் அடிப்பொடிகளின் கருத்துக்கள் என்பதையும் நாம் புரிந்துகொள்ள வேண்டும். நமக்கான வழி காட்டிகளாக இவர்கள் ஒரு போதும் ஆகமுடியாது. அப்படி சொல்பவர்களும் நேர்மையான மனிதர்களாக இருக்கமுடியாது.
- செ.கார்  keetru.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக