வெள்ளி, 21 ஆகஸ்ட், 2015

தினமலர்.:தி.மு.க.,வில் மீண்டும் அழகிரி? ஸ்டாலினை சமரசப்படுத்த தீவிரம்

தி.மு.க., தலைவர் கருணாநிதியையும், கட்சியின் பொருளாளர் ஸ்டாலினையும் சமரசப்படுத்தி, மீண்டும் கட்சியில் இணைய, முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரி, சென்னையில் முகாமிட்டுள்ளதாக, கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன. சட்டசபை தேர்தல் நெருக்கத்தில் இருப்பதால், தி.மு.க.,வில் மீண்டும் அழகிரியை சேர்க்க வேண்டும் என, கட்சியின் மூத்த தலைவர்கள், கருணாநிதியிடம் விருப்பம் தெரிவித்து வருகின்றனர். ஆனால், அழகிரியை சேர்க்கக் கூடாது என்பதில், பொருளாளர் ஸ்டாலின் உறுதியாக உள்ளார். இந்நிலையில், நேற்று முன்தினம் நடந்த, நீதிபதி ஒருவரின் இல்ல திருமண விழாவில் பங்கேற்க, அழகிரி சென்னைக்கு வந்தார். நேற்று, கோபாலபுரம் இல்லத்திற்கு சென்றார்; அங்கு, தாயார் தயாளுவை சந்தித்து, அவரது உடல்நலம் பற்றி விசாரித்தார்; ஆனால், வீட்டிலேயே இருந்த கருணாநிதியை சந்திக்கவில்லை.

கருணாநிதியின் மூத்த மகள் செல்வி, அவரது கணவர் செல்வம் ஆகியோர், கருணாநிதியை
சந்தித்து பேசினர். அப்போது, 'அழகிரியை கட்சியில் இணைக்க வேண்டும்; அதற்கு, நீங்கள் ஸ்டாலினை சமாதானப்படுத்த வேண்டும்' என கேட்டுள்ளனர்.
'இது தொடர்பாக, ஸ்டாலினிடமும் பேசுங்கள்' என, கருணாநிதி, அவர்களிடம் கூற, ஸ்டாலினை சந்தித்து பேசும் முயற்சியில், இருவரும் இறங்கி உள்ளனர். இதனால் அழகிரியை, சில நாட்கள் சென்னையிலேயே தங்குமாறு, அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளதாகவும், கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

- நமது நிருபர் - தினமலர்.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக